நவீன வாழ்வின் பரிமாணங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காண முடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லஷ்மி சரவணகுமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகரவெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லஷ்மி சரவணகுமாரின் ‘உப்பு நாய்கள்’ பதைபதைப்பையும் பெருஞ்சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது
நாம இருக்க இந்த பெரும் நகரத்துல நமக்கு தெரியாம அல்லது நாம கவனிக்காத பல விஷயங்கள் இந்த நாவல்ல அடங்கி இருக்கு. பல குற்றங்கள் செய்யும் விளிம்பு நிலை மக்கள் ஏன் அதை செய்றாங்க அப்படிங்கறதுக்கான பதில்களும் இந்த நாவல்ல இருக்கு. பிக் பாக்கெட்,கஞ்சா,பாலியல் தொழில்,குழந்தை கடத்தல், கள்ளக்காதல்,சிறைச்சாலை அனுபவங்கள்,நாய்க்கறி பிசினஸ்,இரவு நேரத்தில் அரவாணிகளோடு உடலுறவு கொள்ளும் மனிதர்கள் என பல்வேறு களங்கள் இந்த நாவல்ல அடங்கி இருக்கு. வாசிக்க மிக வேகமான எழுத்துநடை, ஒரு Web Series போல என சொல்லலாம். நிழல் உலக மனிதர்களை நாம நிஜத்தில் பார்க்க முடியாது இந்த நாவலின் வழியே அவர்களின் வழக்கையே பார்த்துவிடலாம். கண்டிப்பா வாசிங்க நல்ல அனுபவம் கொடுக்கும்.
சில சமயங்களில் புத்தகத்தின் தலைப்பே நம்மை படிப்பதற்கு இட்டு செல்லும். லட்சுமி சரவணகுமார் அவர்களின் படைப்புகளில் இது நான் படிக்கும் முதல் நாவல். அந்த முறையில் இவரின் எழுத்துக்கள் எவ்வாறு இருக்கும் அல்லது எவ்வாறான கருத்துக்களை விதைத்து செல்லும் என்பதை பற்றியான விவரணைகள் இல்லாமல் ஒரு புத்தகத்தை கையில் எடுப்பது, முதன் முறை சைக்கிள் தனியாக ஓட்டும் போது கிடைக்கும் ஒரு சில்லிடும் அனுபவத்திற்கு இணையானது. அவ்வாறே இருந்தது இந்த புத்தகம். இதில் சொல்லப்பட்டிருக்கும் கதைக்களம், கதை மாந்தர்கள் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஆணி வேராய், அடி நாதமாய் இருப்பது இருள்!
இருளின் கதைகள் எப்போதுமே நீளமானதாகவும், அதன் மடியில் இருப்பவர்களுக்கான நிழல்களை மறைத்துமே நகரும். அப்படியான ஒரு கதை தான் இந்த உப்பு நாய்கள். பிரதானமாக சம்பத், சுந்தர், பாஸ்கர், மணி, செல்வி, தவிடு, முத்துலெட்சுமி, ஆதம்மா, ஆர்த்தி, ஆதம்மாவின் அம்மா, ராஜீவ் என்ற ஆதம்மாவின் தந்தை, சம்பத்தின் அம்மா, சோபி, இவாஞ்செலின், உடையார், ஷிவானி, மகேஷ் என்று மூன்று நான்கு கோணங்களில் பயணிக்கும் கதை.
இருளின் ராஜ்யத்தில் நடக்கும் அனைத்து செயல்களையும் வெளிச்சத்தின் பிம்பங்களாய் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இருளின் மடிப்புக்கு ஆயிரம் கண்கள் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாய் நினைவு. அப்படிதான் நகர்கிறது இந்த கதையும். சென்னையின் இருளடைந்த பகுதியில் ஒரு சர்ச்சின் நிழலில் ஒதுங்கி வாழ்வின் கோடுகளை கடக்க நினைக்கிற சம்பத். பதினேழு வயதில் கஞ்சா விற்க தொடங்குகிறான். இருளின் பாதைகளில் பூனையின் தடம் போல பதுங்கி செல்பவன். கை தேர்ந்த வித்தைக்காரனாய் அறியப்படுபவன்.
அந்த சர்ச்சின் கன்னியாஸ்திரிகளை தன் இச்சை வலைக்குள் வீழ்த்தி எப்போதும் பெண்களின் மேல் தீராக் காமத்தில் சுற்றி வருபவன். ஒரு சில பக்கங்களில், பச்சை தங்கம் எனப்படும் போதைப் பொருளின் அணைப்பில் ஓரினச்சேர்க்கைக்கும் வழி கொடுத்து செல்லும் சம்பத், தன் வாழ்வுக்கான ஆதாரத்தை தேடி தேடி தொலைந்து போவது தான் கதை. இடையில் அவன் அம்மாவை படுத்தும் அவமானங்கள், ஷிவானியுடனான உறவு, சோபியுடனான சேர்க்கை, கொடூரமாக நடந்து கொள்ளும் விதம், என்று தூக்கம் கெடுக்கும் அம்சங்கள் உள்ள கதை.
நிழல் உலகத்தின் உண்மைகளை சிறிது கற்பனை கலந்து கொடுத்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஒரு தெரு உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டாலோ, பல தெருக்களை கட்டுக்குள் வைத்திருந்தாலோ என்ன நிகழும் என்பதற்கான உதாரணங்கள் நிறையவே சொல்லப்பட்டுள்ளன. எப்போதும் இருக்கும் நியாயங்கள் சம்பத்துக்கும் எப்போதும் இருந்து கொண்டே இருப்பதை தான் இந்த கதையின் உண்மைக்கான மெல்லிய நரம்பாய் உயிர்த்து ஓடுவதை உணர்ந்தேன்.
சம்பத்தின் வாழ்க்கை ஒரு புறம் இப்படி இருக்கும் போது, செல்வி மற்றும் தவிடு இருவரின் கதை மிக இறுக்கமாக நகர்கிறது. வாழ்விற்காக பிக்பாக்கெட் அடித்து பழகி மதுரையிலிருந்து பின்னர் சென்னை வந்து எப்படியெல்லாம் பாதைகள் மாறிப்போகிறது என்பது சொல்லப்படுகிறது. சிறு களவு புரிந்தவர்களுக்கான தண்டனைகள் என்பதை தாண்டி, எப்படி போலீஸின் கோர முகங்கள் இவர்களின் மீது பாய்கிறது என்பதற்கு சில பக்கங்கள் ஒதுக்கி சொல்லி இருக்கிறார். இவைகளை முழுதும் கற்பனை என்று ஒதுக்கிட இயலுமா என்பதை படிக்கும் பொழுதினில் நீங்களே பகுத்து கொள்ளலாம்.
