ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.
இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
படைப்புகள்
புதினம் கன்னி
கவிதை தொகுப்புகள் மல்லிகைக் கிழமைகள் சம்மனசுக் காடு ஏழுவால் நட்சத்திரம் நிழலன்றி ஏதுமற்றவன் மெசியாவின் காயங்கள் வலியோடு முறியும் மின்னல்.
விருதுகள் சுந்தரராமசாமி விருது - கவிதைக்கான விருது (2008) சுஜாதா விருது - சம்மனசுக்காடு (2017) மீரா விருது ஆனந்த விகடன் விருது
பைத்திய நிலையில் எழுதி இருக்க வேண்டும் அல்லது பித்தம் தெளிந்த நிலையில் தன் அனுபவத்தை எழுதி இருக்க வேண்டும் . ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு கடப்பது அவ்வளவு கடினம்.ஏன் பத்திகளைக் கூட..திகட்ட திகட்ட ஆழியில் மூழ்கித் திளைப்பதுபோல வரிக்கு வரி படிமங்களுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும்.. இப்படி மூடி வைப்பதற்கு எவ்வளவோ இருந்தும்
கன்னி
கொண்டாடப்பட வேண்டியவன். கூட்டங்களாலோ கூச்சலாலோ அல்ல. ஆழ்கடலின் அந்தரத்திற்குள் மனத்தை நிலைகுத்த வைத்து ஆன்மாவின் பரிசுத்த அன்பினால் மட்டுமே ஆராதிக்கப்பட வேண்டியவன். அது அப்படி ஒன்றும் கடினமான காரியம் அல்ல .. அவ்வளவு எளிதான காரியமும் அன்று.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் "மன்னிப்பின் இரவு" என்ற கவிதையில் மன்னிப்பைப் பற்றிச் சொல்லும்போது "மன்னிப்பு தன்னைத்தானே சுத்தப்படுத்தும் ஒரு எளிய சடங்கு அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும்போதும் ஒரு நதியில் இறங்குவதுபோல ஒரு அருவிக்கு கீழ் நிற்பதுபோல" என்று எழுதி இருப்பார். தன்னைத் தானே பரிசுத்தமாக நினைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி நினைத்து விட்டால் கடலின் ஆழ்ந்த அமைதிக்குள் நம்மை நிறுத்துவதும் கடினமும் அல்ல.கன்னியை ஆராதிப்பதும் கிட்டத்தட்ட அப்படி ஒன்றே.
லௌகீகத்தின் மனச்சுரண்டலில் இருந்து விடுபட்டு காதலுக்கும் காமத்திற்கும் ஆதார சுருதியான அன்புக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்தவனின் நிஜ மற்றும் மாய உலகத்தில் அதிர்வுகளோடும் அதேசமயம் ரசனைகளோடும் உலவும் தருணம் கன்னியை வாசிப்பது. எழுதும் எழுத்துக்களையும் வாழ்ந்த வாழ்க்கையையும் தண்டவாளத்தின் இடைவெளி கூட இல்லாமல் அதன் ஒரு பக்க இரும்பாக மட்டுமே நினைத்து பயணித்தவனின் விரல் பிடித்துச் செல்லும் தருணம் கன்னியை ஏந்திக் கொள்வது.
காதல் வேறா காமம் வேறா அல்லது காதலும் காமமும் ஒன்றா என்ற அகப் போராட்டத்திற்குள் சிக்கித் தவிப்பவனின் கதை. காதலுக்கு ஓர் உருவம் காமத்திற்கு ஓர் உருவம் என இரண்டு பாத்திரங்களை உருவாக்கி இடையில் நின்றாடும் நேர்மையான கள்ளனின் வாழ்வு. அமலாவும் சாராவும் வேறுவேறு நாயகிகளாக ஏன் வேறு வேறு உயிர்களாக கூட எனக்கு புலப்படவில்லை. ஒரு கதாபாத்திரம் தூய்மையான அன்புக்கும் இன்னொரு கதாபாத்திரம் அதே அளவு தூய்மையான காமத்துக்கும் பிரதிகளாக உருவாக்கப்பட்டவை என்றே கருதுகிறேன். மற்றபடி இதில் சொல்லப்பட்ட உறவு முறைகள் தன்னை உண்மையாக காட்டிக் கொள்ள கதாசிரியர் போலியாக உருவாக்கிய ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறேன்.
