#ஆசிரியர் : "கவிஞர் கண்ணதாசன்".
#கதாபாத்திரங்கள் : இரண்டாம் சேரமான் பெருமாள் (எ) குலசேகர ஆழ்வார் ; மூன்றாம் சேரமான் பெருமாள் (எ) பாஸ்கர இரவிவர்மன், செரொட்டி அம்மாள் ((எ)) பத்மாவதி; மார்த்தாண்டவர்மன்,மெல்லிளங்கோதை; யூஜியானா, சலீமா, தரங்கிணி, நாராயண நம்பூதிரி மற்றும் பலர்.
#கதைக்களம் :திருவஞ்சை ((தற்போதைய கருர் ,பழனி, தென்காசி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்., ))
வேணாடு ((தற்போதைய கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம்,திருவிதாங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகள்))
#வகைப்பாடு: சரித்திரப்புதினம்.
#மொத்த பக்கங்கள் : 680.
கதை:
நமது கதை ஆரம்பிக்கும் ஆண்டு கி.பி.796. இரண்டாம் சேரமான் பெருமாள் பட்டத்திற்கு வந்து நாற்பத்து இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருந்தன. அவர் "பெருமாள்" பட்டம் பெற்று ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தன.இவர் வஞ்சியின் மன்னராக அரசு கட்டிலில் ஏறியது கி.பி.754ஆம் ஆண்டில். அப்போது பெரியாழ்வாரின் மாணவராக தம்மை வரித்துக்கொள்ளுகிறார். அதன் பொருட்டு தன் பெயரை "இரண்டாம் சேரமான் பெருமாள்" என மாற்றிக்கொண்டார்.பாண்டியர் நாட்டையும், கொங்கு நாட்டையும் அவர் சேர்த்து ஆண்டதால் இவருக்கு "கூடற்கோன்" என்றும் "கொங்கர்கோன்" என்றும் பட்டம் இருந்தது.
இரண்டாம் சேரமானின் ஆட்சி முறை சோழ-பாண்டிய நாடுகளில் இல்லாத விதத்திலே இருந்தது. சேர நாட்டின் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு நம்பூதிரியின் கையில் இருந்தது. அத்தனை நம்பூதிரிகளுக்கும் சேர்த்து வஞ்சியிலே ஒரு சபை இருந்தது.அந்த சபையின் தலைவர் நாராயண நம்பூதிரி. தற்போதைய நிலையின்படி நாராயண நம்பூதிரி பிரதம மந்திரியாகவும், இரண்டாம் சேரமான் பெருமாள் குடியாட்சித் தலைவராகவும் விளங்கினார்கள்.
இரண்டாம் சேரமான் பெருமாள் வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு, மகன் மார்த்தாண்டனிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்துவிட்டு "குலசேகர ஆழ்வாராக" மணிமுடியை துறந்து வைணவ ஷேத்திரங்களுக்கு செல்வதோடு, பெரியாழ்வார் போன்ற வைணவப் பெரியார்களை சந்தித்து ஆசி பெற்று, தன்னுடைய அரச வாழ்க்கை, குடும்பம் பற்றிய நினைவுகளை முற்றிலுமாக மறந்து, துறந்து திருக்கண்ணபுரம் என்ற இடத்தில் மரணம் அடைகிறார்.
சேரநாட்டின் தலைநகர் வஞ்சி என்றழைக்கப்பட்டாலும் அது தலைநகரின் ஒரு பகுதிதான்.கொடுங்கோளூர், கொல்லிநகர், மகோதைபட்டிணம் என்று மற்ற பகுதிகள் அழைக்கப்பட்டன.அரண்மனை இருந்த இடம் வஞ்சி ஆதலால் வஞ்சி என்று அழைக்கப்பட்டது.
