Loren McIntyre, Seattle நகரில் பிறந்தவர். National Geographic-ன் புகைப்பட கலைஞர் ஆராய்ச்சியாளர். இளம் வயதில் வர்த்தகக் கப்பல்களிலும் பின் அமெரிக்க போர்க் கப்பல்களிலும் பணி புரிந்தவர். லிமா நகரில் பெரு நாட்டின் போர்ப்படையின் பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார். அமேசான் நதியின் மூலத்தை கண்டறிந்தவர். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர். அமேசான் நதியின் மூலமான ஏரிக்கு Lake McIntyre என்று பெயரிடப்பட்டுள்ளது.
1969-ல் அமேசான் நதியின் மூலத்தை தேடிச் செல்லும் Loren McIntyre-ன் அனுபவத்தை Petru Popescu எழுதியுள்ளார். Petru Popescu ரோமானிய நாட்டு எழுத்தாளர். அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தபின் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்ததாகத் தெரிகிறது.
முதல் பாகம் அமேசான் நதியின் துணை நதியான Javari நதியின் மூலத்தை கண்டறிய செல்லும் போது மயோருணா பழங்குடிகளுடன் தொடர்பு ஏற்படுவதும், இரண்டாம் பகுதியில் அவர்களுடன் சிறைபட்டு வாழ்வதும், Javari நதியின் மூலத்தை அறிவதும் பின் தப்பித்து வருவதும், மூன்றாம் பகுதியில் அமேசானின் மூலத்தை கண்டுபிடிப்பதையும் எழுதப்பட்டுள்ளது.
முன்னிலையிலும் படர்க்கையிலும் நூலின் நடை மாறி மாறி இருந்தாலும், முழுவதும் நம் அனுபவம் போன்றே ஈர்ப்புடையதாக உள்ளது.
தென் அமெரிக்காவின் மழைக்காடுகளையும் அமேசான் நதிக் கட்டமைப்பையும் அதன் பழங்குடி மக்களையும் நாம் National Geographic தொலைக்காட்சியில் கண்டிருந்தாலும் வார்த்தைகளின் வித்தை நம் மனதில் பல விந்தைகளை புரிகிறது.
புகைப்படக் கலைஞனாக, இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சூழலின் காலத்தைக் கூறுகளாக்கி, , பிரித்தெடுக்கப்பட்ட ஒரு வினாடிக்கூறின் மூலமாக, தோன்றி மறையும் நிகழ் காலத்தை உறைய வைத்து சூழலின் இயல்பை தான் விளக்க முற்படுவதாகக் கூறுகிறார்.
தன்னுடன் வரும் வழிக்காட்டி உடல் நலக் குறைவு ஏற்ப்பட்டு விமானியுடன் திரும்பிச்செல்ல தனித்து விடப்படுகிறார். சில மயோருணா பழங்குடி மக்களைக் கண்டு அவர்களைப் பின் தொடந்துச் சென்று அக்குழுவினரிடம் சிறைப்படுகிறார்.
ஐரோப்பியரின் 4௦௦ ஆண்டு கால ஆக்கிரமிப்பிற்குப் பின்னும் வெளி உலகத்தினரின் தொடர்புகளைத் தவிர்த்து மறைந்து வாழும் மயோருணா பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை சற்று விந்தையானது. ஆடையின்றி திரிந்தாலும் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பையும் குழு அடையாளத்தையும் கொண்டவர்கள். தென் அமெரிக்காவின் மற்ற இனத்தவருடன் கலக்காமல் தமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் போர்க்குணம் மிக்கவர்கள். காட்டில் திரிந்துக் கொண்டேயிருக்கும் நாடோடிகள். தாங்கள் JAGUAR எனப்படும் சிறுத்தைப் புலியிலிருந்து தோன்றியதாகக் கூறிக்கொள்பவர்கள். புலியின் மீசையைப் போன்று தம் முகத்தில் வண்ணத்தை வரைந்துக் கொள்பவர்கள். உதடுகளிலும் மூக்கிலும் பனைக்குச்சிகளைக் குத்திக்கொண்டிருப்பவர்கள். காடுகளில் உள்ள அனைத்துத் தாவரங்கள், விலங்க��கள் ஆகியவற்றின் மருத்துவ குணத்தையும், நச்சுத் தன்மையையும் அறிந்தவர்களாகக் கூறப்படுகின்றனர். அமேசான் நதியில் உள்ள கொடுரத்தன்மை வாய்ந்த பிரானஹா (Piranha) வகை மீன்கள் அவர்களை கடிப்பதில்லையாம்.
அப்படிப்பட்ட மக்களிடம் சிறைப்படும் Loren McIntyre, தன்னுடைய புகைப்படக்கருவியையும் தன்னை வெளி உலகுடன் தொடர்பு படுத்திக் கொள்ள இருந்த கடைசி அடையாளமான கைகடிகாரத்தையும் இழந்து விடுகிறார்.
