மொஸாட் (Mossad - Israeli Intelligence Agency)
***********************************************
பல வருடங்களாக கண்ணில் பட்ட புத்தகம், கடைசியில் வாசித்தாகிவிட்டது. இப்புத்தகத்தைப் பற்றி அதிகப்படியானவர்கள் கூறியதை போலவே மிகவும் விறுவிறுப்பான முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
உளவு அமைப்பை பற்றிய புத்தகம் என்பதாலோ என்னவோ, ஜேம்ஸ்பாண்ட் கதை சொல்லும் பாணியில், மொஸாட் உளவு அமைப்பின் தொடக்கம் முதல் குறிப்பான சம்பவங்களை தேர்ந்தெடுத்து, மிக அற்புதமான முறையில், 'சஸ்பென்ஸ்' நிறைந்த காட்சிபடுத்துதலுடனும், அதே வேளையில் நகைச்சுவை சொற்றொடர்களை கொண்டும் எழுதியிருக்கிறார் திரு என். சொக்கன்.
ஏன் இஸ்ரேலிய உளவு அமைப்பை இவ்வளவு சிலாகிக்கிறோம் என்பதற்கு பல காரணிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்ற நூற்றாண்டின் பாதி வரை யூதர்களுக்கு தனிதேசமென்று ஒன்றும் கிடையாது. எல்லா நாடுகளை போல பாலஸ்தினத்திலும், ஜெருசெலம் பக்கம் யூதர்கள் குறைவான எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு இனம். அவ்வளவுதான்! ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னர், பாலஸ்தின, மற்றும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளையும் மீறி, மேலும் யூதர்களை தேடிதேடி கொன்ற ஹிட்லரின் வெறியாட்டத்தை கடந்து, தனக்கென்று ஒரு நாட்டை நிர்மாணித்து, இன்று வரையில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்தி தங்களை சர்வ ஜாக்கிரதையாக பாதுகாத்து வருகின்றனர். அதற்கு மூலக்காரணம் அவர்கள் கடந்து வந்த கொடும் பாதையும், இனப்பற்றை முன்னிறுத்தி தங்களது புத்திகூர்மையை பயன்படுத்திய விதமும்தான் என அவர்களின் உளவு அமைப்பை பற்றிய சம்பவங்களை காண்கையில் அறியமுடிகிறது.
அவர்களின் உளவுத்துறை தலைவர்கள் பற்றி, அவர்கள் எடுத்த முடிவுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், எப்படி தங்களை தகவமைத்தனர், தங்கள் உளவாளிகளை எந்த அளவிற்கு பிற நாடுகளின் அரசியல் ஆழத்துக்குள் இறக்கியிருக்கின்றனர், அதன் மூலம் தங்களுக்கு தேவையான உலக அளவிலான அரசியல் காய்நகர்த்தல்களை எவ்வாறு நிகழ்த்தியிருக்கின்றனர், தங்கள் எதிரிகளை பிறநாட்டிற்குற்குள் சென்று தூக்கி வரும் ஆள்கடத்தல்கள், போர்விமான/படகு கடத்தல்கள் என இப்படி சகல விதமான சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது.
உளவு வேலை ஒரு போதை என்பது, பல சம்பவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உளவு பார்த்து பழக்கப்பட்டமையால் எதிரி நாடுகள் என்றில்லாமல், நட்பு நாடு, அவர்களது அரசியல், ஏன் சொந்த நாட்டு அரசியல் தலைவர்களையும் உளவு பார்க்க அவர்களது உளவாளிகளை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கச் செய்திருக்கின்றனர். உதாரணமாக, தனது 'இஷ்டமித்ர பந்து'வான அமெரிக்காவிலும் கணக்கற்ற உளவு வேலைகளை பார்த்து வருகிறது மொஸாட்.
யூதர்களின் அடிநாதமாக உள்ள ஒரு கொள்கை, எந்த ஒரு யூதனும் உலகில் எந்த மூலையிலும் கொல்லப்படக்கூடாது. போலவே, முடிந்த அளவிற்கு தங்களது உளவாளிகளையும், அவர்கள் தோல்வியுற்றாலும் எப்படியாவது மீட்டு, முறையான வகையில் அவர்களது மீதி வாழ்க்கையை கழிக்க ஏற்பாடும் செய்து தருகின்றனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உளவு அமைப்பு எந்த எல்லை வரை ஆபத்து, தியாகங்கள் புரிந்து உதவியிருக்கும் என்பதற்கு இஸ்ரேலிய உளவு அமைப்பான, 'மொஸாட்'ன் காகித சாட்சியாக இந்த புத்தகத்தை பார்க்கலாம்.