சாண்டில்யனின் மோகனச்சிலையின் வேகம் சொல்லற்கரிது! படிக்கும் அத்துணை இதயங்களையும் ஓர் கதாபாத்திரம் கவர்ந்திழுக்கும் என்று தெரிந்தே அந்த கற்பனை கதா பாத்திரத்திற்கு இதயகுமாரன் என்று பெயரிட்டுள்ளார் சாண்டில்யன். ஆரம்பித்த சில நிமிடங்களில் கதையின் வேகம், நம்மை விரைவாக தொற்றிக்கொள்ளும்..
கரூர் என்கிற வஞ்சி மாநகரத்தை இடைகாலச்சோழர்களில் முதல்வன் விஜயாலயன் கைப்பற்றிய விஷயத்தையே மிக சாதாரணமான ஒரு நிகழ்வில் மிக எளிமையா சொல்லி, வாசிப்பவர்களை "ஆஹ் !" என சொல்ல வைத்துவிடுவார்... கி.பி 9ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழ வம்சத்தை நிலைநிறுத்த தொடங்கும் காலகட்டம் தான் கதைக்களம். கண்ணழகி, அச்சுத பேரரையர், மாரவேள், இளையவேள், ஸ்தாணு ரவி, சங்கரநாராயணன், பெரும்பிடுகு முத்தரையர், மாறன் பரமேஸ்வரன் மற்றும் விஜயன் (இதயகுமாரனின் புரவி) இவைகள் தாம் முக்கிய பாத்திரங்கள் என்றாலும் ஆதித்யன், விஜயாலயன் மற்றும் பெரும்பிடு முத்தரையர் முக்கியமான வரலாற்று தலைவர்கள்...
கதையின் நகர்வு தொடங்கிய உடனே அடுத்தடுத்த மர்ம முடிச்சுகளை அடுக்கி கொண்டே போவதும், பிறகு முற்பாதியில் சில முடிச்சுகளும், பிற்பாதியில் பல முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டாலும், பெரும்பிடுகு மீண்டும் ஒரு மர்மத்தை கதையின் கடைசி வரை இழுத்து வருகிறார்...
நிறைய மர்மங்களை கையாண்டதால் என்னவோ மாரவேல் மற்றும் ஸ்தாணு ரவியின் தொடர்பை விவரமாக சொல்ல மறந்துவிட்டார் ஆசிரியர்.. மாரவேல் சாதாரண படைத்தலைவன் மற்றும் சிற்றரசன், அவனுக்கு சேரரில் புகழ்பெற்ற ஸ்தாணு ரவியின் பழக்கமும், அதுவும் இரத்தின பதக்கங்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம் எப்படி வந்தது என்பது அவிழ்க்கப்படாத ஓர் முடிச்சு...
மற்றபடி மோகனச்சிலையாம் கண்ணழகியை இளஞ்சேட் சென்னி என்ற சோழன் தந்ததால் வடித்ததாய் சொல்லும் சாண்டில்யன், அதே மோகனசிலையை (கண்ணழகி) அவர் எழுத்தால் அங்கம் அங்கமாக வடித்திருக்கிறார்.. மோகனசிலையை படிப்போருக்கு ரசம் சொட்டும் காதல் உரையாடல்களிலும், உடல் கூசும் காதல் சரசங்களையும் சாண்டில்யனின் எழுத்துக்களால் மனக்கண்ணில் பார்ப்பதற்கு ஆண்களாயிருந்தால் ஆர்வமும், பெண்களையிருந்தால் கூச்சமும் வருமென்பதில் சந்தேகமில்லை..