இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.
நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.
எல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெங்ய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார்.
ஓரளவு சாத்தியம் என்றிருந்தாலும், இப்போதிருக்கும் இடத்திலேயே உன்னை உயர்த்திக் கொள்ள நீ என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கு.
ஒரு திட்டம் முன் யோசனையும் இல்லாமல் காலம் கழிக்காதே. ஆனால் உன் மனத்துக்கேற்ப இந்த வேலையில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றால் இப்போதே ஒரு முடிவு எடுத்துக்கொள். ஒரு மாதம், அதிகம் போனால் ஆறு மாதம். அதற்குமேல் காலத்தை வீணாக்காதே.
உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார். இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே.
உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.