புதினத்தின் பெயர்
"ராஜதிலகம்"
எழுதியவர்
"சாண்டில்யன்"
கதாபாத்திரங்கள்...
ராஜசிம்ம பல்லவன், பரமேசுவரவர்மன், ஆச்சார்ய தண்டி, ஸ்ரீராமபுண்யவல்லபர், விக்கிரமாதித்தன், பூவிக்கிரமன், ரங்கபதாகாதேவி, மைவிழிச்செல்வி, யாங்சின், பலபத்ரவர்மன், இந்திரவர்மன், ரணதீரன், வீரபாகு, விநயாதித்தன், விஜயாதித்தன்.
கதை இடம் பெறும் வரலாற்று பகுதிகள்:
மாமல்லபுரம், காஞ்சி, விளிந்தை,தழைக்காடு, உறையூர், பெருவளநல்லூர்.
இது ஒரு வரலாற்று புதினம்.
கதை :
இப்புதினத்தின் கதை ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது நரசிம்மவர்மனின் தந்தையான பரமேசுவரவர்மன் காலத்தில் துவங்குகிறது.
பல்லவ சக்ரவர்த்தியான பரமேசுவரவர்மன் சாளுக்கிய வேந்தனாகிய விக்கிரமாதித்தன் படையெடுப்பின் காரணமாக, காஞ்சியில் இருக்கும் சிற்பங்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக சாளுக்கிய மன்னனுடன் நேரடியாக போர்புரியாமல் காஞ்சியை விட்டு அகலுகிறான். சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சியையும் பல்லவ தேசத்தையும் ஆக்கிரமித்தது மட்டுமின்றி சாளுக்கிய அரசை தெற்கே உறையூர் வரை விஸ்தரிக்க எண்ணுகிறான்.
பல்லவ இளவலும், பரமேசுவரவர்மன் மகனுமாகிய ராஜசிம்ம பல்லவன் சிறந்த சிற்பியும், ஓவியனுமாவான். அவனது கனவு காஞ்சியில் கைலாசநாதர் ஆலயத்தையும், மாமல்ல புரத்தில் அரங்கனுக்கு ஒரு கோவிலையும், கட்டி தனது சிற்பத்திறமையையும் இவ்விரு கோவில்களிலும் திறம்பட விளங்கச்செய்து வரலாற்றில் இடம் பிடிப்பதேயாகும். ஆனால் பல்லவ பேரரசு சாளுக்கியரால் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டு வெகுண்டு பல்லவ பேரரசை சாளுக்கியரின் பிடியிலிருந்து விடுவித்து பின் கோவில் கட்டுவது என்று உறுதி பூணுகிறான் ராஜசிம்மன்.
தனது குருநாதரும், காஞ்சிக்கடிகையின் ஆசிரியருமான ஆச்சாரிய தண்டியின் உதவியுடனும், தனது நெடுநாள் காதலியும், பல்லவ ஒற்றர் தலைவன் இந்திரவர்மன் மகளுமான மைவிழிச்செல்வியின் உதவியுடனும் மாமல்லபுரத்தில் இருந்து, காஞ்சிக்கடிகைக்கு வந்து அங்கிருந்து தன் தந்தை ரகசியமாக படை திரட்டிக்கொண்டிருக்கும் இடத்துக்கு செல்ல திட்டமிடுகிறான் ராஜசிம்மன்.ஆச்சார்ய தண்டியின் மாளிகையில் கங்க மன்னன் பூவிக்கிரமன் மகளான ரங்கபதாகாதேவியை சந்தித்து காதல்வயப்படுகிறான்.
இந்நிலையில் சாளுக்கிய மன்னனது போர் அமைதி மந்திரியான ஸ்ரீராமபுண்ணியவல்லபரின் தந்திரத்தால் ராஜசிம்மனால்,சரியான சமயத்தில் தன் தந்தை பரமேசுவரவர்மனிடம் சென்று சேரமுடியாமல் போகிறது. பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் சரியான திட்டமிடல், வழிநடத்துதல் இல்லாமையால் "விளிந்தை" என்ற இடத்தில் சாளுக்கிய மன்னனின் நண்பனும், கங்க மன்னனுமாகிய பூவிக்கிரமனிடம் முறியடிக்கப்பட்டு படுகாயமடைகிறான். அதுமட்டுமின்றி தன் குலச்சொத்தான உக்ரோதயம் என்ற மாணிக்கத்தையும் கங்க மன்னனிடம் பறி கொடுக்கிறான்.