சம்பத் சில காலம் சேட்டு வீடுகளில் வேலையும் செய்து வந்துள்ளான். அதை விவரிக்கும் சில வரிகள்:
"இன்னொரு முறை அவனை தங்களின் கடைகளிலோ, வீடுகளிலோ சேட்டுகள் வேலைக்கு வைக்கப்போவதில்லை. வேண்டுமானால் அடியாளாக சேர்த்துக் கொள்ளுவார்கள். சேட்டுகளுக்குள், எத்தனை பேர் எனக்கு அடியாள் இருக்கிறானெனக் காட்டிக்கொள்வதில் ஒரு விதைப் போட்டி இருக்கும். சில கிழ சேட்டுகளுக்கு, அதொரு கவுரவப் பிரச்சினை..... அவ்வளவு வேலை செயதாலும் அவர்கள் தின்பதில் சின்னதொரு துண்டைக் கூட இவனுக்கு தர மாட்டார்கள். இவனும் வாய் திறந்து கேட்கமாட்டான். வேலைக்காரன் இதை தான் திங்கணும், இதைத் திங்ககூடாதென அவர்களுக்குள் சில விதிமுறைகளை வைத்திருந்ததோடு, அதை தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருத்தனர்"
அடிக்கடி சிறை சென்று வந்ததால், சிறையில் உள்ள புழுக்கங்கள், சிறையின் வாசம், இருளின் மடியில் உறக்கம் தொலைத்து பழகிய சுவர்கள் என்று செல்லும் கதை. அங்கே அறிமுகம் ஆகும் போலி டாக்டர் முத்துலெட்சுமி மற்றும் அவளின் உண்மை சொரூபம் வெளிப்படும் தருணங்கள் மிக வலி மிகுந்ததாக உள்ள பக்கங்கள். செல்விக்கு வாழ்வில் நிரந்தர வருமானத்திற்கான வழி தேடியே முத்துலெட்சுமியை நம்பி கூட செல்கிறாள். முன் புறம் மிக அழகாக வடிவமைக்கப்பெற்ற கட்டிடங்களின் பின்புறம் கழிவு குப்பைகளால் நிரம்பி வழியும் காட்சியை போல, முத்துலெட்சுமிக்கும் அப்படியான ஒரு முகம் இருக்கிறது. வட்டிக்கு கொடுக்கப்பட்ட பணம் வராத போது, பெண்களை வேசைத்தொழிலில் ஈடுபடுத்தும் டாக்டர்.
எப்படி யோசித்து நின்றாலும், இந்த மீறல்கள், சமூகத்தின் அங்கம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பணத்தை மீண்டும் கொடுக்க முடியாத போது என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை பல முறை நாமே செய்திகளில் கேட்டிருக்கிறோம். இதில் செல்வியை தனக்கு உற்ற துணையாக வைத்து தொழில் நடத்த முனையும் முத்துலெட்சுமி. ஆணின் வாசம் படாமலே வாழ்ந்த முத்துலட்சுமியின் வாழ்வில், செல்வியின் நெருக்கம் அத���ர்வலைகளை உண்டு செய்கிறது. தன் கணவனை விட்டு வந்திருக்கிற செல்வி, தன்னோடு கூட வந்த தவிடு (செல்வியின் மதனி), முத்துவின் மீது நம்பிக்கை ஏற்படாமல், அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவாள்.
இப்படி உணர்வு மீறல்களும், உடலின் மீறல்களும் ஆரம்பிக்கும் முன்னரே, செல்வி முத்துவிடமிருந்து தப்பிக்க தருணங்கள் தேடுவதும், மீண்டும் உடலின் வேட்கையில் வீழ்வதுமாக நடக்கும் ஒரு நாடகம். இப்படி ஒவ்வொரு முறையும் தப்பிக்க நினைத்து எவ்வாறு முடிகிறது என்பது இவர்களின் அத்தியாயத்தின் கதை.
இப்படி பாலையாய் உலர்ந்து, அதன் வெடிப்புகள் நம்மை பார்த்து ஏசும் நேரத்தில் தான் தென்றலென நுழைகிறாள் ஆதம்மா என்ற குழந்தை. சர்ப்பத்தின் அடி வயிற்றின் சூடு போலவே, அவளுக்கும் உணர்கிறாள், சர்பங்களின் உலகத்தில் சஞ்சரித்து சிறகடிக்கிறாள். அவளுக்கு முடிவற்ற நிலமே ஆடுகளம், அங்கே அலைந்து திரியும் சர்ப்பங்களே பொம்மைகள். பஞ்சத்தின் பிடியில் இறுகிக் கொண்டிருந்த அவளின் குடும்பம். அவர்கள் தங்கள் பெருநிலத்தை விட்டு, சென்னையின் அம்பத்தூரில் குடி பெயர்கிறார்கள். குழந்தைகளுக்கு என்றுமே பெரிய உலகம்தான். நீர் காணாது போனதாலேயே, கடலின் காதலி ஆகிறாள் ஆதம்மா. அவளின் வாழ்க்கை மனிதர்கள் இன்னும் நல்லவர்கள், இன்னும் கூட மனிதம் இறந்து போக வில்லை என்ற நம்பிக்கையில் தான் வெகுவாக இயங்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது ஆர்த்தி வந்து சேரும் தருணம். ஒரு மிகப் பெரிய கட்டிடத்தை கட்டி முடித்த அடுத்த வினாடி அந்த தொழிலாளர்களுக்கும், அந்த கட்டிடத்துக்குமான உறவு முறிக்கப்படுகிறது! உள்ளே அனுமதி என்ன, அருகில் நின்று உயர்ந்தோங்கி நிற்கும் அதை காணக்கூட முடியாத நிலையில் தான் வைத்திருக்கிறது இன்றைய உலகம். அப்படி உழலும் உலகத்தில், விதிவிலக்காய் ஆர்த்தி. ஆர்த்தி ஆதம்மா இருவருக்குமிடையில் அன்பு மொழி சற்று வன்முறையின் வேகத்தை குறைத்து நிறுத்துகிறது.
"இப்போது முக்கால் பாண்டு கலவை தூக்குவதில்லை, அவளும் முழு பாண்டு தூக்குகிறாள். அதில் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது அவளுக்கு, தான் பெரியவளாகிவிட்டோமென! அவள் சீக்கிரத்தில் பெரியவளாகிவிடத்தான் விரும்பினாள். எல்லாத் துயரங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுபட ஒரே வழி பெரியவளாகிவிடுவது தான்"... ஆதம்மாவின் கனவுகள் அவை.
இதோடு கூட, ஷிவானி மற்றும் மகேஷுக்குமான தர்க்க ரீதியான உடல் மற்றும் உள்ளத்தின் வேட்கை போராட்டங்கள் ஒரு புறம் இன்னொரு கதையாய் விரிகிறது. இதிலும் சம்பத் இருக்கிறான், மிருகத்தின் வேட்கையோடு! ஒரு மங்கிய இருட்டின் சில நிமிட தீண்டல்கள் வாழ்வின் மொத்த திசையினையும் மாற்றி செல்கிறது. கணவனின் கண்டுகொள்ளாத நிலை, உடலின் தாகம், உள்ளத்தின் சிதறல்கள் எங்கு கொண்டு சேர்க்கும் என்பதான விவரிப்புகள் இவர்களின் கதையின் அசைவாய் பயணிக்கிறது.
இன்னும் எவ்வளவோ எழுதவும் பேசவும் இந்த கதையில் நிறைய தனித்துவமான விஷயங்கள் இருக்கிறது. இருந்த போதிலும், அவை அனைத்தையும் சொல்லி விடவும் முடியாது என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன். வன்முறை என்ற வழித்தடத்தை இலக்கியங்களில் எந்த அளவுக்கு சொல்ல முடியும், அல்லது சொல்ல வேண்டும் என்ற வாதங்களை சற்று ஒதுக்கி வைத்து, அவ்வன்முறைகளின் வழி ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்ற படிம நிலையில் இருந்து இந்த நாவலை அணுகியிருக்கிறேன். இதில் முரண்கள் இருக்கலாம். எனினும், இந்த கதைக்களத்தை, இந்த வெளிச்சத்தின் பிம்பங்களின் கதையை இப்படித் தானே நகர்த்தி சென்றிருக்க முடியும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது புத்தகத்தை முடித்து வைத்த பொழுது. படித்துப் பாருங்கள்…
இயக்குனர் kim ki-duk-ன் 3 Iron பட நாயகனுக்கும் இந்நாவலின் நாயகனான சம்பத்திற்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிந்தது. இருவருமே தங்கள் நிழலை மறைப்பதில் வெற்றி கண்டவர்கள்.சம்பத்-ஷிவானி காதல் அத்தியாயத்தின் முடிவும் 3Iron படத்தின் முடிவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
என்ன ஒரு எழுத்தோட்டம். பல வருடங்களுக்கு பிறகு, ஒரே மிடரில் முழுப்பானை கள்ளை குடித்த உணர்வு.