McIntyre, ஜாவரி நதிக்கரையிலிருந்து மயோருணா பழங்குடி மக்களைப் பின் தொடர்ந்து செல்வதை விவரித்து சொல்வது தென் அமெரிக்காவின் காடுகள் உயிரினங்கள் நீர் நிலைகள் என இயற்கையினுடே பயணமாக மட்டுமல்லாமல் உளவியலாகவும் ஒரு உள்ளார்ந்த பயணம். மனித வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற அனுபவம்.
அக்குழுவின் தலைவனுடன் அவருக்கு ஏற்படும் மனோரீதியான தொடர்பு (TELEPATHY) வியப்புக்குரியது. Telepathy மூலம் தாங்கள் இருவரும் பேசிக்கொண்டதாகவும் தங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததாகவும் கூறுகிறார். அத்தகைய தொடர்பை பழைமையான மொழி என்றும், குழுவின் மூப்பர்கள் அவற்றை அறிந்தவர்கள் என்றும் பழங்குடிகள் குறிப்பிடுகின்றனர். ஒரு கட்டத்தில் தன எண்ணங்களையே குழுவின் தலைவன் தன ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டதாக McIntyre உணர்கிறார்.
அவர்கள் பயணத்தில் மற்றுமோர் மயோருணா குடிகளுடன் இணைகிறார்கள். அங்கு போர்த்துகேசிய மொழி சிறிது அறிந்த ஒரு மயோருணா இளைஞனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் போது அம்மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்கிறார். அவர்களின் குடும்ப அமைப்பு, உணவு முறைகள், வேட்டையாடும் முறைகள் சமுதாய அமைப்பு, கருவிகள் என்று பலவும் விவரிக்கப்பட்டுள்ளது. குறுக்கு உறவு (Cross cousin marriage) திருமண முறையைப் பின்பற்றுபவர்கள். உடல் ஊனமுடன் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவதில்லை.
McIntyre சிறு வயது முதலே ஐன்ஸ்டினின் சார்பநிலைத் தத்துவத்தில் காலம், விண்மீன்களின் காலக்கணக்கு(sidereal), புவியின் காலக்கணக்கு(terrestrial), கால அளவியல் (chronometric), மனித மனதில் காலத்தின் பரிணாமம் என்று காலம் என்னும் கருது கோளால் தான் வெகுவாக ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.
Quantum Mechanics முதல் காலத்தின் அழுத்தமே இல்லாத மயோருணா பழங்குடிமக்கள் வரை, காலம் என்னும் கருத்து பல்வேறு தளங்களிலும் பரிமாணங்களிலும் மனதில் பல மாயங்களை தோற்றுவிக்கின்றது
மயோருணா மக்களுக்கு “தொடக்கத்திற்கு திரும்ப செல்லுவோம்” என்று ஒரு சடங்கு இருப்பதாக கூறுகிறார். தங்கள் உணர்வுகளையும் வீரியத்தையும் புதுப்பித்துக்கொள்ளவும், தங்களைக் காத்துக்கொள்ளவும் காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். சடங்கின் குறியீடாக படிப்படியாக தங்கள் வசமுள்ள ஆயுதங்களையும், கருவிகளையும், உடைமைகளையும், வெற்றியின் சின்னங்களையும் அடையாளங்களையும் தொடர் நிலைகளில் அழித்துக்கொண்டே பயணப்படுகிறார்கள். அத்தகைய பொருட்களுக்கு உணர்வு (spirit-ஆன்மா) இருப்பதாகவும் நம்புகிறார்கள். அவற்றில் காலம் உறைந்திருப்பதாகவும், அவற்றின் அழிவில் காலத்தில் பின்னோக்கி செல்ல முடியும் என்று கூறுகிறார்கள். Loren McIntyre-ன் சடங்கு குறித்த உரையாடல்களும் அனுபவங்களும் ஒரு உயர் தரமான தத்துவ விளக்கங்களாகவேத் தோன்றுகின்றன. பழங்குடி மக்களின் பிடியில் காலம் இருப்பதாகவும், காலத்தின் பிடியில் நாகரிகம் அடைந்த மனிதர்கள் இருப்பதாகவும் கூறுகிறார். “Knowing the ancient beginning is the essence of Tao” இத்தகையதுதானோ என்றுத் தோன்றுகிறது.
மயோருணா மக்களின் காலம் குறித்த கருத்து சற்று விந்தையானது. நேர அளவைகளோ ஆண்டு மாதக் கணக்குகளோ இல்லாதவர்கள், காலத்தில் பின்னோக்கி செல்வோம் என்னும் புலனறிவுகுட்படாத கருத்தையும் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
உலகில் அனைத்து உயிர்களுக்கும் உயிரற்ற பொருள்களுக்கும் ஒரு அடையாளம்-நோக்கம்-பயன்பாடு இருப்பதாக கருதுகின்றனர். மயோருணா மொழியில் (MATSE) அதை Ca’ah என்று குறிப்பிடுகின்றனர். Ca’ah என்பதே மனிதர்களை வழிநடத்துவதாகவும், மனிதன் தன சுய சிந்தனையால் தன் ca’ah-வை நெறி படுத்திக்கொள்ள முடியும் என்றும் கருதுகிறார்கள். வெள்ளை மனிதர்களிடம் இந்த ca’ah முரண்பட்டு இருப்பதாகவும், ஆகவே தான் அவர்களிடம் இருந்து பிரிந்து மீண்டும் தன இனத்தினருடன் இணைந்து விட்டதாகவும், அவர்களுடன் சிறிது காலம் கழித்த போர்த்துகேசிய மொழி அறிந்த மயோருணா இளைஞன் கூறுகிறான்.
