பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே... பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை. இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட - கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!.......
Raju Murugan is a writer, journalist turned filmmaker. His works include Vatiyum Muthalum, Ondru and Jipsy, all of which were published in Ananda Vikatan. He made his directorial debut with Cuckoo (2014). His second film, Joker, was awarded the Best Feature Film in Tamil award at the 64th National Film Awards.
இது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘ராஜுமுருகன்’ அவர்கள் எழுதிய வட்டியும் முதலும் தொடர் அனைவரும் அறிந்ததே. அந்த தொடரின் தொகுப்பாக விகடனில் வெளிவந்த புத்தகமே இது.பொதுவாகவே கொஞ்சம் உணர்வுப்பூர்வமான, நாடகத்தன்மை கலந்த, எழுத்து உட்பட எல்லாமே பகடிக்குள்ளாக்கப் படுகிற இந்த யுகத்திலும் இப்படி ஒரு எமோஷனல் தொடர் பெருவெற்றி பெற்றது சாதனை தான். ஆனாலும் நம்ம ‘டுட்டர்’ மக்கள் #TweetLikeRajuMurugan னு ஒரு ஹாஷ்டேக் போட்டு தாளிக்கத் தவறவில்லை.
நான் ராஜுமுருகனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருந்தன என்னிடம்.சினிமா தொடங்கி எழுத்துலகு வரை ‘என்னா பங்காளி… அம்ம பயலுக இப்புடி பண்ணிபுட்டாய்ங்க…? ...க்காலி போட்றா’ வகையறா மதுரை மொழி வட்டார வழக்கே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காலகட்டத்தில் ‘என்ன மாப்ள.. நம்ம பயலோ.. என்னா சொல்றானோ… கம்னாட்டி செவுட்ட பேத்துபுடுவேன்னு சொல்றா..’ மாதிரியான தஞ்சை வட்டார வழக்கு தமிழை கண்குளிர எழுத்தில் படித்ததே பெரிய ஆனந்தம். அப்புறம் திருவாரூர் தொடங்கி நீடாமங்கலம், அபிவிருத்தீஸ்வரம், வெட்டாத்துப்பாலம், கொரடாச்சேரி, குடவாசல், செல்லூர், ஓகை, மூலங்குடி, கூத்தாநல்லூர், ஒளிமதி, என ராஜுமுருகன் விவரிக்கிற எல்லா சிற்றூர்களும் இடங்களும் திருவாரூர்காரனான எனக்கு பள்ளி-கல்லூரி காலத்திலிருந்தே ரொம்பவும் பரிச்சயம். ஆக ஒவ்வொரு அத்தியாயத்தையும் சும்மா அனுபவிச்சு ரசிச்சேன்.
சரி அப்புடி என்னத்ததான் எழுதிருக்காருன்னு கேட்டீங்கன்னா… நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையான ஃப்ளாஷ்பேக் இருக்கும். அது மறக்கவே முடியாத மகிழ்ச்சியைத் தந்த இளமைக்காலமா இருக்கலாம். அல்லது சொல்ல முடியாத துயரங்களைக் கடந்து இழப்புகளைத் தாண்டி வந்த பதின்பருவமா இருக்கலாம். முட்டி மோதி எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து சாதித்துக்காட்டிய இருபதுகளின் இறுதியா இருக்கலாம். இப்படியான காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். மூன்றாம் வகுப்பு பள்ளித்தோழி, பக்கத்து வீட்டு ட்யூஷன் அக்கா, பள்ளிகூட வாசல் ஐஸ்வண்டி அண்ணன், பிள்ளையார் கோவில் பிச்சைக்காரன், திருவிழா கடையில் துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்த மாமா, கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்றுத்தந்த தாத்தா, ப்ரூஸ்லீ கதை சொன்ன கடைசி பென்ச் நண்பன், வேலை தேடியலைந்த காலத்தில் சோறு போட்ட நண்பன், திருமணப் பத்திரிக்கை அனுப்பிவிட்டு வரவை எதிர்நோக்காத காதலி, பத்து மணி நேர ரயில் பயணத்தில் பல வருட சொந்தம்போல் பழகிவிட்ட குடும்பம், தினமும் ஒரே சிக்னலில் கண்களில் பசியோடு நம்மைக் கடந்து போகிற சிறுமி... இப்படி எத்தனையோ பேரைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இது மாதிரி தன் வாழ்க்கையில் கடந்து வந்த அத்தனை பேரையும் அந்த மனிதர்கள் தந்த மறக்கமுடியாத அனுபவங்களையும் ஒட்டு மொத்தமாக நினைத்துப் பார்த்து உருப்போடுகிற, பொருள் தேடும் பொருட்டு சிற்றூர்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்த, நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய, ஒரு சராசரி முதல் தலைமுறை மத்தியவர்க்க இளைஞனின் ’நாஸ்டால்ஜியா’ நிறைந்த பதிவு தான் இந்த ‘வட்டியும் முதலும்’.
ஆறேழு வரிகளில் பத்து விதமான மனிதர்களையும் அவர்கள் வாழும் சூழலையும் தட தடவென ஸ்டாப் ப்ளாக்கில் வாசிப்பவர்களுக்குக் காட்டிவிடக் கூடிய வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர் ராஜுமுருகன். தஞ்சை மண்ணுக்கே உரித்தான கிண்டலுக்கும் கேலிக்கும் கொஞ்சமும் குறைவல்ல. 500 பக்கங்களானாலும் அலுக்காமல் விறுவிறுப்பாகப் படித்து முடிக்க அதுவே காரணம்.ராஜுமுருகனின் எழுத்து பேசாதவைகளையெல்லாம் ஹாசிஃப்கானின் சித்திரங்கள் பேசிவிடுகின்றன. அவ்வளவு உயிரோட்டமான பொருத்தமான ஓவியங்கள்.
