கி.பி 1018 - 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது. ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த நாவல். உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும், பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரத வர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்ட மன்னரையும், சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு, வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும் ராஜேந்திர சோழர் வென்றமை குறித்து இயல்பான நடையில் அமைந்த புதினம்.
To buy online http://www.nammabooks.com/Cholagangam...
முன்னுரை:
சரித்திரப் புதின வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையுடைத்த “பொன்னியின் செல்வன்” நம்மையும் தன்பால் ஈர்த்துக்கொண்டமையால், சக வாசகனான நாம், சரித்திரப் புதின வாசகப் பெருமக்களை இப்புதினம் மூலமாய் சந்திக்கும் அரும் வாய்ப்பையும் பெற்றோம்.
பெருமகனார் கல்கி அவர்களின் விவரிப்பில் விளங்கிற்று, தனக்குரிய அரியணையை சிறிய தந்தைக்கு அளித்த “தியாக சிகரம்” அருமொழிவர்மனான ராஜராஜரின் உன்னதம்.
ஆயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்தியேனும் கைப்பற்றத் துடிக்கும், சகல போகங்களும் கிட்டும் ராஜ பதவியை ஒருவர் விட்டுத்தருவது சாத்தியமா? எனும் வினவலும் உடன் எழத்தான் செய்தது. “சோழர்கள்” - திரு.K.V.ராமன் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட K.A.நீலகண்ட சாஸ்திரியாரின் “THE COLAS” எனும் நூல், சரித்திரச்சான்றுகளோடு “அறத்திலும் மறத்திலும் ராஜ்ய பரிபாலனத்திலும் மிகச்சிறந்தவர்” என்று விவரித்து “RAJARAJA THE GREAT” என்றுரைத்து உறுதியும் செய்யலாயிற்று.
இந்திய வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்கப்பட்ட மன்னர்கள் பலருள் ஒருவரான ராஜராஜருக்கு மகனாகப் பிறந்தால்?.
“இவன் தந்தை எந்நோற்றான்” எனும் மொழிக்கு உதாரணமாகத் திகழ வேண்டிய கட்டாயம் இருந்தது, ராஜராஜரின் புதல்வரான ராஜேந்திரசோழருக்கு (1012-44) என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும் கருதுகின்றனர்.
அதற்கு ஆதாரமாக, “உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனில்…” (திரு.சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலின் பக்கம் 126லிருந்து) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சாசனமானது, அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தின் மன்னர்கள் எவரும் செய்திராத உத்தராபதத்திற்குப் படையெடுத்துச் சென்று மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்றும், பாரதவர்ஷத்திற்கு அப்பால் இருந்த சுவர்ணபூமியின் அரசுகள் பலவற்றையும் வென்று கடாரம் கொண்டான் என்றும், “பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான்” என்றும் விருதுப்பெயர்கள் தாங்கியமை குறித்து விவரிக்கும் சாசனங்கள் திகழ்கின்றன.
சரித்திரத்தின் பல பகுதிகள் இன்னும் தெளிவடையவில்லை என்றே அறிஞர்கள் பலரும் உரைக்கின்றனர். சில பகுதிகள் மட்டுமே சாசனங்கள் மூலமாகவும் பாக்களாகவும் வம்சாவளிச்சரிதைகளாகவும் கிட்டியிருக்கின்றன. அவ்வண்ணம் கிட்டியவை குறித்தும் வரலாற்று ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன.
அந்த வேறுபட்ட கருத்துகள் அடங்கிய பகுதிகளில் ராஜேந்திர சோழரின் காலமும் அடங்கும். ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்திற்குட்பட்ட கி.பி.1021-26, நாம் இப்புதினத்திற்கென எடுத்துக்கொண்ட காலகட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து அறிய நேர்கிறது.
நாம் இப்புதினத்தை ஆக்க விழைந்தபோது, பெரும்பாலான ஆய்வாளர்களின் குறிப்புகளை ஒட்டியே துவங்கினோம். பின்னாட்களில் அவர்களது குறிப்புகளிலிருந்தும் கணிப்புகளிலிருந்தும் விலகவும், பாரதவர்ஷத்தின் பழம் புவியமைவைக் குறித்தும் நாம் தேட வேண்டிய நிர்ப்பந்தமும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளால் நேர்ந்தது. அம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றைக் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமையே அதற்கு காரணமாயிற்று.
தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தமையால் கிட்டிய ஆயும் திறன்கொண்டு நாம் அலசிய புவியமைவைக் குறித்த நூல்களிருந்து நாம் பெற்ற சில குறிப்புகளையும், பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் முக்யத்துவம் பெற்றுள்ள கி.பி.1025-26ல் நடந்த ஓர் போரையும் கவனத்தில் கொண்டு நாம் தீட்டியதே இப்புதினமாகும்.
அவரவர்க்குரித்தான பணியைச் செய்வதே பெரும்பாடாயிருக்க, இவ்வெழுத்துப்பணியை நாம் புரிவதற்கும், நமது புதினத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணையாயும், தேவையான ஆலோசனைகள் தந்தும், பதிப்பிப்பதற்கு ஏதுவாக பல அம்சங்களைச் சேர்த்தும் உதவிய “சரித்திரப் புதினச் சேகரிப்பாளாரான” திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கட்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
பொன்னியின்செல்வன் மற்றும் அகத்தியர் என இரு யாஹூ மடற்குழுமத்தாரின் பதிவுகள் நமக்குப் பேருதவியாயிருந்தன. அம்மடற்குழுக்களை அலங்கரிக்கும் அங்கத்தினர்க்கும்,
நாம் இப்புதினத்தை இயற்றவிருப்பதாகச் சொன்ன போது, ஊக்கம் தந்தும், ராஜேந்திரரின் சரித்திரத்தில் உள்ள ஐயப்பாடுகளையும் விவரித்துதவிய சிற்பக்கலை ஆராய்ச்சியாளரான “Poetryinstone” விஜய்குமார் அவர்களுக்கும்,
ராஜேந்திரர் குறித்து பற்பல குறிப்புகளை அளித்துதவிய சரித்திரப் புதின எழுத்தாளர் திரு.விஷ்வக்சேனன் அவர்களுக்கும்,
நமக்குப் பலவகையிலும் உதவி புரிந்த, நம்முடன் பணிபுரியும் திரு.காளிதாஸ் அவர்களுக்கும், நமது நெஞ்சார்ந்த நன்றியைத்...
கல்கியின் பொன்னியின் செல்வனின் தாக்கத்தை உணராதவர்கள் தமிழ் எழுத்துலகில் இல்லை எனக்கூறலாம்.
வரலாற்றுப் புதினம் என்பது ஒரு தனி உலகம். அந்த உலகத்தில் நம்மை இட்டு செல்ல தன் முதல் முயற்சியை துவங்கி இருக்கும் எழுத்தாளர் திரு. சக்திஸ்ரீ அவர்கள் தமிழகத்தில் உள்ள அருப்புக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர்.
வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'சோழகங்கம்' இவரது முதல் படைப்பாகும்.
'சோழகங்கம்', ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தை அடிப்படையாகாக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் வரலாற்று புதனமாகும்.
இந்திய நாட்டின் வல்லமை மிக்க பேரரசர்களில் ஒருவரான சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவரைப் பற்றிய புதினம் என்பது வரலாற்றின் மேல் ஈர்ப்பு கொண்ட வாசகர்களுக்கு மகிழ்ச்சியான விடயம் தான். ஆனால் கங்கை வரை படை எடுத்து மாபெரும் வெற்றி கொண்டு, கடல் கடந்து ஶ்ரீவிஜயப் பேரரசை வெற்றி கண்டு, கங்கைகொண்டசோழன், கடாரம்கொண்டசோழன், பண்டித சோழன் போன்ற பல பட்டப்பெயர்களை தாங்கி, சாலுக்கிய ஜெயசிம்மனை முதுகிட்டொளித்து, தென்இந்தியா, இலங்கை முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட கோப்பரகேசரியைப் பற்றி எழுதுவது மிகவும் கடினமான பணி தான்.
இப்புதினத்தில் ஆசிரியர் திரு.சக்திஶ்ரீ அவர்கள் கதைக் கருவைப் புணைவதற்கு எடுத்துக் கொண்ட வரலாற்று நிகழ்வுகளையும், அதற்கு மேற்கோள் காட்டிய புத்தகங்களையும் பார்த்தோமேயானால் அவர் இதை எழுதுவதற்கு கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. இம்மாபெரும் மன்னனின் அளப்பரிய வெற்றிகளை ஒரே புத்தகத்தில் எழுதுவது, படிப்பது சாத்தியமில்லை என்று ஆசிரியர் நினைத்திருப்பார் போலும். ஆதலால் புத்தகத்தின் தொடக்கத்திலே சக்ரவர்த்தியின் வெற்றிகளை பறை சாற்றும் மூன்று பக்க மெய்க்கீர்த்தியை போட்டு, அதன் அடியில் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு சமர்ப்பணம் என்று எழுதி, கங்கை மற்றும் கடாரப் படைஎடுப்பை மட்டும் சார்ந்த கதைக் கருவை அமைத்துவிட்டார்.
