"ரத்தம் ஒரே நிறம்" - சுஜாதா
=================================
1983களில் குமுதத்தில் "கருப்பு சிவப்பு வெள்ளை" என்ற பெயரில் தொடராக வெளிவர ஆரம்பித்த இந்நாவல், பல்வேறு எதிர்ப்புகளால் நிறுத்தப்பட்டது.
பின்பு "ரத்தம் ஒரே நிறம்" என்ற பெயரில் முழு சரித்திர புனைவு நாவாலாக வெளிவந்திருக்கிறது.
சிப்பாய் கலகம் என்பது, கல்கத்தாவிலிருந்து மீரட் வரை இந்திய சிப்பாய்களுக்கும் ஆங்கிலயேருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களாலான வரலாறு. (ஆனால், அதற்கு முன்பே, 1806ல் வேலூர் கலகம் எழுந்து அடங்கியது. காரணம், சிப்பாய்கள் தங்கள் நெற்றி மற்றும் தலையில் மத குறியீடுகள் இடக்கூடாது என்பதுதான்)
அந்த கலகம் ஏற்படக் காரணம், சிப்பாய்களின் 'என்ஃபீல்டு' துப்பாக்கிகளுக்கு பயன்படும் குண்டை சுற்றியுள்ள பசை, பன்றி மற்றும் மாட்டு கொழுப்பினால் ஆனது என்பதுதான். அந்த குண்டுகளை தங்களது வாயால் பிரிக்கும்படியானது, தங்களது மதகோட்டுபாடுகளுக்கு எதிரானதாக கருதி இந்த கலகம் ஒருமித்து உருவானதாக கூறப்படுகிறது. இது 1857ன் பிப்ரவரி மாதம் முதலாக சிப்பாய்களுக்குள் பேசபட்டு, அதற்கு முதன் முதலாக ஆயுதம் ஏந்திய சிப்பாய், 'மங்கள் பாண்டே' மூலம் ஆரம்பமானது. சரியான தலைமை இல்லாததால் இந்திய சுதந்திரத்தை நோக்கி செல்லாமல், அழிவுகளோடே கரைந்தது கலகம்.
ஆனால் இந்த கலகம் ஏற்பட மேற்சொன்ன காரணம் மட்டுமல்ல. கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்தவரும், கவர்னர் ஜெனரலுமான டல்ஹவுசியின் அராஜக போக்கும், இந்திய மக்களின் சமய நம்பிக்கைகளை அவமதித்ததும்தான் என இந்நாவலில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்த அடக்கு முறைக்கும் எதிர்வினையாகவே கலகம் அப்போது வெடித்திருக்கிறது.
அந்த வரலாற்று பின்னனியில், சில புனைவு தமிழ் கதாபாத்திரங்களை, கொல்கத்தா கலகத்தை அடக்க சென்னையிலிருந்து புறப்பட்ட சிப்பாய்களுடன் பயணபடவைத்திருக்கிறார், திரு சுஜாதா.
முத்துகுமரன், பூஞ்சோலை, பைராகி, சிவகாமி போன்ற புனைவு கதைமாந்தர்கள்,
லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி, சிறை கேப்டன் ஆஷ்லி ஃப்ரேஸர், எமிலி அட்கின்சன், எல்லன், ஜார்ஜ் ட்ரெவர், கர்னல் நீல், கவர்னர் ஜெனரல் கானிங், ஜெனரல் வீலர், நானா சாகேப் போன்ற சரித்திர ஆங்கிலேயேர்களுடன் பங்கெடுக்கும்படியான சரித்திர-புனைவு நாவலாக இயற்றப்பட்டுள்ளது.
அப்போதைய சென்னையின் ஒதுக்குப்புற கிராமமான 'ஆலப்பாக்க'த்தை சேர்ந்த முத்துகுமரன். அவனது தந்தையை மக்கின்ஸி கொன்றுவிடுகிறான். அதற்கு பழிவாங்கும் விதமாக அவனை துரத்தி்கொண்டு சென்னையின் வெள்ளை நகரம் முதல் ஆந்திர பகுதி, கொல்கத்தா, கான்பூர் வரை செல்கிறான்.