மொத்தமாய்ப் படித்து முடித்த பின்னர்… சொல்லாமல் விட்ட நன்றிகளையும், கேட்காமல் விட்ட மன்னிப்பையும், மறந்து போகவே முடியாத முகங்களையும், சிலிர்த்துப்போன தருணங்களையும், இழந்துவிட்ட உறவுகளையும், வெளிப்படுத்தாத காதலையும், தொடர்பு விட்டுப்போன நட்புகளையும், நெகிழ்ந்துபோன நிகழ்வுகளையும், இன்னும் வார்த்தைகளில் அடைக்கமுடியாத எத்தனையோ உணர்வுகளையும் அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து போட்டு நினைவுகளில் மூழ்கடித்துவிட்டுப் போவதே… ராஜுமுருகனின் எழுத்துக்குக் கிட்டிய ஆகச்சிறந்த அங்கீகாரமாய் / வெற்றியாய்க் கருதுகின்றேன். _______________________________________________________________________ வட்டியும் முதலும் விகடன் பதிப்பகம் விலை: 215 ஆன்லைனில் வாங்க: http://goo.gl/VU8Jes
வட்டியும் முதலும், இது தொடராக விகடனில் வந்த போது படிக்க தவறி விட்டேன். பின்னர் சென்ற புத்தக கண்காட்சியில் இதை விகடனின் அரங்கில் வாங்கி வைத்தேன். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தான் படித்து முடித்தேன். படித்து முடித்த உடன் ராஜுமுருகனை பார்த்து பேச வேண்டும் போல் இருந்தது. ஏன் அடுத்ததாக எதையும் எழுதவில்லை இன்று வரையில் என்ற கேள்வி எழுந்தது, அடுத்த வாரமே ஆரம்பித்து விட்டார் விகடனில் gypsy என்றொரு தொடரை. இதையாவது வாரவாரம் படித்து விட வேண்டும்.
விகடனில் தொடராக வெளி வந்த போது படிக்காமல் பின்பு புத்தகமாய் வந்த உடன் படிப்பது எனக்கு புதிதல்ல. இதற்கு முன் வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலக போரையும் புத்தகமாய் வாங்கித்தான் வாசித்து முடித்தேன். இந்த புத்தகத்தை இவளோ நாளாக படிக்காமல் விட்டு விட்டேனே என்று சிறு வருத்தம் இருந்தாலும் இப்போதாவது முடித்தேனே என்ற ஒரு த்ருப்தி.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாபிக் என்று 70 வாரங்கள் தொடர்ந்து வந்ததின் தொகுப்பு. இதை அப்பவே படித்து இருந்தால் 70 வாரமும் படித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இதுவரை தான் சென்ற இடங்கள், சந்தித்த மக்கள், பழகிய உறவுகள் நண்பர்கள் என அனைவரது நினைவுகளையும் திரும்பி பார்க்கிறார் ராஜுமுருகன். படிக்க படிக்க எனக்கு தோன்றியது எத்தனை மக்களை பார்த்து இருக்கிறார், எத்தனை அனுபவங்கள் இந்த மனிதனுக்கு கிடைத்து இருக்கிறது என்பது தான்.
இதை படித்தால் நமக்கும் சிறு வயது முதல் சந்தித்த, பார்த்த, ரசித்த, கேள்விப்பட்ட பல நபர்கள் நம் கண் முன் வந்து போவர்கள். பல மாமாக்களையும், அத்தைகளையும், அண்ணன்களையும், அக்காக்களையும் நினைவில் கொண்டு வந்து விடுகிறார். நான் சிறு வயதில் இருந்த வீட்டின் அருகே இருந்த 'கருப்பட்டி காபி' போட்டு கொடுக்கும் லட்சுமி அக்கா. நான் கோடை விடுமுறையில் என் தாத்தா வீட்டுக்கு சென்று ஆத்தில் குளித்த அனுபவங்கள். அங்கே பக்கத்து வீட்டில் தன்னுடைய தோற்று போன காதல் கதையை முழுதாய் சொன்ன அக்கா என்று பல(ர்) நினைவுகள் வந்து போனது. அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருகிறார்கள் என்று நினைக்க வைத்தது.
இந்த அவசர உலகத்தில் நாம் கவனிக்க தவறிய, கவனிக்க மறுத்த பல மனிதர்கள், நாம் மறந்து போன பல பழக்கங்கள் பற்றியும் பதிவு செய்து இருக்கிறார். இதை வாசித்த பின் சில மனிதர்களை இனி நாம் நிச்சயம் கவனிப்போம். இவரின் எழுத்து நடை மிகவும் கவர்ந்த ஒன்று. சலிப்பே தராமல் 500 பக்கங்களை கடக்க செய்தார்.
ஒரு ரயில் பயணத்தில் இந்த புத்தகத்தை படித்தும் முடிக்கும் போது இந்த வருடம் பிறந்தது, நேரம் சரியாக 12:02. நான் வாசித்த கடைசி அத்தியாயம், 'Life is beautiful'. தூங்க ஆரம்பித்த பொது 'side upper' சீட் வசதியாக இல்லையே என்ற கவலையில் இருந்தேன், 'lower berth கிடைக்குமா கை குழந்தையோட இருகாங்க நீங்க upper இல்ல middle berth எடுத்துகோங்க?' என்று ஒருவர் வந்தார். தாராளமாக என்று அவரின் upper berthஇல் நிம்மதியாக படுத்தேன், 'Life is beautiful' தான்.
பி.கு : எப்படியோ தமிழில் ஒரு பதிவை எழுது விட்டேன். சிறு வயதில் கடிதம் எழுதி பழகியது போல் இருந்தது.
Over-romanticizing things mars an otherwise beautiful series of essays spanning common people and their lives.The author's strength is conjuring a cast of miscellaneous characters. A Tamil-movie like book where sharp dialogues of K.Balachander meet the maudlin world of Vikraman. Wishing that there is less of Vikraman in Rajumurugan's foray into movies.