மெய்க்கீர்த்தியின் முதற்பாதியை எனக்கிருந்த ஆவலால் முன்பே மணனம் செய்துவிட்டிருந்தேன். ஆதலால் அதை வேகமாகப் படித்த போதும், "அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்தி" என்று தொடங்கும் வரியைப் படித்த போதும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கோடு கதைக்குள் நுழைந்தேன்.
இக்கதை நடக்கும் காலகட்டத்தில் வடக்கே பாரத கண்டம் துருக்க-ஆப்கானிய மன்னரான முகமது கஜினியால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. ஆகவே கதைக் கருவில் ராஜேந்திரர் தன் கங்கைப்படையெடுப்பில் கஜினியை எதிர்த்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் என்ற திக்கில் கற்பனையை ஓடவிட்டிருக்கிறார் ஆசிரியர். வடக்கே ராஜேந்திரரின் நண்பர்களாக இருக்கும் மன்னர்கள், கஜினியால் தோற்கடிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஓர் அணியில் திரட்டி சோழர்கள் எவ்வாறு கஜினியை எதிர்த்தார்கள், அதற்குப் பின் வங்காள தேசம், கடாரம் வரை நடத்தப்பட்ட படையெடுப்பு என்று கதை புனையப்பட்டிருக்கிறது. இவற்றின் நடுவே பல போர்த்தந்திரங்கள், புதுவகையான போர்கருவிகள், காதல் அரங்கேற்றங்கள் என பலவற்றையும் சேர்த்துவிட்டிருக்கிறார் சக்திஶ்ரீ. தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களில் மிகவும் போற்றுதற்குரியவரான முனைவர். திரு. நீலகண்ட சாஸ்த்ரி அவர்களின் கருத்துக்களின் படி, சோழப்பேரரசின் கருணையாக அவர்கள் வென்ற நாடுகளில் அதன் அரசர்களே மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டு சோழர்களுக்கு கட்டுப்பட்ட கப்பம் கட்டுபவர்களாக விடப்பட்டனர். இதைப் போன்று இன்னும் பல வரலாறுச் சான்றுகளை ஆசிரியர் இக்கதையில் கையாண்டிருப்பதிலிருந்து அவரின் ஆழ்ந்த ஆராய்ச்சியை அறியமுடிகிறது.
மிகப்பெரிய மூன்று வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரே புத்தகத்தில் கையாண்டதால் பல கதாப்பாத்திரங்களும் அவர்களின் பெயர்களும், பல வரலாற்று நிகழ்ச்சிகளும் நினைவில் கொள்வது மிக கடினமாக இருந்தது. இதன் விளைவாக சில நிகழ்வுகள் சரியான விதத்தில் தொடர்பாக அமையவில்லை. கடாரப்படையெடுப்பில் கடல் போர் நுணுக்கங்கள், பல தீவுகளை கடல் மார்க்கமாக சென்று தாக்கும் Amphibious landing என்று இன்று சொல்லப்படுகின்ற விடயங்கள் போன்றவற்றை நன்றாக கையாண்டு இருக்கலாம். ஆனால் இப்பொழுதே ஆயிரம் பக்கங்களை தாண்டிவிட்டமையால் கடாரப்படையெடுப்பை சுருக்கிவிட்டிருந்ததன் காரணத்தை உணரமுடிகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த துறையில் பணிபுரியும் திரு. சக்திஶ்ரீ, தமிழக வரலாற்றின் மீது கொண்ட ஈர்ப்பால், பல ஆண்டுகள் உழைத்து, தன் முதல் படைப்பிலேயே ஆயிரம் பக்கம் கொண்ட வரலாறு சார்ந்த கற்பனையை எழுதியிருப்பது மிகவும் பாராட்டக்கூடிய ஒன்றாகும்.
சோழப்பேரரசு மற்றும் பிற்க்காலப் பாண்டியப் பேரரசுகளின் காலத்தில் இன்னும் பல விடைகிடைக்காத மிக முக்கிய திருப்புமுனைகளை கொண்ட விடயங்கள் உண்டு என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எனவே இவற்றில் மேலும் தன் கற்பனையைப் புகுத்தி, இப்புதினத்தில் கையாண்ட நடையை மேலும் செம்மைப்படுத்தி, தனது அடுத்த வரலாற்றுப் படைப்பைப் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன்,
வீரத்தை பறைசாற்றும் வெற்றிகளே நாட்டை ஆள்பவனின் மதிப்பை உயர்த்தும்.
