"செம்மீன்" - தகழி சிவசங்கரன் பிள்ளை (தமிழில்: சுந்தர ராமசாமி )
------------------------------------------
1956ல் வெளிவந்த இம்மலையாள நாவலை எழுதியவர் தகழி சிவசங்கரன் பிள்ளை. அப்போதே 'சாகித்ய அகாடமி' விருதை பெற்றிருக்கிறது. கடற்கரைவாழ் செம்படவ மீனவர்களின் குடும்பம், வறுமை, பேராசை, காதல், நம்பிக்கைகள் என, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை படம் பிடித்து, நம் கண்முன் காட்டுகிறது இந்நாவல்.
பேராசை கொண்ட செம்பன்குஞ்சு, நியாயதர்மத்தின் வழிவாழ விழையும் அவனது மனைவி சக்கி. இவர்களது மூத்த மகள் கறுத்தம்மா, இளையவள், பஞ்சமி எனும் பதின்ம வயதினள்.
மேலும், பரீக்குட்டி எனும் கறுத்தம்மாவின் பால்ய நண்பன், கறுத்தம்மாவின் கணவன் பழனி என முக்கிய கதைமாந்தர்களையும், பிற்சிலரையும் வைத்து அற்புதமானதொரு கதையை புனைந்துள்ளார் இக்கதையாசிரியர்.
கறுத்தம்மாவின் பரீக்குட்டியுடனான காதலாலா? அல்லது நட்பாலா? எனத் தெரியாமல், பரீக்குட்டியின் உதவியினால் வல்லத்தின்(தோணி) முதலாளியாகிறான், செம்பன்குஞ்சு . பின் பரீக்குட்டியை விடுத்து பழனியை கரம்பிடிக்க, கறுத்தம்மா உந்தப்படுகிறாள். ,கறுத்தம்மா பொருட்டு, பழனி எவ்வளவு முயற்சித்தும் ஊர்ப்பேச்சை தட்டமுடியாத நிலை. தந்தை, தாய், காதலன், கணவன், ஊர் என கறுத்தம்மா அனைத்து பக்கத்திலிருந்தும் அனுபவிக்கும் கொடுநிலை., கடைசியில் இவர்களுக்கு ஏற்படும் துயர முடிவு என கதை பயணித்து முடிகிறது, நமக்குள் மிகுந்த கனத்தை இறக்கியபடி!
ஓவ்வொருவரின் வழி கதை சொல்லிச் செல்லும்போதும், அவ்வாசிப்பின் போதே அவர்களது எண்ண உணர்வை நமக்குள் கடத்தப்பெறுகிறோம்.
இப்பேற்பட்ட படைப்பை 20 நாட்களில் தகழி அவர்கள் எழுதியாதாக முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. இப்படியான மனித மனங்களின் உணர்வுக் குவியலை கொண்டிருக்கும் படைப்பு இருபதே நாட்களில், எழுத்தின் வழி வெளி கொட்டப்பட்டுள்ளதென்றால், அம்மக்களின் வாழ்வியல் தகழி சிவசங்கரன் அவர்களுக்குள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்! நினைக்கையில் மலைப்பே மிஞ்சுகிறது.
நாவல்களை தத்ரூபமாகவும், கதைச்சம்பவங்கள் பிறழாமலும் திரைப்படமாக்கும் கலை ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அந்த வகையில் 1965ல் வெளிவந்த 'செம்மீன்' மலையாளப் படத்தின் இயக்குனரை(ராமு கரியத்) எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தங்கு தடையற்ற எழுத்து சித்திரத்தை வாசித்துணர ஏற்ற நாவல்!
புத்தகத்திலிருந்து:
\
'செம்மீன்', மீனவர் சமூகத்து கதை. செம்பன்குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை; கடற்கரை கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை; தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை; ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக் கதை; ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை; மேலைக்கடல் அன்னையின் செல்ல குழந்தைகளது நித்தியக் கதை.
எளிய பாத்திரங்களையும் சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழகிய வண்ண சொற்சித்திரம் 'செம்மீன்'.
/
\
"பின் ஏன் எல்லாரும் தோணியும் வலையும் வாங்கிக்கிடலே?"