கதையின் முதல் பாதி அத்தியாயங்கள் வரை முத்துகுமரன்-பூஞ்சோலை காதல், எமிலியின் மீதான அஷ்லியின் மௌன விருப்பம், மக்கின்ஸி எமிலியின் மீது கொண்ட வேட்கை, முத்துக்குமரன்-மக்கின்ஸி மோதல் என செல்கிறது..
முத்துகுமரனின் ஒவ்வொரு பழிவாங்கும் முயற்சி தோல்வியுறும்போதும், இன்னொரு ஆங்கிலேயேனும் நெஞ்சில் ஈரமுள்ளவனுமான அவனை ஆஷ்லி காப்பாற்றுகிறான்.
பின்வரும் அத்தியாயங்களில் கொல்கத்தா நோக்கிய சென்னை ஆங்கிலேயே படை பயணம். அவர்களை தொடரும் முத்துகுமரன், பைராகி எனும் சாமியார், பூஞ்சோலை. மக்கின்ஸி கொலை முயற்சிகள்.,கல்கத்தா, பனாரஸ், அலகாபாத், கான்பூர், என்ட்ரெஜிமன்ட்/பீபிகர்/சௌதாரா கிராம ஆற்றுபடுகை கோர கொலைகள் என ரத்தப்பக்கங்களாக வராலற்றை படம்பிடிக்கிறது. கடைசியில் ஒவ்வொருவரின் விருப்பமும் நிறைவேறியதா? இல்லையா? என்பதை கனத்த காட்சிகளுடன் முடிக்கிறார் திரு சுஜாதா.
இந்நாவல் புனைவு நாவலா அல்லது சரித்திர தகவலை அப்படியே தரும் புத்தகமா எனும் அளவுக்கு பின்வந்த அத்தியாயங்கள் பிரமிப்பை தருகின்றன. ஆங்கிலேயரை மட்டும் இதில் தவறாக சித்தரிக்கவில்லை, இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களின் மீது நிகழ்த்திய குரூர கொலைகளை பற்றியும் வரலாற்று தகவல்களுடன், இந்திய மண்ணில் சிந்திய இரு இனத்தின் ரத்தமும் ஒரே நிறம் எனும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
திரு ரா.கி.ரங்கராஜனின் அணிந்துரை, இந்நாவலென்னும் பானை சோற்றின் பதம் அறிய பயன்படும் ஒரு சோறு. அவ்வளவு தெளிவான மற்றும் விரிவான அணிந்துரை.
புத்தகத்திலிருந்து...
//...நான்கு மணி நேரமாக இந்த பக்கத்திலிருந்து பீரங்கிகள் வெடிக்கவே இல்லை. குண்டுகள் தீர்ந்துகொண்டிருக்கின்றன. அவைகளை அதிகம் விரயம் செய்ய விருப்பமில்லாமல் அவ்வப்போதுதான் பதில் வீச்சு செய்து கொண்டிருந்தார்கள். எல்லாமே குறைந்துகொண்டிருக்கிறது. குண்டுகள், உணவுப் பொருட்கள், மனிதர்கள்.....//
பிகு: நாம் என் இந்த புத்தகத்தை இந்த நேரத்தில் தேர்ந்தெடுத்தோம்? எது நம்மை உந்தியது? என கேள்வி கொக்கி நிற்கின்றன. காரணம், இதே மே மாதம் 10ம் தேதி 1857ல் தான் கலகம் பரவ ஆரம்பித்து, மனித உயிர்கள் பலியாகி வருகிறது என கவர்னர் ஜெனரல் கானிங் அவர்களுக்கு தகவல் வருகிறதாம்.
காலம் நமக்கு எதையாவது உணர்த்தியே இட்டு செல்கிறது. நாம்தான் அதை கவனிக்க தவறுகிறோம்.