சாளுக்கிய மந்திரி ஸ்ரீராமபுண்ணியரின் தடைகளை கடந்தும், சாளுக்கிய மன்னனும், மாபெரும் வீரனுமாகிய விக்கிரமாதித்தன் கருணையாலும், ராஜசிம்மன் , படுகாயமடைந்த தன் தந்தையைசேர்ந்து, சீன தேசத்தவனும், தன் நண்பனுமாகிய யாங்சிங் உதவியுடன் தன் தந்தையை காப்பாற்றுகிறான்.
பின் விளிந்தையிலிருந்து கங்க தேசம் சென்று கங்க மன்னன் பூவிக்கிரமனிடம் அவனது மகளான ரங்கபதாகாதேவியை மணந்து பட்டத்துராணியாக்க வாக்கு கொடுத்து, கங்க மன்னனை சாளுக்கியர்களுக்கு உதவாமல் நடுநிலை வகிக்க வேண்டி சம்மதமும் பெற்று, தன் தந்தை, தன் நண்பன் சீனன் ஆகியோர் உதவியுடன் படை திரட்டி ,சாளுக்கிய நாட்டின் மீது யாரும்எதிர்பாரா தருணத்தில போர் தொடுத்து, விக்கிரமாதித்தன் மகன் விநயாதித்தனையும், பேரன் விஜயாதித்தனையும் துங்கபத்திரை அருகே முறியடிக்கிறான் ராஜசிம்ம பல்லவன்.
இந்நிலையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் சாளுக்கிய சாம்ராஜ்யத்தை உறையூர் வரை விஸ்தரிக்க எண்ணி, தன் போர் அமைதி மந்திரியான ஸ்ரீராமபுண்யவல்லபர் தடுத்தும் கேளாமல் பெரும் படையுடன் உறையூர் நோக்கி செல்கிறான். சாளுக்கிய மன்னது நோக்கத்தை அறிந்த ராஜசிம்ம பல்லவன் பாண்டிய இளவரசன் ரணதீரன் கோச்சடையானுடன் சாளுக்கியர்களுக்கு பல்லவர்களுக்கு எதிரான போரில் எவ்வித உதவியும் செய்யயக்கூடாது என்று கோரிக்கை வைத்து ரணதீரனின் சம்மதத்தையும் பெறுகிறான்.
பின்னர் அங்கிருந்து விளிந்தை நகரை அடைந்து
பரமேசுவரவர்மனும், இளவல் ராஜசிம்மனும் பெரும்படையுடன் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக படை நடத்தி உறையூருக்கு அருகே பெருவளநல்லூர் என்ற இடத்தில் சாளுக்கிய விக்கிரமாதித்தனை சந்தித்து நேருக்கு நேர் போர் புரிந்து விக்கிரமாதித்தனை முறியடித்து, அவன் பெரு வீரன் என்பதாலும், அவனால் காஞ்சி கோவில்களுகோ, மாமல்லபுரம் சிற்பங்களுக்கோ எவ்வித ஆபத்தும் நேராததாலும், ராஜசிம்மனை சிறை செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் விக்கிரமாதித்தன் போரில் சந்தித்துதான் வெற்றியடயவேண்டும் என்ற பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாலும், ராஜசிம்ம பல்லவன் அவனை மன்னித்து சாளுக்கிய நாட்டுக்கு அஅனுப்புகிறான்.
பல்லவநாடு சாளுக்கியர் பிடியில் இருந்து விடுதலை அடைகிறது. ராஜசிம்ம பல்லவன், தன் இரு மனைவியர் மைவிழிச்செல்வி மற்றும் பட்டமகிஷி ரங்கபதாகா தேவி ராஜதிலகமிட, தன் தந்தை பரமேசுவரவர்மன், தன் குருநாதர் ஆச்சார்ய தண்டி ஆகியோர் ஆசிகளுடனும் வாழ்த்துக ளுடனும். காஞ்சியில் கைலாசநாதர் கோவிலை கட்டி முடிக்கிறான்.