மேற்சொன்னவற்றைத் தாண்டி எழுத்தாளர் அல்லது கதையின் நாயகன் தன்னை ஒருவரிடத்தில் ஒப்படைக்கிறார் முழுமையாக. எந்த பாசாங்கும் இல்லை. போலித்தனம் இல்லை.. ஏன் கதையில் வரும் நாயகியிடம் கூட இல்லை..எந்த மனிதரிடத்திலும் இல்லை. இறையிடம் கூட இல்லை.. அந்த வரம் கடலுக்கு கிடைக்கிறது. முழுக்க முழுக்க தன்னை கடலிடம் ஒப்படைக்கிறார். நாவல் முழுவதும் கடலோடே இருக்கிறார். கடலும் நாவல் முழுவதும் நீர்மையாகவே இருக்கிறது. தனது எல்லாவற்றிலும் எல்லாமுமாக கடலையே பார்க்கிறார். கடலும் அவரை அப்படியே நினைக்கிறது.நாயகனை ஆற்றுப்படுத்தவும் தனக்கு ஆறுதல் தேடவும் கதாநாயகனின் கால்களையே நம்பி இருக்கிறது கடல். நாவல் முழுவதும் பிரிக்க முடியாத ஒன்றாகவும் உணர மட்டுமே முடிந்த உறவாகவும் கடலும் நாயகனும் நிற்கின்றனர் .., கூடவே நானும்
அதிர்வுளோடும் ரசனைகளோடும் வாசித்த பொழுதுகளை விட வாசித்து முடித்த பின் அந்த நினைவுகளைச் சுமந்து திரியும் அமைதி அலாதியானது. இப்பொழுது கூட மீண்டும் அந்தப் புத்தகத்தை திருப்பி படிக்க தைரியம் இல்லை. ஆனாலும் வெறுமனே மடியில் வைத்துக் கொண்டுதான் இதை எழுதுகிறேன். அந்தத் தழுவலை விரும்புகிறேன். இது நான் விரும்பிய அதே நேரத்தில் அனுபவிக்க முடியாத தழுவல். கோவிலுக்குள் இருந்தும் பிரார்த்திக்க நினைக்காத கர்வம். சொற்களிருந்தும் நான் எழுதவே முடியாத ஒரு கவிதை.
எனது கவிதை தொகுப்பு வெளியீட்டு லிழாவில் ஏற்புரையை ஒரு கவிதையோடு தொடங்கி அந்தக் கவிஞரை எனது தேவதூதன் என்று குறிப்பிட்டேன். நண்பர்கள் சிலர் தேவதூதன் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். வழக்கம்போல் போலியாக அதைக் கடந்து விட்டேன். இப்பொழுது அது எவ்வளவு தவறு என்பதை உணர்கிறேன். அவன் தேவதூதன் அல்ல. நிச்சயமாக இல்லை.
“பட்டப் பகலுடுத்தி பவள ஒளி தெறிக்க நிலத்தில் நடந்து செல்லும் முதல் நிலவு நீயென்றால் இல்லை இல்லையெனப் பதறி நீ மறுக்கலாம். என்றாலும் சின்னச் சின்ன நடையிட்டு அள்ளித் தின்னும் ருசியோடு மண்ணைச் சமைக்க உன்னால் மட்டும்தான் முடிகிறது.”
▪️எப்பவுமோ புத்தகங்கள் ஏதோ ஒரு தேடலை தான் குடுத்துட்டே இருக்கும், ஒரு எழுத்தாளன் பற்றியான தேடல் அவரோட மகத்தான படைப்பை தேடி தேடி படிக்க வைக்கிறது தான் எப்பவும் நடக்கிறது. ▪️ஆனா ரொம்ப அரிதாக நடக்கிற விசயம் தான் ஒரு படைப்பை படிச்சிட்டு இத படைத்த மகத்தான எழுத்தாளன பற்றி தெரிஞ்சே ஆகணும் என்கிற ஆவல், அப்படியான தேடல் தான் கன்னி படிச்சு முடிச்சதும் பிரான்சிஸ் கிருபா பற்றியான தேடல். ▪️தேடல் எதுவானலும், அது எப்பவும் குடுக்கிறது என்னமோ மகிழ்ச்சியையும், நிம்மதியும், மகத்தான எழுத்தாளனையோ இல்ல படைப்பையோ கண்டுகொண்ட மனநிறைவும் தான் ஆனா கிருபா பற்றியான தேடல் அப்படியானது இல்லை,அது குடுத்தது எல்லாம் வலியும், வேதனையும் ஏதோ மனசுக்கு நெருக்கமான ஒன்றை இழந்துவிட்ட பரிதவிப்பும் தான். ▪️நான் பிரான்சிஸ் கிருபாவை பார்த்தது இல்ல, அவரோட உரைகள் எதையும் கேட்டதும் இல்ல, அவரோட படைப்புகளோ கொண்டாடவோ இல்ல மற்றவர்களோட விவாதம் செய்ததோ இல்லை. இருந்தும் ஏன் ஏதோ உற்ற நண்பனை இழந்துவிட்டது மாதிரியான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரிதவிப்பு எனக்கு. ▪️ஒரே மனுசன் மேல அளவு கடந்த அன்பும், மறுக்கவே முடியாத அளவு கோபம் இருக்க முடியுமா என்கிற விவாதத்திற்குலாம் நான் வரல. ஆனா பிரான்சிஸ் கிருபா மீதான என்னுடைய அன்பு அப்படியானது