அசோகமித்திரன் அவர்களது எழுத்தில் முதன் முதலில் நான் வாசித்தது ஆகாயத்தாமரை என்னும் புத்தகம். அதன் தாக்கத்தின் அடிப்படையில் அவரின் மற்ற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் எப்போதும் இருந்து வந்தது. ஆகாயத்தாமரை படித்து ஒரு வருடம் முடியும் தருவாயில் "தண்ணீர்" புத்தகத்தை கையில் எடுத்தேன். வெகு வேகமாக எழுத்துக்களில் மூழ்கி இந்த புத்தகத்தை முடித்தேன்.
புத்தகத்தின் முன்னரையில், பால் சக்கரியா அவர்கள் எழுதிய எழுத்துக்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின. மிகப் பெரிய மலையாள எழுத்தாளரான இவர், இப்படி முடிக்கிறார், " தண்ணீர் கதையை முப்பது வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தால் நான் இன்னும் மேன்மையான மனிதனும் எழுத்தாளனுமாகியிருப்பேன்". தண்ணீருக்காக போராடிக் களைத்தும், கலைத்தும் போடப்பட்ட மனதிற்குள் பயணிக்கத் தொடங்கினேன். 1973ஆம் ஆண்டு சென்னையின் தண்ணீர் பிரச்சனையை மையமாய் கொண்டு வெளி வந்தக் கதை.
தண்ணீர் தட்டுப்பாடு மானுட உணர்வுகளின் பிரதிபலிப்பில் என்னென்ன விந்தைகளை விதைக்கிறது என்பதையும், மூன்று பெண்களின் சமூக விலக்கல்களின் வழியையும், இவர்களின் வாழ்வின் பாதை எப்படி தண்ணீர் தீர்ந்து போன, ஈரத்தின் எச்சமாக மிஞ்சி நிற்கிறது என்பதே இந்த கதையின் பக்கங்களின் சாரம்.
மனிதர்களின் மனங்களில் ஏற்றத் தாழ்வுக்கான விதை ஆழமாய் வேரூன்றுவது, ஏதேனும் ஒரு பொருளின் தட்டுப்பாட்டில் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்னும் 1000 காரணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பொருள் கிடைத்தல் என்ற புள்ளியில் நிற்கும் பொழுது அது இன்னும் கோரமாய் விரிகிறது. உன்னால் தண்ணீரை தன் இயல்பில் பெற்று விட முடியாது. என் தயவில் தண்ணீரைப் பெற்று செல்லும் நீ, என் காலுக்கும் கீழான சமூகத்தின் படிநிலையில் உந்தி கொண்டிருக்கிறாய் என்ற வக்கிர நினைவடுக்குகளில், வளர்ந்து உயர்ந்து சிரிக்கிறது சுயநலப்பேய். தண்ணீரைக் கூட சுயநலமாய் சித்தரித்து வேடிக்கை பார்க்க நம் கூட்டத்தினால் மட்டுமே முடியும்!
ஜமுனா, சாயா மற்றும் டீச்சரம்மா ஆகிய மூன்று பெண்களைச் சுற்றி சுழல்வதுதான் இந்த தண்ணீரின் கதைக்கரு. நடிகையாக வேண்டும் என்ற கனவில் மிதந்து மிதந்து மீதமிருந்த ஜமுனா, கணவரின் இராணுவ வேலை காரணமாய் தன் குழந்த��யைக் கூட பிரிந்து வாழும், அல்லது வாழ்வதாய் நினைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா, ஜமுனாவுக்கே தெரியாமல் ஜமுனாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமென வரும் டீச்சரம்மா. இவர்களின் மூலம் மானுட வர்க்க மனதின் பேதங்களை அடித்துடைத்து நகர்கிறார் அசோகமித்திரன் அவர்கள்.
"என் ஒருத்தியால இந்த ராட்சத பம்பை அடிக்க முடியல. நேத்திக்கு ரொம்பத் திண்டாடிப் போய்ட்டேன். அந்த ஆளு அடிச்சித்தரமாட்டேங்குறான். அந்த மனுஷனும் அவனை அடிச்சித் தான்னு சொல்ல மாட்டேங்குறார். என்னைக் கோச்சிக்காதேடா கண்ணு"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே".
"நான் ஒரு சுயநலக்காரின்னுதானே நினைச்சுப்பே"...
இப்படியான உரையாடல்கள் கதையின் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு செல்கிறது. இது சுயநலமே? ஒரு விதத்தில் "ஆம்" என்ற ஒற்றை சொல்லில் நகர்ந்து சென்றாலும், கதையின் அடிநாதமாய் மிஞ்சி நிற்பது சுயநலமும், அதிலிருந்து மீண்டு வர நினைக்கும் நம்பிக்கையும் தான். பல்லுயிர் பெருகித் தழைக்கும் இந்த அண்டத்தில், நம்மைக் குறுக்கி நம் பிரச்சனைகளை மட்டுமே, பெருக்கிப் பார்த்து இந்த வாழ்க்கையினை கடந்து செல்கிறோம். ஒரு நிமிடம் நிதானித்து நம்மைத் தாண்டி வெகுஜன மனிதர்கள் படும் துயரத்தைப் பார்க்கும் அக்கணத்தில் விலகிப் போகின்றன நம் காலத்து வேதனைகள். இதை தான் இந்தக் கதைக்கான நரம்பின் மீட்டல் இசையென நமக்குக் கொடுக்கிறார் ஆசிரியர்.
