மூன்றாம் உலகப் போர்.....
இந்தக் கட்டுரை புத்தகத்தைப் பற்றிய புகழுரையோ அல்லது எழுதியவருக்கு அணிவிக்கப்படும் புகழ்மாலையோ அல்ல!
( சில தரவுகள் புத்தகத்திலிருந்து பெறப்பட்டு இடப்பட்ட இடைச் செருகல்கள்)
புத்தக வாசிப்பைப் பற்றி அறியாதவர்களின் அறிவு தெளிவின்மையை புரிந்துகொண்டதன் சிறு ஆதங்கம்!!
இந்த மண்ணில் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளன் தன் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் உற்றுநோக்கி உலகத்தின் போக்கை புரிந்து கொண்டு உள்ளூர் மக்கள் சிலரால் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளின் உலக குரலாக இந்த புத்தகத்தை பதிவு செய்திருக்கிறார்!
இது தீர்வுகளுடன் சொல்லப்பட்ட மண்ணை பெருமை செய்யும் படைப்பு!
இது மண்ணில் மக்க போகும் மனிதனால் மக்காத பொருளை கண்டடைந்து விட்டதன் அதிர்ச்சி!!
வானத்தில் குப்பை கொட்டுகின்ற வளர்ந்த நாடுகளைப் பற்றியும், பூமியில் குப்பை கொட்டும் வளரும் நாடுகளின் வேளாண்மை நிலை பற்றியும்,
நிலவுக்கு விண்கலம் அனுப்பும் அறிவாற்றல் மகிழ்ச்சிதான் என்றாலும்,முதலில் கடைக்கோடி கிராமத்தில் இருப்பவர்களின் வீட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சப்பட்டு விட்டதா? விவசாயிகளின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் அது அமைந்து விடுமா? அதற்கான புரிதலை அரசாங்கமும், மக்களும் புரிந்து விட்டார்களா? என்று பல எண்ணங்களை மனதில் விதைத்துப் போகிறது!
நவ நாகரீக சமூகம் ஜனத்தொகையை குறைத்து,கால்நடையை பெருக்குவதற்கு பதிலாக கால்நடையை குறைத்து ஜனத்தொகையை பெருக்கிக்கொண்டே இருக்கின்றன!
தோராயமாக 2100-ம் ஆண்டிற்குள் 900-ம் கோடிக்கும் மேல் மக்கள் தொகை எண்ணிக்கை கூடலாம் என்று சொல்கிறது சில புள்ளி விவரங்கள், விவசாயம் தற்போதுள்ள நிலையில் நீடித்தாலே அத்தனை பேருக்கும் உணவு உற்பத்தியை கூட்டி விட முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது?
இப்போது இருக்கும் மக்களினால் ஏற்படும் குப்பையும் நச்சுப்புகையும் ஏற்படுத்தும் தாக்கங்களையே தாக்குப்பிடிக்க முடியாத உலக நாடுகள் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து அதன் வளர்ச்சியை எதிர் கொண்டு விட முடியுமா?
நுகர்வு கலாச்சாரத்தை கண்டறிந்த மனிதன் கழிவு கலாச்சாரத்தையும், நீரியல் மேலாண்மையையும், காட்டு வளங்களையும் கட்டிக்காக்க வேண்டிய நேரமிது! ஆரோக்கியமான தேசத்திற்கு தேவை அவசியம் 33 விழுக்காடு காடு, 2014 கணக்கின்படியே இந்தியாவில் அது 21 சதவீதமாக குறைந்துவிட்டது.
மக்கள் தொகையும், அதற்கு ஏற்ப குப்பைகளும், குறிப்பாக மின்னணு கழிவுகளும் (e-waste), கொட்டுவதற்கு அண்டை நாடுகளின் நிலத்தை வாடகைக்கு கேட்கும் அளவிற்கு கூடிக்கொண்டே வருகிறது.
விவசாயமும், விளைநிலங்களும் நீரும்,ஆறும் ஆற்றுப்படுகைகளும், காற்றின் தரமும், குறைந்துகொண்டே வருகின்றன,
கூட வேண்டியது குறைகிறது,
குறைய வேண்டியது கூடிக் கொண்டே வருகிறது!
ஒரு விவசாயி நிலத்தை விற்று படிக்க வைப்பதன் மூலம் நான்கு ஆண்டுகளில் ஒரு வேலை இல்லா பட்டதாரி உருவாகிறான், விளைநிலத்தை விற்பதனால் கிட்டத்தட்ட 10 குடும்பத்திற்கான வாழ்நாள் உணவு உற்பத்தியே நின்று விடுகிறது.
இன்னும் சில நாட்களில் அனைவரிடமும் மகிழுந்து(car) இருக்கலாம்!
கறவைமாடு இருக்காது!
வீட்டுக்கு வீடு இணையதளம் இருக்கலாம்! இலந்தைப்பழம் இருக்காது!
வீட்டின் நான்கு பேருக்கு 5 அலைபேசிகள் கூட இருக்கலாம், அறுபதாம் குறுவையை அறுவடை செய்ய முடியாது!
மின்சார கார்களின் இரைச்சல் சப்தம் இருக்கும் பறவைகளின் சங்கீதம் இருக்காது!,
வெளிநாட்டு மது இருக்கும் இறைச்சி இருக்காது! (மனிதனை மனிதன் உண்ணாத வரை தான்),
இரண்டாம் உலகப்போரில் சைபீரியாவில் சிறைவைக்கப்பட்ட 1லட்சம் ஜெர்மானியர்கள் 872 நாட்களுக்கு பிறகு பறவைகளையும் எலிகளையும் வீட்டு விலங்குகளையும் தின்று தீர்த்த அதற்குப்பின் சக கைதிகளின் 5000 பிணங்களின் மீது அவர்களின் பசி நீண்டது. பின்னர் அவை எலும்பு கூடுகளாக கண்டறியப்பட்டன என்பது வரலாறு,
பெட்ரோல் கிணறு வற்றி விட்டால் மின்சார போக்குவரத்து முழுமையாக்கபடலாம், நீரும் நிலக்கரியும், வற்றிவிட்டால் சூரிய ஒளி மின் சக்தியினால் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டி விடலாம் அல்லது வேறு ஏதோ!
ஆனால் உணவிற்கு மாற்று உண்டாக்கப்படுமா?
முயல்களின் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பது போன்றதுதான் நாம் இயற்கையை எதிர்ப்பது!
இந்த எழுத்தாளனின் சீறிய உழைப்பால் வடித்து கொட்டப்பட்ட சோற்றை உங்கள் சுற்றத்தார்களிடம் சமபந்தி இடுங்கள். மாற்றம் நிகழக்கூடும்..
இந்த நிலை நீடித்தால் இந்தியாவின் அறிவு செல்வங்களும், அழிந்து போகாத கலை மரபுகளும், நிமிர்ந்து விண்ணை முட்டி நிற்கும் நகர கட்டமைப்பும், புதைந்து மறைந்து கொண்டிருக்கும் கிராமங்களையும் வெறும் தரவுகளாக மட்டுமே தக்கவைக்க முடியும் அடுத்த தலைமுறைக்கு!
அன்று சொன்னான் பாரதி
காணி நிலம் வேண்டும் கண்ணம்மா! காணி நிலம் வேண்டும் கண்ணம்மா! -என்று
இன்றோ அவன் இருந்திருந்தால் காண நிலம் வேண்டும் கண்ணம்மா!
காண நிலம் வேண்டும் கண்ணம்மா! என்று கதறியிருப்பான்!!!
- பி. அருண்குமார்