தென்பத்தன் கிராமத்தில் உள்ள சவ்தா மானஸ் வீட்டில் பவுரீன் பிள்ளை பேரன் முஸ்தபாகண்ணும் அவரது மனைவி மாரியம் பீவியும், பேத்தி ஆசியாவும் அவரது கணவர் செய்தகமுதுபிள்ளையும் வாழ்ந்த கதை இது. பவுரீன் பிள்ளை, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா உயிர்க்காத்த விசுவாசியாதலால் மன்னருக்கு மிக வேண்டப்பட்டவரானார் மன்னர் இவருக்கு ஒரு வாளும், வெள்ளித் தாம்பாளமும் இவரின் பல தலைமுறைகள் வசதியாக வாழ தேவையான பல சொத்துக்களையும் பரிசாக தருகிறார். இவரின் பேரன் முஸ்தபாகண்ணு தான் பவுரீன் பிள்ளை பேரன் நான் தெருவில் இறங்கி நடப்பதா? நான் தொழில் செய்து பிளைப்பதா? என்ற முன் தலைமுறை பெருமை பேசுபவர். தன் மனைவி மரியம் பீவியை கறவை தீர்ந்த பசு இவளாள் தனது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய முடியவில்லை என்ற வெறுப்பை அதபு பிரம்பால் அடித்து துன்புறுத்தி சொல்கிறார். வீட்டில் சமையல் வேலைக்கு உதவியாக இருக்கும் இளம் வயது பெண் ரைஹானத்தை திருமணம் செய்ய துடிக்கிறான் குடும்ப செலவுக்கு கையில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ள விலைமதிப்பு அதிகம் கொண்ட ஒவ்வொரு பொருள்களையும் தனது உதவியாளர் இஸ்ராயில் மூலம் விற்பனைசெய்து காலத்தை நகர்த்திக்கொண்டிருக்க,இவர் விற்ற பொருட்கள் வீட்டில் வந்து சேர்ந்த பெருமைமிகு கதைகள் மனதை நிம்மதி இழக்க செய்கிறது. இறுதியில் முஸ்தபாகண்ணின் வாழ்க்கை என்ற காலச்சக்கரத்தின் இடப்பெயர்வு எப்படி இருந்தது என்பதே இந்த நாவல்.
முன்னோர் காலத்தில் பெண்ணடிமை - கனவனுக்கு, பெரும் பணம்படைத்தவனுக்கு, அதிகாரம் படைத்தவனுக்கு என்பது இந்தக்கதையில் உள்ள உண்மை.
-கலைச்செல்வன் செல்வராஜ்
சாய்வு நாற்காலி : என்னை கவர்ந்த சில வரிகள்,
ஆடிக்குளிர் நல்கிய இன்பமயக்க சுகத்தில் உணர்ச்சி அடங்கி, மரங்கள் புதுத்தளிர்களையும் மொட்டுக்களையும் கர்ப்பம் தரித்தன. வெயில் முகம் காட்டவே இல்லை. கருமேக காட்டிற்குள் எங்கோ மறைந்துகொண்டிருக்கும் நக்ஸலைட் சூரியன்!
வெளியில் ஜலதோஷம் பிடித்த வானத்தின் மூக்கிலிருந்து நீர் வடிந்தது.
“பாறுகாலி” - கறவை தீர்ந்த பசு. பால் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பீரை.(மரியம் பீவி “குட்டியேய்”)
முஸ்தபாக்கண்ணு கடந்து போன நாட்களின் பச்சை இலைப் படர்ப்புகளின் குளிர்ச்சியை அனுபவிக்க இறங்கி நடந்தார். சைனபா... சபியா... பாத்துமா... எத்தனை யெத்தனை புல்லரிப்புகள்... போதைகள்!
“சில்லற ரூபாய்க்காக இந்தக் குடும்பத்துப் பெருமையை வெலக்கு வித்துப்போட்டீளே? இனி எதெத்தான் விய்க்க மாட்டியோ?”
“எல்லாத்தெயும் விப்பேன். விய்க்காமயிருந்தா ஊடு பட்டினி, தெரியுமா? பவுரீன்பிள்ளை உப்பாக்கெ குடும்பத்திலெ பட்டினி எண்ணு ஊரு தெரிஞ்சா கேவலமில்லியாடா?”
“பட்டினிகெடக்கூதா கேவலம்? ஊட்டுலெ உள்ள சாமாங்களெப் பெறக்கி விக்கூது கேவலமில்லியா?”
“நா விப்பண்டா. எல்லாத்தெயும் விப்பண்டா. என்னால பட்டினி கெடக்க முடியாது. நா இந்தக் குடும்பத்துக்குக் காரணவன். விப்பேன். உள்ளதெல்லாம் பெறக்கி விப்பேன். சாவூதுவரெ பட்டினிக் கெடக்க மாட்டேன். எனக்குத் தின்னணும். வவுறு நெறய தின்னணும். ஒறங்கணும்.”
“வேல சோலிசெய்யாமெ கசேரியிலெ மலந்து கெடந்தா வித்துதான் நக்கணும்.”
“டேய், தல திரிஞ்சிப் பேசாதே. பவுரீன்பிள்ளெ உப்பாக்கெப் பேரன் வேலசோலி செய்து தின்னூக்கு பெறந்தவன் இல்லைடா. கசேரியிலெக் கெடந்து காலாட்டி தின்னூக்குப் பெறந்தவண்டா”.
பெருமை பேசி தின்னுத் தின்னு குடும்பத்தெக் குட்டிச் சோராக்கிப் போட்டியோ. ஒங்கெ கூடெ இந்த நாசம் புடிச்ச ஊட்டுலெ வாழ்ந்தா நானும் தொலஞ்சு போவேன். நா எங்கெயாவது போயி வல்ல வேலயும் பாத்து எனக்கெ பாடெ பாக்கேன்.”
-தோப்பில் முஹம்மது மீரான்