இத்தொகுப்பில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாள் மலர்தான். நூல் முழுவதுமாக ஊடாடும் பார்வை தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு செல்வங்களை அறிந்து துய்த்தல் என்பது. தமிழ்ப் பெருமை பேசுவதாகவோ வெறும் தகவல் அடுக்காகவோ எந்தக் கட்டுரையும் இல்லை. ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்களும் பார்வையும் இயைந்திருக்கின்றன. மதுரை மாநகரம் பற்றிய கட்டுரை வரலாற்றில் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாக அது தொடர்ந்து விளங்கிவருகிறது என்னும் பார்வையை முன்வைக்கிறது. தமிழக வரலாற்றில் இடையறாது தொடர்ந்து பதிவுபெற்றுள்ள நகரங்கள் மதுரையும் காஞ்சிபுரமும்தான் என்னும் முக்கியமான தகவலைக் கட்டுரை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறது. தொ.ப.
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
நான் ரசித்து வாசித்த மற்றுமொரு தொ.பரமசிவன் ஐயா அவர்களின் கட்டுரைத் தொகுப்பு. கல்வெட்டுகள் தொடங்கி கவிதை மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை வரையிலான மனித இன படைப்புக்களை நாம் அணுக வேண்டிய முறை, அவற்றின் நிகழ் சமூகத் தேவையினையும் ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது. நாள் மலரில் இடம்பெற்றிருக்கும் பன்னிரண்டு மனதில் புதிய சிந்தனைகளை மலரச் செய்யும்.
ஒவ்வொரு கட்டுரையின் என் வாசிபனுபவம் பின்வருமாறு:
✨️கல்லெழுத்துக்கள்:
நாம் எல்லோரும் சிறு வயதில் நம் பெயரைக் கல்லில் எழுதிப் பார்த்து உவகை கொண்டிருப்போம். கல்லில் எழுதிப் பார்க்கும் ஆற்றல் என்பது மனித நாகரிக வளர்ச்சியின் முக்கியமான பரிணாமமாக தொ.ப. ஐயா கருதுகிறார். இந்தியாவில் தமிழ்நாடு கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் சிறந்து விளங்கும் காரணங்களை விவரித்துக் கொண்டு, கல்வெட்டுகள் உண்மை தரம் வாய்ந்த வரலாற்று ஆவணங்களாக வீற்றிருப்பதை விளக்குகிறார். மன்னர்களின் பெருமைகளை மட்டும் பேசிய ஆவணங்களாக மட்டுமில்லாமல், சாதாரண மனிதர்களின் வாழ்வியலைப் பறைசாற்றும் விதமாகவும், அவர்தாம் உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆவணச் சக்திகளாகக் கல்வெட்டுகள் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.
✨️கம்பனின் அறிமுகம்:
கம்பராமாயணத்தில் தமிழ் இவ்வளவு இனிக்குமா என்று இந்தக் கட்டுரையை வாசித்தால் உணர முடியும். ராமனின் நண்பனான குகனிடம், பரதர் தன்னையும், தன் அன்னையர்களையும் அறிமுகப்படுத்தும் காட்சியில் ராமாயணத்தின் முக்கால்வாசி கதை வெளிப்படுகிறது என்பதனை கம்பரின் வரிகளோடு சுவைப்படக் கூறப்பட்டிருக்கிறது இக்கட்டுரையில்.
✨️அடிகளாரின் அரசியல்:
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் 'அரசு பதவியைத்தான் துறந்தாரே தவிர, அரசியலைத் துறக்கவில்லை' என்று அறிவித்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரசியல் கோணத்துடன் படைத்திருப்பதை விளக்குகிறது இக்கட்டுரை. சிறு வயதில் செய்யுளில் வாசித்த சிலப்பதிகாரத்தை இளங்கோவின் அரசியல் பார்வை கொண்டு மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும் என்ற ஆசையைப் பிறக்கச் செய்தது இக்கட்டுரை.