1982ல் வந்த 'எச்சில் இரவுகள்' படத்தையும், 'ஆரண்ய காண்டம்' படத்தையும் ஞாபகப் படுத்தும் விதமான, கெச்சலான மனிதர்களை கொண்ட நாவல்.
உண்மையில் நாம் வாழும் இச்சென்னையில் இந்த மாதிரியான...இல்லை.....இப்படி வழுமையான...அட இதுவும் இல்லை...இவ்வளவு வக்கிரங்கள் நடைபெறுமா என்ன??? இல்லை, இந்நாவல் முழுதும், எழுதியவரின் கற்பனையா???
அல்லது காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்ற, கடைகோடி நிலை மக்களின் யதார்த்த வாழ்வியலா?? நினைக்கையில், பிரமிப்பும் அருவருப்பும் நம்மை கூசச் செய்கிறது.
கறுப்பர் நகரம் எனப்பட்ட சென்னை ஜார்ஜ் டவுனின் பகுதிகளான, பிராட்வே, சவுக்கார்பேட்டை, மண்ணடி, ராயபுரம், தண்டையார்பேட்டை, சென்ட்ரல் என்கிற இடங்களையும், மதுரை, தூத்துகுடி, திருச்செந்தூர், திருச்சி சிறைச்சாலை, போன்ற இடங்களையும் கதைக்களமாக கொண்டு, பிக்பாக்கெட் திருடி(டர்)களும் , கஞ்சா/கள்ள தங்கம் கடத்தும் குருவிகளும், உணவகங்களுக்கு நாய்கறி விற்கும் கும்பலும், பாலியல்/ குழந்தை கடத்தல் தொழிலை நடத்துபவர்களும் எனக் கதைமாந்தர்களாய் கொண்டதாக உள்ளது இக்கதை.
சம்பத், மணி, சுந்தர், பாஸ்கர், உடையார், இவாஞ்சலின், சோபியா, ஷிவானி, மகேஷ், செல்வி, தவுடு, முத்துலட்சுமி, முருகன், ராஜி, ராஜியின் மனைவி, ஆதம்மா, ஆர்த்தி என இக் கதைமாந்தர்களை, எந்த வர்ணனையின்றி அறிமுகப்படுத்தியும், நன்கு நினைவில் கொள்ளுமளவிற்கு, இவர்களது வாழ்வியல் பிழைப்பு நம்மைத் தாக்கி, பீடிக்கிறது.
இந்த மண் எல்லாருக்குமானது...என்றால் 'எல்லாருக்கும்', அதாவது எந்த கோடிக்கு நல்லவர்களுக்கு ஆனதோ, அதன் நேர் எதிர் கோடிக்கு தீய/ வக்கிர மனங்களையும் செயல்களையும் கொண்டவர்களுக்கானது. இதை, இந்நால் வழியே ஒரு மெல்லிய இறகால் நம்மை வருடி, புரிய வைத்திருக்கிறார் இளம் எழுத்தாளர், #லக்ஷ்மி_சரவணகுமார்.
ஒரு மனித மனதிற்குள்ளேயே ஏற்படும் ஏற்றம்-தாழ்வு, நன்மை-தீமை, சரி-தவறு, புனிதம்-வக்கிரம், என இன்னும் பல அது-இதுக்கள் என்கிற போராட்டம் எழுகிற போது, இம்மாநகரம் எத்தனை விதமான எண்ணக்கலவை கொண்ட மனிதர்களையும், அவர்களின் மனப் போராட்டங்களையும், அதன் வெளிப்பாட்டால் ஏற்படுகின்ற சம்பவங்களையும் தன்னகத்தே கொண்டு, அதை அமைதியாய் வேடிக்கைப் பார்க்கிறது.
இக்கதையில் நடக்கும் சம்பவங்கள் உயிரோட்டமுடன் எழுதப்பட்டிருப்பதால், , 'இதெல்லாம் உண்மையில்லை' என்கிற சமாதானத்திற்கு நம்மால் வரமுடியவில்லை.
இது போன்ற குற்றங்களும்/வன்மங்களும்/உடலரசியலும்/வக்கிரங்களும் நாம் வாழும் இந்நகரிலும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அப்படியே இவைகளை பற்றி தெரிந்தாலும், ஒருவித சலிப்புடன், கணப்பார்வை மட்டும் கவனித்து, நமக்கு மேலிருப்பவன் நிலையை எட்டிப் பிடிக்க ஓட்டம் பிடிக்கிறோம்.
உரையாடலாய் ���ல்லாது, சம்பவங்களை வர்ணித்து, பதைபதைப்பையும், பெருஞ்சலனத்தையும் ஏற்படுத்தி நம் சுயத்தை உணரவைக்கும் இந்நாவலை வழங்கிய #லக்ஷ்மி_சரவணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்தும் நன்றியும் _/\_
பொன்னியின் செல்வனின் 5வது பாகத்தை புத்தக வடிவில்படிக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்துக் கொண்டஇடைவெளியை இட்டு நிரப்ப நான் மீண்டும் படித்த புத்தகம்-உப்பு நாய்கள்
உப்பு நாய்கள்-ஒரு மறு வாசிப்பு அனுபவம்
ஒரு நாவலை மறு வாசிப்பு செய்யும் போது கதாபாத்திரம், கதையை தவிர்தது நாவலின்உட்செறிவு,பாத்திரபடைப்பு, எழுதப்பட்ட விதம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.
ஆர்த்தி நீங்கலாக நாவலில் வரு���் அனைத்து கதாபாத்திரங்களும் விளிம்பு நிலை மனிதர்களே.மற்றமாவட்டங்களிலிருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் சென்னை என்னும் பெரு நகர்த்தை நோக்கிவரும் கதை மாந்தர்களின் அடையாளத் தேடலும் அந்நகரத்திலேயே வாழும் பூர்வ குடிகளின் குற்றபின்புலமும் உடலரசியலாகவும் நகர்கிறது
இந்நாவலில் காமத்தை ஒரு கதாபாத்திரமாகவே கொள்ளலாம்.அதன் இடைவிடாத ஓலம் நாவலின் பக்கங்ளெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன்னுடைய இச்சைக்காக ஒரினசேர்ககையாளனாகவும், கன்னியாஸ்திரிகளான இவாஞ்சிலினையும்,சோஃபியாவையும் புணரும் சம்பத்திற்க்கு தன் தாயும் பெண் தான் அவளுக்கும் ஆசைகளும் இச்சைகளும் உண்டு என்பதை உணர மறுக்கிறான்.
முத்துலட்சுமியின் தகிப்பை அமர்த்த அவளோடு இணையும் செல்வியின் உடலையும் அந்த தகிப்பு பற்றிக் கொள்கிறது.இரவின் மடியில் இருவரும் சோர்வுறும் வரை சேர்ந்தே எரிகிறார்கள்.
