முஸ்லிம்களது சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார இருப்பு மிகக்கொடூரமான நெருக்குதலுக்கு முகம் கொடுத்திருக்கும் ஒரு காலகட்டத்திலேயே இது வெளிவருகிறது. நெருக்குதல்கள் வலுவடையும் போதே கலை இலக்கியத்தளத்தில் எதிர்க்குரல்களினது அதிர்வுகள் அலை அலையாக மேலெழும். றியாஸினது சூழ்நிலை எதார்த்தம் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியிருக்கிறது.
இது ஒரு வகையில் கவிதை. இன்னொரு வகையில் வசன கவிதைகள் இடையிட்ட நெடுங்கவிதை. இது ஒரு அரசியல் கவிதை என்பது போலவே ஒரு எதிர்ப்புக் கவிதையும் கூட. இக் கவிதை ஒரு வகையில் சமூக மனவெழுச்சியின் கலைக்குரல். இன்னொரு வகையில் கால நீட்சியின் தொடர் மொழி. இந்த மொழி முடிவுறுவதே இல்லை. ஓயாது அது பேசும். மொழியின் எல்லைக்குள் எல்லா அனுபவங்களையும் கிளர்த்தி விட முடிவதில்லை. ஆயினும், அனுபவமும் அதனடியான கருத்துநிலையும் பரஸ்பரம் மோதுவதும் சமரசம் செய்து கொள்வதுமான இயங்கியலை ஒரு கவிஞன் இங்கே மிக நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறான்.