2010 வாக்கில் முதற்பதிப்பு கண்ட இக்கட்டுரைத்தொகுப்பு(41), ஒவ்வொரு வாரமும் 2009 களில் விகடன் வார இதழில் வெளிவந்தவை. அந்த கால அரசியல் முதல், சற்றே பின்னோக்கி அடிமை இந்தியா காலம் வரை, தான் கண்ட, படித்த அரசியல் சீர்கேடுகளையும், சமுதாயத்தின் மீதான பார்வையையும் கோபக்கண் கொண்டு கட்டுரைகளாக எழுதியுள்ளார், திரு தமிழருவி மணியன்.
இக்கட்டுரைகளை வாசிக்கையில், அவரது தெள்ள தெளிவான தீந்தமிழ் குரலாலேயே சொற்பொழிவாற்றுவது போல் உள்ளது.
அப்போதைய அரசியல் கூத்துக்கள் மீதான மக்களின் வெறுப்பையும் கோபத்தையும், அப்படியே தனது கட்டுரைகளாக தந்ததாகவே தெரிகிறது. ஆனால் இப்போதும்(12 ஆண்டுகளுக்கு பின்னும்) அதே கூத்துகள்தான் அரசியலில் நிகழ்ந்து வருகின்றது என்பது வேதனையே.
பல்வேறு அரசியல் நிகழ்வுகளை, அதாவது இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்து 2010 வரை நடந்தவற்றை, தம் கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பல்வேறு மகான்கள், எழுத்தாளர்கள், தலைவர்களின் கருத்துக்களையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டி தம் கருத்துக்கு வலு சேர்க்கும்படியாக எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரை தலைப்பிற்கேற்றவாறு அதன் முதல் பக்கத்தில், கவிதையொன்று வருமாறு பதிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய தலைமுறையினர், தமிழகத்தின் அரசியல் வரலாறை படிக்க இந்த நூல் ஒன்றே போதும். காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக போன்ற கட்சிகளையும், அதன் தலைவர்கள் பற்றியும் விருப்பு வெறுப்பு பார்க்காமல் அனைவரின் நிறை குறைகளை சொல்லி விமர்சித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை. மேலும் சில சமூக ஒழுக்க கேடுகளையும் சாடும் விதமாக, கடைசியில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நூல், எந்தளவிற்கு என்றால், இந்த 320 பக்கங்களில் கிட்டத்தட்ட 55க்கும் மேலான குறிப்புகளை குறித்துள்ளோம். அந்த அளவுக்கு அரசியல் வரலாற்று தகவல்களை கொண்டுள்ளது இக்கட்டுரைகள்.
கட்டுரை தலைப்புக்கள்:
அரசியல் கட்சி கொள்கை கட்சித்தாவல் தடைச்சட்டம் சந்தர்ப்பவாதம் தேர்தல் வாக்குறுதி இலவசம் ஊழல் அன்பளிப்பு கமிஷன் பொற்காலம் சுயாட்சி ஹிந்தி தமிழ் ஆடம்பரம் அனாகரிகம் முகஸ்துதி வாரிசு ஓய்வு ஜனநாயகம் பேரவை அபூர்வம் தியாகம் சாதி இனம் மதம் ஒதுக்கீடு சன்னியாசம் வன்முறை புகலிடம் காமம் பெண்ணியம் இல்லறம் விவாகரத்து நுகர்வு ஊடகம் கல்வி முடியும் வாக்குமூலம்
புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்...
