"எதுவும் வேண்டாம் தேவி. நான் எங்கும் இருந்தாலும் புறாவின் நினைப்பு எனக்கிருக்கும். இங்கு வந்ததும் வீட்டுப்புறா ஒன்றைக் கண்டேன். பிறகு காட்டுப்புறா ஒன்று கைக்கு வந்தது. இனி கடற்புறவொன்றும் கப்பலில் பறக்கும்!" என்றான் இளையப்பல்லவன், ஆபத்தான நினைப்புகளை அவள் இதயத்திலிருந்து அகற்ற. அவள் தனது கண்களை அகல விரித்தாள். "கடல் புறாவா!" என்றும் ஆச்சர்யம் குரலில் ததும்ப வினவினாள்.
இதற்கு பிறகு புகாரை அடைந்து இளையபல்லவரின் கதை தொடரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கடல் புறா கடலைக் கிழித்துக் கொண்டு நின்றது அக்ஷய முனையில். இங்கிருந்தே தொடங்குகிறது கடல்புறாவின் இரண்டாவது பாகம்.
கொம்புகள் முழங்க அக்ஷய முனையை அடைந்தது கடல்புறா. அந்த கலனில் இருந்த அமீரில் தொடங்கி, கண்டிய தேவன், சேந்தன் என்று எல்லோரும் சற்றுக் கலங்கித்தான் போயிருந்தனர். எதற்கும் கலக்கமின்றி வழமை போல தன் திட்டங்களை மட்டும் தெரிவித்து விட்டு, அந்த மாபெரும் அக்ஷய முனைக் கோட்டையை தீர்க்கமாக சிந்தனையைத் தெறிக்க விட்டன இளையப்பல்லவரின் கண்கள்.
ஒரு வருடம் முழுதும் கடலில் பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய சீனக்கடற் வேந்தன் அகூதாவின் உபதலைவனாக தன்னை உருவகித்துக் கொண்டு அடுத்த திட்டத்துடன் அக்ஷய முனையை அடைந்த இளையபல்லவரை நாமனைவரும் கடைசி முறை பார்ப்பதாக இருந்து விடும் என்று எண்ணி அமீரும் சரி, மற்றவர்களும் சரி, சிந்தை வயப்பட்டிருந்த நொடிகள் அவை.
அதற்கான கரணம் அவர்கள் வந்திருக்கும் இடத்தைப் பற்றியதான உண்மைகளும், கடல் கொள்ளையர்களின் மாபெரும் கூடாரம் இருக்கும் அக்ஷய முனையின் கொடூரமான கோட்டைத்தலைவனும், அங்கே சுற்றி இருந்த மக்களும் அவர்களின் அரக்கத்தனமான வாழ்க்கை முறையும்தான். இப்படி இந்தக் கரையை அடைய அடைய, கப்பலில் உள் இருந்தோர் நினைத்து திகைக்க, கொம்புகள் ஊதப்பட்ட தருணத்தில் அந்த அக்ஷ்ய முனைக் கோட்டைக்குள்ளும் மிகப் பெரிய பய ரேகைகள் அப்பட்டமாக ஒட்டிக் கொண்டன.
மனிதர்களும், மனிதர்களுடைய உணர்வுகளும், பயங்களும், மோகங்களும்தானே அரசுகள் வீழவும், வெகுண்டெழவும் வழி வகுத்தன. இப்போது மட்டுமென்ன அதற்கு விலக்கு. கொம்பின் ஓசைக் கேட்டவுடன், அந்த அக்ஷய முனைக்கோட்டையின் தலைவன் என்று அறியப்பட்ட பலவர்மன், அச்சத்தின் முதல் அடி சூழ வந்து, இளையபல்லவர் ஒருவராக வருவதைப் பார்ப்பதில் புத்தகம் துவங்குகிறது.