✨️புதுமையாளர் பாரதி:
பெருவாரியான மக்கள் பழமையைப் பெருமையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தான் எழுதும் கவிதைகள் தொடங்கி பழமையைத் தகர்த்தெறிந்த பாரதியை புதிய ஒரு கோணத்தில் அணுகச் சொல்லிக்கொடுக்கிறது இக்கட்டுரை. கவிதைகளைத் தாண்டி தமிழ் இதழியல் துறையிலும், தமிழ் உரைநடைக்கும் இயற்றிய தொண்டினைப் பேசுகிறது இக்கட்டுரை. சீற்றம் எழுப்பும் தீ வரிகளுக்குச் சொந்தக்காரரான பாரதி, நகைச்சுவை மிகுந்த கவிதைகள் வழியாகத் தமிழர்களைச் சிரிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதனை இக்கட்டுரை வழியாக அறியலாம்.
✨️அறிவியல் தமிழ்:
சிந்திக்கவும், அதே சமயம் கவலை கொள்ளவும் வாய்த்த கட்டுரை இது. 'ஆங்கிலம் மட்டுமே அறிவியல் மொழி இல்லை' என்பதனை சான்றுடன் விளக்குகிறது இக்கட்டுரை. தாய்மொழியில் அறிவியல் பயிலும்போது மொழியும் வளரும், நாடும் மேம்படும் என்பதனை அழுத்தமாகக் கூறப்பட்டிருக்கிறது.
✨️பக்தியும் பாட்டும்:
கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் பக்தி இலக்கியங்கள் வாசிக்கவேண்டியதின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது இக்கட்டுரை. மானிட வாழ்க்கையின் அனுபவங்கள் தான் பக்தி இலக்கியங்களுக்கு அடித்தளம். கடவுள் என் தோழன், கடவுள் என் காதலன் என்று மனிதர்கள் கடவுளை எவ்வளவு நெருக்கமாக வைத்துள்ளனர் என்பதனை இக்கட்டுரையில் அறியலாம். கடவுளை வைத்து அரசியல் செய்யும் இக்கால நிலையில் பக்தி இலக்கியங்கள் கூறும் செய்தியினை உணர்ந்துகொண்டால், அவ்விதமான அரசியலிற்கு இடமிருக்காது என்பதனை உணர வைத்த ஒரு கட்டுரை இது.
✨️தமிழ் இதழியல்:
தமிழ் இதழ்களின் தோற்றம், அவை கண்ட பரிணாமங்களை விளக்குகிறது இக்கட்டுரை. இனி வருங்காலங்களில் இதழியல் துறை சிறந்து விளங்குவதற்கு எவ்வித அறங்களைப் பின்பற்றுவது உத்தமம் என்பதனை அறிவுறுத்துகிறது இக்கட்டுரை.
✨️தமிழ் உரைநடை:
நல்ல உரைநடையின் பண்புகள், நல்ல உரைநடைக்கான அவசியங்களைப் பேசுகிறது இக்கட்டுரை. 'உரைநடை என்பது இயல்பான மனிதனைப்போலப் பகட்டில்லாமல், பிறமொழிச் சொற்கள் கலக்காமல், நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் புழங்கு சொற்கள் நிறைந்ததாக இருந்தால் நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை வாசித்தபின்,
கண்டிப்பாக இளம் எழுத்தாளர்களுக்கு இக்கட்டுரை உதவி புரியும் என்று தோன்றியது.
✨️இலக்கியமும் சிற்பமும்:
சிற்பக்கலையும், இலக்கியமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதை எடுத்துரைக்கும் அழகான கட்டுரை. இதற்குச் சான்றாகக் கொடுக்கப்பட்ட நடராசர் சிற்பங்களின் தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கும்.