தான். ▪️கன்னியையும், உன்னையும் படித்த பிறகு எனக்கு ஏற்பட்ட உணர்வையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் எப்படி விவரிக்க. ▪️யார் யாரையோ, எதேதா படைப்புகளை மகத்தானது-னு எனக்கு அறிமுகம் செய்து வைத்த இந்த இலக்கிய சமுகம் உன்னையும் ஏன் எனக்கு அப்படி அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. ▪️எங்கோ யாரோ போன் உபயோகிச்சா சிட்டு குருவிகள் செத்து போயிரும் சொல்லி கேட்க, வேண்டுமென்ற கைப்பேசி எல்லாவற்றையும் விட்டு எரிந்த, சிட்டு குருவிக்கு கூட தீங்கு இழைக்காத உன்னை ஏன் இந்த சமுகம் செய்யாத கொலை குற்றத்திற்காக கைது செய்யனும். ▪️எதன் மீதும் உனக்கு பற்று இல்லாத போதும் கூட, உயிர்த்தெழும் சொற்களால் தான் நான் உயிர்வாழ்கிறேனு நீ சொன்ன வார்த்தைக்காகவாது இன்னும் வாழ்ந்து இருக்கலாம், குறைவாக குடித்து இருக்கலாம், இன்னும் நிறைய மகத்தான படைப்புகளை எழுதி இருக்கலாம். உன்னை கட்டியணைத்து முத்தம் கொடுக்கவோ, உன்னையும்,உன் படைப்புகளையும் அள்ளி எடுத்து கொண்டாடி தீர்க்கவோ எனக்கு ஒரு வாய்ப்பை குடுத்து இருக்கலாம். ▪️எழுத்தாளனுக்கு தன் எழுத்தை போல வாழ முடிவதில்லை என்று எங்கோ கேட்ட வார்த்தைகள் உனக்காக எழுதியது தான் என்று கூட தோன்றுகிறது. ▪️ஒரு வேலை நீ வாழாமல் விட்டுவிட்ட வாழ்வை தான் கன்னி என்கிற பெருவாழ்வை படைத்து காலம் கடந்து வாழ்க்கிறாயோ என்று மனதை சமாதான படித்துக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய. ▪️கன்னி வெறும் நாவல் அல்ல, என்னை பொறுத்த வரை படைப்பின் உச்சம், மொழியின் ஆளுமை, கனவுகளின், கற்பனையின் அடுக்கடுக்கான கவிதை. ▪️கன்னி - தன் வாழ்வில் சந்தித்த எந்த எதிர்பார்போ ,நிபந்தனையோ இல்லாம அன்பையும், அரவணைப்புயும், காதலையும், கருணையையும் கொடுத்த இரு வேறு பெண்களை கொண்டாடி தீர்க்கிற பெருவாழ்வு. வார்த்தைகளால் அவர்களை துதி பாட, ஸ்பரிசிக்க, அள்ளி எடுத்து கொண்டாட நினைக்கிற கொண்டாட்டம். ▪️முதல் துளி மழை கூட அவளை காயப்படுத்தி இருக்குமோ என நினைத்து அடுத்த துளி விழுவதற்கு முன் மழையை கூட நிறுத்திவிட எத்தனிக்கிற பித்து நிலை, அவள் தோல் மீது அமர்ந்து வண்ணத்துப்பூச்சி சாமரம் வீசுவதை கூட ஏற்றுக்கொள்ளாது தடுத்து விட நினைக்கிற பேரன்பு, அவளின் வாய் மூடிய சிரிப்புக்கு கூட வாய் அகல சிரிக்கும் பைத்தியக்காரத்தனம். காத்திருப்பின், காதலின் வலி, பரிதவிப்பு, பரவசம். தன் ஒட்டுமொத்த வாழ்வையும் அவள் நினைவில் மட்டுமே வாழ்ந்திட நினைக்கும் பெருங்காதல். ▪️ஏன் பிரிந்து விட்ட உறவுகளில் கோவமும், வெறுப்பும், வசவுகளும், வக்கிரங்களும் தான் இருக்கனுமா என்ன, மாறா கன்னி தன் வாழ்வின் அங்கமான பின் தன் வாழ்வே என மாறிப்போன பேரன்பிற்கும், பெருங்கருணைக்கும் சொந்தமான பெண்ணை அனுதினமும் தன் கற்பனையாலும், கவிதைகளாலும் கொண்டாடி தீர்க்கிற கொண்டாட்டம். ▪️சேராமல் பிரிந்துவிட்ட காதலில் பிரிவது மனங்களும், மனிதர்களும் தானே, நினைவுகள் இல்லையே. அப்போ பிரிந்துவிட்ட காதல்கள் என்ன தான் ஆகும் - எப்போதும் நினைவுகளில் வாழும். ▪️உண்மையில் கன்னியையும், பிரான்சிஸ் கிருபாவையும் படித்து முடித்த பிறகு - சொற்களில் இருந்து அர்த்தங்கள் மெளனத்திற்கு தான் திரும்பி செல்கின்றன. ▪️கன்னியை பற்றி பேசவோ, விவரிக்கவோ வார்த்தைகள் ஏதும் இல்லை - நானும் பிரான்சிஸ் அமலாதாசனாகவும், பிரான்சிஸ் கிருபாதாசனாகவும் மாறிப்போனேன் என்பதை தவிர.