சினிமாக் கனவுகள் சரித்த எவ்வளவோ மனுஷிகளில் ஒருவராக வருவது ஜமுனா. சரிந்தது, சினிமாவில் மிகப்பெரிய இடத்தில அமர்த்திக் காட்டுகின்றன என்று ஓயாமல் குரல் கொடுக்கும் பாஸ்கர் ராவிடம். 1973இல் எழுதப்பட்ட கதை இது. 2020இல் ஜமுனாக்களும், பாஸ்கர் ராவ்களும் இல்லாமல் போயிருப்பார்களா என்ன? காலத்தையும் வென்று நிற்கும் கதைகள், கருத்தியல், பாத்திரங்கள் ஆகியவற்றைப் படைப்பது தானே மிகப் பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகள்.
சாயா, தங்கையாக இருந்தாலும் நடப்புகளில் அக்காவாகவே வலம் வருகிறாள். சாயா சீறி எழுந்து, பொங்கி, கோபித்து, உளம் வெதும்பி, கரைந்து, தணிந்து, அக்காவின் வாழ்விற்காக ஏங்குகிறாள். அக்காவைப் பற்றின நிகழ்வுகள், ஏக்கங்கள் அவளின் வாழ்க்கைக்கான இருள் பொதிந்த பக்கங்களை தாமதப்படுத்தி திறக்கின்றன எப்பொழுதும்.
சாயா மற்றும் ஜமுனாவின் தாய், அவர்களது தாய் மாமாவினால் பராமரிக்கப்படுவதும், அங்கே இவர்கள் நடத்தப்படும் விதமும், உறவுகளிடத்து காலப்போக்கில் அறியாமலே நிகழ்ந்திடும் மாற்றங்களை பல படிமங்களாக விளக்குகிறார் அசோகமித்திரன். புத்தகம் முழுக்க தண்ணீரைத் தழுவியே நகர்கிறது. கிணற்றின் ஆழத்தில் தண்ணீர் தேடப்படுகின்ற பொழுதெல்லாம், மனிதர்களின் மனத்தின் ஆழம் பார்க்கப்படுகிறது. எப்போதும் போல தண்ணீர் வாய்க்கப்பெற்றவர் எஜமானராகவும், தண்ணீருக்கு தவிப்பவர் அவர்களுக்கு கீழானவராகவுமே மாறிப் போகிற சமூக அவலங்கள் துல்லியமாய் போட்டுடைக்கின்றன.
வாழ்வில் எல்லோருக்கும் மிக நிச்சயமாக ஒரு பிடிப்புத் தேவைப்படுகிறது. அது சக மனிதரின் மேல் கொண்ட நட்பாகவோ, காதலாகவோ, நேசமாகவோ, ஏதோ ஒன்றாகவோ தேவைப்படுகிறது. டீச்சரம்மா ஜமுனாவிடம் பேசித் தேற்றி அவள் வாழ்க்கையை மாற்றியது அப்படி ஒரு பிடிப்பின் காரணமாகத்தான் என்றே நினைக்கத் தோன்றியது. இதே பிடிப்பின் காரணம் தான், தன் நடத்தையில் வெட்கி, தன்னை விட்டுப் பிரிந்து சாயவை, ஜமுனா தேடிச் செல்ல வைக்கிறது. ஆறுதல் கூறி, தெளிந்த நீரோடையின் சலசலசலப்பை போல, சலிப்புத் தராத வாழ்க்கையின் வேகம் ஜமுனாவைப் பற்றிக் கொள்கிறது. கடைசிப் பக்கங்களில் ஜமுனா புதுப்பிறப்பெடுத்து சாயாவுடன் உரையாடுவதாகவே நினைத்தேன்.
ஒரு பக்கம் தண்ணீருக்கான பெருந்துன்பம், மறுபுறம் அதோடு இணைந்து செல்லும் வாழ்க்கையின் துயரங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் சமூக சாடல்கள், தனித்து விடப்பட்ட பெண்களின் எண்ண ஓட்டங்கள், தண்ணீரை வைத்து விளக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளாய் ஓடி முடிகிறது தண்ணீரின் பயணம்.
"பாஸ்கர் ராவ் இன்னும் அந்தத் தெருவை விட்டுப் போகவில்லை. தள்ளித் தள்ளியே தெருவின் கோடி வரை சென்றிருந்தது கார். இப்போது காரைத் தள்ள சிறுவர்கள் இல்லை. பாஸ்கர் ராவே வெளியில் நின்று ஒன்றிரண்டு ஆட்களுடன் காரைத் தள்ள சிறுவர்கள் இல்லை. பாஸ்கர் ராவே வெளியில் நின்று, ஒன்றிரண்டு ஆட்களுடன் காரைத் தள்ளிக் கொண்டிருந்தான்".
சாயா சிறிது கண்களை இடுக்கிப் பார்த்துவிட்டு, "அவுங்க தள்ளலை போலிருக்கே?" என்றாள்.
"பிடிச்சுத் தூக்கப் பாக்கிற மாதிரித்தான் எனக்கு இருக்கு" என்று ஜமுனா சொன்னாள்.
"ஆமாம் நீ சொன்னவுடனே எல்லாம் சரியாத் தெரியறது. இடது பக்கத்து சக்கரம் இரண்டும் சேத்திலே இறங்கியிருக்கு".
சாயா ஜமுனாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்....
இப்படி முடிகிறது இந்த தண்ணீரின் ஓட்டம். தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உருவ மாறுதல்கள் போல துயரங்களின் மீதான பார்வைகளும் உருமாறும் என்ற புள்ளியிலிருந்து இந்த கதை பெருகிப் பாய்வதை உணர்ந்தேன். நேரம் கிடைத்தால் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம். வாசித்துப் பாருங்கள்...