✨️கவிதை மொழிபெயர்ப்பு:
நான் மிகவும் ரசித்த மற்றுமொரு கட்டுரை இது. நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணத்தை தொ.ப ஐயா சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார். தமிழர்களும் தொல்காப்பியம் தொடங்கிய காலம் முதல் மொழிபெயர்ப்பில் முனைப்புடன் ஈடுபட்டிருப்பதையும், உமர்க்யாம் கவிதைகளின் மொழிப்பெயர்ப்பை நம் தமிழ் கவிஞர்கள் வெவ்வேறு விதமாக கையாண்டிருப்பதை சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது இக்கட்டுரையில்
✨️அகராதிக் கலை:
எழுது கருவிகள் போல அகநிலை கருவிகளின் ஒன்றான அகராதிக் கலையும் எழுத்து அறிவை வளர்த்தெடுக்கும் என்பதனை உணர்த்தும் கட்டுரை இது. தமிழ் அகராதிகளில் சொற்பொருள் அகராதிகளைத் தாண்டிப் பல அகராதிகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அத்தகைய அகராதிகளைப் பயன்படுத்தி நிறையச் சொற்களை நம் தாய்மொழியில் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களைத் தெளிவாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
தொ. பரமசிவனின், பண்பாட்டு கட்டுரைகள், நேர்காணங்கள் போன்றவற்றை படித்திருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவற்றை பற்றி எழுதியதில்லை. பல நேரங்களில் அவரது பண்பாட்டு கட்டுரைகளை வாசிக்கும்போது ஏற்படும் பூரிப்பு அதே கருத்தை பகுத்தறிவு பார்வையில் இருந்து அணுகும்போது அடங்கிவிடும். சிறு தெய்வங்கள், கலாச்சார பழக்கவழக்கங்களுக்கு அவர் கூறும் கரணங்கள், கோவில் பற்றிய கதையாடல்கள் போன்றவை அத்தகைய அமைப்புகளுக்கு நியாயம் கற்பித்து நிலைபெற செய்யும் முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. மேலும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மீதும் அதனால் ஏற்படும் மாற்றங்களை எதிர்மறையாக அணுகும் தொ.பவின் போக்கு எனக்கு உவப்பானதாக அமைந்ததில்லை.
உண்மையில் பெரியாரின் நவீன பகுத்தறிவு மரபிலிருந்து இத்தகைய பண்பாடு சார்ந்த கட்டுரைகளை வாசித்தோமென்றால் அறிவு அதனை நிராகரிக்கவே செய்யும். சிறுதெய்வங்களை பெரியார் சீண்டவில்லை என்பதற்கு அதனை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமில்லை. தொ.ப வின் பல கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளும் படி அமைதிருப்பவை. அதனை மறுப்பதற்கில்லை. அப்படியான பல கட்டுரைகளை கொண்ட தொகுப்பு தான் ‘நாள் மலர்கள்’. 2001இல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு இந்நூல் பாடநூலாக இருந்தது என்கிறார் இந்நூலின் பதிப்பாசிரியர் பெருமாள்முருகன்.
நான் ���மிழ் இலக்கிய மாணவனல்ல. ஆனால் ஆர்வத்தின் காரணமாக ஆமை வேகத்தில் தமிழ் இலக்கியத்தை பயின்று வருகிறேன். (இப்போதைக்கு நவீன இலக்கியம் மட்டும்) இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியங்கள். ஒரு தகவலை சுவாரசியமாக அதே சமயத்தில் எளிமையான மொழி நடையில் மாணவர்களுக்கும் கடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளாகவே இவை தென்படுகின்றன.
முதல் கட்டுரை கல்வெட்டுகள் பற்றியது கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அவற்றை அழியாமல் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை பற்றியும் பேசுகிறது இக்கட்டுரை.
இராமாயணம் எழுதிய கம்பர் தனது பாத்திரங்களை எல்லாம் எப்படி அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகத்திற்கும் அவர் காட்டிய வேறுபாடுகள் எத்தகையவை என்பதை எல்லாம் பேசும் கட்டுரை ‘கம்பனின் அறிமுகம்’.
மக்கள் காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஒரு தேர்ந்த அரசியல் அரசியல்வாதி என்கிறார் தொ ப. அதற்கு அவர் சொல்லும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளும் படியாக தான் இருந்தன. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை என இதனை சொல்வேன்.
நவீன தமிழ் இலக்கியம் பாரதியில் இருந்தே தொடங்குவதாக வரையறை செய்யும் தொ.ப. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, இதழியல் என பரந்துபட்டு இயங்கிய பாரதி 'நேற்றை' விட 'நாளை'யில் அதிக கவனம் செலுத்தியதாக அவதானிக்கிறார்.
