சென்ற நூற்றாண்டின் மத்திமத்தில் சென்னைக்கு அப்பாலிருந்த ஒரு குக்கிராமமே குன்ருமேடு, ஆலந்தூர், பரங்கிமலை எனச் சுட்டப்பெற்றுள்ள ஒன்றிரண்டு அருகாமை ஊர் பெயர்கள் இப்பகுதியை அறியும் அடையாளங்களாகின்றன. இதையொத்து அதன் சமகாலத்தை நினைவூட்டும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் மட்டுமே நாவலில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வட்டாரத்தையோ, வரலாற்றுத் தன்மையையோ நாவலின் மீது சுமத்திவிடக்கூடாது என்பது நாவலாசிரியரின் கவனங்களில் ஒன்றாகத் தெரிகிறது. குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் நாவலில் முக்கியத்துவம் பெற்றுள்ள பெண் பாத்திரங்கள், புதுமைப்பித்தனின் துன்ப வதைப்பட்ட மருதிகளாகவும் தெளிவு கண்ட அம்மாளுகளாகவும் வாசகனின் நினைவில் நிலைத்திருப்பர்.