Devaneya Pavanar (ஞா. தேவநேயப் பாவாணர்) (also known as G. Devaneyan, Ñanamuttan Tevaneyan) was a prominent Indian Tamil author who wrote over 35 books. Additionally, he was a staunch proponent of the "Pure Tamil movement" and initiated the Etymological Dictionary Project primarily to bring out the roots of Tamil words and their connections and ramifications.
Gnanamuthu Devaneyan Pavanar was a Tamil professor at Municipal College, Salem, from 1944 to 1956. From 1956 to 1961, he was the head of Dravidian department at Annamalai University. He was a member of the Tamil Development and Research Council, set up by the Nehru government in 1959, entrusted with producing Tamil school and college textbooks. From 1974, he was director of the Tamil Etymological Project, and he acted as president of the International Tamil League, Tamil Nadu. (U. Tha. Ka.). The Chennai District Central Library is named after Devanaya Pavanar and is located at Anna Salai, Chennai.
பாவாணர் இந்த ஊழியின் இணையில்லாத் தனித்தமிழ்ப் பேரறிஞர். பிறமொழி கலவாமல் தனித்தமிழில் இயல்பாகத் தடையின்றித் தொடர்ந்து பேசும் வல்லமை வாய்ந்தவர். பிற மொழித் துணையின்றித் தமிழ் தனித்து வழங்க வல்லது என்று முழங்கியதோடு மட்டும் அமையாது, தம் சொல்லாலும் எழுத்தாலும் அதை மெய்ப்பித்துக் காட்டிய மொழிஞாயிறு. தமிழரின் வரலாறு பிழைபடப் பலரால் எழுதப்பட்டிருந்த நிலையில் இந்நூலை எழுதப் புகுகின்றார் பாவாணர்.
எவ்வளவு சிறந்த மேதையாயினும் ஒரு ஆய்வுசெய்யப் புகும்பொழுது, தொடங்கும் இடமும், தொடக்கக் கொள்கையும் பிழையாயின் ஆய்வு முடுவுகள் முற்றும் பிழையாகும் என்ற உண்மையை உரைக்கிறார் இந்த நூலில். தமிழன் எங்கோ பிறந்து இங்கு வந்து பிழைப்புத் தேடிய வந்தேறியல்லன் என்றும் தமிழன் பிறந்தகம் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டமே என்றும் அதுவே உலகில் முதல் மாந்தன் பிறந்தகமும் ஆகும் என்கிறார்.
ஐந்திணையாகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றிற்குப் பெயர்க்காரணத்தை விரித்துக் கூறுகிறார்.
இன்றுள்ள தமிழெழுத்துக்களின் வடிவம் முற்காலம் முதல் தொன்றுதொட்டு வருவதே என்றும், கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தான் பிராமி எழுத்து தமிழகத்துள் புகுந்தது என்றும், அதனின்று வட்டெழுத்துத் தோன்றியது என்றும், தமிழுக்கும் வட்டெழுத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் அழுத்தமாகக் கூறுகிறார். கல்வெட்டுக்களில் வட்டெழுத்து ஆரியரால் வலிந்து புகுத்தப்பட்டது என்று கூறுகிறார்.
இராமாயண, மகாபாரதக் காலங்களை ஆய்கிறார். இராமாயண காலம், பாரத காலத்திற்கு 2 தலைமுறை முந்திய காலம் என்கிறார். இராமன் சோழர் வழியினன் என்றும், பாண்டவ கௌரவர்கள் பாண்டியர் வழியினர் என்றும், கண்ணன் தமிழ்நாட்டு ஆயர் வழியினன் என்றும், கண்ணனின் பேரன், ஒரு சேர வேந்தன் மகளை விரும்பிக் கள்வொழுக்கம் பூண்டதையும் எடுத்துக் கூறுகிறார். ஒரு புறாவிற்காகத் தன் தசையை அறுத்துக் கொடுத்தவன், செம்பியன் எனும் சோழனே என்றும் அவன் பெயரே சிபி என்று திரிந்து வழங்கி வருகிறது என்றும் கூறுகிறார். நாரத மாமுனிவரை திரிலோகசஞ்சாரி என்று வடமொழியில் கூறுவர். அதாவது அவர் மூவுலகிற்கும் சென்று வருபவர் என்று பொருள். ஆரியர் இதற்குப் பொருளாய்க் கூறும் மூவுலகாவன துறக்கம்(சொர்க்கம்), நிலவுலகம், அளறு(பாதாளம்). ஆனால் பாவாணர், மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டு 3 நாடாயிருந்தவையே மூவுலகு எனப்பட்டன என்கிறார். இதற்குச் சான்றாகச் சோழ வேந்தர் "மூவுலகாளி" என்பது போன்ற விருதுப்பெயர்கள் கொண்டிருந்ததை எடுத்துக் காட்டுகிறார்.
பாவாணர் நூல்களைப் படிப்பதில் நமக்குக் கிட்டும் பெரும்பயன் என்னவெனில் பல பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நூல் நெடுகிலும் வாரி இறைத்துக்கொண்டே செல்வார். அவர் புனையும் சொற்றொடர்களும் நம்மை நயக்க(ரசிக்க) வைக்கும். சான்றாக "Oil and truth will get uppermost at last" என்ற ஆங்கிலப் பழமொழியை "எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும்" என்று எதுகைத் தொடையும் மோனைத் தொடையும் அமைய அழகாக மொழிபெயர்த்திருப்பார். மூவேந்தரைச் சாடுவதில் அவருக்கிருந்த துணிச்சல் பெரிது. மூவேந்தர்களுடைய ஆரிய அடிமைத்தனத்தைக் குறிப்பிடும்பொழுது "ஆவின் பாலிருக்க அங்கண நீர் குடிப்பார் போல்" என்று வசை பாடி உவமை கூறுகிறார். நூல் நெடுகிலும் பல திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார்.
தமிழர் வரலாற்றைக் கற்காலம் தொடங்கி அவர் பயன்படுத்திய ஒவ்வொரு மாழை/பொன்னம்(metal) துணைக்கொண்டு படிப்படியாக விளக்குகிறார். பிறகு முக்கழக வரலாறும், அதன் பின் இராமாயண பாரத காலங்களும், ஆரியரின் அளவிறந்த கொட்டத்தால் அவர் தமிழருக்குச் செய்த கேட்டையும், பின் தமிழர் ஓரளவு தன்னுணர்வு பெற்றுத் தலைநிமிரத் தொடங்கியதையும் ஒவ்வொன்றாக விளக்குகிறார். தமிழர் வரலாற்றை அறிய விரும்புவோர்க்கும் தனித்தமிழ் பற்றாளர்க்கும் விலையில்லா மணி போன்ற நூல் இது.