அடுத்ததாக அறிவியல் தமிழ் என்ற கட்டுரை பல புதிய வரலாற்று தரவுகளை நமக்களிக்கிறது. 1999யில் தமிழநாடு அரசு(திமுக) ஏற்பாடு செய்த "இணையம் 99" என்ற நிகழ்ச்சியை அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக குறிப்பிடுகிறார். காரணம் அந்நிகழ்ச்சி பல நாட்டு அறிஞர்களையும் சென்னையில் அழைத்து நடத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. கணிப்பொறி தமிழ் விசைப்பலகைகளும், தமிழ் மொழியியல் மென்பொருள்களும் தரப்படுத்த அம்மாநாடு உதவியதாக குறிப்பிடுகிறார். இதற்கடுத்து சிங்கப்பூரில் தமிழ் இணையம் - 2000 என்ற மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியையும் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
‘பக்தியும் பாட்டும்’ என்ற கட்டுரை பல்வேறு சமயங்களை சேர்ந்த பாடல்களின் மேற்கோளோடு எழுதுதப்பட்டு இருக்கிறது. இக்கட்டுரையில் சமயங்கள் அனைத்தும் இயற்கையினை நேசிக்கும் பண்பினை கொண்டிருந்ததாக சொல்கிறார்.
அச்சு பண்பாட்டின் வருகையும் அது தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் மிக முக்கியமான ஒன்று. “The Province Of The Book:
Scholars,Scribes and Scribblers in Colonial Tamilnadu” என்ற ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆய்வு நூல் அச்சு பண்பாடு குறித்தான ஆழமான பார்வையை வாசகருக்கு கடத்தும். தமிழ் இதழியல் என்ற கட்டுரை இந்நூலோடு சேர்ந்து வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் இதழியல் ஆரம்பத்தில் வளர்ந்த விதத்தையும் இங்குள்ள அரசியல் இயக்கங்கள் அவற்றை பயன்படுத்திய விதத்தையும் பின்னர் அது எப்படி பொருளாதார நோக்கங்களை முதன்மையாக கொண்டு கருத்தளவில் நலிவடைந்தது என்பதை இக்கட்டுரையில் பேசுகிறார். இறுதியில் சிற்றிதழ்களின் வருகையை தமிழ் இதழியலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவே பார்ப்பதாக கூறி முடித்துள்ளார்.
‘அழகர் கோவில்’ பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியவர் மதுரை மாநகர் பற்றி எழுதாமல் விட்டால் தான் ஆச்சரியம். ஆறுகளாலும் மலை குன்றுகளாலும் சூழப்பட்டுள்ள மதுரை மாநகரை சிலாகித்து எழுதியுள்ள போக்கு, எனக்கும் அந்த நகரத்துக்குமான 4 மாத தொடர்பை மீண்டும் ஒருமுறை அசைபோட வைத்து. இன்றைக்கும் மதுரை தான் தமிழ்நாட்டின்/ தமிழர்களின் பண்பாட்டு தலைநகரமாக விளங்குவதாக இக்கட்டுரை முடிகிறது.
தமிழ் உரைநடை வளர்ந்த விதத்தையும் அது எப்படி மொழியியலிலும் எழுத்துத்துறையிலும் மிக பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது என்பதை பற்றி சுருக்கமாக பேசும் ஒரு கட்டுரையும் இத்தொகுப்பில் அடங்கும்.
இலக்கியத்திற்கும் சிற்பத்திருக்கும் இருக்கும் தொடர்பினை நடராஜர் சிலையை வைத்தும் திருநாவுக்கரசரின் பாடலை வைத்து முதலாம் மாமன்னன் ராஜராஜன் அச்சிலையினை ‘ஆடல் வல்லான்’ என்று அழைத்ததை வைத்தும் சுருக்கமாக கூறிவிட்டு. இதை எல்லாம் விரிவாக அறிந்துகொள்ள ஆனந்த குமாரசாமி எழுதிய The Dance of Shiva நூலை வாசிக்கலாம் என்று குறிப்பிடும்போது ஒரு கட்டுரையின் ஆழம் குறித்து அடங்காத வியப்பு தான் ஏற்படுகிறது.