பாஸ்கர ரவிவர்மன் இரண்டாம் சேரமான் பெருமாளின் மைத்துனரின் மகன், மறைந்த பட்டத்து ராணியாரின் தமையன் மகன். அத்தை பட்டத்து ராணி; மாமன் மன்னன் என்ற முறையில் அரசாங்கத்தில் அவன் பெற்றுக்கொண்ட சலுகைகள் அதிகம். அவையெல்லாம் மன்னர் மனதில் அவனைப்பற்றிய தவறான எண்ணத்தை உண்டாக்கி இருந்தன. பாஸ்கர ரவிவர்மன் மனைவியின் பெயர் பத்மாவதி.
பாஸ்கர ரவிவர்மன் ஒரு புதிர். கொடுமையும், தர்மமும் சம அளவு கலந்த வடிவம். "காலம் கருதிச்செய்யும் அதர்மமும், ஒரு ராஜதந்திரமே " என்று நினைப்பவன். அவனுக்கு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளிலே எதிலே தவறலாம், தவறக்கூடாது என்பதும் அவனுக்கு தெரியும்.
சேரநாட்டில் அக்கால கட்டங்களில் யூதர்கள், சிரியன் கிறிஸ்தவர்கள் மற்றும் மகமதியர்களும் நிறைந்திருந்தார்கள். வாணிப நிமித்தம் வந்த இவர்கள் சேர நாட்டில் பல இடங்களை கைப்பற்றி தற்பாதுகாப்புக்கென்று படைகளும் வைத்திருந்தார்கள்.
பாஸ்கர ரவிவர்மனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் பெயர் யூஜியானா. அவள் யூத இனத்தை சேர்ந்தவள்.யூஜியானாவின் தாய் அவள் சிறு வயதிலேயே இறந்துவிட்டாள். மகளைக்கருதி அவள் தந்தை யோகோவா திருமணம் செய்து கொள்ளவில்லை. யோகாவா விலை குறைவான நவமாணிகளை விற்கும் சிறிய கடை ஒன்றை வைத்திருந்தார்.
இவர்கள் இருவரும் சந்தித்து காதல் கொண்டது ஒரு தனிக்கதை. சில வருடங்களுக்கு முன் நடந்த போரிலே பாண்டிய இராஜசிம்மனுக்கும், இரண்டாம் சேரமான் பெருமாளின் சேனைகளுக்கும் நடந்த பெரும்போரில் சேரப்படைகளுக்கு தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவன் பாஸ்கர ரவிவர்மன். இந்த வெற்றியினால் பாண்டியர் வசமிருந்த வேணாடு, ((தற்போதைய கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம்,திருவிதாங்கோடு,கல்குளம் ஆகிய பகுதிகள்)) சேரநாட்டின் வசமானது.
வலிமை குன்றிய பாண்டியப்படையை வெல்வது பாஸ்கர ரவிவர்மனுக்கு கடினமான ஒன்றாக இல்லை.எனவே தன்னை ஒரு தலைவனாக காட்டிக்கொள்ளும் பொருட்டு தனக்குத்தானே எடுத்துக்கொண்ட வெற்றி விழாவில் தன் சகோதரிகளுக்கும், மனைவி பத்மாவதிக்கும் நகை வாங்குவதற்காக வாணிபச்சந்தைக்கு வந்த பாஸ்கர ரவிவர்மன், நவமணி கற்கள் வாங்க யோகோவாவின் கடைக்கு வந்தபோது யூஜியானாவை பார்த்தான்.காதல் கொண்டான். தன் வெற்றி விழாவிற்கும் அழைத்தான். அன்று முதல் அவன் அவளானாள். அவள் அவானானாள். அன்று முதல் யூஜியானாவை இரவு வேளையிலே சந்திப்பதை தன் கடமைகளில் ஒன்றாக கருதினான் ரவிவர்மன்.