70 chapters from Vikatan. Each chapter contains different journey's of people. Lot of information about the 70 chapters and once you completed some chapter, it will make us to think. Also, some chapters will stay with you. Recommended to read.
ராஜு முருகனின் வாழ்க்கை அனுபவங்களின் யதார்த்தமான பதிவு .அவர் சந்தித்த மனிதர்கள் அவர்கள் வாழ்க்கை ஓவியமாக எளிய மனிதரின் எழுதாக் காவிமாய் படைத்திருக்கிறார்.
ஒவ்வொரு வாழ்வும் நம்ம வாழ்வில் ஏதோ ஒன்றை நினைவில் இழுக்கும்.
இப்புத்தகத்தை படிக்கும் போது அழுதேன் சிரித்தேன் நெகிழ்ந்தேன்.
ஒரு நல்ல புத்தகம் என்ன செய்ய வேண்டுமென என்னைக் கேட்டால், புத்தக வாசிப்பின் மேல் பெருங்காதலை ஏற்படுத்த வேண்டுமென சொல்வேன். அதைத் தான் செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
மொத்தம் எழுபது கட்டுரைகள் கொண்ட ராஜு முருகனின் இந்தத் தொகுப்பு நாம் மறந்து போன,மறக்க நினைக்கிற, மறக்கவே முடியாத வாழ்வின் அத்தனைத் தருணங்களையும் நினைவூட்டுகிறது. இத்தனை மனிதர்களை சந்தித்திருக்கிறாரா, இத்தனை அனுபவங்களை தன்னுள் கொண்டிருக்கிறாரா என்ற வியப்பு எழுவதை தடுக்க முடியவில்லை. சில கட்டுரைகளை வாசிக்கும் போது எழுந்த, "நிஜமாவே இது நடந்திருக்குமா.. இல்ல சுவாரசியமா இருக்கணும்னு கற்பனையா எழுதியிருக்காரா" என்ற சந்தேகத்தையும் விலக்க முடியவில்லை. புத்தகத்தில் வரும் மாமா அத்தைகளையும், சித்தப்பா சித்திகளையும், பெரியப்பா பெரியம்மாக்களையும், அண்ணன்களையும், அக்காக்களையும், நண்பர்களையும், தோழிகளையும் கணக்கிலெடுக்க முயன்றால் சுலபமாக இரட்டை இலக்கங்களைத் தாண்டிவிடும்.
ஒவ்வொரு கட்டுரையும் வாழ்வின் மீதும், சக மனிதர்களின் மீதும், உறவுகளின் மீதும் பெரும் நம்பிக்கையை விதைக்கிறது. போலியோவால் ஒரு கை ஒரு காலை இழந்தாலும் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளத்துக்காக பள்ளி முடிந்து வந்து போக்கே ஷாப்பில் போக்கே கட்டிக்கொடுக்கும் சிறுமி, ஜார்கண்டில் அப்பா அம்மாவை இழந்து மாவா விற்றுத் திரியும் சிறுவனை அழைத்து வந்து மகனைப் போல வளர்த்து தொழில் கற்றுத் தந்து ஆளாக்கி விட நினைக்கும் லாரி டிரைவர் சௌந்தர், எட்டாம் வகுப்பு வரை தன்னுடன் படித்த பள்ளி நண்பர்களை போன் பண்ணி விசாரித்து பல வருடங்களுக்குப் பிறகும் தொடர்பில் வைத்திருக்க நினைக்கும் கல்யாணராமன், தன் காதல் மனைவி மனபிறழ்வு அடைந்த பின் மருத்துவமனையில் சேர்த்து விடாமல் அவரை தன்னுடனே வைத்துக்கொண்டு கொஞ்சமாக அவர் தெளிவு பெற்று அரைகுறையாக போட்டக் கோலத்தையும் சொம்பில் தண்ணீர் கொண்டு வருவதையும் பார்த்து ஆனந்தமடைத்து அவள் விரைவில் முழுமையாக குணமடைந்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு வாழும் கம்பௌண்டர் என பெரும் நம்பிக்கையைத் தரும் மனிதர்கள் புத்தகம் முழுக்க நிறைந்துக் கிடக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். சலனமில்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்ற புத்தகத்தின் பக்கங்கள் நிச்சயம் உங்களை ஆசுவாசப்படுத்தும்.
#Ourlife - Rewind- Nostalgic memories # நம் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நாம் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை?!. அவர்கள் கண்ட இன்பம், துன்பம், மரணம், ஏழ்மை, துரோகம், நட்பு, காதல், காமம், பசி, அதிர்ச்சி, அழிவு, உறவு, அரசியல், பரவசம், போதை.. இன்னும் எத்தனை எத்தனை!
நமக்கு பலர் பாடமாகவும், நாம் பலருக்கு படமாகவும் அவர்களின் மனத்திரையில் பிரகாச வெளிச்சத்தோடு காட்டிக் கொண்டே தான் இருப்போம்! இருக்க வேண்டும்!.
ஒவ்வொரு முறையும் மனுஷங்க மேல கோவமோ, வெறுப்போ,ஏமாற்றமோ ஏற்பட்டு மனுஷங்களை விட்டு தள்ளி நடக்கவோ இல்ல கொஞ்சம் விலகி இருக்கலாம்னு தோணுகிற சமயங்கள்ல ஒரு சில படங்களையோ இல்ல புத்தகங்களையோ மறுவாசிப்பு செய்வது எப்பவுமோ ஒரு வழக்கம். அதுல ராஜமுருகனின் படங்களும் அவருடைய ஜிப்ஸி புத்தகமும் அடக்கம்.