உடையார் ஸ்ரீராஜேந்திரசோழதேவர் சோழநாட்டிற்கு மட்டும் சக்கரவர்த்தி அல்ல பாரதவர்ஷத்திற்கே சக்கரவர்த்தியாகிய காலத்தை இப்புனைவு மையப்படுத்தி இருக்கிறது. தக்ஷிணாபதத்து வேங்கை என்று கொண்டாடப்படும் உடையார் ஸ்ரீராஜேந்திரசோழர் பாரதவர்ஷத்தின் ஐந்து பெரும் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டி சோழசாம்ராஜ்ஜியத்தைப் பரப்பியதாலே பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தியாகப் போற்றப்படுகிறார்.
முகமது கஜினியை எதிர்த்து போராட உண்டான காரணங்களும்,போருக்கான சூழ்நிலை அதற்கான ஆயத்தங்களும் அதில் ஈடுபட்ட மாவீரர்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் சோழர்களின் போர் திறனையும் அவர்களின் நுணுக்க அரசியலும் முழுமையாக விவரித்துச் செல்கிறது.
முகமது கஜினியை வெற்றிக் கொண்டு திரும்பும் வேளையில் கங்கை நீரைக் கொண்டு வந்த காரணத்தையும் இப்புதினத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
கங்கை கொண்ட சோழீஸ்வரத்து அமைச்சரவை அமைக்க உண்டாக்கிய புதிய நகரத்தின் கட்டுமானமும் புவியமைப்பில் சோழர்கள் கொண்டிருந்த அறிவும் கங்கையின் ஏழு கிளை நதிகளின் நீரை அப்புதிய நகரத்தில் பாய்ந்தோட செய்த செயலால் வரலாற்றில் தனித்து நின்ற உடையார் ஸ்ரீராஜேந்திர சோழனின் ஆளுமையும் வீரத்தையும் மட்டுமே பிரதானப்படுத்தி இருக்கிறார்கள்.
அரசியல் ஆட்டத்தின் நியமனங்கள் சூழ்நிலை பொருத்தே நிலைப்பெறுகிறது.
நம்மில் பெரும்பாலானோருக்கு சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு. வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. அதில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி கற்பனை செய்து எழுதப்பட்டதே இந்த சோழ கங்கம் என்ற புத்தகத்தின் முதற் பாகம்.
அந்த சம்பவம் இதுதான். முகமது கஜினி வட இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறார். அதே சமயத்தில் தெற்கு இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையுடன் ஒரு மாவீரன் இந்தியாவின் வட கிழக்கு நாடுகளை நோக்கி தனது படைகளை செலுத்துகிறார். அந்த வீரன் வேறு யாரும் அல்ல. ராஜேந்திர சோழர். ராஜேந்திர சோழர் வடக்கு நோக்கி நகர்த்திய படைகள் கங்கை நீரை கொணர்வதற்கு மட்டும் அல்ல, கஜினியுடன் மோதுவதற்கும் தான் என்ற வாக்கில் புனையப்பட்டதே சோழ கங்கம் – முதற் பகுதி.
புத்தகத்தை பற்றி விமர்சிப்பதற்கு முன் ஒரு சிறிய முன்னோட்டம் சம்பவத்தைப்பற்றி. கஜினியுடன் மிகப்பெரிய படையுடன் போர் புரியக்கூடிய வல்லமை தென் இந்தியாவில் அன்று இருந்த இரு பெரும் சாம்ராஜ்யங்களான மேலை சளுக்கர்களுக்கும், சோழர்களுக்கும் உண்டு. எனினும் மேலை சளுக்க படைகள் அச்சமயத்தில்தான் சோழர்களுடன் தோல்வியை தழுவியிருந்தனர். எனவே படை பலம் மற்றும் மீதமிருந்த படைகளின் உற்சாகமும் குன்றியிருக்கும். எனவே போர் நடந்திருந்தால் வெற்றி கிட்டியுருக்குமா என்று சந்தேகம்தான்.
சோழர்களும் கஜினியுடன் மோதியதாக எந்தவொரு வரலாற்று குறிப்பும் கிடைக்கவில்லை. மேலும் கஜினி வட இந்தியாவில் கிடைத்த செல்வங்களே போதும் என்று நினைத்து தெற்கு இந்தியாவில் படையெடுக்காமல் இருந்திருக்கக்கூடும். மேலும் கஜினியின் ஒற்றர்கள் சோழப்படைகளைப் பற்றியும் , மேலைசளுக்கப் படைகள் பற்றியும் உளவு பார்த்திருக்ககூடும். வட இந்தியாவில் நிலவிய கோஷ்டி மோதல்கள் தென் இந்தியாவில் அப்பொழுது அடக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.