இரண்டாம் சேரமான் பெருமாள் கி.பி.798 ல் தன்னுடைய மகன் மார்த்தாண்டனுக்கு முடிசூட்டி அரசைக்கொடுத்துவிட்டு துறவரம் பூண்டு மரணமடைகிறார். இடைக்காலத்தில் மார்த்தாண்டன் ஆட்சிக்கு வந்தவுடன் தாயாதிகளுக்குள் கலகம் ஏற்படுகின்றன. குறிப்பாக பாஸ்கர ரவிவர்மன், அடங்கிக்கிடக்கும் பாண்டியர்கள், கொங்கர்கள் ஆகியோரை எதிர்க்கும் அளவிற்கு மார்த்தாண்டன் வலிமை பெற்றவனல்ல, என எண்ணி, ஒரு வீரனின் கையில்தான் சேரநாடு இருக்க வேண்டும் என்ற நினைப்பில் அரசாட்சியை வலுக்கட்டாயமாக மார்த்தாண்டனிடம் இருந்து பிடுங்கி தான் அரசனாக திட்டம் தீட்டுகிறான்.
இதற்காக தன் காதலி யூஜியானாவை நடன மங்கையாக மதுரைக்கு அனுப்பி அவள் மூலம் பாண்டியப்படையையும், மாதவி என்ற விலைமாதுவை கொங்கு தேசம் அனுப்பி கொங்கு நாட்டுப்படையையும் தந்திரமாக வரவழைத்தான் ரவிவர்மன். பாண்டிய நாட்டுப்படைகள் வஞ்சியின் ஒரு புறமும், பாண்டிய நாட்டுப்படைகள் வஞ்சியின் மறுபக்கத்திலும் பாடி இறங்கின. சேரப்படை வீரர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவன் பாஸ்கர ரவிவர்மன், அவர்களும் ரவிவர்மனோடு சேர்ந்து கொள்ளவே, அரண்மனை, நம்பூதிரிகள் சபை அனைத்தும் சுற்றி வளைக்கப்படுகின்றன. ரவிவர்மன் சகோதரிகள் மற்றும் மனைவி பத்மாவதியின் உதவியோடு, தன் மனைவி மெல்லிளங்கோதையோடு அகஸ்தீஸ்வரன் காட்டுக்கு, நாடிழந்த மன்னவனாக தப்பியோடுகிறான் மார்த்தாண்டன்.
இந்த திட்டங்கள் அனைத்தையும் தான் செய்தது சேர நாட்டில் உள் நாட்டுக்கலவரம் நேராமலும், வலிமையற்ற அரசனால் பெரும் போர்களை சேரநாடு சந்திக்காமல் இருப்பதற்கே என்று பாஸ்கர ரரவிவர்மன் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், சேர மக்களாலும், நாராயண நம்பூதிரியாலும் இது நம்பிக்கை துரோகமாகவே பார்க்கப்பட்டது.
இதற்கேற்றார்போல், பாஸ்கர ரவிவர்மன் சேர அரசனாக பதவி ஏற்கும்போது பல அபசகுனங்கள் நிகழ்கின்றன. பாரம்பரியம் மிக்க சேரநாட்டின் கிரீடம் காணாமல் போகிறது. பகவதிதேவியின் சிவப்பு மூக்குத்தி மாயமாகிறது. பாஸ்கர ரவிவர்மன் கண்களுக்கு (மட்டும்)தலைவிரிகோலத்தில் அகோரமாய் ஒரு பெண் தெரிகிறாள். இதனால் பதவி ஏற்பு விழாவே தள்ளிவைக்கப்படுகிறது.
சோழ மன்னன் விக்கிரம சோழன், அவன் மனைவி சோழமாதேவி, அவர்களது முயற்சியால் நாராயண நம்பூதிரி, பாஸ்கர ரவிவர்மா, மார்த்தாண்டன் ஆகியோரிடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு எல்லோராலும் ஒப்புக்கொள்ளபடுகிறது. அதன்படி சேரநாடு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவிதாங்கோட்டை தலைநகராக்கி வேணாடு மார்த்தாண்டனுக்கும், வஞ்சியை தலைநகராக கொண்ட சேரநாடு பாஸ்கர ரவிவர்மனுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.
