2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், மீசைகள் உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளின் மொத்த தொகுப்பே இந்நூல்.
நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை
என்பது போன்ற எளிமையும், நேர்த்தன்மையும், கச்சிதமும் பொருந்திய கவிதை வரிகள் நிரம்பிக் கிடக்கும் தொகுப்பு. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வருகிறது. ஆனால், புதிதாய் வரும் ஒரு முதல் தொகுதியின் வசீகரத்தோடு இருப்பது கந்தர்வனின் கவித்திறனைக் காட்டுகிறது.
கந்தர்வன் (பெப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004) தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.
கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.
70-களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.