ஆபத்துக்கிடமான அபவாதம் ( அல்லது) கமலாம்பாள் சரித்திரம் தமிழின் முதல் நாவலாக பரவலாக அறியப்படும் இது எழுதப்பட்ட காலத்தை பார்க்கும்போது நிச்சயம் ஒரு புதிய முயற்சியாகவே இருந்திருக்கும். மிக இளவயதிலேயே இத்தகைய படைப்பு அளித்த ராஜம் ஐயர், நெடுங்காலம் வாழ்ந்திருப்பின் பல சிறந்த நாவல்களை அளித்திருப்பார். இந்த நாவல் அக்காலத்தில் நிச்சயம் வாசகர்களை பரவசமூட்டவும் சிலாகிக்கவும் செய்திருக்கும். அக்கால பழக்கங்கள், நடைமுறைகள், மக்கள் பேசும் முறை, அவர்களது வாழ்க்கை முறை போன்றவற்றை அறிய சிறந்த நூலாகவே உள்ளது. குறிப்பாக ஸ்ரீனிவாசன்-சுப்பராயன் நட்பு, அம்மையப்ப பிள்ளை மாணவரிடம் படும் பாடு, ஊர்ப்பெண்களின் வம்பர் மகாசபை முதலியன சுவாரசியமானவை. ஸ்ரீனிவாசன் - லட்சுமி கல்யாண நிகழ்ச்சி மிக சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. சிறுவனும் சிறுமியாக - அவர்களது எண்ணங்கள், திருமண பற்றிய பரவசம் மற்றும் திருமணச்சடங்குகளில் மற்ற பெண்கள் இவர்களை சீண்டுவதும் சிறப்பு. திருமணம் முடிந்ததும் ஸ்ரீனிவாசனும் அவனது தோழிகளும் பிரிவை நினைத்து அழுவது ஒரு அற்புத தருணம். இக்காலத்தில் இதை படிக்கும்போது எனக்கு ஒரு பழைய திரைப்படம் பார்த்த அனுபவமே. ஒரு நேர்மையான செல்வசீமான், அவருக்கு ஒரு பதிபக்தையான மனைவி. எதிர்மறை கதாபாத்திரங்களாக இவரது தம்பி குடும்பம். ஒரு சோதனை காலம் வந்து முத்துஸ்வாமி அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தம்பியும், பிள்ளையும் இறந்து போக மனிதர் துறவு பூண்கிறார். இடையில் ஒரு வில்லனாக பேயாண்டித்தேவர் கதாபாத்திரம். தனிப்பட்ட முறையில் பேயாண்டித்தேவர் நல்லவராகவும், வீரனாகவும் காண்பிக்க பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாசனும் லட்சுமியும் பிரிய நேரிடுகிறது. இவ்வாறு துன்பங்கள் குவிகின்றன. பின்னர் குருவின் அருளால் முத்துஸ்வாமிக்கு இறந்ததாக நினைத்த பிள்ளையும், இழந்த சொத்தும் கிடைக்கப்பெறுகிறது. பிரிந்த அனைவரும் சேர்ந்து விட, இவர்களுக்கு சூழ்ச்சி செய்து தீவினை செய்தோர் அனைவரும் தக்க தண்டனை பெறுவதாய் கதை நிறைவாகிறது. 1950 களில் வெளிவந்த ஒரு திரைப்படம் போலவே கதை முடிகிறது.