அப்படி ஒவ்வொரு முறையும் அவர் படங்களையோ இல்ல ஜிப்ஸியையோ மறுவாசிப்பு செய்யும் போது எல்லாம் மனுஷங்க கிட்ட இருந்து விலகி நடக்கிற நானும் என்னுடைய கால்களும் என்னையே அறியாமல் மீண்டும் மனிதர்கள் பக்கமே போய் நிற்பதும், ஏதோ திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மீண்டும் தன் தாயை கண்டதும் ஓடிப்போய் அரவணைத்துக் கொள்வது மாதிரி, சகமனிதர்களின் அன்பிற்கும்,அரவணைப்புக்கும் ஏங்கி நிற்பதும் எப்பவுமே ஆச்சரியம் தான் எனக்கு. உண்மையில் மனிதன் மகத்தான சல்லிப்பயல் தான்.
ஒரு சில சமயங்களில் ராஜமுருகன் மீது பொறாமையும், அணிந்துரை எழுதிய வண்ணதாசனுக்கு இருந்த "எப்படி இவ்வளவு மனுஷங்களை தெரியும்" அப்படிங்கற ஆச்சரியமும், இந்த மனுசன மாதிரி இந்த வாழ்வையும், மனுஷங்களையும் ஒரே ஒரு முறை எழுத்து கூட்டியாவது வாசித்து விட வேண்டும் என்கிற ஏக்கமும் தவிர்க்கவே முடியாத ஒன்று.
ஒவ்வொரு முறையும் மின்மயானத்தைக் கடந்து போகும்போது எல்லாம் எனக்கு தோணுற விஷயம் தான், அங்கு ஏதோ ஒரு மனுஷன் உயிரோட இல்ல பக���கத்தில நிறைய மனுஷங்க சோகமாவும், துக்கமாகவும் நிக்கிறாங்க நான் இதையெல்லாம் பார்த்துட்டு வெறும் வேடிக்கையா மட்டுமே கடந்து போறேன் அந்த மனுஷனோட இறப்பு எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தல அப்படிங்கற எண்ணம். பெரும்பாலான சமயங்கள்ல இறப்பு என்பது நமக்கு நெருங்கிய இல்ல ஆதர்சமான யாரோ ஒருவருக்கு ஏற்படும் வரை அது வெறும் வேடிக்கை தான், இத ஏத்துக்கிறதுல நமக்கு விருப்பம் இல்லை என்ற��லும் அது தான் நிதர்சனம்.
அது மாதிரி ஒரு நடிகையின் இறப்பையோ, தன் சொந்த மனைவியின் இறப்பையோ, எங்கோ தன் இனம் அழிவதையும், தன்னுடைய இயலாமையும் நினைத்து தீக்குளித்து தன் உடம்பையே ஆயுதமாக்கி போராட்டத்தை தொடருங்கனு சொல்லிட்டு போன தோழரின் இறப்பையோ வெரும் வேடிக்கையாக மட்டும் கடந்து போகும் மனிதர்கள். இதையெல்லாம் படிக்கும் போது வருத்தமும், கோபமும் ஏற்பட்டாலும், நாமும் வேடிக்கையா கடந்து போகிறவர்கள் தானே என்கிற வாழ்வின் நிதர்சனம் முகத்தின் மேல் ஓங்கி அறைகிறது. இருந்தாலும் தன் பள்ளி ஆசிரியரின் அறுவை சிகிச்சைக்கான கடனையும் ஏற்று அவரது இறுதி சடங்குகளையும் நடத்தி வைக்கும் மனிதர்களும் இங்கு இருக்கத்தானே செய்கிறார்கள். இப்படி ஆனதும் தானே வாழ்க்கை, இப்படியானவர்கள் தானே மனிதர்களும்.
பாவி பையன் ஒரே ஒரு முத்தம் தான் கேட்டான் கொடுக்காம விட்டுட்டேன் என கொடுக்கப்படாத முத்தத்தை காலம் முழுவதும் சுமந்து கிடக்கும் நண்பனின் அம்மா, வாழ்வின் நிலையில்லாமையும், நிராதரவையும் உணர்த்திவிட்டு போகிற தூக்கமில்லா மருத்துவமனை இரவுகள், எல்லா எதிர்ப்புகளையும் மீறி தன் அக்காவிற்கு மறுமணம் செய்து வைக்கிற முதல் தலைமுறை இளைஞன், முட்டி கிழிந்த பேன்ட்டைப் பாத்து கீழ விழுந்துட்டீங்களா இப்ப சரியாகிருச்சுல்ல என பதறும் அப்பார்ட்மெண்ட் வாசல் டெய்லர் அண்ணன், குச்சியால் அடி வாங்கிய கைகளுக்கு ஆலிவ் எண்ணெய் கொண்டு வந்து கொடுத்து கைல தேச்சுக்கடான்னு சொல்லும் ரோஸி சிஸ்டர், ஒரே ஒரு குறுஞ்செய்தியால் கூட நமது நாளையே மலர்த்திவிடுகின்ற பெண் தோழிகள், யாராலும் வாசிக்கப்படாத ஆயிரம் ஆயிரம் கதைகளை வைத்துக்கொண்டு சமையல் அறையில் மட்டுமே புகைந்து கிடக்கும் ஒரு வாசகி, புத்தாண்டுகளை எல்லாம் தொடக்கி வைக்கும்-தெருமுனை குப்பை தொட்டியில் காலி மது பாட்டில்களை பொறுக்க வரும் தலை கலைந்த சிறுமி, அளவு கடந்த அன்பையும்,அரவணைப்பையும்,மறக்கவே முடியாத நல்ல நினைவுகளையும் தந்து விட்டுப் போன கீர்த்தனாக்கள், ஹார்ட் அட்டாக் வந்த புருஷனை ஹாஸ்பிடல் போய் பார்த்துவிட்டு வந்து மீண்டும் வீட்டில் மெழுகு வார்ப்புகள் செய்து கொண்டிருக்கும் ஆனந்தி அக்கா, மத்தவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணும் போது தான் உயிரோடு இருக்கிறதா பீலிங் தம்பின்னு சொல்கிற நண்பர், புக்கு வாங்கிக்கோங்க சார் இல்லன்னா பணம் வேண்டாம்னு சொன்ன சாலையோரமா ரைம்ஸ் புக் விக்கிற குட்டி தேவதை, மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட்கள் கட்டிவிட்டு இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும் கட்டடத் தொழிலாளர்கள், பாப்பா சிரிப்பு கொசுரம் தரேன் லாபம் ஒன்னும் இல்ல கொஞ்சம் வடிதண்ணி இருந்தா குடுங்கம்மான்னு சொல்ற பொம்மைகள் விற்கும் அற்புதன், நெடுஞ்சாலைகளில் மறிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு சும்மாவே பணம் கொடுத்து தாபாவில் சாப்பாடு வாங்கி தரும் லாரி டிரைவர் கணேசன்.
