[6 Feb 2025 - 15 Mar 2025]
"கடவுளை இல்லாமல் வாழமுடியும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் வாழ முடியாது" என்று உலகநாயகன் கமல் ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னதாக ஞாபகம் எனக்கு.
இந்த புத்தகம் படித்துமுடித்தவுடன் எனக்கு தோன்றியதும் அதுவே. நாம் சந்திக்கும், பழகும் மனிதர்களே நம் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கிறவர்கள்.
ஜெயமோகன் தனக்கு அறிமுகமான மற்றும் நெருக்கமான ஆளுமைகள் பற்றி எழுதிய கட்டுரை தொகுப்பே "இவர்கள் இருந்தார்கள்". ஒரு வகையில் இவர்கள் - இலட்சியங்கள், கலை இலக்கிய சேவைகள் மூலமாக தங்களின் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள்.
* நித்ய சைதன்ய யதி - அத்வைத வேதாந்ததை ஆத்மாவாக கருதியவர்
* சு.சமுத்திரம் - சமூக பிரச்சனைகளின் கொந்தளிப்புகளை தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர். 'வேரில் பழுத்த பலா' அவரின் தலைசிறந்த படைப்பு.
* கடமன்னிட்ட ராமகிருஷ்ணன் - கவிதை மூலம் புரட்சி விதைத்த கேரளா கம்யூனிஸ்ட் சிங்கம். இவரின் 'க்ரதவிருத்தம்' கவிதை படிக்கவும். உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்.
* P.K. பாலகிருஷ்ணன் - கிரேக்கர்கள் (யவனர்கள்) மற்றும் அவர்களின் அக்கால வணிகம் தமிழ்நாட்டில் எப்படி இருந்தது என்பதை பற்றி தீவிர ஆராய்ச்சி செய்தவர். "ஜாதி அமைப்பும் கேரளா வரலாறும்" முக்கிய படைப்பு.
* ஜோதி பிரகாசம் - இவர் தீவிர மார்க்சிஸ்ட். ஆய்வாளரும் கூட. பழந்தமிழ் இலக்கியங்களில் ஆளுமை கொண்டவர்.
மற்ற கட்டுரைகளில் - சுஜாதா, ஹேமச்சந்திரன், பேராசிரியர் ஜேசுதாசன், அய்யப்ப பணிக்கர், க.நா.சுப்பிரமணியன், கந்தர்வன், கொச்சி ஹனீபா, லா.ச.ராமாமிர்தம், கவிஞர் ராஜமார்த்தாண்டன், சி.சு.செல்லப்பா, கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் என்று பல முக்கிய ஆளுமைகளுடன் தனக்கு கிடைத்தை அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
நாம் சம்பாதிக்க வேண்டியது பணம் மட்டும் அல்ல. மனிதர்களும், அவர்களுடனான அனுபவங்களும். அவர்களின் அன்பும், அறிவும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.