ஒருவருக்கு இயற்கை மீதான காதல் என்பதனையெல்லாம் தாண்டி இயற்கையோடு பிணைந்து வாழும் உயிரினங்களின் வாழ்வானது பாதுகாக்கப்பட வேண்டும், சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் போன்ற உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் தான் இயற்கையை நாம் ஏன் காக்க வேண்டும் என்று விழிப்புணர்வை பிறரிடம் விதைக்க முடியும். அந்த விழிப்புணர்வை தன் எழுத்துக்கள் வழியாக மட்டுமில்லாமல் தன் ஒளிப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் வழியாகவும் ஏற்படுத்தியுள்ளார் மறைந்த இயற்கை ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மா. கிருஷ்ணன்.
காட்டுயிர்கள் வேட்டையாடுவதற்கு அல்ல அவற்றின் வாழ்வு காக்கப்பட வேண்டும் அதற்கு அந்த உயிரினங்களின் பண்புகளை முதலில் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக காட்டில் தன் பல நாட்களை செலவழித்தும் இயற்கை ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை உள்வாங்கியும் நிறைய இயற்கைச் சார்ந்த கட்டுரைகளை 1954 தொடங்கி 1961 வரை தமிழிதழ் ஒன்றுக்கு எழுதிவந்துள்ளார் மா. கிருஷ்ணன்.
இன்றைய காலச் சூழலில் இயற்கை பாதுகாக்க வேண்டிய தேவை இன்னும் அதிகரித்துள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக மா. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய இயற்கை கட்டுரைகள் பலவற்றை தியடோர் பாஸ்கரன் அவர்கள் 2000 ஆம் ஆண்டில் 'மழைக்காலமும் குயிலோசையும்' என்ற இந்நூலில் தொகுத்துள்ளார்.
ஒவ்வொரு கட்டுரையிலும் தன் களப்பணிகள் வழியாக அவர் கண்ட பறவைகள், விலங்குகள் அவற்றின் பண்புகளையும், வீட்டுப் பிராணிகளை அவர் வளர்த்த அனுபவங்களையும் நம்மிடம் பகிர்கிறார் மா.கிருஷ்ணன்.
இத்தொகுப்பில் நிறைந்து இருக்கும் நான் அறிந்த உயிரினங்களைப் பற்றிய அறியாத தகவல்கள் பல வியப்பளிக்கும் விதமாக அமைந்தது. எடுத்துக்காட்டாக 'வெட்டுக்கிளி' என்பது வேறு 'தத்துக்கிளி' என்பது வேறு என்பது இத்தொகுப்பை நான் வாசித்து முடித்தவுடன் செய்த தேடலில் தெரிய வந்தது. 'களிறு' என்றால் யானை என்று பொதுவாகக் கொள்ளாமல் அது ஆண் யானையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் எனவும் பெண் யானையைப் 'பிடி' என்று குறிப்பிட வேண்டும் என்பதனையும் தேவார அடிகள் கொண்டு விளக்கப்பட்டிருப்பது அழகு.
விலங்குகளோடு பின்னப்பட்டிருக்கும் மூடநம்பிக்கைகளை தன் நகைச்சுவை பொருந்திய எழுத்துக்கொண்டு உடைத்திருக்கிறார் மா. கிருஷ்ணன்.
நாட்டு நாய்களை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை கூறியபடி தன் வாழ்வில் நடந்த சம்பவமான கண்டியா எனும் தெருநாய் "எங்க ஏரியா உள்ள வராதே" என்று எப்படி வெற்றுக்கெத்து காட்டியது என்பதை சுவைபட நம்மிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இறுதியாக இயற்கையை மேம்படுத்துதல் என்ற பெயரில் அதன்மேல் கைவைத்து நாம் அதனை சீரழிக்காமல் இருப்பதே நாம் இயற்கைக்கு செய்யும் பெரும் புண்ணியம் என்று நம் தலையில் தட்டியது போல மா. கிருஷ்ணன் சொல்லியிருப்பது வெகுச்சிறப்பு.
ஆங்காங்கே மா. கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியப் பாடல்களும் அவரது சொந்தப் பாடல்களும் மனதிற்குச் சாரலாகவும், மற்றும் ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் உயிரோட்டம் நிறைந்த அவரின் கோட்டோவியங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாக அமைந்தது இப்புத்தக வாசிப்பில்.
மா.கிருஷ்ணன் அவர்களின் வலைத்தளம் அனைத்து இயற்கை ஆர்வலர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.