இது மாதிரி எத்தனை எத்தனையோ மனிதர்கள், ஏதேதோ உணர்வுகள், எத்தனையோ காட்சிகள் ரத்தமும், சதையுமாக—வெறும் மனிதர்களும், உணர்வுகளும் மட்டுமா மண்ணுக்கும் மனிதனுக்கும் ஆன அரசியல், சினிமா, கேளிக்கை,கொண்டாட்டம்,திருவிழாக்கள், பால்யகால நினைவுகள், மறக்கவே முடியாத தருணங்கள் இப்படி எல்லாமும் ஆக புத்தகம் முழுவதும்.
இப்படி பசி, வருமை, நோய், அரசியல், சினிமா, வெறுப்பு,ஏமாற்றம்,கோபம்,துரோகம்,வஞ்சகம்,காதல் தோல்வி, பிரிந்து விட்ட உறவுகள், மனக்கசப்பான நினைவுகள், மீட்டெடுக்க முடியாத உயிர்கள் என எல்லாவற்றையும் தாண்டி இந்த மானுடமும், வாழ்வும்—மனிதர்களாலும், மனிதத்தாலும் மட்டுமே தினம் தினம் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது என ராஜுமுருகனை விட வேறு யாரால் இவ்வளவு அழகாக புரிய வைத்துவிட முடியும்.
உண்மையில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் தான் - ராஜுமுருகனைப் போல சக மனிதனையும் இந்த வாழ்வையும் நேசிக்கவும், வாசிக்கவும், கொண்டாடவும் தொடங்கிவிட்டாள்.
நான் எப்பொழுதும் கூறுவதுண்டு.. ஒரு நல்ல புத்தகம் வாசகனின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் . அப்படி பார்க்கையில் ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்" என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜுமுருகனின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளின் தொகுப்பே இந்த புத்தகம். புத்தகம் படிக்கும் பொழுது எனக்கு, எப்படி ஒரு மனிதருக்கு இவ்வளவு நினைவுகளும், இவ்வளவு மனிதர்களின் பரிட்சையமும் என்ற ஒரு மலைப்பு இருந்து கொண்டே இருந்தது. நான் அன்றாடம் பார்க்கும் மிக சாதாரணமான விஷயங்களும் அவர் கண்களின் வழியே பார்க்கும்போது முற்றிலும் வித்தியாசமாக தெரிகிறது .
இதில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வாழ்வின் மீதும், சக மனிதர்களின் மீதும், நம்பிக்கையையும், அன்பையும் விதைக்கிறது. ஒருவரை பேருந்தில் ஏற்றி விட்டு "டா டா" காட்டுவதில் கூட அழகு இருக்கிறது என்பது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது புரிந்தது.
இதில் வரும் கடைசி கட்டுரை... "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்" . உண்மையாகவே வாழ்ந்து பார்ப்பவனுக்கு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் தான்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே படித்து முடித்த புத்தகம் இப்பொழுதுதான் எழுதுகிறேன்.இயக்குனர் ராஜு முருகன் எழுதிய "வட்டியும் முதலும்" என்ற கட்டுரை தொடர் 2013 வாக்கில் விகடனில் வெளிவந்து வாசகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது. எளிய மனிதர்களின் வாழ்வியலையும் கதைகளையும் ஆழமாக பதிவு செய்து இருக்கிறது. இதனை எளிய மொழி நடையில் பதிவு செய்தது எல்லா தரப்பட்ட வாசகர்களுக்கும் சென்றடைந்தது. இதன் மேல் சிறப்பப்சம் படுசுவாரசியமான பாணியில் எழுதியது தான். மிக நகைச்சுவையாகவும் அதே சமயம் மிக உணர்ச்சி வயமாகவும்(Emotional) இருக்கும். கிட்டத்தட்ட 70 அத்தியாயங்களில் பல பல மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது. இத்தனை அத்தியாயங்களி்ன் அடிப்படை சாரம் மனிதம் தான். நீங்கள் எப்பொழுதாவது சோர்வாகவும் வாழ்வின் மீது நம்பிக்கையற்று உணரும் போது இத்தொடரை எடுத்துப் படித்தால் நிச்சயமாக புத்துணர்வாகவும் ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.
ராஜூமுருகன் தன் கிராம வாழ்க்கைக்கும் ,நகர வாழ்க்கைக்கும் உள்ள வேற்றுமைகள் , காலத்தின் மாற்றம், தன் வாழ்வில் இன்று வரை அவர் சந்தித்த மனிதர்கள் பற்றியும் 70வது தலைப்புகளில் பல்வேறு விதமான நிகழ்வுகளை பற்றி எழுதிய தொகுப்பு வட்டியும் முதலும்.
மிகச்சிறந்த நிழ்கால எழுத்தாளர் - ராஜூமுருகன்
வட்டியும் முதலும் புத்தகத்தில் என்னை க���ர்ந்து இழுத்தவை பல வசனங்கள் அதில் சில, இங்கே பதிவுசெய்கிறேன்.
(மானுடத்தின் பொதுமொழி, ‘பசி’ :
அது...சோழ நாட்டு விவசாயியை,துபாய் ஷேக்கின் ஆறாவது மனைவியின் பிள்ளைக்கு ஆயா வேளை பார்க்க அனுப்புகிறது .மேகாலயா சப்பை மூக்குப் பெண்ணை வடபழனி சிம்ரன்ஸ் ஆப்பம் ரெஸ்டாரென்டில் தட்டு கழுவவிடுகிறது.)
