தினமும் அலுவலகமும் வீடும் என்கிற இயந்திர வாழ்க்கைக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்ட, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, 'வித்தியா' என்கிற பெண்ணைச் சுற்றிக் கதை நகர்கிறது. தன்னை உணர்ச்சியற்ற இயந்திரமாகப் பார்க்கும் குடும்பச்சூழல், அவள் ஒரு பெண்ணாகத் தன்னை உயர நிறுத்திக்கொள்ள எத்தனிக்கும் போதெல்லாம் "வீட்டினுள்ளே முடங்கிக்கிட" என ஒலிக்கும் ஆண் உலகத்தின் அதட்டலான குரல் எல்லாவற்றிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முற்படுகிறாள்.
ஆண் உலகத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், ஒரு பெண் என்பதால் தனக்குக் கிடைக்கும் சலுகளைகளைப் பயன்படுத்தி முன்னேறவேண்டும் என எண்ணுகிறாள். இதனால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சூழ்நிலையாலும் சந்தர்ப்பத்தாலும், நல்லவர்கள் யாரென்று முடிவு எடுக்கமுடியாமல் திணறுகிறாள். இறுதியில் இந்தச் சிறைக்குளிருந்து விடுபடுகிறாளா என்பதுதான் கேள்வி.
"எப்போதும் பெண்" என்கிற நாவல் எப்படிப் பெண்களினுடைய ஒட்டுமொத்த வாழ்வின் துயரத்தை எடுத்துச் சொல்கிறதோ, அதேபோல "பெண் இயந்திரம்" என்கிற நாவல் நவீன யுகப் பெண்களின் இயந்திர வாழ்வினை எடுத்துச் சொல்கிறது. பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், இழிவுகள், பாலியல் துன்புறுத்தல், துயரங்கள் அனைத்தையும் இந்த நாவல் சொல்கிறது.
சுஜாதாவின் எண்ணத்தில் உருவாகும் பெண்களிடம் ஒரு துடிப்பும் தீர்க்கமும் நிறைந்திருக்கும். ஆனால், இதில் ஒரு சாதாரணப் பெண்ணின் வாழ்க்கையையும் சவால்களையும் பதியவேண்டும் என்பதால் மிகவும் தைரியமான பெண்ணாக மட்டும் சித்தரித்திருக்கிறார்.