மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர். அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் கடந்து போகின்றவைதான். ஆனால் பார்க்கத் தவறியவற்றை அவ்வவற்றின் கோணங்களினூடே நம் கவனத்திற்குக் கொணர்ந்து உரையாட அழைத்து மீளப் பார்க்கக் கோருபவை அவை. குமரி மொழியின் கொச்சையும் கேலி-கிண்டலும் சொலவடைகளும் நிறைந்து ததும்பும் அவரின் கதைமாந்தர்கள் சாதி, மதம் கடந்து சகமனிதர்கள்மீது அன்பும் பரிவும் கொண்டு இயங்குபவர்கள். அதனால் நிறுவனப்பட்ட மதம், சமூகச் சட்டகம், அரசு போன்றவற்றின் முகங்கள் அங்கு கிழிந்து தொங்கும். கண்ணுக்குப் புலனாகாத அன்பினாலும் பரிசுத்த நிலையினாலும் நிறைக்கப்பட்டதே வாழ்வு என்னும் மையச்சரட்டை மீரான் மைதீனின் இந்த நாவல் புலப்படுத்துகிறது. ச. அனந்த சுப்பிரமணியன்