(காலம் எல்லாவற்றையும் தின்றுவிடுகிறது.ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனைப் பள்ளத்தில் தள்ளி,கேட்காத்தைக் கொடுத்து,கேட்டதை மறைத்து,உறவை சிதைத்து,அழகைக் குலைத்து ஏதேதோ செய்து விடுகிறது. தீவிர மார்க்சிஸ்ட் தோழர் ஜோசியக்கார்ர் ஆனதும்,பெரு விவசாயி பெரியப்பா கோயம்பேட்டில் லோடுமேன் ஆனதும்,மூன்று தங்கைகளுக்கு கல்யாணம் முடித்து 47வயதில் பெண்தேடும் நண்பர் ‘சாமியார் ஆயிரலாம்பா’ எனப் புலம்புவதும் காலத்தின் கோலமெனக் கொள்க!)
(“ஏன் குடிக்கிறேன் நான் புத்தன் சிவனாக பித்தன் நான் குடிக்கிறேன் இந்தச் சமூகம்தான் என்னைக் குடிக்கவைத்தது இதன் அசிங்கங்கள் குடிக்கவைத்தன குடும்பத்தைப் பிரித்த பொருள் குடிக்க வைத்தது தேவதேவியிடம் கிடைக்காத அருள் குடிக்க வைத்தது...”)
(கொள்கை வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்....கோனார் கடை கறித்தோசைக்காகவே நாங்கள் ஒரு குரூப் இரவெல்லாம் போஸ்டர் ஒட்டுவோம். ஒரு ஹீரோ அனுபவத்துக்காகவே மைக் கட்டிய ஆட்டோக்களில் தொத்திக்கொண்டு கோஷம் போடுவோம்.
“புரட்சி மலரும் பொழுது, விடியும் வறுமையின் இரவு, ஊழலை எரிக்க, ஏழைகள் சிரிக்க...”
(“எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனுஷங்களோட பெரிய பிரச்சனை. நம்பிக்கை,அன்பு எல்லாம் பொய்யாப் போறப்பாதானே எல்லாம் கசத்துபோகுது. இதுங்ககிட்ட அது எதுவும் இல்ல... இதுங்க அன்புல எந்த அப்பழுக்கும் இல்ல.”)
(ஒரு பள்ளிக்கூடத்தில் தலித் என்பதற்காக, பாரதி டீச்சரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ‘எங்கள் பிள்ளைகளுக்கு இவ பாடம் சொல்லித் தர்றதா..?’ என எதிர்ப்பு. ஆசிரியர்-பெற்றோர் சங்கம் மீட்டிங் போட்டு பாரதி டீச்சரை வேலையவிட்டுப் போகச் சொன்னபோது, பிரேயர் ஹாலில் இருந்து அவர் அழுதுகொண்டே வெளியேறியது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் ஒன்றில் இப்போது அவர் டீச்சராக இருக்கிறார். அப்போது அவரை வோண்டாம் என்று சொன்னவர்களின் பேரன், பேத்திகள் எல்லாம் இப்போது அவரிடம்தான் படிக்கிறார்கள்.)
(எங்கே சென்றாலும் என்ன ஆனாலும் டீச்சர்களுக்கு நாம் சிறு பிள்ளைகள்தான். அவர்கள் கடவுளின் நிழ்போல் எங்கோ இருக்கிறார்கள். வயதாகி உடல் உடைந்து சிரமங்கள் கடந்து எப்படி எப்படி எல்லாமோ ஆகிவிடுகிறார்கள். ஆனால், நம் நினைவில் நிற்ப்பது கம்பீரமான டீச்சர்கள்தான்.)
(‘சந்திரலேகா’ பட டிரம்ஸ் மாதிரியான பறையில் ‘ரண்டக்க ரண்டக்க...’ என நாலைந்து பேர் அடி பின்னிக்கொண்டு இருக்க... மொத்த ஏரியா பசங்களும் டான்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஏரியா பெண்கள் வேடிக்கை பார்த்ததில் உற்சாகம் ஓவர் டோஸில் இருந்தது.
நானும் நண்பனும் அல்ரெடி பூஸ்ட் என்பதால், உடனடியாக களத்தில் குதித்தோம். அப்படியே அந்த குரூப்போடு ஐக்கியமாகி செம குத்து போடும்போதே சாமி ஊர்வலம் கிளம்பியது.
கிட்டத்தட்ட ரெண்டு மூணு கிலோ மீட்டருக்கு நான்-ஸ்டாப் குத்து டான்ஸ்.
திடீரென்று கூட்டத்தில் ஒரு பையன் என்னைப் பார்த்து, “நிறுத்து... நிறுத்து... யாரு நீ...?” என்றதும் மொத்த மியூஸிக்கும் நின்றது. அத்தனை பேரும் எங்களை பார்க்க, நண்பன் பாதி மூவ்மென்டிலேயே ஜெர்க்கடித்து நின்றான். “அட, வாங்க பிரதர்...” என நான் மறுபடி டான்ஸூக்கு முயல, “அடங்... கேக்குறன்ல... யார்றா நீ...?” என என் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் அந்தப் பையன். “அப்டியே போட்றா அவன...” எனக் கூட்டம் எகிறி வர, எனக்கு அப்போதுதான் மூளைக்குள் அலாரம் அடித்தது. “இல்லைங்க சார்... சும்மா உங்களோட...” என இழுக்கும் போதே, “அவனுங்களுக்கு பல்பு மாட்டு... பல்பு மாட்றா...” என நாலைந்து பேர் வெறியோடு வந்தார்கள். சட்டென்று பாதுகாப்புக்கு வந்த இரண்டு போலீஸார் உள்ளே புகுந்ததில் கடைசி நொடிகளில் தப்பித்தோம்.
