பாலகுமாரன் இந்த நாவலில் திடீரென்று கோவில் கட்டுவதிலிருந்து, மேலை சாளுக்கியத்துடன் போருக்கான தேவை, போருக்கு தயாராவது, போர் எவ்வாறு நடைபெறுகிறது என்று வேறு ஒரு தளத்திற்கு கதையை நகர்த்துகிறார். பாலகுமாரன் ஒரு போரை, அதற்கான காரணங்களை, எவ்வாறு ஒரு படை தயாராகிறது என்பதை மிக அருமையாக விளக்குகிறார். நம் கண் முன்னே போர் நிகழ்வதைப் போன்ற ஒரு உணர்வை கொண்டுவருவதில், அவருடைய எழுத்து திறமையை உணர்கிறோம். எப்பேர்பட்ட ஒரு எழுத்தாளர் அவர் என்பதை இந்த கடினமான பகுதிகளை கையாள்வதின் மூலம் அறிகிறோம். இதைப் படித்தவுடன் கலிங்கத்து பரணி படிக்க எண்ணம் ஏற்படுகிறது.
சீராளன், உமையாளின் காதல் காட்சி படுத்தலை அவர் தவிர்த்திருக்கலாம். ஒரு கோடிட்டு காண்பித்துவிட்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
வைணவதாசனின் மரணம் நம்மை மிகவும் பாதிக்கிறது. அதற்கான காரணங்களை கருவூர்தேவர் மூலம், நம்மை சமாதானப் படுத்துகிறார்.
மிக அருமையான ஒரு படைப்பு. பாலகுமாரன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதை மறுபடி மறுபடி பறைசாற்றும் ஒரு படைப்பு.