விருப்பமில்லாமல் பாதிரியாருடன் பல முறை இணைந்ததால் ஏற்பட்ட கர்பத்தை, விருப்பத்துடன் கடைசியாக சம்பத்துடன் இணைந்து முடித்து,அவன் காதில் அதை சொல்லும் போது இவாஞ்சலின் எனக்கு தேவதையாகப் படுகிறாள்.
ஜி நாகராஐனின் “நாளை மற்றுமொறு நாளே” நாவலை இப்படி விவரித்து இருப்பார்கள்.”நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை”. இது இந்த நாவலுக்கு அழகாக பொருந்தி போகும். இந்நாவலை முடிக்கும் போது ஜி நாகராஐனை போல நமக்கும் தோன்றும் `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்று.
தாங்க முடியாத ஒரு அருவருப்பு 27 பக்கங்களுக்கு மேல் என்னை படிக்க விடவில்லை. இது எந்த மாதிரியான புத்தகம் என்பது மேலும் படித்துப் பார்த்தல் மட்டுமே விளங்கும். நல்ல புத்தகமாகக் கூட இருக்கலாம். ஆனால் என்னால் இதைத் தாண்ட முடியவில்லை
பொதுவாக தமிழில் வரும் நகரம் சார்ந்த கதைகள் குறித்து எனக்கு சில மன தடைகள் உண்டு. தங்கள் கிராமத்தை/பிறந்த ஊரை உயர்த்தி, பிடித்து அதை சொர்கபுரியாகவும் , நகரத்தை ஒரு ஈவிரக்கமில்லா உலகமாக, எந்த வித நல்லவையும் இல்லாத இடமாக காட்டுபவை தான் அதிகம். பிறந்த மண் சார்ந்த nostalgia அனைவருக்கும் உண்டு தான், அதற்காக தான் தற்போது வாழும் இடத்தை பற்றி கேவலகமாக பேசுவது எப்படி என்று புரிவதில்லை. நானும் ஒரு டவுனில் வளர்ந்து வேலை நிமித்தம் தான் நகரத்தில் இருக்கிறேன். எனக்கும் நகரம் முதலில் அன்னியமாக தான் இருந்தது, வளர்ந்த இடம் குறித்த எண்ணங்கள் இன்னும் என்னுள் உள்ளது, ஆனால் என்னால் சென்னையை, அதன் இயக்கத்தை முற்றிலும் வெறுக்க முடியவில்லை. ஏதோ ஒன்று இங்குள்ளது என்பதால்தானே அந்த இடத்தில் நாம் வசிக்கிறோம். சரி, பணம் தான் இங்குள்ளது என்று சொன்னால், உங்களுக்கு பணம் வேண்டாமென்றால் நகரை விட்டு நீங்கலாமே,அது முடியாதல்லவா. ஒவ்வொரு இடத்துக்கும் அதன் பிரத்யேக இயல்புகளும் நல்லது/கேட்டதுகளும் உண்டு தானே, அது போல் தான் இந்த இடத்தையும் பார்கிறேன். கிராமங்களில் பிரச்சனைகளே இல்லையா என்ன. நகரத்தை, அதன் இயல்புகளை உருவாக்குவதும் நாம் தானே. சரி இந்த பீடிகை எதற்காக? 'லக்ஷ்மி சரவணகுமாரின்' 'உப்பு நாய்கள்' நாவல் சென்னை நகரின் அவலங்களை காட்டினாலும் கிராமம் X நகரம் மாதிரியான ஒப்பீடுகள் எல்லாம் இல்லை என்பது ஆசுவாசமாக இருந்தது. இன்னொன்று நகரம் சார்ந்த கதைகளில் இருக்கும் மத்திய தர வாழ்கை, அல்லது வார இதழ்களில் வரும் தரையில் கால் படாத பணக்கார நகரவாசிகள் என்று இல்லாமல் சென்னையின் விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து உள்ளது. முன்பு ஜே பி.சாணக்யாவின் சில சிறுகதைகளில் சென்னையின் விளிம்பு நிலை வாழ்க்கை பற்றி சில சித்திரங்கள் உண்டு. இந்த நாவலில் அது மிக உக்கிரமாக வெளிப்பட்டுள்ளது. சென்னையில் எண்ணற்ற மனிதர்கள், எண்ணற்ற கதைகள் உள்ளது. அதில் மூன்றை இந்த நாவலில் சரவணகுமார் நம் முன் வைக்கிறார். மூன்று இழைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து சொல்லப்பட்டுள்ளது.
ஆதம்மாவின் கதை இழை தான் மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். கடந்த சில சென்னையில் எழும்பி வரும் கட்டிடங்களை பார்பவர்களில் அதை கட்டியவர்களை பற்றி யோசிப்பவர்கள் எத்தனை பேர். சென்னை பேருந்துகளில் இப்போது வெளி மாநிலத்தவர் (கட்டிட தொழில் முதல் ஐ.டி வேலை வரை செய்பவர்கள்), அதிகம் தென்படுவது, அதனால் ஏற்படும் மாற்றங்கள், வேலைக்காக இங்கு வந்து வாழும் வட மாநிலத்தவர் வாழ்க்கை பற்றி நமக்கு என்ன தெரியும், குறிப்பாக மிக சொற்ப பணத்தில் ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து மிக சொற்ப பணத்தில் உழைப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? நான் வசிக்கும் இடத்திற்கு எதிரிலுள்ள இடத்தில் அரசாங்கமே வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறது, மிக பெரிய project. வேலை செய்பவர்கள் வெளி மாநிலத்தவர்கள். காலை 8.30 முதல் வேலை ஆரம்பித்தால், இரவு 8 வரை நீளும். கோடையில் இன்னும் அதிகமாக இரவு பத்து மணிக்கு மேல் கூட வேலை தொடரும். ஞாயிறு மதியம் மட்டும் தான் விடுமுறை. அப்போதும் அடுத்த வார உணவிற்கான பொருட்களை வாங்க சென்று விட்டு மாலையில் மூட்டையில் பொருட்களை சுமந்து வருவார்கள். இங்கு வேலை பார்ப்பவர்கள் அரசின் கொத்தடிமைகள் என்று தான் சொல்லவேண்டும். இந்த மிக முக்கியமான மாற்றத்தை மக்கள் சக்கையாக உறுஞ்சப்படும் அவலத்தை, ஆந்திராவிலிருந்து வரும் ஆதம்மாவின் குடும்பத்தின் மூலம் சொல்கிறார் சரவணகுமார். இதை குறித்து பேசும் முதல் பதிவு (at-least one of the first works to speak on this) இது என்று நினைக்கிறேன். இந்த நாவலை படிக்கும் போது தான், வேளச்சேரி என்கௌன்ட்டர் நடந்தது ஒரு sick coincidence என்று சொல்லவேண்டும். அந்த நிகழ்வையும், அதனையொட்டி வட மாநில மக்கள்/குடியிருப்பவர் குறித்த தகவல் திரட்டுதல் போன்ற profilingஐ ஆதரிப்பவர்கள் இந்த இழையை படித்த பின் அடுத்த முறை உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தை, அதில் வேலைசெய்பவர்களை வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். (Criminal acts cannot be justified, but the state's response too it surely have to humanistic). எத்தனை வெளி மாநிலத்திலிருந்து எத்தனை பேர் வந்து வேலை செய்கிறார்கள், என்ன பணம் கிடைக்கும். எ.டி.எம் கருவியில் பணம் எடுக்க தெரியாமல், கும்பலாக ஒருவரை சுற்றி நின்று அதன் இயக்கத்தை அப்போது தான் தெரிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது நினைவுக்கு வருகிறார்கள். ஆதம்மா இருவருக்குமேடையே ஏற்படும் நட்பு/உறவு மிக இயல்பாக எந்த நாடகத்தன்மையும் இல்லாமல் உருவாகுவது நெகிழ்ச்சியான ஒன்று. இறுதியில் ஆதம்மா ஊருக்கு கிளம்புவது, பிறகு ஆர்த்தி வீட்டில் இருப்பது ஒரு கிளிஷே போல் இருந்தாலும் இப்படி நடந்தால் நன்றாக தான் இருக்கும் அல்லவா. வெளி ஊரிலிருந்து வரும் ஒரு சிறு பெண் பார்வையில் சென்னையை காண்பது, அவளுடைய reactions எல்லாமே சென்னையில் மாறி வருகிற/நாம் கவனிக்கத விஷயங்களை சொல்கின்றன. குழந்தைகள் எப்படியோ புது இடத்திற்கு பொருந்தி விடுகின்றன, ஆதம்மா தன் கிராமத்தை பற்றி நினைத்தாலும் அவள் நகரத்தை வெறுப்பதில்லை, அதை உள்வாங்கிக்கொள்கிறாள்.
