“பொய்த்தேவு" - க.நா.சுப்ரமணியம்
அட்டகாசாமான நாவல். 1946ல் முதற் பதிப்பு கண்டது.
உரையாடல்களாக இல்லாமல் வர்ணனைகளாலும் விவரணைகளாலும், அக்கால வாழ்வியலை, எக்காலத்திற்கும் பொருந்தும்
தத்துவார்த்தங்களை பொதிந்துவைத்து புனையப்பட்ட நாவல்.
பொதுவாக, இப்படியான நாவல்கள் வாசிக்கையில், நல்ல எழுத்துநடை மூலம், காட்சிகள் கண்முன் விரியும். ஆனால் நல்லவொரு கதைசொல்லியான எழுத்தாளர் திரு க.நா.சு, இந்நாவலில், நன்கு விவரித்து உரையாடல்களல்லாத கதையை எழுதியிருப்பதால், நமது கற்பனையா அல்லது நாமே அந்த கதைகளத்திற்குள்ளும் கதைமாந்தர்களூடனும் வாழ்கிறோமா எனும் சந்தேகம் ஏற்படும்படியான மாயாவிநோத உணர்வை தருகிறது.
எப்போதும் இப்படியான நாவல்களில் மைய கதைமாந்தர் பற்றியும், அவரை சுற்றியுள்ள கதைமாந்தர்கள் மற்றும் சம்பவங்கள் பற்றியும், அதிலும், அந்த மைய கதைமாந்தரின் வாழ்வின் ஒரு பகுதி பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால் இக்கதை, பிறந்த குழந்தைப் பருவம் முதல் 'சோமு பயல்' ஆக வளர்ந்து, 'சோமசுந்தர முதலியார்' ஆக வாழ்க்கை தரம் உயர்ந்து, பின் 'சோமு பண்டாரம்'ஆக முடியும்படி எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, "Rise and Fall of Somasundara Mudaliyar” என தற்காலத்திற்கேற்ற வகையில் சொல்லலாம்.
சாத்தனூர் எனும் காவிரியாற்றை ஒட்டியுள்ள கிராமப்புறத்தின் 'மேட்டுத் தெரு'தான் சோமுவின் பிறப்பிடம். கதை கும்பகோணம், தஞ்சை, திருவையாறு, சென்னை எனச் சுற்றி வந்தாலும், அதன் மையப்புள்ளிகள் சோமுவும் சாத்தனூரும்தான்.
நாம் எப்போதும் நம்புவதைப் போல, ஒருவனின் 20வயதிற்குள்ளேயே தீர்மானித்துவிடலாம், அவனது எதிர்கால வாழ்வு எப்படி இருக்குமென்று, அவனது சிந்தனை மற்றும் செயல்களின் மூலம்.
அதை அப்படியே இந்த கதையில் மூலம் மீள் காண்கிறோம்.
ஒருவன் எந்த நிலையில் பிறந்தாலும், அவனது சிந்திக்கும் திறனை கொண்டே அவன் என்னவாக ஆகப்போகிறான், என்னவென உருவெடுக்க போகிறான், எப்படி அவனை உலகம் பார்க்கபோகிறது, அவனது மரணம் எப்படி மற்றவர்களால் எதிர்கொள்ளப்படுகிறது என்பதெல்லாம். அந்த ஒருவனாக, இக்கதையில் 'சோமு' இருக்கிறான்(ர்)!
இக்கதையில் திருப்பங்கள் உண்டு, வர்த்தக வியாபார நுணுக்கங்கள் உண்டு, குடி/கூத்தி களியாட்டங்கள் உண்டு, தத்துவார்த்தங்கள்/வாழக்கையைப் பற்றிய ஆழ்புரிதல்கள் உண்டு.
மனிதனினுக்கு ஒரு தெய்வம் போதவில்லை, ஓவ்வொரு நொடிக்கும் ஒரு தெய்வம் தேவைப்படுகிறது. அவனுடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உருப்பெறாத சிந்தனைகள் இப்படி பல தெய்வங்கள் தேவைப்படுகிறது.
சோமுவின் சிந்தனையில் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விஷயங்கள் பிரதானமாக இருக்கின்றன. அதனின்பால் கொண்ட வேட்கை, அதனை நோக்கி உந்தப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி கொண்டிருப்பதுதான்
தெய்வமும் தெய்வச்செயலும் என நம்புகிறார்.
அதில் பணமே பிரதானம்! பணமே தெய்வம்! மற்றவைகள் எல்லாம் பொய் தெய்வங்கள்! பொய்த்தேவு!
இதனை 'திருவாசம்' பாடலிலிருந்து காணலாம் என இந்நாவாசிரியர் முன்னுரையில் தெரிவித்துவிடுகிறார்.
"அத்தேவர் தேவ ரவர்தேவர் என்றிங்கன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே"
1946ல் வெளிவந்து இப்போது படித்தாலும் அடிபொலியாக உள்ளது இந்நாவல். ஹாஸ்யமாக ஆரம்பித்து, பின் வாசிப்பவரின் தன்னிலை உணர்த்துவதாய் முடிகிறது இக்கதை.
எம்மை பொறுத்தவரையில், திரைக்கதையாக எடுத்திருந்தாலும் வெற்றிகள் பல கண்டிருக்கும் இந்நாவல், காரணம் அப்படியான திருப்பங்களும் சம்பவங்களும் இருப்பதாலேயே சொல்கிறோம்.
கதையை பற்றி மேலும் விரிவாகச் சொல்ல ஆவல் இருந்தாலும், அது இனி இந்நாவலை வாசிப்பவரின் ரசத்தை கெடுத்துவிடும்.
மறுபடியும் படிக்கத் தூண்டும் படியான,. படிக்க ஆரம்பித்தாலும் இப்புத்தகத்தை கீழே வைத்துவிடாமல் முடிக்ககூடிய நாவல்.
நன்கு பரிந்துரைக்கிறோம்!
(இப்புத்தகத்தில், பின்னிணைப்பாக "சி.சு.செல்லப்பா" அவர்களின் 'விமர்சன ஆய்வு' இருபது பக்கங்களில் கதைசுருக்கத்தையும், தமது புரிதல்களையும் எழுதியுள்ளார். அதுவும் தரமான விமர்சனமாக உள்ளது.)