பிரான்சிஸ் கிருபாவைப் பற்றிய சிந்தனை எழும் போதெல்லம் மனுஷன் இன்னும் கொஞ்சம் நாள் உயிருடன் இருந்து இன்னும் கொஞ்சம் படைப்புகளை தந்துவிட்டு போய் இருக்கலாம் என்கிற எண்ணம் மேலெழுலும்… எனக்குத் தெரிந்து 5 புத்தகங்கள் மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்… ஆனால் கன்னியை வாசித்த பிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது…
பக்கம் பக்கமாக கவிதை என்னும் பெயரில் எண்டர் தட்டி தடிமனான புத்தக குப்பையை வெளியிட்டு கல்லா கட்டும் கவிஞர்கள் மத்தியில் பிரான்சிஸ் நம் காலதின் மகத்தான மகா கவிஞன் என்பதை இந்த சொற்ப்ப படைப்புகளில் அவரின் ஆன்ம தாகத்தை வாசகனுக்கு உணர வைத்துவிட்டு சென்று இருக்கிறார்! அதே போல ஒரு மகத்தான கலைஞன் அவனுடைய உச்சமான படைப்பை பிரசவித்த பிறகு அவன் வாழ்விற்கான நோக்கம் நிறைவேறிய பிறகு அவர்கள் புவியில் தங்குவதில்லை என்பதற்க்கான உதாரணங்கள் உண்டு, அந்த வரிசையில் பிரான்சிஸும் இணைந்துவிட்டார்!
**பாத்திரம் கூட அற்ற பிச்சைக்காரனாய் சூரியனை எழுப்பும் குளிர்காலங்களில் பனித்துளிகளை நிதானமாகத் தானமிடும் ஒற்றை விரலே யாரின் கைக்குள் நீயிருக்கிறாய்? தூரிகையின்றி நீ வரைந்த மகத்தான ஓவியத்தில் நானிருக்கக் கூடுமா வண்ணமாவேனும்? எழுதுகோலின்றி எழுதிச் செல்லும் இம் மகாகாவியத்தில் நான் பெறுவேனா துளி பாத்திரமேனும்?**
கன்னி ஒரு Non-Linear வகையான கதை… முதல் ஒரு 100 பக்கங்களுக்கு பெரும் எழுத்துக் குவியலாக இருக்கிறது! ஒரு மனச்சிதைவு அடைந்தவனின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாக கொண்டு வந்த படைப்பு தமிழில் இது ஒன்று தான்! பிரான்சிஸ் சந்தனப்பாண்டியின் வாழ்வை வாசகனுக்கு எழுத்தின் மூலம் வாழக் கொடுத்திருகிறார் கிருபா!
அமலா அக்காவைப் போன்ற அக்காக்கள் நம் அனேகம் பேரின் வாழ்வில் இருந்திருப்பார்கள். நாம் வளரும் போது அவர்களும் நம்முடன் சேர்ந்து வளர்ந்து இருப்பார்கள். ஒரு வயதிற்குப் பிறகு அவர்கள் பெரிய பெண்களின் தோரனையுடன் விலக ஆரம்பிப்பார்கள். கதையில் அமலதாசனாக மாறும் பாண்டி அமலாவின் கன்னியாஸ்திரி பயணத்தின் போது முதல் தனிமையைத் தாயில்லாப் பிள்ளையின் மனதை அடைகிறான். பாண்டியின் குழந்தைப் பருவத்தையும் அவன் அமலா அக்காவுடன் சேர்ந்து செய்யும் குட்டிக் குட்டி குறும்புகளும் நம்மையும் அந்த பிராயத்திற்க்கு அழைத்துச் செல்கிறது!