மார்த்தாண்டன் தன் தந்தை இரண்டாம் சேரமான் பெருமாள் போலவே பக்தி மார்க்கத்தில் திளைத்தார். அவர் வேணாட்டடிகள் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தன் தந்தையார் வைணவ அடியாராய் இருந்தபோதிலும் மார்த்தாண்டன் சைவனாகவே வாழ்ந்து வந்தான்.
சேரநாட்டில் பாஸ்கர ரவிவர்மன் தன் பழைய தீய பாதையிலிருந்து விலகி, திருந்திய மனிதாராய் மூனறாம் சேரமான் பெருமாள் ஆக பதவி ஏற்கிறார். அவர் மனைவி பாத்மாவதி செரோட்டி அம்மாள் என்ற பெயருடன் பட்டமகிஷியாகிறாள். இவர்களுக்கும் சரி, வேணாட்டை ஆளும் மார்த்தாண்டன்-மெல்லிளங்கோதைக்கும் சரி, குழந்தை பாக்கியமில்லை. ஒரு வாரிசற்ற சூழலில் சேரம் இருக்கிறது.
இந்நிலையில் யூத அழகியும், சேரமானின் காதலியுமான யூஜியானா கருவுறுகிறாள். பட்டத்துராணிக்கு குழந்தை பேறு இல்லை ஆனால் சேரமான்-யூஜியானா மூலம் யூதர்-சேரர் கலப்பில் வந்த வாரிசு அரசாள்வதா என நம்பூதிரி சபையும் அதன் தலைவருமான நாராயணன் நம்பூதிரியும் கொந்தளிக்கிறார்கள். யூஜியானாவிற்கு பிறக்கும் பிள்ளையால் சேர நாட்டுக்கு மட்டுமல்ல மூன்றாம் சேரமான் பெருமாளின் உயிருக்கே ஆபத்து என்று கதைகட்டி குழந்தை பிறக்கும் முன்பே யூஜியானாவையும் அவர்தந்தை யோகோவாவையும் தனி மரக்கலம் ஒன்றில் இஸ்ரவேலுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புகிறார்கள். சேரமான் பாஸ்கர ரவிவர்மனுக்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லையென்றாலும், நாட்டின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாட்டுக்கு இணங்கி, அவர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுக்கிறார். இஸ்ரவேலில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக யூஜியானாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது.
யூஜியானாவின் பிரிவிலிருந்து மூன்றாம் சேரமானாகிய பாஸ்கர ரவிவர்மன் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறிக்கொண்டிருக்குபோது, அரேபியாவிலிருந்து ஒரு கலம் வந்து வஞ்சியை அடைகிறது. அதிலிருந்து இறங்குகிறார்கள் பேரழகியான சலீமாவும் அவள் தந்தை மகமதுவும். வஞ்சியில் உள்ள தன் சகோதரி பாத்திமா வீட்டிற்கு சேர நாட்டில் வியாபாரம் செய்வதற்காக வந்திருக்கிறார் மகமது.
சேர நாட்டிற்கு, வெளி நாட்டில் இருந்து வணிகம் செய்ய வருபவர்கள் சில நன்கொடை பொருள்களுடன் அரசரை சந்தித்து அனுமதி பெற வேண்டும் என்பது விதி. அதன்படி சலீமா தன் தகப்பனார் மகமது, தன் உறவுக்கார பெண் ஜெபுன்னிசாவுடன் சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மரை சந்தித்து கண்டதும் காதல் கொள்கிறாள். ஒரு முறை கடைவீதியில் மதம் பிடித்த யானையிடமிருந்து சலீமாவை காப்பாற்றி மயக்கமுற்றுக்கிடந்த அவளுக்கு அரண்மனையில் வைத்து சிகிச்சை அளித்து அவள் மனதில் மேலும் இடம் பிடிக்கிறார் சேரமான்.