அந்தப் போலீஸ்காரர், “என்ன தம்பிகளா வெளியூரா...? சிக்கிருந்தா செதச்சுருப்பானுங்க... ஓடிப் போயிருங்கடா...” என அனுப்பிவைத்தார்.
அதன் பிறகுதான் தெரிந்தது... சென்னையில் ஏரியா திருவிழாக்களில் அந்நியர்கள் யாருக்கும் இடமில்லை என்பது. வேறு ஏரியாக்காரர்கள் நுழைந்தால் பேத்தெடுத்து விடுவார்கள்.
(‘அஞ்சு ரூபா இருந்தா ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுக்கலாம்...’ எனக் கையில் காசில்லாமல் பசியோடு எங்கே திரிந்தேனோ... அங்கேயே மிகப் பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு, விதவிதமாய் சாப்பாடு தந்து,ஏ.ஸி. காரில் அழைத்துச் செல்லப்பட்ட பொழுதும் வந்தது.
ஒரு சின்ன வயல் பூச்சி கடித்து, குஷ்டம் வந்து, கடைசியில் யாரும் தீண்டாமல் தனியே குடிசை போட்டுக்கிடந்தார். சாப்பாடு கொடுக்கப் போகும்போது, “மறக்க முடியலைய்யா... ஒண்ணுத்தையும் மறக்க முடியலைய்யா...” என அவர் புலம்பிக்கிடந்ததை மறக்க முடியுமா?
பரவச ஆட்டத்தில் (ஆ)சாமிகள்!)
(வாசலிலேயே அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை நடந்துகொண்டு இருந்தது. அவர் குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டு இருந்தார். ஒரே கூச்சல். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு அவர் போய்விட, ‘அப்டியே போயிரு... வராத’ என்றபடி அந்தம்மா வாசலில் வந்து உட்கார்ந்துகொண்டது.
“இல்லையே... ஸ்கூல் இல்லையே... நேத்திக்கு லீவாச்சே!” என்றபடி ஓடுகிறாள்.)
(‘இன்னிக்கு இருந்து குடிக்கவே கூடாது’ என உச்சகட்ட உறுதி எடுக்கும் போதுதான், ‘நார்வே சரக்கு வந்து இருக்கு... கிரில் சிக்கன் வாங்க��யாச்சு.ராஜா சாங்ஸ் டவுன்லோட் பண்ணியாச்சு. அரைக் கிலோ ஆப்பிள் போதும்ல...’ என போன் வரும்.
When I want to write a review in Tamizh, It's vexing because I can't write hundred words in Tamizh without making thousand spelling mistakes. Irony!
Vatiyum Muthalum was a first book in last last two years. The way Raju Murugan written about childhood, rain, adulthood, books, festival, Eelam, war, Thanjavur, Madras, religion, happiness, animals, revolution, lonely, brotherhood, class difference, politics and life as a journalist in a metropolitan city; his writing pace crisp and soothing and narrative has its own assuring and independent flow.
Especially, when I was reading 50th chapter, it was about the memories born from the rain. It was a June morning, crowded Shivaji Nagar Bus stand, my eyes welled up and I started crying consolable. I used to think myself as an adult who can handle myself physically and emotionally (to the extent) but Raju Murugan's choice of words and his storytelling aspect made me glued to the book.
வாழ்க்கை, மனிதர்கள்,பசி, காதல், பிரிவு, ஏக்கம், இறப்பு, உறவுகள்-என அனைத்தையும் வெளிப்படுத்துகிறது முருகனின் எழுத்துக்கள். தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைகளை, அவர்களின் குணாதிசயங்களை, தான் கற்ற பாடங்களை, வாழ்வின் நிலையற்ற தன்மயை எதார்த்தமான வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளார். பல அத்தியாயங்களில் வரும் மனிதர்கள் படித்து முடித்தபின்பும் நினைவில் நிற்கின்றனர். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
This book is actually a collection of weekly articles written by Raju Muragan on a renowned Tamil weekly magazine, "Aanandha Vikatan". This book only has the first 70 articles. It's a pleasant read and most of them brings back the nostalgic memories in ones life. I hope Vikatan would publish the 2nd part once the series is over.
In a way this book will be your entire life. Captured every little things you went through over the time. No story, No plot twists and no cliffhangers but yet this is one good read. Loved it.
ஆனந்தவிகடனில் வாரவாரம் வெளிவந்த, பலரின் மனதை கவர்ந்த, பல்வேறு வாசகர்களின் பாராட்டுக்களை பெற்ற அத்தியாயங்களின் தொகுப்பு தான், என்ற போதிலும் இத்தொடரைபற்றி நான் அறியவில்லை. என் தோழரின் மூலமாக அறிமுகமாகிய ஓர் புத்தகம். இதுவரை தமிழகம் தமிழ்மக்கள் கண்டிராத பலதரப்பட்ட மக்களின் உணர்வுப் பூர்வமான நாடக உரையாடல் கதைகளை உள்ளடக்கிய புதுவித அனுபவம். இப்புத்தகத்தினை எவ்வாறு வகைபடுத்துவது என்பதை அறிய முடியவில்லை.
பேச்சுவழக்கு நடையில் எழுதப்பட்ட இப்புத்தகம், படிப்பதற்கு ஏதோ சுயசரிதை போல தோன்றினாலும், வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாகவும், கண்ட நிகழ்வுகளை காட்சி படுத்துவதாகவும் , வாழ்க்கையின் எதார்தத்தை, கற்பனைகள் கலந்த ஓர் வித்தியாசமான கலவையாக படைத்துள்ளார். . சில இடங்களில் அலுப்பு தட்டுவதை போல தோன்றும், பலதரப்பட்ட மக்களை சந்தித்தால் சிலரை பற்றி மாற்று அபிப்பிராயம் அல்லது சிலரை பிடிக்காமல் போவதும் இயல்பே உதாரணத்திற்கு சிலருக்கு அரசியல்,சினிமாவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம், சில நிகழ்வுகளை சற்று மிகைப்படுத்தி கூறுவதாக உணர இயல்வது இயற்கை.எவராலும் யூகிக்க இயலாத வண்ணம், உரையாடல்களை அவரது கற்பனை திறனும், கலைத்திறனும் பிசைந்து இலாவகமாக கொடுத்துள்ளார்.