இருப்பதில்லேயே கடினமானது ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு கவிதைகளை மொழிபெயர்ப்பது தான். அப்படி கவிதை மொழிபெயர்ப்புகளுக்கு இடையே இருக்கும் கால அளவிலான வேறுபாடுகளை பற்றி கவிதை மொழிபெயர்ப்பு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இந்த தொகுப்பின் இறுதி கட்டுரையாக அகராதி கலை என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. நவீன சொல் அகராதிகள் வருவதற்கு முன்பே தமிழ் மொழியில் ரேவண சித்தர் எழுதிய ‘அகராதி நிகண்டு’ நூலை குறிப்பிடுகிறார். மேலும் தொல்காப்பியர் காலத்திலேயே அகராதியில் இருப்பதை போல் சொல்லுக்கு சொல் பொருள் குறிப்பிடும் முறை தொடங்கிவிட்டதாக கூறும் தொ.ப அதற்கு பின்னான அகராதிகள் வரலாற்றையும் சுருக்கமான எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் பெரிதாக பரிசியமில்லாத எனக்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் சுவாரசியமானவை. பல முக்கிய தகவல்களை கொண்டுள்ளவை. ஆழமான அதே வேளையில் செறிவான கருத்துக்களை கொண்டவை. தமிழ் இலக்கிய பாடத்திட்டத்தில் இந்நூல் இடம்பெற்றிருந்தது என்ற செய்தியே ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது.
தமிழ் இலக்கிய மாணவர்களும், ஆர்வலர்களும், தொ.பரமசிவன் ரசிகர்களும் அவசியம் வாசிக்கலாம். ‘விடுபூக்களை’ விட ‘நாள் மலர்கள்’ சிறந்த தொகுப்பு தான்.
இதுவரை வாசித்த தொ.பவின் புத்தகங்களில் இருந்து மாறுபட்ட புத்தகமாக இது எனக்குத் தோன்றியது. பொதுவாக மானுடவியல்,சிறு தெய்வங்கள் போன்றவை குறித்து இவர் புத்தகங்களில் இருந்து பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.
இது முற்றிலும் இலக்கியம் சார்ந்த புத்தகமாகவே இருக்கிறது. முதலில் கல்வெட்டுகள் குறித்து பேசுகிறார்.
அவற்றில் உள்ள அழகியல் , அவை செதுக்கப்பட்ட காலத்தின் ஆவணமாக அது கருதப்பட்டது குறித்தும் இலக்கியத்தின் தாக்கம் அவற்றில் இருப்பதையும் சுட்டுகிறார்.
இராமாயணத்தில் வரும் குகனைக் குறித்தும், பரதன் தன் தாய்மார்களை அறிமுகம் செய்யும் விதத்தில் இருக்கும் கவிச்சுவகையின் வேறுபாடுகள் குறித்து விளக்குகிறார்.
பொதுவாக சிலப்பதிகாரம் மேற்கோள் இல்லாத, அதை குறித்து சிலாகிக்காத தொ.ப வின் புத்தகங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு தொபவுக்கு சிலம்பின் மீது அத்தனை காதல் என்று அவர் புத்தகங்கள் தொடர்ந்து வாசித்த யாருக்கும் விளங்கும். இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
இளங்கோவடிகள் அரசைத் துறந்தாலும் அரசியலைத் துறக்கவில்லை என்று சிலம்பின் வரும் அரசியல் குறித்து விவரிக்கிறார். சிலப்பதிகாரத் திறனாய்வு புத்தகத்தில் மாபொசி இதே சாரத்தில் எழுதிய ஒரு கட்டுரை வாசித்த ஞாபகம் இருக்கிறது.
எழுத்து உலகில் பாரதி செய்த புதுமைகளை, அ��ர் உலக இலக்கிய ஈடுபாடுகளை, தமிழ் உரைநடைக்கும், இதழியலுக்கும், அறிவியல் தமிழுக்கும் அவர் ஆற்றிய பங்கு குறித்து சிலாகிக்கிறார். நாம் அறிந்த பாரதியின் அறியாத முகங்களை இதில் இடம்பெற்றுள்ளன கட்டுரைகளில் காண முடிகிறது. அவர் மீதுள்ள பற்று மேலும் அதிகரிக்கிறது.
பக்தி இலக்கியம், மதுரை மாநகர் குறித்தும், தமிழ் உரைநடைக்கு பங்களித்தவர்கள் குறித்தும், சிற்பக் கலை குறித்தும், அகராதி மற்றும் மொழிபெயர்ப்பு குறித்தும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இலக்கிய மாணவர்களுக்கு எழுதப்பட்ட புத்தகமாகவே இது தோன்றுகிறது.