செல்வியின் இழை அடுத்தது. விளிம்பு நிலை வாழ்க்கை குறித்த பதிவுகளில் அதிகம் ஆண் சார்ந்து தான் இருக்கும். அவன் பார்வையில் தான் பெண்கள் குறித்த கதையோட்டம் செல்லும். இதில், செல்வியின் பார்வையிலே கதை செல்கிறது. பெண்களின் சிறைவாசம், பெண் கைதிகள் பழகுவது,/பிக்பாக்கெட் தொழில் அதற்கான முஸ்தீபுகள் என நமக்கு புதிதான களங்கள். செல்வி, முத்து உறவை எப்படி சொல்லவது, "Repulsive Attraction?". தான் சந்திக்கும் சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்டு, அதிகம் வருந்தி நிற்காமல் அதற்கேற்றார் போல் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் செல்வி நாவலின் மிக காத்திரமான பாத்திரம். முத்துவை கூட நம்மால் சரியாக கணிக்க முடியாது, ஒரு புறம் மற்ற பெண்களை தான் வசதிக்காக உபயோகித்தாலும், செல்வி மேல் அவள் கொள்ளும் dependence எதை குறிக்கின்றது. அதை வெறும் உடல் சார்ந்தது என்று கூற முடியாது. பொதுவாக இந்த நாவலில் வரும் பெண் பாத்திரங்கள், ஆண்களை விட துணிந்து முடிவெடுப்பவர்களாக, அழுத்தமானவர்களாக உள்ளனர்.
சம்பத்தின் இழையில் விஷயங்கள் சற்றே அதிகம் திணிக்கப்பட்டது போல் தோன்றியது. பொட்டலம் விற்பது, சம்பத்/இவாஞ்சலின் உறவு, மணி/சம்பத் அம்மா உறவு, ஷிவானி என நிறைய விஷயங்கள் இருந்தாலும் மற்ற இரு இழைகளில் கதையோட்டத்தில் இருந்த இறுக்கம்/அழுத்தம் இதில் எனக்கு அவ்வளவாக கிடைக்கவில்லை. உதாரணமாக அலைபேசியில் தன்னுடைய/மற்றவர் அந்தரங்கத்தை பதிவு செய்வது/பார்ப்பது குறித்து ஒரு சம்பவம் இந்த இழையில் வந்தாலும் அது இப்போது சமூகத்தில் நடப்பதை கொண்டு வரவேண்டும் என்று ஒரே நோக்கில் புகுத்தப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இறுதியில் சம்பத்/சுந்தர், சம்பத்/ஷிவானி உறவில் வரும் ஒரு பூடகத்தன்மையும் அவ்வாறே தொக்கி நிற்கிறது. இதை இப்படி பார்க்கலாம், ஆதம்மா/செல்வியின் கதையோட்டத்தில், வெளி மாநிலத்தவரின் வாழ்க்கை/பிக்பாக்கெட் தொழில், பொருட்களை வேறு ஊர்களுக்கு கடத்துவது என அனைத்தும் அந்த இழைகளோடு இழையோடு ஒட்டி வருகிறது, சம்பத்தின் இழையில் சம்பவங்கள் சற்றே விலகி உள்ளது. 'யாக்கை' சிறுகதை தொகுப்பை படித்து ஈர்க்கப்பட்டு இந்த நாவலை படித்தேன். இதுவும் ஏமாற்றமளிக்கவில்லை. வெயிலும், வாதையும், ரத்தமும், நிணமும் முகத்திலறையும் இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள்.
இப்படியானதொரு இருள் அடர்ந்த கதைகளையும் கதைமாந்தர்களையும் எந்த நாவலிலும் வாசித்து இருக்கவில்லை. ஒரு மாநகரத்தின் தெரிந்தும் தெரியாமல் கவனிக்க மறுத்து செல்லும் நிழல் உலகை மையமாகக் கொண்டு நாவல் முன் செல்கிறது. நாவலில் வரும் கதாபாத்திரங்களின் காம இச்சை, பொறாமை, போட்டி, பேராசை, துரோகம் அதனால் ஏற்படும் வன்முறைகள், வாழ்வின் மீதான நம்பிக்கையின்மை போன்றவற்றால் எவ்வளவு திரும்ப திரும்ப துன்பத்தில் சுழல்கிறார்கள் என்பதை விளங்க வைத்து செல்கிறது. மாநகரத்திற்குள் நடக்கும் அத்தனை வக்கரமான,குரூரமான கதைகளுக்கும் தனக்கும் (மாநகரத்திற்கும்) சம்பந்தம் இல்லாதது போல் சொல்லுவது சிந்திக்க வைக்கக்கூடியது. நாம் புனிதம் என்று நினைத்து கொண்டிருக்கும் அத்தனையும் அடித்து நொறுக்கி பேசுகிறது. இந்நாவலின் ஆதம்மா என்ற கதாபாத்திரத்தின் கதை மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்தது.
நாவலை படிக்கும் போது எந்த கதாபாத்திரத்தையும் இடை போட தோன்றவில்லை. அவர்களோடு நாமும் சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் லசகு. எங்கே ஒருவரை ஒருவர் சந்திப்பார்கள், சம்ப்பத்தினால் ஆதம்மாக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று பதட்டம் வேறு. ஆர்த்தி கொஞ்சம் ரபியா நியாபகத்திற்கு வந்து சென்றால். ரூஹ் , கானகன் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கொமோரவை படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலும் அதிகரித்து உள்ளது.
This entire review has been hidden because of spoilers.
லஷ்மி சரவணக்குமார் எழுதிய உப்பு நாய்கள் புத்தகத்தை இன்றைக்குப் படித்து முடித்தேன். வாசித்தே நிறைய நாளாகிவிட்ட பொழுது, ஒரு புத்தகத்தை ஒரே நாளில் வாசித்து முடிக்க தூண்டுதலாயிருந்தது இன்றைக்கு நான் வாழும் பகுதியில் ஏற்பட்ட மின்தடை தான். இதே வேகத்தில் தொடர்ந்து போக முடிந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்!
உப்பு நாய்கள் நாவலின் மைய அச்சு சென்னை நகரம் தான். தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வரும் மக்கள் சென்னை எனும் பெருநகரத்தால் எப்படி மாறுகிறார்கள், மாற்றப்படுகிறார்கள் என்பதே நாவலின் மையச்சரடு.