**காற்றின் மீது நீ வைத்த முதற் பார்வை உன் கண் பறித்து சூறாவளியாய் சுற்றித் திரிந்து வந்து வர்ணங்களைக் குழைத்து வார்த்தைகளை அடுக்கி வாத்தியங்களின் வடுக்களை நிமிண்டி மௌனத்தைப் பிரித்து நிசப்தங்களைப் பரப்பி நதிகளைத் துரத்தி அலைகளுக்குக் பெயரிட்டு பேசப் பேசப் ‘வூம்’ கொட்டி இளைத்தது கடல்.**
கதையின் எல்லா பக்கங்களிலும் கடல் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக மாறி இருக்கிறது! பாண்டியின் கண்ணீரை உருவகப்படுத்தவே அந்த மிகப் பெரிய உப்புக் கடலை கதை முழுக்க தழும்ப விட்டதாக உணர்கிறேன்…
ஒரு மனிதனால் எப்படி எழுத்தை ஒரு பொங்கி வரும் பிரவாகமாக, சொற்களை முத்துக்கள் என பொறுக்கி எடுத்து கோர்த்து எழுத முடியுமா என்னும் ஆச்சரியம் இன்னமும் நீங்க மறுக்கிறது!
**தெரிந்தோ தெரியாமலோ உன் காலடி மண்ணெடுத்து ஒரு பூமி செய்துவிட்டேன். உன் ஈரக் கூந்தலை கடலாகச் செய்யும் முன்னே கடந்து போய்விட்டாய். உயரத்தில்லிருந்து சூரியனாய் வருத்துகிறது ஒற்றைப் பார்வை. வெப்பத்தில் வறள்கிறது எனது சின்னஞ்சிறிய பூமி. நீரூற்று தேடிக் கிணறுகள் பீறிட்டடிகிறது ரத்தம். கண்ணே, இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.**
சாரா இனி இந்த பெயரை எங்கு கேட்டாலும் இந்த புத்தகம் நிச்சயம் நினைவில் வரும்! கதையின் இறுதியில் வரும் பாத்திரமாக இருந்தாலும் சந்தனப்பாண்டியின் நினைவு முழுக்க நிரைந்தவள் சாரா ஒரு கட்டத்தில் சாரா மட்டுமே சந்தனப்பாண்டியின் ஒரே நினைவாகிப் போனாள்!
கவிதை என்றாலே காத தொலைவு ஓடிவிடும் எனக்கு… இந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருக்கும் கவிதை வரிகள் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது!
மொத்தத்தில் கன்னி காதல் பித்து நிலையின் ஒற்றைத் துளியை வாசகனுக்கு அளித்து என்றும் நீங்காமல் நினைவடுக்குகளில் சேகரமாகிவிடும் ஒரு மகத்தான படைப்பு!
புத்தகம் – கன்னி ஆசிரியர் – ஜெ. பிரான��சிஸ் கிருபா பதிப்பகம் – தமிழினி பக்கங்கள் – 438 விலை – ₹440
கன்னி வாசிச்சு முடிச்சு ஒரு வாரத்துக்கும் மேலாச்சு. மனசு இன்னும் கனமா தான் இருக்கு.
வார்த்தைகளால வலிய உணர்த்துவது ஒரு அற்புதமான வித்தைனு சொன்னா அதுல பிரான்சிஸ் கிருபா கை தேர்ந்தவன். மனச பிழிந்து எடுக்கும் வலிய வார்த்தைகளா கோர்த்து நம்ம கைல குடுத்துட்டு போயிட்டான். இன்னும் எவ்ளோ அவன் கிறுக்கி தள்ளி இருந்தாலும் நான் படிச்சு தள்ளி இருப்பேன் நிச்சயமா. நீங்களும் படிக்கணும். படிங்க. அப்றம் மறக்காம வந்து அத பத்தி பேசுங்க, சேர்ந்து உருகுவோம் .
அக்காவா இருக்கறது ஒரு வரம். "பெற்றால் தான் பிள்ளையா " இந்த வாக்கியம் அக்காக்களுக்கானது தானோ என்னவோ ! சின்ன வயசுலேயே அக்காக்கள் தன்னோட தம்பி தங்கைகளுக்கு அம்மா ஆகிடறாங்க. அக்காவா, அம்மாவா, தோழியா ஏன் சில நேரங்கள்ல தம்பிகளின் மகள்களாகவும் இருக்க கிடைக்கும் வாய்ப்பு வரமில்லாம வேறென்ன..
இந்த கதைல பிரான்சிஸ் சந்தனபாண்டிக்கு அவனோட அமலா அக்கா ஒரு வரம்.கதையோட ஆரம்பத்திலேயே பாண்டியோட தற்போதய நிலை என்னனு நமக்கு சொல்லிட்டதால எப்புட்ரா இதை நம்ம படிக்க முடியும்னு தோணுச்சு. ஆனா கதைல வர்ற பாண்டியோட வாழ்க்கையை அவனோட சேர்ந்து பயணிக்க தொடங்கிய அந்த நிமிஷத்துல இருந்து நானும் பாண்டி கூட சேர்ந்து வளர தொடங்கிட்டேன். அக்கா தம்பிக்காக வக்காலத்து வாங்குறது, தம்பி அக்காக்கு சைக்கிள் ஓட்ட சொல்லி தர்றது, அப்புறம் வளர்ந்து அக்காவ தன்னோட பைக்ல வச்சு கூட்டி போறதுனு நம்ம வாழ்க்கைல சர்வசாதாரணமா நடக்கற சின்ன சின்ன விஷயங்களையும் ரொம்ப அழகா வர்ணிக்கற கவித்துவம் நிறைஞ்ச படைப்பு இந்த கன்னி.