"அதற்கு காரணம் உண்டு. அரயன் 5 ஜாதிப் பிரிவுகள் கொண்டவன். அரயன்,வலைஞன், முக்குவன், மரக்கான். இது தவிர ஒரு பஞ்சம ஜாதியும் உண்டு. மேலும் கிழக்கே இருந்து வருகிற வேலையாட்கள்... அது தனிவகை. இவர்களில் வலைஞர் மட்டும்தான் தோணியும் வலையும் வாங்கலாம். முன்னெல்லாம் தோணியும் வலையும் வாங்குவதற்கான உரிமை வலைஞர்களுக்கு மட்டும்தான் இருந்தது. அவர்களுக்கு மட்டுமே துறை அரையன் அவ்வுரிமையை வழங்குவார்.
வேலாயுதம் கேட்டான்:
"செம்பன் குஞ்சு இதுல எந்த சாதி?"
புண்ணியன் ரசித்து சிரித்துக் கொண்டான்.
"முக்குவன்"
/
\
மனத்தைப் பறி கொடுப்பது என்பது எத்தனை இயற்கையான காரியம்? அவளுடைய இதயம் கொள்ளை போய்விட்டது. செம்படவர்களான அவர்களுடைய வாழ்க்கை துன்பமயமானது. அபாயம் நிறைந்தது. அந்த வாழ்க்கை முறையிலிருந்து ஓடி உருவெடுத்த சன்மார்க்க எண்ணங்கள், நம்பிக்கைகள், ஆகியவற்றை அடித்தளமாக கொண்டெழுந்த கற்கோட்டை ஒன்று உண்டு. அதனுள் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கோட்டையிலிருந்து விடுதலை பெற ஒரு வாசல் திறப்பது போலிருந்தது. ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் போதும். விடுதலைதான்.
/
\
(மீன்பிடித்து கரைக்கு திரும்பிய)தோணியிலிருந்து சிதறுவது தண்ணீரில் பயிரான ஒரு பொருள்தான்(மீன்)?யாரும் விதைக்கவில்லை. யாரும் பேணிகாக்கவில்லை.
/
\
"கல்யாணம் முடிஞ்சு போற வழியிலே, திடீர்னு அவர்(பரீக்குட்டி) வந்து வழி மறிச்சு நிக்க வெச்சுக்கிட்டு, 'காசை எண்ணிக் கீழே வெச்சுப்புட்டுப் போ' அப்படின்னு சொல்லிப்புட்டாருன்னா, என்னா, என்னம்மா செய்வேன் நான்?"
அந்த நிமிஷம் வரையிலும் சக்கி அப்படி எண்ணிப் பார்க்கவில்லை. மனத்தை கிலியில் அழ்த்திவிடும் பயங்கரமான சித்திரம் ஒன்றை வரைந்து கண்முன் நிறுத்தி விட்டாள் கருத்தம்மா.
/
\
ஒரு சர்வ சாதாரண அரயனுடைய நெடுங்கால நம்பிக்கையை அவனும்(பழனி) வெளியிட்டான். அரயன் பணம் சேர்க்க முடியாது! கோடான கோடி உயிரினங்களைக் கொன்று குவிப்பதில்தான் அவனுக்கு சிறிது பணம் கிடைக்கிறத���. பரிபூரண சுதந்திரத்துடன் கடல்நீரில் அங்கும் இங்கும் விளையாடி திரிகின்ற ஜீவன்களை ஏமாற்றி வலையில் சிக்க வைப்பதன் மூலம்தான் அவர்களது வாழ்க்கை நடைபெறுகிறது. லட்சக்கணக்கான உயிர்கள் மூச்சு திணற, விழிகள் பிதுங்க, துடிதுடித்துச் சாவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது! அன்றாடம் அந்த காட்சியை கண்டுகொண்டு இருப்பவனுக்கு ஒன்றுமே இல்லை. இவ்வாறு உயிர் கொலையில் கிடைக்கிற பணம் தங்காது. அந்த பணத்தை சேர்த்து வைக்கவும் முடியாது என்பதுதான் அவர்கள் நம்பிக்கை.
...
இவைகளெல்லாம் பழனியின் வேதாந்த விசாரம் அல்ல. நெடுந்தூரத்துக்கு விரிந்து பரந்து கிடக்கும் அந்த கடற்கரை மக்கள், நூறாண்டு காலமாய், தலைமுறை தலைமுறையாய் இதே கருத்தை கூறி வருகின்றனர்.
/