கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோதும் எவ்வளவு இடைவெளியும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தையும், அர்த்தமற்ற தினசரிவாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கின்றது. அந்தக் கேலி நம்மைச் சிரிக்க செய்யும் அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும், நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
இதில் இருக்கும் சிறுகதைகள் அனைத்தையும் சில கேள்விகள் மூலம் ஒன்றிணைக்க முயற்சிக்கலாம்.
மனிதர்களான நாம் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்களை எவ்வாறு நடத்துகிறோம் ?
நமக்கு பயன்படாத உயிரினங்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் ?
நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட உயிரினங்களை அவைகள் வாழ்வதை, நாம் அனுமதிக்கிறோமா ?
ஒரு காலத்தில் அரசர்களை சுமந்து கம்பீரமாக நடந்து கொண்டிருந்த குதிரைகளை இன்று நாம் இயந்திரங்களின் வருகையால் முற்றாக அழித்துவிட்டோம் யாரோ ஒருவர் குதிரை வளர்த்தாலும் அவரை குதிரை வீட்டுக்காரர் என்று சொல்லி ஓரம் கட்டுகிறோம். யாரும் குதிரைகளை வீட்டில் வளர்ப்பதற்கு பிரியப்படுவதில்லை . அதே போல் யானைகள் ! யானை மேல்துஞ்சிய பராகிரமன் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் எத்தனை ஆயிரம் யானைகளை கொண்டு அழித்து இருக்கிறோம். இந்த மண்ணில் இருந்து ஒரு நாளில் யானைகள் முற்றாக அழிந்து ஒழியும் என்றால் அன்றோடு மொத்த சங்க இலக்கியத்தையும் அழித்து விடலாம்.... அந்த அளவிற்கு நமது நீண்ட வரலாற்றோடு தொடர்பு கொண்டிருக்கும் யானை இன்று மின்சார கம்பிகளிலும் தொடர் வண்டி பாதைகளிலும் அடிபட்டு இறந்து மடிகிறது.
இவ்வளவு ஏன் முயல் ஆமை கதையில் முயலை தோற்கடித்தது யார்? ஒரு ஆமையிடம் ஒரு முயல் எவ்வாறு தோற்கும் ? இதற்காக முயல் இனமே நீதி கேட்டு ஒவ்வொரு எழுத்தாளரின் வீட்டின் கதவைத் தட்டி இந்த அநீதிக்கு நீதி கேட்கிறது. ஒரு முயல் ஆமை இடம் தோற்பது முயலை இனத்தால் ஒருபோதும் ஏற்க முடியாது. இது முயலுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று எழுத்தாளர்களிடம் மன்றாடுகிறது. உண்மையில் எந்த எழுத்தாளராலும் இனி முயல் வென்றது என்று அந்த கதையையும் மாற்ற முடியுமா இது முயலுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தானே ?
மனிதன் உண்மையில் ஒரு வைரஸ் கிருமி தான் தன்னை சுற்றி இருக்கும் எந்த உயிரினத்தையும் அவன் வாழ அனுமதிப்பதில்லை உடனடியாக அவற்றை கொள்ளுகிறான். இவ்வளவு ஏன் மனிதனின் சக மனிதனையே அழிப்பதற்கு ஏமாற்றுவதற்கும் கொலகள் புரிவதற்கும் எப்போதும் சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த கதைகள் மனிதர்களின் மீது அவர்கள் சக ஜீவராசிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆழமான கேள்வியை நமக்கு முன் வைக்கிறது.
சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் சீண்டி பார்க்கும் மிக ஆழமான சிறுகதைகள்.. ஒவ்வொரு கதை பின்னணியும் முற்றிலும் புதியது.. எஸ்.ரா அவர்கள் மேடைகளில் அடிக்கடி சொல்வது ”சிறுகதைகள் என்னும் பேராயுதங்கள் சரியாக இன்னும் பயன்படுத்தப்படவில்லை”.. இந்த புத்தகத்தின் மூலம் சிறுகதைகளுக்கு எவ்வளவு வல்லமை என்று புரிந்தது. எனக்கு பிடித்தவை 1) அப்போதும் கடல் 2) பின்னிரவு திருடன் 3) பெரிய வார்த்தை
இது எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பாகும். புத்தகத்தில் காணப்படும் சிறுகதைகளின் களம் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு கடலோடியைப் பற்றிய கதை ஒரு புத்தபிட்சு வை பற்றிய கதை ஒரு பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளரின் கதை ஆமையிடம் தோற்றுப்போன முயலைப் பற்றிய கதை என இந்தப் புத்தகத்தின் கதைக் களங்கள் நம்மைக் கவர்கின்றன. இவற்றின் மூலம் அருமையான கதைகளை நமக்குத் தருகிறார் ஆசிரியர்.
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது- எஸ் . ராமகிருஷ்ணன்
சிறுகதைகளின் தொகுப்பான இந்நூல் எங்கோ உள்ளவனின் பேராசைக்கான காத்திருப்பில் துவங்கி ஞானத்தை எட்டுவதற்கான காத்திருப்பில் முடிகிறது.