மூன்றாம் சேரமான் பெருமாள் அவ்வப்போது சமய, இலக்கிய,தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபட்டு பலதுறை அறிஞர்களின் வினாக்களுக்கு விடையளிப்பது வழக்கம். சலீமா, தன் தோழி ஜெபுன்னிசாவோடு அந்தக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு, சேரமானே ஆச்சரியப்படுமளவு, அறிவு செரிந்த கேள்விகளை கேட்டு வியக்க வைக்கிறாள். அந்த கலந்துரையாடல் முடிவில் சேரமான் தவற விட்ட பதக்கத்தினை எடுத்துக்கொள்வதோடு, அதன் உள்ளே வரையப்பட்ட யூஜியானாவின் ஓவியத்தைப்பார்த்து, சேரமானின் காதலியைபற்றியும், அவள் வஞ்சியிலிருந்து இஸ்ரவேலுக்கு அனுப்பப்பட்டதையும் அறிந்து கொள்கிறாள் சலீமா. சேரமான் மீண்டும் அவளிடமிருந்து அந்த பதக்கத்தை மீளப்பெற்றுக்கொள்ளும்போது அதில் சலீமாவின் படம் இருப்பதைக்கண்டு அதிசயிக்கிறார்.
கடற்கரைக்கு மனச்சாந்திக்காக, சென்றபோது, அங்கு தன் தோழியுடன் வந்திருந்து, அலையாடிக்கொண்டிருந்த சலீமாவை அலை இழுத்துச்செல்வதை கண்ட சேரமான், கடலில் குதித்து அவளை மறுபடியும் காப்பாற்றுகின்றார். இருவரும் ஆள் அரவமற்ற ஒரு தீவில் ஒதுங்கி மனதாலும் உடலாலும் ஒன்று சேர்கிறார்கள். வஞ்சி நகரில் ஒரு நாள் இரவு முழுதும் அரசரை காணவில்லை என்பதோடு சலீமாவையும் காணவில்லை என்பதால் நகர மக்களும், அரண்மனை அதிகாரிகளும், நம்பூதிரி சபையும் ஒன்��ுக்கொன்று தொடர்புபடுத்தி முடிச்சிட்டு "மீண்டும் மன்னர் ஒரு மகமதியப்பெண்ணுடன் காதல் கொண்டுவிட்டார்" என்று கொந்தளிக்கிறார்கள். இந்த நிகழ்வு அரண்மனையில் மட்டுமல்லாது, வஞ்சியில் இருக்கும் மகமதியர் மத்தியிலும் கொந்தளிப்பை உருவாக்குகிறது. சேரமான் சலீமாவை மணந்து கொள்ள மதம் மாறவேண்டும் என்று ஆவேசத்துடன் கோரிக்கை வைக்கிறார்கள்.
சேரநாட்டுக்கு ஒரு மகமதியப்பெண் பட்டத்தரசி ஆவதை ஏற்க முடியாது எனவும், சேரமானின் முன்னோர்கள் சமயப்பற்றில் உறுதி மிக்கவர்களாய் இருந்தார்கள் என்பதால் சேரமான் மதம் மாறுதல் என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று, என நாராயண நம்பூதிரியும், நம்பூதிரி கிராம சபையினரும், வேணாட்டை ஆண்டு வருபவரும் "வேணாட்டடிகள்" என அழைக்கப்படுபவருமான மார்த்தாண்டனும் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
வஞ்சி நாட்டில் இருந்த யூதர்கள், யூத அழகியான யூஜியானாவை சேரமான் காதலித்தது மட்டுமல்லாமல் மனைவியாக்கி,ஒரு குழந்தைக்கும் தாயாக்கியதால் யூஜியானாவும் அவள் பெண் குழந்தையும்தான் சேரநாட்டின் உண்மையான வாரிசு என்று வாதிட்டது மட்டுமின்றி, யூஜியானாவையும்,அவளது பெண் குழந்தையும் மீண்டும் இஸ்ரவேலில் இருந்து வஞ்சிமாநகருக்கு வரவழைக்கிறார்கள்.