கற்பனைக்கு எட்டாத ஒரு உலகம் பிரான்சிஸ் சந்தனபாண்டியோட உலகம். அமலா அக்கா மீதான அவரோட காதல் (அன்பு, மரியாதை, பாசம்னு எதோ ஒரு வார்த்தை; அது உங்க விருப்பம். காதல் எவ்ளோ ஆத்மார்த்தமான ஒரு உணர்வுனு புரிஞ்சிக்க முடியாம தானே இருக்கோம் நம்ம) அவளோட பிரிவு, சில வருஷங்களுக்கு அப்புறம் அவன் சந்திக்கிற ஒரு பெண் (சாரா) மேல அவனுக்கு ஏற்படும் காதல், அவளோட பிரிவுனு இந்த 2 பெண்களும் அவனோட வாழ்க்கைய புரட்டி போடுறாங்க. வலிகள் நிறைஞ்ச வரிகள் மனச ரணமாக்கிட்டு அசால்டா முடிஞ்சு போச்சு.
எவ்வளவோ காதல் கதைகள் வாசிச்சும் திரைல பாத்தும் இருக்கேன். அதுல ஒண்ணா இத சேத்துட முடியாது. இது வலிகளின் தொகுப்பு, காதலின் உச்சம், அன்பின் புது மொழி.
ஒரு படைப்பை / படைப்பாளியை எல்லாருக்கும் பரிந்துரைப்பது தான் நம்ம அந்த படைப்புக்கும் படைப்பாளிக்கும் செய்யற உச்ச கட்ட அன்பு, மரியாதை.
கன்னி - இக்கதையை முதல் வாசிப்பில் முழுவதுமாகப் புரிந்துகொள்வது சற்று கடினம் தான்.
நம் வாழ்வில் ஒரு சிலரிடம் மட்டும் நம்மை மீறிய அபரீத அன்பும், பிணைப்பும் நமக்கு ஏற்படுவது இயற்கை. அப்படி நமக்குப் பிரியமுற்றவர்கள் நம்மை விட்டு விலகும் தருணம் வரும்பொழுது, அப்பிரிவு நம் மனதை எத்தனை விதமான அழுத்தங்களுக்குள்ளும், கற்பனைகளுக்குள்ளும் தள்ளி நம்மை சின்னாப் பின்னமாக்கும் என்பதற்கு இக்கதையில் வரும் பிரான்சிஸ் சந்தன பாண்டி சிறந்த எடுத்துக்காட்டு.
நான் சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்திருந்தால், இவ்வளவு கண் மூடித்தனமான, விவரிக்க முடியாத பாசத்தையும், கற்பனைகளையும் உள்ளத்தில் அடக்கி வைத்திருக்கும் நபர் கூட இவ்வுலகில் உண்டோ என்று வியந்திருப்பேன். ஆனால் இப்பொழுது அது எனக்குத் துளியும் வியப்பாக இல்லை. இதே போல் தான் நானும் தற்ச்சமயம் நடந்து கொண்டிருக்கிறேன் என் அண்ணன் மீது எனக்கிருக்கும் அதீத பாசத்தினால். அன்பு எப்பேர்ப்பட்ட மனிதனையும் பைத்தியக்காரனாக மாற்றும், எவ்வளவு உறுதியான மனதிலும் கல்லெறிந்து காயப்படுத்தி வேடிக்கை பார்க்கும், நம் கடந்த காலத்தில் நம்மை விட்டு விலகாது கை கோர்த்து பிணைந்திருந்த அது , நிகழ் காலத்தில் எட்டாக்கனியாகி விட்டதே என்று நினைத்து நினைத்து ஏங்க வைத்து, இது இல்லாமல் நாம் எப்படி இருக்கப்போகிறோமோ என்று பயம் காட்டி எண்ணற்ற கற்பனைகளில் தள்ளி எதிர் காலத்தை சூனியமாக்கிவிடும். அது நம்மை நாமாகவே இருக்க விடாது.
இக்கதை என்னை இப்படியெல்லாம் யோசிக்க வைத்தாலும், கதையின் சில பகுதிகள் எனக்கு இன்னும் தெளிவாக புலப்படவில்லை. அதைப் தெளிவு படுத்திக்கொள்ள, புத்தகத்தை மறு முறை வாசிப்பதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லையென்றாலும், அதை இன்னொரு முறை வாசித்தால் என் மனது என்ன பாடு படும் என்று நினைத்துப் பார்த்தாலே இதயத்தின் வேகம் கூடி, கண்கள் குளமாகி விடுகிறது.
இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!
