இந்த புதினத்தை வாங்குதவற்கு முதலில் இரண்டு காரணங்கள். ஒன்று எழுத்தாளர் எஸ்ரா. காவல் கோட்டம் நாவல் வெளியானபோது அதனைப்பற்றி கருத்துக்களை சொன்னவர்களில் முக்கியமானவர் எஸ்ரா. காரணம் இவருடைய காவல் கோட்டம் பற்றிய கருத்து மிக மிக கடுமையாக சு. வெங்கடேசனை சாடுவதாக இருந்தது. குறிப்பாக அவருக்கு எழுத்தாளுமை இல்லை என்றும், ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு அபத்தம் என்ற தலைப்பில் எஸ்ராவின் இணையத்தில் கடுமையாக சாடியிருந்தார். இன்னொரு காரணம் இந்த புதினம் காவல் கோட்டதோடு ஒப்பிடப்பட்டிருந்தது. குற்றப்பரம்பரை பற்றிய நாவல்களில் கா.கோ விட சிறப்பான நாவல்கள் உள்ளன என்றும் அதற்கு உதாரணமாக இந்த நெடுங்குருதி நாவல் குறிப்பிடப்பட்டது.
உண்மையில் காவல் கோட்டம் மிக அருமையான வரலாற்று நாவல், அதில் எள்ளளவும் ஐயமில்லை. முக்கியமாக வரலாற்றை கூறுவதில் ஒரு ஊரை மையமாகவும் அங்கு நடந்த உண்மை நிகழ்வுகளை வரலாற்றோடு பிணைந்து தருவதும் புதுமையல்ல என்றாலும் படிப்பதில் எந்த ஒரு சலிப்பும் கா.கோ ஏற்படுத்தவில்லை. அதேபோல் நெடுங்குருதி இருக்கும் என் நினைத்து படிப்பதில் பெரும் ஏமாற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். இன்னும் முழுமையாக படிக்கவில்லை என்றாலும், 100 பக்கம் தாண்டுவதற்குள் பல முறை நெடுங்குருதியில் ஆர்வம் குறைய, படிப்பதை நிறுத்திவிட்டு, கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்கலாம் என தோணுகிறது. இருந்தாலும், ஒரு புத்தகம் முடியும் வரை வேறு ஒரு புத்தகத்தை தொடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இன்னும் இந்த நாவலை படித்து கொண்டிருக்கிறேன்.
இதுவரை இந்நாவலில், வேம்பலை எனும் ஊரில் உள்ள ஒரு சிறுவனின் குடும்பம், மற்றும் அங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த களவுகளும் அதற்கு பதிலடியாக வெல்சி என்ற ஆங்கில அதிகாரி எடுத்த போரும் கடந்துள்ளது. சில இடங்களில் நாவலின் கதை உயிரற்று சடலமாக எந்த ஒரு புரிதலையும் ஏற்படுத்த மாறுகிறது. உதாரணமாக அச்சிறுவன் நாகுக்கு அம்மை போட்டு பேசாமலிருப்பதால் குடும்பமே வருந்தும். ஆனால் ஓரிரவில் அவன் தன தாயிடம் பசிக்கிறது என சொல்லும்போது, நமக்கு சந்தோசம் உண்டானாலும், அந்த தாய்க்கோ அல்லது எஸ்ராவின் எழுத்துக்கோ அந்த சந்தோசம் துளியளவும் இல்லை. அந்த சம்பவம் மிக சாதாரணமாக கடந்துவிடும். அதேபோல 100 பக்கங்களை தாண்டியும் இன்னும் இந்த நாவல் எதை பற்றி சொல்ல போகிறது என்ற ஒரு தடயமும் விளங்கவில்லை. வேம்பலை ஊரை பற்றியா, அங்கு வாழும் மக்களை பற்றியா, இல்லை அங்கு நடந்த உண்மை சம்பவம் பற்றியா, என ஒரு தடயமும் விளங்கவில்லை. 400 பக்கங்கள் கொண்ட நாவலில் 100 பக்கம் தாண்டியும் கதையின் கருவை தேடுவது புதிதாக உள்ளது. அதேபோல அளவுக்கு அதிகமான கற்பனைகளையும், காட்சிகளை பற்றிய கற்பனை விவரிப்பு ஒரே மாதிரியா நிறைய இடங்களில் இருப்பது மிகப்பெரும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1000 பக்கங்கள் கொண்ட கா.கோ கைகளில் கணக்கவில்லை, ஆனால் இந்த சிறிய நெடுங்குருதி நாவல் வெறும் 400 பக்கம் வரை இருந்தாலும் கையில் கனக்கிறது. காரணம், இந்த நாவலின் கருவை தேடியலைவது தான். முழுவதும் படித்து முடித்த பின் முக்கிய குறிப்புகளை இங்கு பதிவு செய்ய வேண்டும்,