வாரிசில்லாத சேரநாட்டின் உரிமையுள்ள பட்டத்து ராணி பத்மாவதி...சேரமானால் காதலிக்கப்பட்டு பெண் குழந்தையோடு நிற்கும் யூத அழகி யூஜியானா..!! மனமும் உடலும் ஒன்று சேர்ந்து சேரமானே எனக்கானவர் என உரிமை கோரும் அரேபிய அழகி சலீமா..!!!இதற்கிடையே சின்னாபின்னபட்டு கிடக்கும் சேர நாடு...!!!
"இருவரையும் அவரவர் தேசத்திற்கு, திருப்பி அனுப்புங்கள்" என்று சபைத்தலைவர் நாராயண நம்பூதிரியும் , சோணாட்டின் விக்கிர சோழனும், கேட்டுக்கொண்டாலும் மனம் மாறாத சேரமான் பாஸ்கர ரவிவர்மன். இதன் விளைவாக சேர நாட்டின் நன்மைக்காக பாஸ்கர ரவி வர்மனை கொல்லவும் திட்டமிடுகிறார் நாராயண நம்பூதிரி. இரவில் வஞ்சி அரண்மனையில் சேரமான் பாஸ்கர ரவிவர்மன் தன் காதலியரோடு படுக்கையில் துயில் கொண்டபோது கொலைகாரனொருவனால், அவரை நோக்கி வீசப்பட்ட வேலை தன் மார்பிலே தாங்கி சேரமான் மடியிலேயே உயிர் விடுகிறாள் யூஜியானா. அவளது சடலத்தை கண்டு கதறுகிறார் மூன்றாம் சேரமான் பெருமாள். நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் கண்டு அந்த சோகத்திலும் ஒரு இறுதி முடிவுக்கு வருகிறார் சேரமான். தனக்கும் யூஜியானாவிற்கும் பிறந்த பெண் குழந்தையை தன் பட்டத்து மகிஷி பத்மாவதியிடம் ஒப்படைக்கிறார் சேரமான்.
நாராயண நம்பூதிரியின் திட்டப்படி பாண்டிய நாட்டுப்படைகள் ஸ்ரீவல்லபன் தலைமையில் வஞ்சிமாநகரை வளைக்கின்றன. சேரமான் தன்னுடைய நாட்டை பனிரெண்டு சிறுநாடுகளாக பிரித்து மார்த்தாண்டவர்மன், தன் சகோதர சகோதரிகள்,சுற்றத்தார், நண்பர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு பங்கிட்டு கொடுக்கிறார்.அவர்களிடம் கண்ணீருடன் விடைபெறுகிறார்.
வஞ்சியில் இருக்கும் தொழுகை மண்டபத்தில் மதமாற்ற சடங்குகள் செய்வதாக இருந்த ஏற்பாட்டினை, அங்கே நிலவும் பாதுகாப்பற்ற சூழல் கருதி சற்றுத்தள்ளி வைக்கிறார் சேரமான். பின் அரேபியா செல்லும் கப்பலில் தன் காதலி சலீமாவோடும், அவள் தகப்பனாரோடும் ஏறி அமர்கிறார்.பின்னாலே யூஜியானா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியும் ஏற்றப்படுகிறது. அனைத்தும் ஏற்றப்பட்டபிறகு சேரமான் மகமதிய மதத்தை தழுவி "அப்துல் ரகிமான் சாமொரின்" என்று பெயர் மாற்றிக்கொள்கிறார். மதமாற்ற சடங்குகள் கப்பலிலேயே நடைபெறுகின்றன.