காணிக்கைராஜ் பரிமளத்தின் மகன் . தமிழ் மாணவனான பிரான்சிஸ் சந்தனப் பாண்டி சத்ராதி பிடித்திருக்கிறது என ஊர் மனநிலை சரியில்லாமல் இருப்பவனுக்கு விலங்கு பூட்டி மரத்தடியில் நிற்க வைக்கிறது. மத வேறுபாடுகள் இல்லாமல் யார் வந்து என்ன சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. பாண்டி தனக்கென தனி Illusion world ல் வாழ்கிறான்.
அவன் வாழ்வில் இரண்டு கன்னிப் பெண்கள் முழுவதும் ஆக்கிரமிக்கிறார்கள். முதலாவது அவன் அக்கா அமலா. பாண்டியைக் குழந்தையில் இருந்து அன்புடன் வளர்த்து அவன் கல்லூரிக்காலத்தில் கன்யாஸ்திரி ஆகிறாள். அமலதாசனாகவே மாறி வாழும் பாண்டிக்கு அவள் பிரிவு பாதிக்கிறது. பின் திருவிழாவில் கண்ட சாரா மீது காதல் கொள்கிறான். பின் எப்படி சத்ராதி பிடிக்கிறது என்பதுதான் கன்னி...
பெண்களின் நிபந்தனையற்ற அன்பைப் பெறும் ஆண்கள் பாக்கியவான்கள். அமலாவிடமும் சாராவிடமும் அத்தகைய வரத்தைத்தான் பாண்டி பெறுகிறான். உலகத்தில் நடப்பவனை சொர்க்கத்தில் பறக்க வைத்து மீண்டும் நரகத்தில் வீழ்த்த அதன் இழப்பே போதுமானது.
இறுதி இருபது பக்கங்கள் மட்டும் இல்லையென்றால் கதையே தலைகீழாகியிருக்கும். ஒரு Delusional schizophrenic person ன் மனோநிலையை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார் பிரான்சிஸ் கிருபா. பாண்டி எனும் மீசை வைத்த கவிதையை உருவாக்கி நடக்க வைத்திருக்கிறார். கிறித்தவ மெய்யியலை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார்.
புதிதாகப் படிப்பவர்களுக்கு இந்த நடை கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். எனினும் சமகால இலக்கியங்களில் கன்னி ஒரு மிக முக்கியமான மைல்கல். தமிழ் எழுத்துலகில் சிரஞ்சீவி வரம் பெற்றவை ஒரு சில நாவல்கள்தான். அதில் கன்னி நிச்சயம் இடம் பெற்றிருக்கும்
"மனப் பிறல்வு" என்ற ஒற்றை வார்த்தைக்காக இப்புத்தகத்தை வாசிக்க விரும்பினேன்.
🦋கன்னி பற்றி பேசுவதற்கு முன் பிரான்சிஸ் கிருபா பற்றி பேச வேண்டும். புத்தகத்தில் 50 பக்கங்கள் முடிப்பதற்குள் "யார் சாமி நீ" என்று பிரான்சிஸ் கிருபாவை youtubeல் தேடினேன்.
🦋வாழ்க்கையின் இலக்கு என்ன என்று கேட்ட பொழுது தன் அப்பாக்கு முன்னாடி மட்டும் இறந்திட கூடாது என்று கூறினார். இவரின் வாழ்வின் லட்சியத்தை கண்டு வாயடைத்து போனேன்.
🦋புத்தகம் எழுதும் அனைவருமே மேடைப் பேச்சில் மிகவும் வலுவாக இருப்பார்கள் என்ற என் எண்ணத்தை உடைத்தது பிரான்சிஸ் கிருபாவின் ஒரு வார்த்தை.
🦋ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரான்சிஸ் கிருபாவை மேடைக்கு அழைத்த பொழுது அவர் சொன்ன வார்த்தை " கேலி பண்ணாதீங்கப்பா நான் மேடைப்பேச்சுல ரொம்ப வீக்". எழுத்தாளரை பார்க்கும் பொழுது எழுத்தாளர் என்ற ஒரு மிடுக்கு இருக்கும். ஆனால், இவருக்கு அது இல்லை. பணம் உள்ள நபர்களை பார்த்து நீங்கள் எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள் என்று பலர் கேட்பதுண்டு. ஆனால் பிரான்சிஸ் கிருப்பாவிடம் அவரின் எளிமையை உணர்ந்தேன்.
🦋புத்தகத்தை படித்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆரம்ப பக்கங்களில் மிகவும் வித்தியாசமான எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.
🦋பல நேரங்களில் புத்தகத்தை படிக்கவும் முடியவில்லை படிக்காமல் இருக்கவும் முடியவில்லை.
🦋சில நாட்கள் கதை முடிந்து விடுமோ என்று எண்ணியே படிக்காத நாட்களும் உண்டு.
🦋தமிழில் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு நான் படித்த முதல் நாவல் இது.
