திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.
எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.
கருவாச்சியின் கணவன், திருமணமான ஆறே நாட்களில் அவளை விலக்கி வைக்க வேண்டி கூட்டியிருக்கிற பஞ்சாயத்துக் கூட்டத்தில் தொடங்குகிறது கதை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு முன்னேறி...மன்னிக்கவும், இந்த அதிசயம் மட்டும் இந்தக் கதையில் நிகழவில்லை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு, உயிர் வாழ உதவுகிறாள் என்பதுதான் கதை. அனுபவம் ஒரு பெண்ணை(மனிதனை) எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் வைரமுத்து.
ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அம்மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் காதல், வைராக்கியம், பழிவாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, வக்கிரம், உக்கிரம், அறியாமை, வீட்டு வைத்தியம் என்று பல செய்திகளை மிக லாவகமாகச் சொல்ல முடிகிறது வைரமுத்துவால்.
கருவாச்சி, கட்டையன், சடையத்தேவர், பெரிய மூக்கி, கொண்ணவாயன், அழகு சிங்கம், சுப்பஞ்செட்டியார், பவளம், கனகம், பூலித்தேவன் என்று பாத்திரங்களை நம் மனதிலேயே அடுக்கி வைத்துவிட்டார் ஆசிரியர். இவர்களுக்கிடையேயான உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகு மட்டுமில்லை, அதில் உண்மையும் இருக்கிறது. ஒவ்வொரு கதபாத்திரத்துக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் பல பழைய விஷயங்களை, புதிதாகச் சொல்கிறார் கவிஞர். கருக்கலைப்பு பற்றி வருகிற ஒரு பகுதி... கொஞ்ச நேரம் என்னை உறைய வைத்துவிட்டது. இப்படித்தானே என் பாட்டியோ, முப்பாட்டியோ செய்திருப்பாள் என்று நினைக்கும்போது, மனதைப் பிசைகிறது. முன்னுரையில் கவிஞர் நன்றி கூறும்போது சொல்லும் சில வார்த்தைகள் 'தனியொருத்தியாய் அவள் எப்படி பிள்ளை பெற்றாள் என்று மண்டியிட்டுக் காட்டினாளே அந்த மாதரசி - எனக்கு அழுகையே வந்து விட்டது'. கருவாச்சி தனியே பிள்ளை பெறும்போது, எனக்கும் இதே உணர்ச்சி மேலிட்டது. உண்மையிலேயே அழுதுவிட்டேன். மனிதன் உணர்ச்சிகளின் கலவைதானே?
எல்லாரையும் அழிச்சிட்டு ஒரு ஆள் மட்டும் பொழைக்கிறதா செயிக்கிறது ??
எல்லாரையும் பொழைக்க விட்டுட்டு தானும் பொழைக்கிறது தான் செயிக்கிறது !! (y)