சிலகல் தூரம் சென்ற பிறகு சலீமா-சேரமான் இருவரும் யூஜியானாவின் சவப்பெட்டியை கடலில் இறக்குகிறார்கள். ஜலசமாதியான யூஜியானாவின் ஆன்மாவும் அவர்களுக்கு விடைகொடுத்தது. கப்பல் அரேபியாவை நோக்கி பயணிக்கிறது.
மூன்றாம் சேரமான் பெருமாள் அப்துல் ரகிமான் சாமொரின் என்ற பெயருடன் மகமதிய மதத்தை தழுவி தன் முஸ்லீம் மனைவியுடன் அரபிக்கரையில் உள்ள "சுகர் முக்கல்" என்ற துறைமுகப்பட்டிணத்தை அடைந்து, அங்கே சிலநாள் இருந்துவிட்டு பிறகு அவ்விடம் விட்டு கடற்கரை வழியாக "ஜபார்" என்னும் ஊரையடைந்துவாழ்கிறார்.அப்பால் உடல் தளர்ந்து மகமதிய பெண்ணின் கண்காணிப்பில் இருந்து ஜபார் என்னும் ஊரிலேயே கி.பி.838 இல் இறந்து விடுகிறார்.
அவருக்கு அந்த ஊரில் சமாதி ஒன்று கட்டி அவர் உடலை அடக்கம் செய்தார்கள். அந்த சமாதியில் "சேர அரசர் அப்துல் ரகிமான் சாமொரின் அடக்கம். இவர் ஏ.எச்.212 ல் வந்து ஏ.எச்.216 இல் இறந்தார்" என்று அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.
((A.H.என்பது After Hijira என்பதைக்குறிக்கும்))
மூன்றாம் சேரமான் பெருமாள் (என்ற) பாஸ்கர ரவிவர்மன் (என்ற) அப்துல் ரகிமான் சாமொரின் கி.பி.798-கி.பி.838.
என்று இந்த வரலாற்று புதினத்தை நிறைவு செய்கிறாரார் கவிஞர் கண்ணதாசன்.
இந்த சேரமான் பெருமாள் சமாதியை மிஸ்டர்.உலோகன் என்ற ஆய்வாளரையும்,பிறவற்றை "சேரர் வரலாறு"எழுதிய துடிசைக்கிழார் என்பவரது நூலையும் ஆதாராங்களாக்குகிறார்.
என்னுரை:
தமிழகத்தின் மாபெரும் மன்னர்களான சோழர், பாண்டியர், மற்றும் பல்லவர் வரலாறு பற்றி பல புதினங்கள் வந்து விட்டன. சேரர் வரலாற்றை அடித்தளமாக கொண்டு ஒரு புதினம் வரவில்லையே என்ற தமிழர்களின் மனக்குறையை நீக்கி, இப்போது நிறைவை ஏற்படுத்திவிட்டார் கண்ணதாசன்.
வரலாறோடும், விறுவிறுப்பான கதைப்புனைவோடும் சேர நாட்டின் வழக்கங்களான "மருமக்கள் தாயம்".இஸ்லாமியர்களை "மாப்பிள்ளா" என்று ஏன் அழைக்கிறார்கள், பகவதியம்மன் திருவிழா, போன்றவற்றையும் அற்புதமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
இரண்டாம் சேரமான் பெருமாள், மூன்றாம் சேரமான் பெருமாள் (எ) பாஸ்கர ரவிவர்மன் (எ) அப்துல் ரகிமான் சாமொரின், மார்த்தாண்டன், நம்பூதிரிகள் சபைத்தலைவர் ((நாராயண நம்பூதிரி என்ற பெயர் மட்டும் கற்பனை)) சேரமான் காதலியான மகமதியப்பெண்((சலீமா என்ற பெயர் மட்டும் ஆசிரியரால் சூட்டப்பட்டது)) ஆகிய அனைத்து பாத்திரங்களும் வரலாறு கண்ட உண்மையானவர்கள்.