\ மகாபாரதம் சாந்தி பருவத்தில் ஓர் ஆழ்ந்த அரசியல் செய்தி உண்டு. 'ஆள்வதற்காக அரசு கட்டிலில் அமர்ந்தவன் ஒரு தாயை போல் இருக்கவேண்டும். ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய தர்மமே அரசு தர்மம். தனக்கு விருப்பமான உணவை விட, கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள். ஆட்சியாளன் தனக்கு விருப்பமான செயல்களை செய்யாமல், மக்கள் நலனுக்கு உரிய காலங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்' என்று அம்புப் படுக்கையில் மரணத்தின் மடியில் சாய்ந்து கிடக்கும் பீஷ்மர், தருமனுக்கு அரசியலறம் உரைக்கிறார். /
\ தேர்தல்கள் தார்மீக நெறிகளுக்கு எதிரான தில்லுமுல்லுகள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், வாக்களித்தவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல், கட்சித் தலைமையிடம் கைகட்டி நிற்கின்றனர். கட்சித் தலைமையின் பலவீனத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடும் குழுக்கள் உருவாகி, அவற்றின் விருப்பத்துக்கேற்ப ஆட்டிப்படைக்கின்றன. வெளிப்படையாக பகிரங்கப்படுத்த முடியாத பணிகளுக்காக, அரசியல் கட்சிகள் கிரிமினல் குற்றவாளிகளை அரவணைக்கின்றன. அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-கிரிமினல்கள் சேர்ந்து ஒட்டு மொத்த சமுதாயத்தையும் திட்டமிட்டு சுரண்ட ரகசிய கூட்டணி அமைக்கின்றனர். கட்சி அரசியலில் கடுமையாக பாதிக்கப்படுவது பரிதாபத்துக்குரிய பொதுஜனம்தான். வேலியே பயிரை மேயும் அதற்கு சரியான சான்று இங்கு உள்ள கட்சி அரசியல் தான். /
\ ராஜீவ் காந்தி படுகொலையில் ஜெயின் கமிஷன் திமுகவின் மீது சந்தேகம் எழுப்பியது . முரசொலி மாறனின் அமைச்சர் பதவியை பறிக்க, காங்கிரஸ் குரல் கொடுத்தது. திமுக அமைச்சர்கள் நீக்கப்பட்டால், காங்கிரஸின் ஆதரவு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 'மாறன் ராஜினாமா செய்வதா?' அல்லது, இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டு முடிவதற்குள் இன்னொரு இடைத்தேர்தலா? இன்னொரு தேர்தல் 5000 கோடி ரூபாய் செலவில் நடந்தாலும் சரி, ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்தாலும் சரி, மருமகனை பதவி விலக சொல்வதில்லை என்று முடிவெடுத்தார் கலைஞர். குஜரால் ஆட்சி கவிழ்ந்தது. இடைத்தேர்தல் கனிந்தது. இந்த நிலைக்கு காரணம் கலைஞரும், அவருக்கு எதிராக இந்த முழக்கம் செய்த காங்கிரசும். இன்று காங்கிரஸ் தயவில் கலைஞர் ஆட்சி(2009ல்), கலைஞரின் கருணை மழையில் காங்கிரஸ் உறுப்பினர்கள். /
\ ' ஒரேயொரு அயோக்கியனை மக்கள் சமாளிப்பதற்கு பெயர் சர்வாதிகாரம். ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம்' என்பது கண்ணதாசனின் கண்டுபிடிப்பு /
\ 'யானையின் காலடிச் சுவட்டில் மற்ற எல்லா விலங்குகளின் காலடி சுவடுகள் உறங்குவது போன்று தான், அரச தர்மத்தில் அனைத்து தர்மங்களும் அடங்குகின்றன' என்று அழகாக சொல்கிறது மகாபாரதம். /
\ 'தமிழ்நாட்டு வாக்காளர்கள் அறிவாளிகள். கோவணத்தை இழந்து என்றால் கல்லால் அடிப்பார்கள்; கொள்கையை இழந்துவிட்டால்... அமைச்சர்கள் ஆக்குவார்கள்!' என்று கண்ணதாசன் சொன்னார். கவிஞர் கூற்று பொய்யில்லை! /
\ காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டு முதலில் காங்கிரஸில் இணைந்து பணியாற்றிய பெரியாரும், இந்திக்கு ஆதரவாக இருந்தவர் தான். 'அப்போது எனக்கு எல்லாவற்றையும் விட இந்தி சம்பந்தமாகத்தான் ஆவல் ஏற்பட்டு, இந்தியை இன்றுமுதல் சில பிள்ளைகளுக்கு நம் செலவிலேயே கற்றுக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். அன்று முதல் 30 பேர்கள் கொண்ட ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்படி இரண்டு வருடங்கள் வரை அதை நடத்தினேன். இது மட்டுமின்றி, போகிற இடங்கள் தோறும் இந்தியை பற்றி பெருமையாக ஏதேதோ பேசுவதுண்டு. இப்படி இந்தியை பற்றி கவலைக் கொண்டு அதை நம் நாட்டில் கொண்டுவந்து பரவச் செய்து அவர்களில் நானும் ஒருவன்' (விடுதலை 1-8 -1955) என்று பெரியாரே வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். காங்கிரஸில் இருந்து 1925-ல் விலகிய பெரியார் பள்ளிகளில் இந்தியை ராஜாஜி புகுத்தியபோது கடுமையாக எதிர்த்து களம் கண்டார். /
\ சுதந்திரத்திற்கு பின்பு ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் இந்தி திணிப்பு நடந்த நிலையில், 1948ல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போருக்கு உயிரூட்டினார். 'இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ளவேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும் நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்'(விடுதலை 20,07.1948) என்று அறிவித்தார் பெரியார் . அதே பெரியார்தான்... தமிழகம் என்றும் கண்டிராத வகையில் 1965ல் மொழிப் போர் மாணவர்களால் நடத்தப்பட்ட போது, 'பதவியைப் பிடிப்பதற்காக கண்ணீர் துளிகள்(தி.மு.க) செ��்த பாம்பை எடுத்து ஆட்டுகின்றனர்' என்று விமர்சித்தார். 'எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்காகவோ, தமிழ் வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொதுமொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும். உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ் பைத்தியத்தை விட்டொழியுங்கள்'(விடுதலை 27.01.1969) என்றார் பெரியார். நெஞ்சில் பட்டது எதுவோ... அதை நேர்பட சொன்னார் பெரியார். /
\ ஒன்றைச் சொல்லியாக வேண்டும்... தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல், எதிர்க்கட்சியாக இயங்கிய காலங்களில்தான் இந்தி எதிர்ப்புப் போரில் வேகமாக ஈடுபட்டது; மாநில சுயாட்சிக்கு மிகத் தீவிரமாக குரல் கொடுத்தது. மாநில சுயாட்சி குறித்து ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ராஜமன்னார் குழுவை நியமித்தார் என்றாலும், உரிமைகளை பெற அவர் செயலூக்கும் காட்டினாரா ? /
\ ராஜாஜியின் ஆட்சியில் 125 பள்ளிகளில்தான் இந்தி புகுத்தப்பட்டது . அவர் ஆண்ட சென்னை மாகாணத்தில் ஒரு பகுதியாக விளங்கிய தமிழகத்தில் 60 பள்ளிகள்தான் அந்த பட்டியலில் இடம் பெற்றன. அதை எதிர்த்து பெரியாரின் தலைமையில் தமிழகமே போர்க்கோலம் பூண்டது. இன்று திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில மழலையர் பள்ளிகள் பெருகிவிட்டன. இந்த பள்ளிகளில் ஆங்கிலம் தான் பயிற்றுமொழி. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் எங்கே தமிழ்? ...அண்ணா 1967ல் ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததும், 'ஐந்தாண்டுகளில் எல்லா கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பாடமொழியாகவும் தமிழே இருக்கும்' என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40 ஆண்டுகள் கடந்துவிட்டன /
