ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் தொடங்கி இறுதிப் போர் தொடங்கும் வரையிலான காலகட்டம்தான் இந்தக் கதையின் களம். ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து அந்த காலகட்டத்தில் நடந்ததை, பல பாத்திரங்களுடன் பயணித்தபடியே செல்கிறது இந்தப் புனைவு. உண்மையும் கற்பனையும் கலந்து, போராளிகளின் வாழ்க்கையையும் அரசின் தந்திரங்களையும் அந்தச் சிறுவன்வழியே கதை நகர்கிறது. ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த `கடவுள் பிசாசு நிலம்' தொடரின் தொகுப்பு நூல் இது. இறுதிப் போர் தொடங்கியபோது ஈழத் தமிழர்களின் மனநிலை, போராளிகளின் முடிவு, அரசு செய்த சூழ்ச்சி என அத்தனையையும் பல கதாபாத்திரங்கள் வழியே சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். கடவுளும் பிசாசும் வாழும் நிலத்துக்குள் வாருங்கள்!
அகரமுதல்வன் (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1992) தமிழில் புனைவுகளும் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுபவர். இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்பவர். ஈழநிலத்தின் பின்னணியில் படைப்புகளை உருவாக்குகிறார்.
கடவுள்… பிசாசு… நிலம்! ❤️ • ஈழத்தமிழ் நிலத்தில் சமாதான ஒப்பந்த காலத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிப்போரின் ஆரம்பம் வரையிலான காலகட்டத்தை களமாக கொண்டு உண்மையும் கற்பனையும் கலந்து படைக்கப்பட்டதே இக்கதை. வெள்ளை முகமூடியணிந்த அமைதிப் பிசாசின் திறந்த கண்களுக்குப் பின்னால் நடந்த அநீதிகளும் மக்களின் துயரங்களும் வரிகளில் விரிந்துசெல்கிறது. பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்ட சடலங்கள் ஒரு புறமும் தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்ட சடலங்கள் ஒரு புறமும் என யாழ் வீதிகளில் குருதி உறைந்துகிடந்த காலத்தை கண்முன்னே மீண்டும் காட்டிச்செல்கிறது அகரமுதல்வனின் வரிகள். • மிடறினில் நஞ்சணிந்த கடவுள்களின் விடுதலை வேட்கையும், அத்தெய்வங்களுடனான மக்களின் தியாகம் கலந்த வாழ்வியலையும், ஆதித்தெய்வமாம் இயற்கையுடனான ஆன்மீக உணர்வுகளையும், அமானுஸ்யமான எழுத்தில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்திச்செல்லும் போக்கு இந்தவகை கதைகளில் சற்று மாறுதலாகவும் புதுமையாகவும் இருந்தது. இடையிடையே சேர்க்கப்பட்ட ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக புத்தகத்திற்கு கூடுதல் வலுச்சேர்த்துள்ளது. • “ஆயுதம் ஏந்திப் புறப்பட்ட விடுதலை வீரர்களைக் கருவில் சுமந்தவர்களின் கண்ணீர், அந்திப்பொழுதின் வானத்தை என்றுமில்லாதவாறு இருட்டச்செய்யும். இந்நிலத்தின் கண்ணீர், மழையை வரவழைக்கும். மின்னலும் இடியும் பெருகி மண்ணுக்குள் வாழும் பிள்ளைகள் பேசும் அசரீரியாக உருக்கொள்ளும். மழையின் துளிகள் விழும் அக்கணமெங்கும் அசையும் தீபத்தின் சுடர்கள் அணைவதில்லை. தியாகத்தை மிஞ்ச பூமியிடம் இயற்கையில்லை. தீரத்தின் கனலில் உயிர் வளர்க்கும், இவ்வாழ்வின் உணர்ச்சியான பொழுது இது. மகவுக்குப் பால் சுரந்த அம்மைகளின் ஆற்றாமையைத் தாங்காது, தேச விடுதலைக்காகக் குருதிப்பால் ஊட்டிய மாவீரர்கள் மண்ணுக்குள்ளிருந்து கதைக்கத் தொடங்குவர். கல்லறைகளுக்கும் நடுகற்களுக்கும் தலை கோதியபடி மகனையோ, மகளையோ சீராட்டுகிறவர்கள் தாயும் நிலமும் ஆகி தாய்நிலமாகக் காட்சியளிக்கின்றனர்.” • “ஒரு கொடுங்கனவென நம்மை விட்டுப் பறிபோன பெரு நிலத்தில், ஒருநாள் வசந்தம் திரும்பும். விடுதலை அரும்பும். நடுகற்களிலும், கல்லறைகளிலும் உறங்கும் தெய்வங்கள் ஒன்றுகூடி எழுவர். அப்போது ஒரு வீரயுகம் தனது அறத்தால் வெல்லும். அறம் வெல்லும். அஞ்சற்க”
புலிகளின் எண்ணமும் வேட்கையும் ஈழ மண்ணில் எத்தனை ஆழத்தில் புதைத்த வேராக ஒவ்வொரு உயிரிலும் துளைக்கும் என்பதை ஆதீரன் மூலம் அறிய முடிகிறது. புலிகளின் மீதான விமர்சனங்களை தவிர்த்து மண்ணின் விடுதலை பற்றி மட்டுமே சிந்திக்க துண்டும் படைப்பிது.
ஈழ தமிழர்களின் சைவம் மற்றும் பக்தி இலக்கியங்கள் மீதான காதல் கதை முழுவதிலும் தெரிகிறது.