இந்த பகுதி முழுவதும், பலவர்மனும், அவரது மகளான மஞ்சளழகியும் இந்த அக்ஷய முனைக் கோட்டையும், கொள்ளைக்காரர்களும், அந்த பகுதிப் பிராந்தியத்தை உரிமைக் கோரும் நான் வகை மக்களைப் பற்றியும், புகாருக்கு செல்லாத இளையப்பல்லவரின் மீதித்திட்டம் என்ன என்பதையும் சாண்டில்யன் அவர்கள் நம் கைக் கோர்த்து அந்த கடற்கரை மணலில் நடத்திக் கூட்டிச் சென்று சொல்லியிருப்பார். சரித்திர நாவல்களில் வரும் உரையாடல்கள் சில முறை தர்க்கங்களை விதைத்து செல்லும். உதாரணத்திற்கு, மாபெரும் அழகி என்று வர்ணிக்கப்பட்ட ஒருவள், மாபெரும் வீரனிடம் பேசிய வரிகளைப் பாருங்கள்.
"நீங்கள் மாவீரர் என்றேன் - அடக்கத்தைக் காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன். வெட்கத்தை காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் - என்னைக் குத்திக் காட்டி விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள். அடக்கம், வெக்கம், விஷமம் ஆகிய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாள் அவள் உள்ளதைத் திறந்து காட்டி.
"ஏன்?" அவளுக்குப் பதில் சொல்லத் தெரியாததால் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக அந்த ஒற்றை சொல்லை உதித்தான் இளையப்பல்லவன்".
இப்படியான குறும்பும், வீரமும், குரோதமும் கொப்பளிக்க இனி அந்த இரவும், வரப்போகின்ற நாட்களும் இருப்பதற்கான அனைத்தையும் சாண்டில்யன் மெல்ல மெல்ல தன சொற்களின் வழிக் கட்டமர்த்தி நகர்கிறார். பலவர்மன் ஏன் இளையப்பல்லவனை ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும், ஏன் அன்றைய இரவான சித்திரைப் பவுர்ணமி கொண்டாட்டங்கள் சிறப்பு பெறுகின்றன என்பதுவும் இரசிக்கத் தகுந்த எழுத்து நடை.
"பழைய வாஜாங்கில் நிழலாட்டம்தான் காட்டுவார்கள். பரதநாட்டியம் கலந்த பிறகு நடனக்கலைஞர்கள் நேரிடையாக ஆடுகிறார்கள். வாஜாங்கில் இரு வகை உண்டு. வாஜாங் பூரணா என்பது புராணக் கதைகளை ஆடுவது. வாஜாங் கோதக் என்பது வேறு வகை காதற்கதைகளை ஆடுவது. இரண்டும் மகோன்னதமாயிருக்கும் இளையப்பல்லவரே. வாஜாங் நிகரற்ற நாட்டிய முறை. அதன் பின்னிசை பிரம்மிக்கத்தக்கது. வெளிச் சூழ்நிலையில் ஆடப்படும் இந்த நடனத்தைப் பார்த்த பின்பு நீங்களே புரிந்து கொள்வீர்கள்" என்று மஞ்சளழகியின் கண்கள் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கின.
இப்படியெல்லாம் வர்ணிக்கப்பட்ட நடனங்கள் நடைபெறும் அன்றைய இரவின் கொண்டாட்டங்கள், கொடூரங்கள் நிறைந்ததாகவும், அந்த அக்ஷய முனையின் விதியையும் வேறு விதமாக தீர்மானம் செய்யும் முறையிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நம் கண் முன்னர் விரிகின்றன.
"அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மஞ்சளழகியின் முகத்திலும், பலவர்மன் முகத்திலும் பெரும் திகில் விரிந்தது. அவன் அன்றிரவு நிகழ்ச்சிக்கு வந்தால் அவன் மரணம் நிச்சயம் (இளையப்பல்லவர்). அவன் மாண்டால் அகூதாவால் கோட்டையின் அழிவு நிச்சயம். இந்த இரண்டு நிச்சயங்களையும் எண்ணி எண்ணித் திகிலுக்கு உள்ளானார்கள் அவ்விருவரும்".