மனித வாழ்வில் உள்ள ஏக்கங்கள்,உறவுகளிடையே உள்ள பிளவு, மனித வாழ்வின் தினசரி ஓட்டம், மனித வாழ்வில் பிற உயிரினங்களின் தொடர்பு என மனிதனின் சொல்லப்படாத பகுதிகளை தம் வரிகளினால் நம்மிடையே சேர்க்கிறார். கதை நடையும் கற்பனையும் மிக சிறப்பாக உள்ளது.
பெரும்பாலும் கற்பனை கதைகள், சிறு பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்லிச் செல்லும் நடை..புர்ரா என்றொரு கதை அருமையான கதை.. உறவுகளின் பிரச்சினைகளை பேசும் கதைகளும் எழுதப்பட்டிருக்கிறது..நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு இதைப்பற்றி முழுவதுமாக இல்லை என்றாலும் இதில் உள்ள சில கதைகளை மறுவாசிப்புக்கு பின் எழுதவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது...அப்போது அலைகள் பார்த்துக் கொண்டிருக்கும்..
புத்தகம்: அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது ஆசிரியர் எஸ்.ரா தேதி : 27-09-2025
உலகம் தொடங்கிய காலம் முதல் கடல் நம்மை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆபிரமாயிரம் வருடங்களாக. அந்தக் கடல் தாள் பார்த்த, கடத்துவந்த கதைகளை சொல்லும் தொகுப்பாகவே நான் இதைப் பார்க்கிறேன்.
இது நான் வாசிக்கும் எஸ்.ரா அவர்களின் இரண்டாவது புத்தகம். பெரிதாக கடினங்கள் இல்லாமல், எளிமையான நடையில் நாம் இதுவரை கேளவிப்பட்டிராத, உலகின் ஏதேதோ மூலைகளில் நடக்கும் விந்தையான கதைகளை உருவாக்கிச் சொல்லியிருக்கிறார்.
மனிதர்கள் மறக்கப்படலாம். ஆனால், கதைகள் மறக்கப்படுவதில்லை. மனிதவாழ்வின் அழியா சாட்சியமாகவே எப்போதும் கதைகள் இருந்து வருகின்றன. ஒரு பிரிட்டிஷ் படைவீரனின் வாழ்வில் தொடங்கி, ஒரு புத்த பிக்குவின் வாழ்வில் முடிகின்றது இந்த புத்தகம். இதற்கு இடைப்பட்ட கதைகளில் பல்வேறு தளங்களுக்கும், இடங்களுக்கும், காலங்களுக்கும் எஸ்.ரா நம்மைக் கூட்டிச் செல்கிறார்.
புத்தகத்தின் தலைப்பிலேயே அமைந்துள்ள முதல் கதையே இந்த சிறுகதை தொகுப்பிற்கு மணிமகுடமாக திகழ்கிறது. சுமார் 10 பக்கத்திற்கு எழுதப்பட்டுள்ள முதல் கதை, எங்கோ பிறந்து வளர்ந்து, ஏதோ ஒரு தீவில் சிக்கிக்கிடக்கும் ஒரு பிரிட்டிச் சிப்பாயினுடையது. முதல் கதையே என்னை ஏதோ ஓர் உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது . திரைப்படமாக இயக்கும் அளவுக்கு பிரமாண்டமான கதை அது!
அதனைத் தொடர்ந்து 'கரப்பான்பூச்சி மருந்து விற்பவன்'-இன் கதை, உடைந்து போன ஒரு குடும்பத்தின் கதை, நாய் ஒன்று குதிரையாக மாறிய கதை, நம் எல்லோர் வீட்டிலும் ஏதோ ஒரு சமயத்தில் நடந்திருக்கும் சொத்து தகராறின் கதை என பல்வேறு தளங்களில் தாவி இந்தக் கதைகள் கிளைக்கின்றன.
குறிப்பாக 'பின்னிரவுத் திருடன்' என்ற கதை மிகவும் நுட்பமான, இதுவரை நாம் யோசித்திராத, மிகவும் சிக்கலான ஒரு புள்ளியைத் தொட்டுச் செல்கிறது.
இறுதியாக இந்த தொகுப்பு ஒரு பௌத்த மரபுக் கதையோடு முடிகிறது. அது, இதுவரை நான் கேட்டிராத ஒன்று. நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளையும், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம் என்ற பெயரில் நாம் செய்யும் கால விரயத்தையும், அதனால் வாழ்வில் ஏற்படும் இழப்புகளையும் சம்மட்டி அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது.
புத்தகத்தின் தொடக்கக் கதையும், இறுதிக் கதையும், இருவேறு உலகங்களில், இருவேறு காலங்களில், ஆனால் ஒரே சூழ்நிலையில் இருக்கும் இருவேறு மனிதர்களைப் பற்றிய கதைகளே ஆகும். இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது, பல்வேறு தரப்பட்ட, தமிழ் எழுத்துலகிற்கு பெரிதும் அறிமுகமில்லாத, ஆனால் மிகவும் நுட்பமான கதைகளை வாசித்து முடித்த நிறைவு மனதில் தங்குகிறது.