வட மேற்கில் வேற்று நாட்டவன் தான் வணங்கும் கோயில்களை இடித்திருப்பது கண்டு ராஜேந்திர சோழர் தமது படைகளை அத்திசையை நோக்கி செலுத்தவில்லை. ஒரு மன்னனாக இருந்து யோசித்து பார்த்தால் அதில் சில நியாயங்கள் புலப்படுகின்றன. நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு பல வருடங்களாக திட்டங்கள் தீட்டியே கங்கை நீர் கொணர்தலுக்கு செய்ய வேண்டிய போர்கள், ஸ்ரீவிஜயம், கடார படையெடுப்புகள் நடந்திருக்க வேண்டும். இச்சமயத்தில் தெரியாத நாட்டில், அறியாத இடத்தில, படைபலம் தெரியாத ஒருவனுடன் மோதி படைகளை இழந்து, பல வருடங்களாக கண்டு வரும் கனவுக்கோட்டை தகர்வதை எந்த மன்னனும் விரும்ப மாட்டான் என்பதே உண்மை.
சரி. வாருங்கள்.புத்தகத்தின் விமர்சனத்துக்குள் நுழைவோம். கஜினியுடன் தனது பெரும் படைகளை அணிவகுத்து கஜினியை வீழ்த்தி வெற்றி வேங்கைகளாக சோழப்படைகள் திரும்புவதே முதல் பாகம். என்னதான் கற்பனையாக இருந்தாலும் நாம் இந்த சம்பவம் நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதே நம்மை இந்த புத்தகத்தோடு ஒட்டவைக்கிறது. எனினும் இந்த புத்தகத்தை இரண்டாக பிரித்து தனித்தனியாக அச்சடித்திருக்கலாம். புத்தகத்தை கையில் பிடித்து தொடர்ச்சியாக அரை மணி நேரம் படித்தால் போதும். தோள்ப்பட்டை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது.
இப்புத்தகத்தை நான் வாங்கி பல மாதங்கள் ஆனாலும் ஏற்கனவே வாங்கிய புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்ததால் சற்றே தாமதமானது. அதற்குள் எனது நட்பு வட்டாரங்கள் புத்தகத்தின் விமர்சனத்தை அடுக்கினர். அவற்றின் தொகுப்பே இது. என்னதான் சம்பவத்தை சுவாரசியமாக கூறினாலும் சம்பவத்தில் பங்கு பெறும் மனிதர்களின் பெயர்களும் அவர்களின் நாடும் பல சமயத்தில் நமக்கு மறந்து போகின்றன என்பது மறுக்க முடியாத விமர்சனமாக உள்ளது. புத்தகத்தை வாசித்த அனைவரும் கூறுகின்றதாக உள்ளது.
முதல் 200 பக்கத்தில் சுமார் 150-160 கதாப்பாத்திரங்களை ஆசிரியர் அறிமுகப்படுத்திவிடுகிறார். அதை ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரும்பாடாக உள்ளது. ஆனால் ஆங்காங்கே பக்கங்களில் கீழ் கொடுக்கப்படும் அடிக்குறிப்புகளில் ஆசிரியரின் கடும் உழைப்பு புலனாகிறது. சில சம்பவங்களை படிக்கும்பொழுது நமக்கு உண்மையாகவே மயிர்க்கூச்செரிதல் ஏற்படுகிறது. இந்த சம்பவம் நடந்திருந்தால் நமக்கு எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என்று நமக்கு தோன்றசெய்வதில் ஆசிரியர் வெற்றியடைகிறார்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் புத்தகத்தின் முதல் பாகம் சில சமயங்களில் ஏமாற்றத்தையும், சில சமயங்களில் சுவாரசியமாகவும், சில சமயங்களில் ஏக்கத்தையும் வரவழைக்கின்றன. ஆசிரியரின் முதல் முயற்சி என்பதை புத்தகத்தின் அளவில் மட்டுமல்ல, புத்தகத்தின் பக்கங்களிலும் நம்ப முடியவில்லை. முதல் முயற்சியிலே 1500 பக்கங்கள் எழுதுவது சாத்தியமல்ல. ஆனால் சக்திஸ்ரீ அவர்கள் அதில் மட்டுமல்லமால் வாசகர்களையும் வெற்றி கண்டிருக்கிறார்.