"வாடிவாசல்"- சி.சு.செல்லப்பா
*****************************
ஜல்லிகட்டு களத்தில் நடக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்குமான போட்டியை அடிப்படையாக கொண்ட குறுநாவல், மதுரை வட்டார வழக்கில் இயற்றப்பட்டு 1959ல் வெளிவந்துள்ளது.
சங்க காலம் முதல் "ஏறு தழுவுதல்" என்ற வகையில் தமிழ்நிலத்தில் ஜல்லிகட்டு நடைமுறையில் இருந்துவந்துள்ளது. இதனை, "கலித்தொகை"யின் சிற்சில வரிகள் மூலம் நாவலின் முகவுரையில் மேற்கோள்களாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
ராஜமய்யரின் "கமலாம்பாள் சரித்திரம்" மற்றும் கு.ப.ரா அவர்களின் "வீரம்மாளின் காளை" போன்ற படைப்புகளை கொண்டு, தமது பாணியில் ஜல்லிகட்டு போட்டி என்ற கருவினை கொண்டு இந்நாவல் இயற்றப்பட்டதாக முன்னுரையில் கூறப்பட்டிருக்கிறது.
பிச்சி, மருதன், கிழவன், ஜல்லிகட்டு மாடுகள்(காரி/கொரா), ஜமின்தார், முருகு, அம்புலி என குறைந்த கதைமாந்தர்களை கொண்டு அற்புதமான வர்ணனையின் மூலம், துடியான ஜல்லிகட்டை வாடிவாசல் பக்கத்தில் நம்மை நிற்கவைத்து தத்ரூபமாக விளங்க காட்டியிருக்கிறார், திரு சி.சு.செல்லப்பா.
மாட்டின் குணம், மாடுபிடித்தலின் நுணுக்கங்கள், மாடு அணைபவருக்கான திறம்/குணம், காளை மாடு வளர்ப்பதில் உள்ள கர்வம்/பெருமை.,போலவே அதை சல்லிகட்டில் அடக்குவதிலும்.,
ஊர்/குல பெருமைகள், ஜல்லிகட்டில் பார்வையாள கிழவனின் வட்டார கேலி பேச்சுக்கள், என அனைத்தும் உள்ளடக்கியதாக இருக்கிறது இக்கதை.
அதிலும், 'காரி' என்ற முரட்டு காளை மாட்டை, அதன் திமிலையும் கொம்பையும் பிடித்து, "பிச்சி"
அணையும் உக்கிரமான போட்டி பக்கங்கள், நிச்சயம் மயிற்கூச்சரியும் அனுபவத்தை தரவல்லது.அப்போட்டியின் முடிவில், அக்காளைக்கும், பிச்சிக்கும் ஏற்பட்ட முடிவு, மனிதனுக்குண்டான வைராக்கியம், மான/அவமானங்கள் எவ்வளவு ஸ்திரமானது என்பதனை பொட்டில் அடித்தாற்போல வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.
இரத்தங்கள் சிந்தபடும், மனிதக் குடல்கள் முதல் உயிர்கள் சரியும் களமான ஜல்லிகட்டினை பற்றிய நுட்பமான புரிதலை தரவல்ல ஆவணம் இப்படைப்பு. அதனாலேயே ஐந்து தசாப்த வருடங்கள் தாண்டியும் உயிர்ப்புடன் இருக்கிறது இக்கதை.
இந்த கதையினை தழுவி "இயக்கநர் வெற்றிமாறன்", " நடிகர் சூர்யாவை" வைத்து திரைப்படம் இயக்கவிருப்பதாக சமிபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.