என் பார்வையில்...
இந்த புதினம் திடமான சரித்திர ஆதாரம் மற்றும் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டுஎழுத்தப்பட்டுள்ளது. சரித்திர ஆதாரங்கள், அடிக்குறிப்புகள் ஆங்காங்கு தரப்பட்டுள்ளது இப்புதினத்திற்கு தனிச்சிறப்பு தருகிறது. அந்த கால போர் முறைகள் மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்லவ இளவரசன்ராஜசிம்மன், சாளுக்கிய மன்னனை பெருவளநலூர் என்ற இடத்தில் சந்திக்கும் போது அமைக்கும் "விருச்சிக தாண்டவம்" என்ற "தேள்" போன்று படைகளை நிறுத்தி அமைக்கும் வியூகம் அபாரம்.
பல்லவர்காலத்தில் காஞ்சியில் அமைந்திருந்த கடிகை, (பல்கலைக்கழகம்) அதில் பயிற்றுவிக்கப்பட்ட வேதபாடங்கள், தமிழ்மறைகள், பாரதம் முழுவதிலும் இருநது அங்கு வந்து,தங்கி கற்ற மாணவர்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் போன்றவை, இப்புதினத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆச்சார்ய தண்டி பாத்திரம்மூலம் அழகாக விளக்கப்பட்டுள்ளன.
உண்மைக்கதாபாத்திரங்களுடன் (பரமேசுவரவர்மன், ராஜசிம்ம பல்லவன், விக்கிரமாதித்தன், ரங்கபாதகாதேவி, பூவிக்கிரமன்) கற்பனை கதாபாத்திரங்களும் சரியான தருணங்களில் சேர்க்கப்பட்ட விதம் புதினத்திற்கு மேலும் சுவை கூட்டுகிறது.
சாண்டில்யனுக்கே உரித்தான காதல், பெண்கள் குறித்த அவரது வர்ணணை, குறிப்பாக மைவிழி செல்வியுடனும், ரங்காபாதகா தேவியுடனும், ராஜசிம்மன் தனியே சந்திக்கும் தருணங்களில் அவர்களது மார்பகங்கள் மற்றும் பின்னெழிலை விவரிக்கும் முறை அளவுக்கு மீறி படிப்பவர்களை சற்றே நெளிய வைக்கிறது. ஆனாலும் காதல்காட்சிகள் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் சுவையாயும், ரசனையோடும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புதினத்தில் இன்னொரு சறுக்கலான பாத்��ிரம், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யன் பாத்திரம். இந்தப்புதினத்தில் இவர் "அநியாயத்திற்கு நல்லவர்" என்ற ரகத்தில் சேர்க்கப்படவேண்டியவர். "பல்லவ இளவல் ராஜசிம்மனை, போரில் நேருக்கு நேர் சந்தித்து யுத்த தர்மப்படிதான் வெல்வேன் " என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அதற்காக அடிப்படையான ராஜதந்திரம் கூடவா இல்லாமலிருப்பான் ராஜ்ய விஸ்தரிப்பு கனவில் இருக்கும் ஒரு பேரரசன்? ராஜசிம்மனை தனது போர் மந்திரி சிறைப்பிடிக்க போடும் திட்டங்களை விக்கிரமாதித்தனே உடைத்து காப்பாற்றுகிறான். பாண்டியர்கள், சாளுக்கியருக்கு போரில் உதவக்கூடாது என்ற பல்லவ இளவலின் உடன்படிக்கையை தானே பாண்டிய இளவலை உறையூருக்கு வரவழைத்து நிறைவேற்றுகிறான். இப்படி பெருந்தன்மையின் சிகரமாக திகழ்ந்து கடைசியில் பல்லவ இளவலிடமே தோற்றுப்போகிறான் என்பது, நம்பும்படியாக இல்லை.
இந்த புதினத்தை படித்து முடித்ததும் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு சரித்திரதையும், அதன் ஒப்பற்ற மன்னர்களையும் விட்டுப்பிரிகிற ஏக்கமும், வருத்தமும் படிக்கும் நேயர்களை வந்தடைவதை கண்டிப்பாக தவிர்க்கமுடியாது.
ராஜதிலகம்-- கம்பீரம்.