இதிலே புணையப்பட்டுள்ள கதைகள் பெரும்பாலும் கிராமம் நகரம் இடையே பயணிக்கிறது. நம் வாழ்வில் நடந்தவைகளாக தோன்றும், நாம் கடந்து சென்ற கதைமாந்தர்களாகவும் தோன்றும். எண்ணற்ற கதாபாத்திரங்கள் அவர்களின் வாழ்வியல், உளவியல், மனிதம் எனப் பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். மதுரைக்கென்று உரிய வட்டார வழக்கே ஓங்கி ஒலிப்பது ஓர் தனிச்சிறப்பு எனலாம்.நம் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாகவும், படம்போட்டு காட்டும் விதமாக அமைத்துள்ளார்.
இப்புத்தகத்தினை வாசித்து முடித்தவுடன் நமக்கு தோன்றுவது,சிறுவயது முதலே நாம் பார்த்த, பழகிய, இரசித்த, திகைத்த,சந்தித்த, சந்திக்க விழைந்த, கண்டும் கண்டுகொள்ளாது விட்ட மனிதர்கள், நம் கண்முன்னே வந்து செல்வர். நம்மையறியாது நம் வாழ்வில் பல்வேறு விடயங்களில் எத்தனையோ உயிர்கள் நமக்காக பாடுபட்டு உழைத்திருக்கும். அவ்வுயிர்களுக்கு நாம் நன்றி செலுத்துவதில்லை, சில நேரம் நன்றி சொல்ல மறந்திருப்போம் தவிர்த்தும் இருப்போம் அவ்வாறான தருணங்களையும்,சொல்ல மறந்த காதலையும், சொல்லி முடிந்த வாழ்வையும்,மறந்த சொந்தங்களையும்,மறக்க இயலாத பந்தங்களையும், வார்த்தையால் வர்ணிக்க முடியாத அன்பினையும் உணர்வினையும் கண்ணெதிரே கொண்டு வந்து நினைவூட்டுவது மட்டுமின்றி உயிரூட்டுவது விந்தையிலும் விந்தை.
நான் அதிக நாட்கள் எடுத்து படித்த புத்தகம்.பல வாழ்வியல் அனுபவங்களை மிக மென்மையாக மயில் இறகு போல் வருடி மனதிற்குள் இட்டு சென்றது.
It talked about all aspects of life, all experiences of a 30+ year old. You can read any chapter on any day and that will make you to look life afresh and gives you the confidence..
தமிழில் படித்ததலோ என்னவோ உணர்ச்சி பிழம்பாகி ஏதோ செய்தது..
Such books are a must not only to read, but to treasure it for your future for reminders and memories..
It will take back to your childhood, will make you feel what all you missed in growing up in a city, how different kind of people stay within you giving memories and lessons of life, understand your family,.city and country and what kind of life we are heading too in future..
I would like to read this again and again just for my language - தமிழ்.
Just beautiful lines and thoughts spread in each chapter, it will give you so much of calm and peace and retrospect your life .
ராஜு முருகனை இயக்குனராக மட்டுமே அறிந்த எனக்கு, ஒரு எழுத்தாளராக எடுத்துக் காட்டிய நூல் வட்டியும் முதலும். இந்தப் புத்தகம் பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக கடந்து செல்லும் ஒரு இசைபோல உணர்த்துகிறது. வாதி–பெரிதிவாதியாக முருகன் சொல்லும் விதம் நம்மை பல கோணங்களில் சிந்திக்கச் செய்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் இசை, கடந்தகால நினைவுகள், அரசியல், மனிதம் போன்றவற்றைத் தொட்டுச் செல்லும் விதம் — நமக்கும் புத்தகத்திற்கும் இடையே ஒரு உரையாடலாகவே மாறிவிடுகின்றது.
“20 வயதிற்க்குப் பிறகு , நாம் பெற்ற / பெறுகின்ற இன்பங்களை வட்டியும் முதலுமாக வசூல் செய்கிறது மீதி வாழ்க்கை !"
வாசிப்பை நான் அறிமுகம் செய்து கொண்ட, கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்த காலகட்டத்தில் வாசித்ததாலோ என்னவோ இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் மனதை தொட்டுச் சென்றது! பத்து வருடங்கள் கடந்திருக்கும் இப்போது என நினைக்கிறேன். இன்றும் முதல் கட்டுரையான மானுடத்தின் பொது மொழி பசி வாசிக்கும்போது மனம் கனத்து விடுவதை தடுக்க இயலவில்லை. ஆசிரியர் சொல்வது எத்தனை உண்மை, "பசியை தீர்ப்பதென்னவோ ஒரு கனி தான், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்".. வாழ்வும் அப்படித்தான்!
வட்டியும் முதலுமாக அத்தனை உணர்ச்சிகளையும் அள்ளி தெளிக்கும் புத்தகம். ஒரு மினி மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம். வரையரைக்கு உட்படாத வாழ்க்கை வாழ விரும்புபவர்களுக்கு இது ஒரு இன்ப சுற்றுலா. நமக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று ஏங்குபவர்கள் அவசியம் கடக்க வேண்டிய களஞ்சியம் இது. தீராத ராஜு முருகனின் பக்தனானதை உணர்கிறேன் 🖤. ஹாசிப் கானின் ஓவியம் உங்களை தீண்டாமல் தாண்டாது ஒவ்வொரு தொடரிலும்😍.
வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் பலதரப்பட்ட மனிதர்களின், மனித உணர்வுகளின் அழகிய தொகுப்பு. எளிய மனிதர்களின் மீதான பார்வை சற்றே வேறு கோணத்தில் அமையும் இந்த படைப்பின் தாக்கத்தால்.