நாவலின் மையம் சென்னைதான் என்றாலும், அது நமக்குப் பழக்கமான சென்னை அல்ல. நமக்குப் பழக்கமான சென்னையை நாவலில் நாம் வெளியிலிருந்தே காண்கிறோம். ஆதம்மாவின் கண்களினூடாக, அந்நியப்பட்ட பிறிதொருவராகவே நாம் ஸ்கைவாக்கையும், அண்ணா சதுக்கத்தையும் காண்கிறோம்; ஐடி யுவதிகளையும் பார்க்கிறோம்.
ஜி.நாகராஜன் இருண்மை நிறைந்த விளிம்புநிலை வாழ்க்கையை விவரிக்க முயன்றாலும் கூட அது அவ்வாழ்க்கை முறைக்கொவ்வாத பிறிதொருவரின் சம்பவ விவரணையாகவே இருந்தது. ஆனால் உப்பு நாய்களில் அந்த பிரச்சினை இல்லை. இருண்மை நிறைந்த, எவ்வித நம்பிக்கையுமற்ற வாழ்க்கைச் சூழல் அதன் முழு வன்மையோடும் வார்த்தைகளாக்கப்பட்டுள்ளது எனலாம்.
தமிழ்நாட்டில் பொதுவாக நிலவுவதாக சித்தரிக்கப்படும் வாழ்க்கை முறைக்கு அந்நியமான விளிம்பு நிலை வாழ்க்கைச் சித்தரிப்பு கொண்டது உப்பு நாய்கள். தமிழின் subaltern நாவல்களில் முக்கியமானது எனலாம். பொதுவாக தமிழ் நாவல்களில் சித்தரிக்கப்படாத ஓரினப்புணர்ச்சி, வன்மங்கொணட கொலைகள் என நாவல் பெரிதும் மத்தியதர வாழ்க்கை வாழும் சராசரி தமிழ் வாசகனுக்குப் பழக்கமற்ற களத்திலேயே பயணிக்கிறது.
இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் பாலியலும், பாலியல் முரண்களினால் ஏற்பட்ட வன்முறைகளுமே நாவலை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுகின்றன எனலாம். மணி-சம்பத்-சம்பத்தின் அம்மா ஆகியோருக்கிடையே ஏற்படுகின்ற பாலியல் முரணால் சம்பத் மணியின் உடலைச் சிதைக்கிறான். ராஜீவ்- ஆதம்மாவின் அம்மா- சக தொழிலாளர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் முரண்களால் ராஜீவ் உடல் சிதைத்து கொல்லப்படுகிறான். ஆதம்மாவும் அவள் அம்மாவும் ஆர்த்தியிடம் அடைக்கலமாகின்றனர்.
அதிகமாக தமிழ் இலக்கிய உலகில் பேசப்படாபொருளைப் பேசியிருந்தாலும், சில இடங்களில் நாவல் சறுக்கியிருக்கிறது. குறிப்பாக மலையாளப் பெண்கள் என்றால் இப்படித்தான் என்ற தேய்வழக்கு சொல்லப்படும் விதம். பஷீரை ஆதர்ஸமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் அதனை எழுதியதை ஒரு முரணாகவே பார்க்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் அச்சுக்குப் போனபின் முதல் ப்ரூஃப் வாசிக்க யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. நாவலின் பிற்பாதியில் நிறைய பகுதிகள் தேவையற்ற இடங்களில் ஞ�� வந்துள்ளது. பதிப்பாளர்கள் இதுபோன்ற சின்ன விஷயங்களைக் கொஞ்சமேனும் கவனித்துக் கொண்டால் நல்லது.
இது வரை இருட்டு உலகம்/சமூகத்துல குற்றம் என கூறப்படும் தொழில்களை செய்பவர்கள் பற்றி எழுதுப் பட்ட புதினங்களில் உப்புநாய்கள் ஒரு நவீனம்.
சம்பத்,மணி, சுந்தர், பாஸ்கர்,உடையார் ,ஷிவானி, இவாஞ்சலின், சோஃபியா,செல்வி, தவுடு, டாக்டர் முத்துலட்சுமி, பாபு, செல்வியின் கணவன்,மகேஷ்,சம்பத்தின் தாய், ஷிவானி கணவன்(சேட்), ராஜீ,ராஜீ மனைவி, ஆதம்மா, ஆர்த்தி, கட்டுமான வேலை செய்ய ஒரிஸ்ஸா & ஆந்திரா வில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என இந்த நாவலின் உருவங்கள் அனைத்தும் இந்த உலகில் வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு நில��்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
உப்பு நாய்கள் நாவலில் என்னை கவர்ந்த வசனங்கள் பல அதில் சில,
(பிராட்வேயைச் சுற்றியிருக்கும் நிறைய வீதிகளில் லட்சங்களிலும், கோடிகளிலுமாய் சொத்துக்கள் கொண்ட பெரிய மனிதர்கள் சுற்றிக்கொண்டுருந்தனர். ஒருவருக்கும் இவர்களின்(ஏழைகளின்) காலி வயிறுகள் குறித்த கவலைகளோ அல்லது யோசனைகளோ இருந்திருக்கவில்லை.
பசித்தமனிதன் மிருகமாகும் நாள்வரையிலும், சராசரி மனிதன் பசியைப்பற்றி நினைப்பதில்லை போலும். மிருகங்களால்தான் வேட்டையாட முடிகிறது. மனிதன் வேட்டையாடுதலை மறந்து போய் நூற்றாண்டுகளாகிவிட்டது. அந்நகரம் பசியால் வதைப்படும் ஒரு சமூகத்தைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டிருந்த தினங்களில், அச்சமூகம், மிருகங்களாகுமென்பதை உணர்ந்திருக்கவில்லை.)
(எல்லோருக்கும் தேவைகள் அதிகமாயிருக்கிறது. ஒன்று கிடைத்துவிட்டால் இன்னொன்று, அதுவும் கிடைத்துவிட்டால் இன்னொன்று. இப்படி, தினம் தினம் அவர்களின் தேவைகள் பெருகிக்கொண்டேதானிருக்கின்றன, எண்ணமுடியா மழைத்துளிகளைப்போல்.)
A very strong dark themed novel.. Every city has a dark and stinky side to it, most of us just try to ignore it but we can't refuse the fact it exists.
ஜி.டி.ஏ எனக்கு மிகப்பிடித்தமான ஒரு வீடியோ கேம் சீரிஸ். San Andreas போன்ற கேம்கள் சாகசத்தோடு வாழ்க்கையின் முழு சித்திரத்தை அளிக்கும்.
ஏன் ஜி.டி.ஏ போன்ற கேம்கள் எனக்கு பிடிக்கிறது என்று என்னையே இந்நாவல் கேள்வி கேட்க வைத்தது. இந்நாவலில் அறம் இல்லை. விழுமியங்கள் இல்லை என்று பல விமர்சனங்கள் எழலாம். ஆனால், இதில் சாகசம் உள்ளது. இதன் கதாபாத்திரங்கள் மீறலை நேசிக்கிறார்கள்.