அப்பயணத்தில் அன்டிஸ் மலைத்தொடரில் Javari நதியின் அருவி மூலத்தையும் காண்கிறார். வெளி உலகத் தொடர்பிற்கு வழியேதுமின்றி தன் முடிவு மயோருணா மக்களுடன்தான் இருக்கபோகின்றது என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, பெரும் மழையில் ஏற்படும் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மயோருணா மக்களிடமிருந்து விடுபட்டு சில நாட்களுக்குப் பின் ஆற்றிலிருந்து மீட்கப்படுகிறார்.
நாகரிகமடைந்த மனிதர்கள் பழங்குடி மக்களைக் கண்டு அச்சமுற்றும் இகழ்ந்தும் தாழ்வாக நோக்கினாலும், உள்ளுக்குள் அவர்களின் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையையும் காட்டிற்குள் இயற்கையை எதிர்க் கொண்டு வாழும் உறுதிப்பாட்டையும் எண்ணி வியந்தனர் என்று கூறுகிறார்.
தங்க புதையலுக்கான தேடலாக தொடங்கிய ஐரோப்பியரின் பயணங்களும் ஆதிக்கமும், காலப்போக்கில் இரப்பர் மற்றும் இயற்கை கனிம வளங்களால் நிலைபெற்று, தென் அமெரிக்காவின் பழங்குடிகளை அடிமைகளாக்கி அவர்களின் பண்பாட்டையும், இனங்களையும் அழிவு நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
மனித இனக்குழுக்கள் ஒன்றை ஒன்று அழிக்கவோ அல்லது தமது கலாச்சாரத்தில் உள்வாங்கிக்கொள்ளவோ முற்படுகின்றன. வேளாண்மையும் நகர வாழ்வு முறையும் கொண்டு செல்வச் செழிப்புடன் இருந்த இனத்தினர் ஐரோப்பியருடன் இணக்கமாக இருந்தாலும் அல்லது அவர்களுடன் போரிட்டாலும் காலபோக்கில் அடிமைகளாகி தம் அடையாளத்தையும் பண்பாட்டையும் வாழ்வியல் முறைகளையும் முற்றிலும் இழந்து அழிந்தும் விட்டனர். போர்க்குணம் மிக்க மயோருணா மக்களோ ஐரோப்பியரிடமிருந்து ஓடி ஒளிந்தும் போரிட்டும், வாழும் பரப்பு குறைந்தும் காலப்போக்கில் எண்ணிக்கையில் கரைந்து விட்டதாகவும் கூறுகிறார்.
நாகரிகம் என்னும் ஒரு வழிப் பயணம் பழங்குடிகளையும் அவர்களின் இயற்கையுடன் இயைந்து வாழும் முறைகளையும் அறிவையும் நுண்ணுர்வுகளையும் அழித்துவிட்டது. மழைக் காடுகளின் நீண்டு நெடுந்துயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு நான்கடி உயர கோக்கோ விளை நிலங்களாக மாறுவதும் கவலைக்குரியது. நாகரிகம் பல விதங்களில் மனித வளத்தை பெருக்கி மனிதனின் மேலாதிக்கத்தை நிறுவியிருந்தாலும் பல நுண் புலணறிவுகளை இழக்கவும் வைத்துள்ளது.
அதிவேக அறிவியல் வளர்ச்சி, அனைத்து பண்பாடுகளையும் உள்வாங்கி உலக மக்களை ஒரே தளத்தில் கொண்டு செல்லும் நாள் தூரத்தில் இல்லை.
சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் தன பயணத்தைத் தொடர்ந்து அமேசான் நதியின் ஆதி மூலமான ஏரியை அன்டிஸ் மலைத்தொடரில் 14000 அடி உயரத்தில் கண்டறிகிறார். அமேசான் நதியின் பெயர்க் காரணத்தையும் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்பு குறித்த சில வரலாற்று செய்திகளையும் விவரித்துள்ளார்.
புத்தகத்தை படித்து முடிக்கும் போது அமேசான் காடுகளில் அலைந்து திரிந்த அனுபவமும் மயோருணா மக்களுடன் இருந்த அனுபவமும் நமக்கு ஏற்பட்டுவிடுகின்றது. பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையைப் போன்றே அவற்றை அறிய முனையும் நாகரிகமடைந்த மனிதர்களின் துணிவும் முனைப்பும் வியப்புக்குரியது.