யூஜியானா என்ற யூதப்பெண்ணின் பாத்திரம் மட்டும் ஆசிரியரின் கற்பனையில் உதித்தது.
இந்த புதினத்தை படித்து முடிக்கும் போது, சேரமான் பாஸ்கர ரவிவர்மன், அவரது காதலிகள் யூஜியானா மற்றும் சலீமா ஆகியோர் நம் மனத்தில் நிரந்தரமாக தங்கிவிடுவது மட்டுமின்றி, கனத்த இதயத்தையும், தொண்டையை அடைக்கும் சோகத்தையும் நமக்கு கொடுத்துவிடுகிறார்கள்.
இந்தப்புதினத்தின் கதையின் நாயகனான பாஸ்கர ரவிவர்மனை புதினத்தில் ஆரம்பத்தில் ஒரு கொடியவனாக, Negative shade ல் காட்டி, பின்னர் படிப்படியாக அவரை மனந்திருந்தியவனாக மாற்றி, இறுதியில் அவருக்காக நேயர்களை கண்ணீர்விடவும் செய்து, அசத்தியிருக்கிறார் கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது.
ஆசிரியர் கண்ணதாசன் அவர்களை ஒரு தலை சிறந்த கவிஞராக நாம் அறிவோம். ஒரு அற்புதமான எழுத்தாளராகவும் நம் இதயங்களை கொள்ளை கொள்ளுகிறார் ஆசிரியர்.
மொத்தத்தில் ..
என் மதிப்பீடு : 3.5-4 //5.
படித்து பாதுகாக்கப்படவேண்டிய சேரர் வரலாற்று புதினம்.
இப்புதினத்தில் எனை மிகவும் கவர்ந்த கவிஞர் கண்ணதாசனின் தத்துவார்த்மான வரிகள்:-
*"அவனிடம் யாரெல்லாம் ஆழ்ந்துவிட்டார்களோ, அவர்களெல்லாம் ஆழ்வார்களே"
-பக்கம் 49.
*"நீ வால்மீகியா? உனக்கு வால்தான் மீதி"
-பக்கம் 69.
*"குருதி படிந்திருக்கும் வாள்தான் கொற்றவனுக்கு பெருமை தருவது. வேல் எப்போதும் பளபளவென்று ��ருக்கக்கூடாது. அதைத்துடைத்து வைத்து மினுமினுப்பு தரக்கூடாது. வேலை மினுக்குதல் வீணானது என்பதால்தான், வீணாகச்செய்யும் வேலைகளை "வேலை மினுக்கிட்டு" (வேலை மெனக்கெட்டு) என்கிறோம்."
-பக்கம் 154.
*"இல்லம் என்ற வார்த்தைக்கு "எதுவும் இல்லாமல் இருக்கிறோம்" என்பதே போருள்..
இல்லாது வந்தோம், இல்லாது போகிறோம்;இடையில் சிலர் நம்மை இல்லாதவர்கள் ஆக்குகிறார்கள்"
-பக்கம் 151.
*"மனஸ் என்ற சொல்லில் இருந்துதான் "மனுஷ்யன்"என்ற சொல்லே பிறந்தது. ஆகவே அனைத்துக்கும் மூலம் மனமே."
-பக்கம் 105.
*"கோவிலுக்குள் நுழையும்போது படியின்மீது ஏறிச்செல்லவேண்டும்.திரும்பிப்போகும்போது படியை தாண்டி செல்ல வேண்டும். இதன் காரணம் என்ன தெரியுமா? நாம் படிப்பதற்காகவே கோயிலுக்குள்ளே போகிறோம்.அதனால்தான் இதை "படி"என்று ஆணையிடும் வார்த்தையாகவே வைத்தார்கள்"
-பக்கம் 103.
----------+++++-------