\ தமிழின் மீது பெரியாருக்கு தனிப்பெருங்காதல் இருந்ததில்லை. 'மூடநம்பிக்கைகளை இலக்கியமாகிய மொழி தமிழ்' என்பது அவருடைய கருத்து. அவரிடம் இருந்து பிரிந்த அண்ணாவின் பரிவாரம் தமிழை தங்கள் சொந்த வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாகவே அவர் நினைத்தார். 'புலவர் என்றால் சொந்த புத்தி இல்லாதவன் என்று தான் கூறுவேன். புலவர்களுக்கு பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து' என்று கடுமையாக விமர்சித்த பெரியார், 'கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் இனத்துரோகம், முட்டாள்தனம், மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு ஓட்டு போடுதல் காரியங்கள் தவிர என்ன பயனை தருகிறது ? என்று கேட்டார். /
\ 'அக்கா வந்து அள்ளிக் கொடுக்க, சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே', என்றார் பாவேந்தர் /
\ 'அரசியலில் இருந்து மதத்தை பிரிக்க முடியாது' என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திய மகாத்மா, அரசியல் அறவழிபட்டதாக அமைவதற்கு மதம் உறுதுணையாக இருக்கும் என்று நம்பினார். ஆனால், மதம் வகுப்புவாதமாக வளர்ந்தபோது, 'நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனியாக இருக்கும் என்று என் மதத்தின் மேல் உறுதியாக கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன். மதம் என் சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை' என்று பிரகடனம் செய்தார். அந்த மகாத்மா டெல்லியில் 7 நிபந்தனைகளை முன் வைத்து உண்ணாநோன்பு மேற்கொண்டபோது, அவரை முஸ்லிம் ஆதரவாளராகவே கோட்ஸேவால் பார்க்க முடிந்தது. மசூதிகளில் தங்கியிருக்கும் இந்து அகதிகள் உடனே வெளியேற்றப்பட வேண்டும் என்றும், பிரிவினையின்போது வாக்களித்தபடி 55 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு தரப்பட வேண்டுமென்றும் காந்தி விதித்த நிபந்தனை, கோட்சேவை கொலைவெறியனாக்கியது. 'காந்தி 18 முறை உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அரசியல் நடவடிக்கைகளையும் இந்துக்களின் செயல்களையும் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்த காந்தி ஒருமுறைகூட முஸ்லிம்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததில்லை! பிளவுபட்ட இந்தியாவை அங்கீகரிப்பது சபிக்கப்பட்ட இந்தியாவின் சித்திரவதைக்கு உடந்தையாக இருப்பதற்கு சமம். பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த பயங்கர அவலங்களுக்கு காந்தியே பொறுப்பாளி. அதனால்தான் அவரை சுட்டு வீழ்த்தினர்' என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினான் கோட்சே. /
\ சாமர்த்தியமாக பேசுவதிலும், சொல்ல வேண்டியதை சுருக்கமாக உணர்த்துவதும் பெண்ணுக்கே முதலிடம் . பெண்ணே, நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பிள்ளை யார்?' என்று கடந்த கால நினைவுகளை மறந்த துஷ்யந்தன் கேட்ட 3 கேள்விகளுக்கு, 'மகனே, பரதா! உன் தந்தையை வணங்கு' என்று ஒரு வரியில் விளக்கம் தந்தவர் சகுந்தலை. /
\ 'ஒரு பொருளையும் வாங்காத நீங்கள் ஒவ்வொரு நாளும் கடைத்தெருவுக்கு வருவது ஏன்?' என்று கடைக்காரன் ஒருவன் கேட்டபோது, 'எவ்வளவு பொருள்கள் இல்லாமல், நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அறிந்து கொள்ளவே அன்றாடம் வருகிறேன்' என்றாராம் சாக்ரடீஸ். /
\ தன்னை அறியவும், தன் ஆற்றலை வெளிப்படுத்தவும், ஒழுக்கம் செறிந்த நெறிகளை பேணி பராமரிக்கவும் உதவுவதற்கு பெயர்தான் கல்வி. 'கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன் பண்பாடு' என்ற புரிதல் நமக்கு வரவேண்டும். கல்வியின் நோக்கம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அன்று; நாம் வாழும் வாழ்க்கையை வளப்படுத்துவது! /
More than 75% of the book covers about Indian Politics. Chapters other than politics are a bit boring. Still a good read.. More knowledgable things about politics.