சென்னையை மையப்படுத்தி ஒரு ஜி.டி.ஏ கேம் எடுத்தால், உப்பு நாய்கள் அதற்கு அற்புதமான reference point. ஆர்மீனியன் சர்ச் மிஷன் கொடுக்குமிடம். பாஸ்கர் - கஞ்சா கடத்தும் மிஷன் கொடுக்கிறான் சுந்தர் - குழந்தை கடத்தும் மிஷன் கொடுக்கிறான் கோபால் - நாய்களை கடத்தும் மிஷன் கொடுக்கிறான் முத்துலெட்சுமி - விபச்சார மிஷன்கள் பாபு - அபின் கடத்தும் மிஷன்கள் மகேஷ் - காம லீலை மிஷன்கள்
சம்பத்தும் செல்வியும் ஷிவானியும் நாம் விளையாடும் கதாபாத்திரங்கள்.
சவுகார்பேட்டை சேட்டின் வீட்டில் வேலைசெய்து வாழ்க்கையை தொடங்கும் சம்பத், அங்கிருந்து விரட்டப்பட்டு ஆர்மீனியர் சர்ச்சில் சேர்ந்து, கஞ்சா கடத்தி, கொலை செய்து, நாய்கறி விற்று, குழந்தைகளை கடத்தி - கடைசியில் மீண்டும் அதே சேட்டின் மனைவியுடன் ரகசிய அடைக்களம் பெறுகிறான்.
பிக்பாக்கெட் செல்வி மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு சென்று முத்துலட்சுமியைப்பார்த்து விபச்சார பிம்ப்பாக வேலைசெய்து, பின்னர் ஊர்மாறி, அபின் கடத்தும் குருவியாக மாறிவிடுகிறாள்.
சேட்டை கல்யாணம் செய்து சென்னைக்கு வரும் ஷிவானி காம இச்சைகளால் தூண்டப்பட்டு மகேஷ் எனும் ஒருவனால் ஏமாற்றப்பட்டு, பின்னர் சம்பத்துடன் ரகசிய உறவில் இருக்கிறாள்.
இந்நாவலில் சாம்பல் இல்லாத ஒரே பாத்திரம் ஆதம்மா எனும் குழந்தை. ஆந்திராவிலிருந்து பிழைக்க வந்து கட்டிட வேலைப்பார்க்கும் சிறுமி. அவளது அம்மாவை காசுக்காக கணவனே கூட்டிக்கொடுக்கிறான். அதை அவள் எதிர்த்து போராட கணவன் கொலை செய்யப்படுகிறான். ஆதம்மா கடையில் ஐ.டி வேலை செய்யும் ஆர்த்தியுடன் சேர்ந்து பள்ளிக்கு போகிறாள். இந்த ஒரு முடிவு மட்டும் நாவலின் டோனிலிருந்து வெளியேறி அதீத ரொமாண்டிஸைஸாக படுகிறது.
மார்டின் ஸ்கார்ஸசி போன்ற ஒரு இயக்குநர் தமிழில் இருந்திருந்தால் இதனை படமாக எடுத்திருப்பார். (இந்தியன் சென்ஸாரில் தப்பிக்காது என்பது வேறு கதை)
பின்னிரவில் ரயிலில் சந்திக்கும் ஒரு நபர், ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பதும் சம்பத் அவனுடன் சென்று தாம்பரம் பாலத்திற்க்கு கீழே உறவுக்கொள்வதும் இந்நாவல் எனக்களித்த முதல் அதிர்ச்சி. சொம்படிப்பது, கப்படிப்பது போன்ற சொல்லாடல்களின் அறிமுகம்.
அதன்பின், ஒவ்வொரு சேப்டரும் அதிர்ச்சிகளை கூட்டிக்கொண்டே சென்றது. பல நேரங்களில் இதெல்லாம் நிஜத்தில் நடக்கிறதா? அல்லது சுவாரஸ்யத்திற்கு புனையப்பட்டதா என்ற கேள்வி மனதில் ஓடியது. பின்னர், இதெல்லாம் ஏன் நடந்திருக்க கூடாது என்கிற கேள்வியால் பதிலளிக்கப்பட்டது.
தன் நண்பனுடன் தன் அம்மா உறவில் இருப்பதை கண்டுபிடித்த சம்பத் அவளை நடுரோட்டில் அம்மணமாக நிற்க வைக்கிறான்! தியேட்டரில் தன் கணவன் தூங்கிக்கொண்டிருக்க பக்கத்து சீட்டின் புதுமனிதனுடன் காம உறவாடுகிறாள் ஷிவானி! செல்வி லட்சுமியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறாள்!
இந்நாவலின் காமம், வக்கிரம் இதுவரை வேறெந்த தமிழ்நாவலிலும் படிக்காத ஒன்று. அதிர்ச்சியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நகரம் மனிதர்களுக்குள்ளிருக்கும் இடைவேளிகளை பிரிக்கிறது. தனி மனித ஆளுமைகளை உருவாக்குகிறது. தன்னைப்பற்றி மட்டுமே எந்நேரமும் சிந்திக்கும் மனிதன் பிறரைப் பற்றி கவலையின்றி குற்றத்தை தொழிலாக செய்கிறான். அவன் நாய்கறி கடத்துவான். அபின் விற்பான். பிக்பாக்கெட் அடிப்பான். விபச்சாரம் செய்வான். தன்னை முழுதும் நம்பி உடலைக்காட்டும் பெண்ணின் நிர்வாணத்தை விற்பான். தன் மனைவியை காசுக்காக தன் முன்னாலேயே புணரச்செய்வான்.
தன்னுடைய செயல்கள் இன்னொருவனை பாதிக்குமென்கிற எண்ணவோட்டம் அவனுள் கிடையாது. ஒரே ஊரில் வாழ்ந்தாலும் அவன் தனிமனிதன். தனக்கான வாழ்க்கையையும் சாகசத்தையும் தேடி ஓடுபவன்.
இந்நாவலை சாரு நிவேதிதா ‘First Subaltern Novel in Tamil Literature' என புகழ்ந்துள்ளார். இதுப்போல அவர் இதற்கு முன்னர் அவர் புகழ்ந்த தரணி ராசேந்திரனின் ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ எனக்கு பிடித்திருந்தது. அவரிடமிருந்து தமிழ்நாவல் பரிந்துரைப்பட்டியல் இருக்கிறதாவென தேடவேண்டும்.
இந்நாவலின் சாகசங்களை தேடி ஓடும் சாம்பல் பாத்திரமாகவே என்னயும் உணர்க்கிறேன். களைகிறேன்.
This entire review has been hidden because of spoilers.
சென்னை மாநகரில் வாழ்ந்த இரண்டு வருட காலத்தில் நகரெங்கும் சைக்கிளுடன் சுற்றித் திரிவதுதான் வழக்கம். குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை அலுவலகம் (funskool) தங்கியிருந்த பெருக்குடி மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகள். சில நேரங்களில் வேளச்சேரி-பார்க் ஸ்டேசன் இரயிலிலும���.
பார்த்துப் பழகிய / கடந்து சென்ற பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு பல்வேறு வேடங்களும், கதாப்பாத்திரங்களும் தந்துண்டு.
உப்பு நாய்கள் வாசித்த இரண்டு நாட்களும் மீண்டும் அந்த மாநகர வீதிகளில் சம்பத்துடனும், செல்வியுனும், ஆதம்மாவுடனும் உலா வந்த பூரிப்பு.
சம்பத்து கூடவே இருந்திருப்பானோ என்ற கற்பனையுடன் கதையும் முடிந்து போனது.
ஒரு மாதத்திற்கு வைத்து வாசிக்கலாம் என்றிருந்த புத்தகம் இரண்டே நாட்களில் தீர்ந்து போனதுதான் கொஞ்சம் வருத்தம்.