எவ்வளவு இன்பம் கொட்டி கிடந்த போதிலும் அது துன்பத்தில் தான் முடியும் என்பதில் அந்த கொண்டாட்ட இரவுக்கு இம்மி அளவு கூட பேதம் இருப்பதாக அறிந்து கொள்ள இயலவில்லை. சொல்லி வைத்து அந்த கொண்டாட்டங்களில் பல வருடங்களாக நடக்கும் கொலைகளுக்கான களம் தயாரானது. அப்போது தான் வில்வலன் இளைய பல்லவரை வீழ்த்த ஆயத்தமான நேரம். வில்வலன் அன்றைய இரவு கொண்டாட்ட காலத்தில், அக்ஷ்ய முனையின் முக்கியமான நால்வரில் ஒருவன். மனிதர்களை உண்ணும் பதக் இனத்தவர்கள், சூளுக் இனத்தவர்க��் என்று அந்த அக்ஷய முனையின் முக்கிய முடிவுகள் எடுப்பவர்களில் பிரதானமானவன்.
அன்றிரவு நடந்து விடக்கூடாது என்று எதைத் தடுக்க இளையப்பல்லவன் முற்பட்டானோ அது கண்டிப்பாக நிகழ்வதற்கான வாய்ப்பை வில்வலன் பல முறைகளின் வழி நடக்க செய்து கொண்டிருந்தான். ஆயினும் அதற்கு பிறகு மிகத் தெளிவான வாள் ஏந்தல்களும், சொல் ஏந்தல்களும் சேர்ந்து என்று இரவு மிகப் பெரிய சேதாரம் தவிர்க்கப்பட்டன. இருந்தும் ஒரு கொலை நிகழ்ந்துதான் கடந்தது அந்த இரவு. பலவர்மனின் சூழ்ச்சியும் பின்னர் வரும் சதிகளும், மிகப்பெரிய உண்மைகளை உடைக்கின்றன. அற்ப விநாடி என்று ஒதுகூடாவற்றை சாண்டில்யன் இவ்வாறு விளக்குகிறார்.
"வாழ்வில் விநாடி என்பது அற்பக் காலம். ஆனால் அந்த அற்பக்காலம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் உண்டு. மாற்றங்கள் எண்ணங்களில் ஏற்படலாம். சரீரத்தில் ஏற்படலாம். உயிரைப் பற்றிக் கூட ஏற்படலாம். ஆகையால் விநாடி தானே என்று காலத்தை ஒதுக்குவதற்கில்லை. விநாடியாயிருந்தாலும் அது காலம் தான். அதன் வேகம் இணையற்றது என்பதை உணருவதுதான் விவேகம்".
இந்த வரிகளில் தான் எத்தனை ஆழம் பொதிந்துள்ளன. வெகு சமீபத்தில் வாழ்வில் நிகழ்ந்தவை அப்படியே பிரதிபலித்திருப்பதை என்னவென்று கடந்து செல்வது? இப்படிப் பலப்பல எண்ணக் குவியல்களை, கடத்தி சென்று எப்படி இளையப்பல்லவர் அக்ஷ்ய முனையின் மிகப்பெரிய சதுரங்க வேட்டையை முறியடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
"வருந்தாதே மஞ்சளழகி. கடமையை நோக்கிப் போகிறேன். சீக்கிரம் வந்துவிடுகிறேன்". என்று தளத்தில் நின்ற இளையப்பல்லவன் முணுமுணுத்தான். வேகமாக அடித்த காற்று அந்த சொற்களை மஞ்சளழகிக்கு கொண்டு சென்றதோ என்னவோ தெரியாது. பாய்மரத்தை மட்டும் நன்றாக உந்தி, கடல்புறாவின் வேகத்தை அதிகப்படுத்தியது. காதலரைப் பிரிப்பதில் காற்றுக்குத்தான் எத்தனை ஆனந்தம்".
இனி பாகம் மூன்றை வாங்க வேண்டும். முடிந்தால் மூன்று பாகங்களையும் படித்துப் பாருங்கள்...