இப்புவியின் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான காலவெள்ளத்தில் புதைந்தும், அழிந்தும், மறைந்தும் போனவை ஏராளம். அதில், உலகில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு தோன்றிய தொன்று தொட்ட ஒரு தொல்குடியின் பண்பாடும், வரலாறும், மொழியும் அடக்கம். கால வெள்ளத்தில் புதைந்தும், மறைந்தும் கிடக்கும் அத்தொல் குடியின் தடயங்களைத் தேடும் ஒரு தேடல் பயணம் தான் இந்த ஆய்வு நூல். புவியியல், மொழி, கடவுள் வழிபாடு, கலாச்சாரம், வரலாறு, வாணிகம், வானியல் என பன்முக பரிமாணங்கள் மூலம் குமரிக்கண்டம் என்று கூறப்படும் பண்டைய தொல்திராவிடத்தை சங்க இலக்கியங்கள், தொல்லியல் ஆதாரங்கள், மேற்கத்திய கோட்பாடுகள், மெய்யியல் மற்றும் தர்க்கங்கள் மூலம் தேடி கண்டறிய முற்படும் நூல் இது. தமிழ் மொழியே உலகின் மூத்த மொழியென்றும், சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் எல்லாம் தமிழ் மொழியே என்ற ஆய்வு முடிவையும் முன்வைக்கிறது. பண்டைய மூத்தோர் வழிபாட்டுச் சடங்குகள் எப்படி கடவுள் வழிபாடாகவும், மதங்களாகவும் மாறியது என்பதைக் கூறுகிறது. நாம் வணங்கும் முக்கிய கடவுள்களான தட்சிணாமூர்த்தி, சிவன், நாராயணன், நடராஜர், முருகன் போன்ற கடவுள்கள் யார், அவர்கள் எதைக் குறிக்கின்றனர் மேலும் அவர்களுக்கும் குமரிக்கண்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதை எதார்த்த விளக்கங்களோடு முன்வைக்கிறது. உலகில் உள்ள பல தொன்மங்களில், கதைகளில் உள்ள ரகசியங்களுக்கு (சிதம்பர ரகசியம் போன்ற) தத்துவ விளக்கங்கள் தாண்டி எதார்த்த விளக்கங்களோடு விடை கூற முற்படும் நூல். இந்த நூல் தமிழ் மொழி, கடவுள்கள் மற்றும் வழிபாடு, உலகில் உள்ள பழங்குடி கலாச்சாரங்கள், தத்துவங்கள், ஆரியருக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பு, குமரிக்கண்டம் மற்றும் தொல்திராவிட நிலம் குறித்த சரியான நில அமைப்பு ஆகியவை குறித்த எதார்த்த மற்றும் சுவாரஸ்யமான ஆய்வு முடிவுகளை வெளிக்கொணர முயற்சிக்கிறது. இது ஐந்து ஆண்டு கால ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம்.