நான் வாசித்த அத்தனை கதைகளில் இருந்தும் இது வேராக இருந்தது. இந்த புத்தகம், பொதுவெளியில் ஒரு மனிதனின் நிர்வாணத்தால் வரும் திகைப்பை, தன் அப்பட்டமான உண்மைகளால் கடத்துகிறது.
இங்கு எல்லாருக்கும் ஒரு கதை உண்டு. சிலர் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்றதுக்கும், சிலர் கீழ் இருப்பதற்கும் அவர்கள் மட்டும் பொறுப்பில்லை.
சில மக்களின் வாழ்க்கை முறைகளை நாம் ஒருபோதும் கண்டு கொண்டதில்லை. அது போன்ற மக்களின் வாழ்க்கையை உணர வேண்டுமாயின் இது போன்ற நாவல்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
உப்பு நாய்கள் சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த நாவல் கதை களத்தின் கதாபாத்திரங்கள் தொழில் பரிச்சயமானதாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் அதி்ர்ச்சியளிக்க வைத்தது. மூன்றே கிளையில் ஒட்டுமொத்த சமுதாய சிரழிவுகளை( பிக்பாக்கெட் திருடர்கள், கள்ள காதலர்கள், கஞ்சா விற்பவர்கள், நாய்க்கறி விற்பவர்கள், குழந்தைகளைக் கடத்துபவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விபச்சாரம் செய்பவர்கள்) விரசம் இருந்தும் ஆபாசம் இல்லாமலும் நேர்த்தியாக கையாண்ட லஷ்மி சரவண குமாருக்கு முதலில் என் வாழ்த்துகள். அனைத்து எழுத்தாளர்களும் சென்னையின் முகத்தை அவர்களின் படைப்புகளில் இல்லாமல் அவர்களின் எழத்துலகம் பூர்த்தி அடையாது என்பதினை நன்கு அறிந்துள்ளோன். ஆனால் இந்த மாதிரி புத்தகத்தில் என்ன கருத்தினை எதிர் பார்த்து வாசித்தேன் என்பதினை முழுமை பெறாமல் ஆசிரியர் முடிவுரை எழுதியுள்ளார் என்பது என் கருத்து. இருந்தாலும் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசித்து இதிலுள்ள உப்பு நாய்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
வாங்க வைத்து பல நாற்களானபோதும் கொரோனாவின் ஊரடங்கு உத்தரவு தான் இந்த நாவலைப் படிக்க காரணம். பத்து ஆண்டுகள் சென்னை வாழ்கை முடிந்து இன்னுமொரு நகரத்திற்கு குடி பெயரும் தருனம்.அலுவலகம் செல்லும்போது கடக்கும் ஒவ்வோர் கடை நிலை மனிதரின் ஒரு நாள எப்படி இருக்கும்,அவர்கள் எதற்காக ஓடுகிறார்கள் ,எதற்கு இப்படியான ஒரு வாழ்வு இவர்களுக்கு என்று யோசிப்பது உண்டு.அனைவரும் சம்ம் அன்று சொல்லிக் கொண்டாலும் மனிதன் பிறக்கும் இடத்திலையே அவனுக்கான வாழ்வும் அதற்கான சரி தவறும் நிச்சிக்கபடுகின்றன. முத்துவாகட்டும், ஷாலினாகட்டும், சம்பதாகட்டும் வெகுசன பார்வையில் தவறானவர்களா இருந்தாலும் அவர்களின் களமும் அவர்களின் விமுறைகளும் வேறானவை. நமது பார்வையில் விலங்காக தென்படும் மனிதர்களின் கதை.. ஆனால் ஆத்தம்மா போன்ற குழந்தைகள் எங்கும் அன்பை விதைப்பவர்களே. உப்பு நாய்கள் இந்த மனித இனத்தின் ஏற்ற தாழ்வுகளில் விழுந்த மனிதர்களின் உயரங்களை பேசுகிறது. லட்சுமி சரவணக்குமார் என்றும் உள் ஆழ்மன கீரல்களை பதியவைபதில் தேரந்தவர். நன்றி!
பெருநகரங்களில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஒரு கதை உண்டு. பெரும்பான்மையாக சமூகம் முகம் சுளிக்க வைக்கும் அத்தனை விஷயங்களும் இந்த நாவலில் எழுதப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை, ஓரினச் சேர்க்கை, போலி பாதிரியார், கஞ்சா, போலி மருத்துவர், பாலியல் தொழில் என்று எவரும் தொட தயங்கும் உலகினை கண்முன் காட்டியுள்ளார் எழுத்தாளர். இந்த புத்தகம் மனித இனத்தின் ஏற்ற தாழ்வுகளில் விழுந்த மனிதர்களின் வாழ்வியல் துன்பங்களை மிகச்சரியாக பதிவு செய்து இருக்கிறது. சம்பத்,லட்சுமி,முத்து,ஆதம்மா,ஷிவாணி என அனைத்து கத���பாத்திரங்களும் எனக்கு பல இடங்களில் பிரமிப்பையும் சில இடங்களில் அருவருப்பையும் தருகின்றது ஆனால் அடுத்த நிமிடமே இது ஒரு யதார்த்த உலகின் பிரதிபலிப்பு என்ற உண்மையும் நமக்கு புரிகிறது. இந்த கதைக்களம் கண்டிப்பாக சாமானிய தமிழ் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட கதைக்களம் அல்ல. இந்த விளிம்பு நிலை வாழ்க்கையை மிகச் சரியாக புரிந்து கொண்டு இந்த நாவலை விறுவிறுப்பாக எடுத்துச் சென்ற எழுத்தாளருக்காக இந்த நாவலை படிக்கலாம். ஆர்வமும் நேரமும் இருந்தால் வாசிக்கவும்.
Two things really offended me after reading this novel. At a point, the author states that a kerala woman is having an extra-marital affair, just like all malayali women. Here, the author is typecasting kerala women. At another instance, he mentions transgender people using the word "ussu". We live in a time where the trans people are already facing a lot of abuses, struggles and rejections. Calling them using abusive /disregarding terms like "ussu", I feel that the author sees them that way. I wouldn't have cared if these two perceptions (about malayali women and transgenders) came from one of the characters. But, these terms are used while the author is narrating the story to us. This is highly disrespectable. If not for these, this novel would've been fantastic because of its hard-hitting narration and writing.
சிங்கார சென்னையில் எவ்வளவு அழகான ஆசிர்வதிக்கபட்ட வாழ்க்கை இருக்கிறதோ, அந்த அளவு மோசமான ஆபத்தான வாழ்க்கையும் இருக்கிறது. அந்த மாதிரி வாழும் மனிதர்களே கதையின் நாயகர்கள். இங்கு அவர்களின் கதையே ஒரு பேர் இலக்கியமாக தந்திருக்கிறார் லட்சுமி. ஆம் அவர்களின் கதை நமக்கு இப்படியுமா இருக்கிறது, இது நமக்கு ஒத்துவராது, கலீஜூ என்றெல்லாம் சொல்ல தோன்றும் வாசிக்கும் போது...ஆனால் அந்த உலகம் நிச்சயம் நம்மை கவரும்.. கதைகள் நம்மை சீண்டினால் தான் நாம் நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ள முடியும். சம்பத்தின் இருப்பு என்னை சுற்றி இருக்கிறது.. சென்னை போன்ற நகரம் அதில் நமக்கு நெருக்கம் இல்லாத மனிதர்களின் கதை. 18+ read.. கதையில் வரும் சில விஷயங்கள் மட்டும் அபத்தமாக தெரிகிறது. அதுவும் அது கதைஆசிரியரே விரவரிப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை.