கிளியோபாட்ரா என்னும் பேரெழில் கொண்ட எகிப்திய பேரரசி குறித்து முகில் அவர்களின் எழுத்தில் வந்திருக்கும் உலகம் வியக்கும் சர்ச்சைக்குரிய சரித்திரம். சர்ச்சை இல்லாமல் கிளியோபாட்ரா இல்லை என்பதையே மீண்டும் நிரூபித்திருக்கிறார் முகில் அவர்கள். அவர் மேற்கொண்ட உழைப்பு புத்தகத்தின் பக்கங்கள் முழுக்க தெரிகிறது.
மாவீரன் அலெக்சாண்டரின் மரணம் விதைத்த பாதையில் தால்மியின் வழிகாட்டுதலில் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய சாம்ராஜ்யம் எகிப்திலும், ரோமிலும் நிறுவப்பட்ட கதை. 12ஆம் தால்மியின் குழந்தைகளான 7ஆம் கிளியோபாட்ராவும், 13ஆம் தால்மிக்கும் திருமணம் முடித்து அவர்களை அலெக்ஸாண்ட்ரியாவை ஆள வைத்தார்கள்.
இப்படியான வரலாற்றின் கூற்றில், பொதினியஸ் மற்றும் அக்கிலீஸ் தான் இவர்களுக்கான அடுத்த கட்ட பிரச்னைகளைக் கொடுக்கத் தொடங்கினர். இதற்கு பிறகே ரோமின் மிகப்பெரும் அரசனான ஜூலியஸ் சீசரையும், மிகப்பெரும் போர் தளபதியான மார்க் ஆண்டனியையும் தன் காலடியில், கண்ணசைவில் வைத்திருக்க ஆரம்பித்திருந்தார் கிளியோபாட்ரா.
தங்கள் சகோதரர்களையும், மகன்களையுமே மணம் செய்து கொள்ளும் வழக்கத்தில் இருந்த எகிப்தின் அரசிக்கு எண்ணற்ற காதலர்கள். சீசரின் வழி சீசரியன் என்ற மகன் இருந்ததாகவும் முகில் வரலாற்றுக்குறிப்புகளை எடுத்து வைக்கிறார்.
சீசரின் மகளைத் திருமணம் செய்து கொண்ட பாம்பே என்பவரும் சீஸரும் தான் ரோமின் இரு பெரும் ஆதிக்கமாக திகழ்ந்து வந்தனர். தனது மாமனார் கிளியோபாட்ராவின் ஆதிக்கத்தில் உருகுவதும், 52 வயதில் காதலில் தத்தளிப்பதும் பாம்பேவிற்கு உறுத்தியபடியே இருந்தது. ரோமின் செனட்டில் அனைவரின் எதிர்ப்பையும் பெற்றபடி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் பாம்பேயை கொன்றதில் சீசருக்கு விருப்பம் இல்லை என்பதும் அதற்கு அவர் மிகுந்த கவலை கொண்டார் என்பதுமே முக்கியமான செய்தி.
இந்த புத்தகம் முழுவதும் கிளியோபாட்ரா என்ற எகிப்திய அரசியின் வாழ்க்கை எப்படி பட்டது அல்லது அவளால் எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை முகில் பல ஆதாரங்களை மையப்படுத்தி நகர்த்தியிருக்கிறார். இது போன்ற உலகின் பேராளுமைகளின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து எழுதுதல் முகிலுக்கு கை வந்த கலை. இதற்கு முன்னர் அவரின் ஜெங்கிஸ் கான் பற்றிய புத்தகத்தை படித்திருக்கிறேன். கிளியோபாட்ரா என்னதான் மிகவும் கொடூரமான அரசியாக சித்தரிக்கப்பட்டாலும், எகிப்திய மக்களின் மேல் பெரும் மதிப்பும், பெரும் அக்கறை கொண்ட அரசி என்பதும் இந்த புத்தகத்தின் பக்கங்களின் வழியே வெளிப்படும் இன்னுமொரு உண்மையாக இருக்கிறது.
கழுதைப்பாலில் குளிப்பது என்பதை மட்டுமே தன் அழகின் அம்சமாக திரித்து கூறப்பட்டு, கிளியோபாட்ரா என்ற அரசியின் மாறுப்பட்ட வாழ்வும், எப்படி அவள் ரோமப்பேரரசின் இரு பெரும் தளபதிகளை தன் காதல் வசத்தில் வைத்திருந்தால் என்பதும் விளங்குகிறது. இறுதியில் சீசரின் இறப்புக்கு பின்னர் அவரின் மனைவிகளுக்கும் இடையே நடந்த போராட்டங்களில் எப்படி வெற்றி கண்டார் என்பதும், அதற்கு பிறகு மார்க் ஆண்டனியுடனான காதலும் அவரின் மனைவி ஆக்டேவியாவின் குழப்பங்களும், அவரின் பலம் பொருந்திய அண்ணன் ஆக்டேவியஸ் என்னும் ஆகஸ்டஸ் ரோமின் அடுத்த மிகப் பெரிய ஆட்சியாளராக தன்னை நிறுவிக்கொள்ளப் பார்க்கிறார்.
இந்த நிலையில் தான் கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனியின் இறுதிப் படிநிலைகள் எழுதப்பட்டதாக முகில் குறிப்பிடுகிறார். ஆக்டியம் கடலில் நடைபெற்ற போரில் ஆண்டனி வென்றிட முடியும் என்ற மாயபிம்பத்தை ஏற்படுத்தி கிளியோபாட்ரா ஆண்டனியை வர செய்திருக்கிறாள். அதன் பிறகு நடந்த அனைத்துமே இவர்களை இறப்பின் வாசலுக்கு இட்டு செல்லும் ஒத்திகை போலவே இருந்திருக்கிறது. தனக்கென கல்லறை செய்து கொண்டு அதில் தங்கமிட்டு நிரப்பி, ஐசிஸ் போன்று கடவுளாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. மரணத்தில் இன்னும் குழப்பங்கள் இருப்பதே தெரிகிறது.
இப்படி எல்லோரையும், தன் கண்ணசைவிலும், காதல் பார்வையிலும், ஆட்டி வைத்திருந்த 7ஆம் கிளியோபாட்ரா எப்படி இறந்தாள் என்பதும், அவளின் செல்வங்கள் என்னவாகின என்பதும் இன்னும் மிகப்பெரிய கேள்விக் குறியாகவே இருக்கின்றன. இருப்பினும் அந்த கேள்விகளுக்கும் முகில் பதில் சொல்ல முற்பட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்...