பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது இப்புத்தகம்.
பழ. நெடுமாறன் ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.