சோழவேங்கை கரிகாலன் - 1 ❤️
•
காலக் காலனின் கண்களைக்கட்டி காலம் பல கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் கரிகாலனை கதாநாயகனாக கொண்டு களம் அமைத்திருக்கும் கதை இது. இளஞ்சேட்சென்னியின் அன்பூறிய ஆட்சியில் தொடங்கி பகைவர்களின் நஞ்சூறிய சூழ்ச்சிகளின் பக்கம் திரும்பி அரச குலத்தின் உயிர் களைந்து சோழத்தை கைப்பற்றும் நோக்கில் சிலந்தி வலைகள் பின்னப்படுகிறது. பின்னப்பட்ட வலைகளில் தப்பிய இரையாய் இளவெயினியும், இரும்பிடாரும், வளவனும் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார்கள்.
•
சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என மூன்று பகுதிகளைக் கொண்டமைந்த இந்த முதல்பாகத்தில தலைப்புக்கேற்ப கதைக்களத்தை மூன்று பேரரசுகளின் பின்னணியில் அமைத்திருக்கிறார் எழுத்தாளர் அசோக் குமார். சங்க இலக்கிய ஆய்வு சங்கொலியாய் புலப்படுகிறது இவரின் எழுத்தில். அத்தியாயங்கள் வாசகனுக்கு அறங்களை அவிழ்த்துச்செல்கின்றன. விறுவிறுப்பான கதை ஓட்டத்தில் பக்கங்கள் தானாகவே புரள்கின்றன.
•
இரும்பிடாரின் வீரதீர காட்சிகளும், இளஞ்சேட்சென்னி இளவெயினியின் காதல் காட்சிகளும், வளவனின் ஏறுதழுவும் காட்சியும் அதிசிறப்பு. பக்கங்களின் இடையிடையே வரும் ஓவியங்களும் புத்தகத்திற்கு கூடுதல் அழகு. இளஞ்சேட்சென்னியின் நகலாய் பிறந்து, இளவெயினியின் மதியூகம் ஊறிய அறிவின் வளர்ப்பிலும், மாமன் இரும்பிடாரின் வீரமேறிய ஆற்றலின் பயிற்சிகளிலும் வளர்ந்து வரும் புலியின் பாய்ச்சல் இனித்தொடங்கும்.