🦋இப்புத்தகம் படிக்கும் பொழுது கிளாசிக் என்றால் என்ன என்ற சந்தேகம் தோன்றியது தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்.
🦋பாண்டி அனுபவச்ச அனைத்துக்கும் வாயைத் திறந்து தனக்குல் இருக்கும் எண்ணங்களை வெளிப் படுத்துவான் என்று காத்திருந்தேன்.
🦋பாண்டியின் அருகில் அமர்ந்து அழகாக ஒரு கதை கேட்ட அனுபவம்.
🦋பாண்டியின் எல்லா காதலும் வீணாகப் போகிறது என்று படிக்கும் பொழுது உணர்ந்தேன்.
🦋பாண்டியின் உலகம் சில நேரங்களில் மிகவும் அமைதியாக இருந்தது. படித்துக் கொண்டிருக்கும் போது சில இடங்களில் மனப் பிறல்வு வந்தால் என்ன? என்ற எண்ணம் கூட தோன்றியது.
என்ன ஆயிப்போச்சு...! ரோட்ல போற ஒரு பிரான்சிஸ் கிருபாவ கூப்பிட்டு நீங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க? என்ன யோசிச்சிட்டு இருக்கீங்கன்னு கேக்கறதுனால இப்ப என்ன ஆச்சு...! அவங்க கூட போய் உக்காந்து, அவங்க சொல்ற கற்பனை கதைய நம்ம கற்பனை பண்ணி பார்க்கறதுல இப்ப என்ன ஆச்சு...! மீன் கூட, கடல் கூட, மரம் கூட, ரயில் கூட பேசுறதில என்ன தப்பு...? அவங்களும் அழகான வாழ்க்க தான வாழறாங்க...! நாமளும் அவங்க கூட உட்கார்ந்து எல்லாத்தையும் அழகா வேடிக்கை பார்க்கலாமே! அவங்க கர்பனை உலகத்தில் எதிர்மறையான சூழ்நிலை உருவாகும் போது மட்டும் நம்ம அவங்க கூட
திசைமாறி தடுமாறி வழிமாறி சூடேறி சூரியனாக மாற முயலும் பாறைக்கல்லில் கால் வைத்து பொசுங்கிய பாதத்தோடு இடறி விழுந்த என் முதுகில் கையொப்பமிட்ட முட்புதரில் குருதி காணிக்கையை கைமாற்றாக கொடுத்து விட்டு வந்து நின்ற வழியருகே நடக்கும் பிணம் என எனை எண்ணி சுற்றி வளைத்த வல்லூற்றை குரல் குவித்து சிதறச்செய்து மணி நேர நடை நடந்து மூச்சு வாங்க காற்றைத்தர மறுத்த தரையை தட்டி திரும்புகையில் கண்டடைந்தேன் உடைமர வளைவில் கழற்றியெறிந்த கால்விலங்குடன் உதிர்ந்து கிடந்த மனிதச்சுவட்டை ஒளியைக்குடித்து ஒளிந்து நின்ற நிலவிருட்டில் ஒளிரத் தொடங்கிய காலடிகளில் மினுக்கிச் சிரித்தன தாரகைகள் கருவிழியில் பிரதிபலித்து சென்றேன் தொடர்ந்து மேட்டில் ஏறி தேடிய திக்கில் கரை மட்டும் கிடந்தது கடல் கூடவே சிரிப்பின் ஒளி மறையும் தொலைவில் அமைதியாக அமர்ந்திருந்தான் அப்பிச்சைக்காரன் அருகில் இருந்த மூட்டையில் இருந்து எட்டி பார்த்தன நட்சத்திரங்கள் மீதம் வைத்த மதுக்கோப்பையில் மிளிர்ந்து சுழன்றது திரவப்பிரபஞ்சம் சட்டென ஓங்கி ஒலித்த நிசப்தத்தில் குழந்தை குழறலில் அதட்டி கொண்டிருந்தான் காற்றையும் கடலையும் மறைத்து நின்ற மஞ்சுக்கொத்தை மயிரை பிடித்து இழுத்தனுப்பினான் மறுபக்கம் முத்தமிட்டு குரல் கேட்டு கீழிறங்கிய வெண் பந்தை ஓர் ஊதலில் திருப்பியனுப்பி புன்னகையை அள்ளி வீசினான் என் பக்கம் முதுகில் முளைத்தன பெருஞ்சிறகு நான் வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் மூன்றாம் அலைகள் கரையை தொடுங்கணம் ஆருமில்லை காண அங்கே முடிந்த பாதையில் மீண்டும் துவங்கினான் தூவலை தன் கடல் மீது நிழலை மட்டும் என்னிடம் விட்டு.
ஜெ. பிரான்சிஸ் கிருபா'வுக்கு நன்றி.
உண்மையில் "சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்கு திரும்பும் வழி தான்" இது.