“அம்மா வந்தாள்" - தி.ஜானகிராமன்
=======================================
1966ல் முதற்பதிப்பு கண்ட நாவல். திரு தி.ஜானகிராமன் அவர்கள் 'சக்தி வைத்தியம்' என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இந்நாவல் மட்டுமல்லாது 'மரப்பசு', 'நாலு வேலி நிலம்', 'மோகமுள்', முதலான 9 நாவல்களை இயற்றியுள்ளார்.
இவரின் படைப்புகள் உன்னதமானவை, அற்புத கதை இலக்கியங்கள் என்றாலும், பிறழ்வுகளையும் மீறல்களையும், போன நூற்றாண்டின் மத்தியிலேயே கையாண்டிருக்கிறார்.
அப்படியான பிறழ்வை அந்தக் காலத்திலேயே நடப்பதாக அதுவும் ஒரு பிராமணத் தாய் அப்படியான மீறல்களை செய்வதாக புனைந்திருக்கிறார் 'அம்மா வந்தாள்' எனும் இந்நாவலில் இதற்காக, இவரை, 'பிரஷ்டம்'(ஒதுக்கிவைத்தல்) செய்ததாக தி.ஜா அவர்களே கூறியிருக்கிறார்.
கதையின் முக்கிய கதைமாந்தர்கள்:
தந்தை தண்டபாணி
தாய் அலங்காரம்
மூத்த மகன் கிருஷ்ணன்
மூத்த மகள் விசாலம்
இரண்டாவது மகன் அப்பு
மூன்றாவது மகன் கோபு
நான்காவது மகன் வேம்பு
கடைசி மகள் காவேரி
வேத பாடசாலை நடத்தி வரும் அத்தை பவானியம்மாள்
அவளது சகோதரனின், விதவை மகள் இந்து
தண்டபாணி வீட்டிற்கு வரும் நண்பர் சிவசுந்தரம்
வேதம் படிக்க 'அப்பு'வை சித்திரகுளமென்னும் காவிரிக்கரையிலுள்ள கிராமத்திற்கு சிறுவயதிலேயே, தாய் அலங்காரத்தின் வலியுறுத்தலின் பேரில், தந்தை தண்டபாணி சென்னையிலிருந்து அனுப்பிவைக்கிறார்.
அப்பு சித்திரகுளத்தில் வேதபாடம் கற்பது, பவானியம்மாள் அத்தை மற்றும் இந்து உடனான அனுபவங்கள், பாடம் முடித்து சென்னைக்கு திரும்பியதில் தண்டபாணி, சிவசுந்தரம் மற்றும் அலங்காரத்துடன் ஏற்படும் கசப்பான தர்க்கங்கள், மீண்டும் சித்திரகுளத்துக்கே பயணப்பட்டு இந்து மற்றும் வேதபாடசாலையை கவனித்தல் என முடிகிறது.
ஒரு சில படைப்புகளே, அவற்றை கடந்த பின்னும், மீண்டும் மீண்டும் ஆசை போட வைக்கும். அதாவது அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் மட்டுமே அப்படி ஒரு அசைபோடுதல் நிகழும். அப்படியான ஒரு படைப்புதான், 'அம்மா வந்தாள்'.
தி.ஜா ஏன் இப்போதும் கொண்டாடப் படுகிறார் என்பதற்கு இந்த ஒரு நாவல் கூட போதும். இந்நாவலின் முன்னுரையை 'மீறலின் புனிதப் பிரதி' என ஆரம்பிக்கிறார் சுகுமாரன். கிட்டத்தட்ட கதையை முழுதாக சொல்லிவிடுகிறார். ஆனால் நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன், அனைத்தையும் மறந்து 1960 களின் காவிரி கரையும், திருவல்லிக்கேணி வீதிகளும், கடற்கரையுமாக, 16 வருடங்கள் வேதம் படித்து, வேத வித்தாக பயணப்படும் 'அப்பு'வின் எண்ணவோட்டத்தை, வாசிப்பவனுக்குள் கடத்தும் விதமாக கதை செல்கிறது. அதாவது, கதை மாந்தர்கள் அனைவருக்கும், மீறல் நடந்திருப்பது தெரிந்திருக்கும், அப்புவுக்கும் வாசிப்பவருக்கும் மட்டும் அது தெரியாது. அப்படியான ஒரு கதை சொல்லல்.
அப்பு வழி மட்டுமல்லாது, இளம் விதவையான இந்து மற்றும், பேரழகையும் கம்பீரத்தையும் ஒருங்கே கொண்ட அலங்காரம் தாங்கள் எல்லை கடந்திருந்தாலும், இவர்களின் பார்வையில், அதற்கு காரணங்களும் பிராயச்சித்தங்களும் சொல்லும் விதமாக கதை உள்ளது.
அப்பு-இந்து, அப்பு-தண்டபாணி, அப்பு-அலங்காரம், இவர்களுடைய உரையாடல்கள் அவ்வளவு யதார்த்தமாகவும், ஆழ்ந்த தத்துவார்த்தங்கள் பொதிந்த தர்கங்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அப்படியான உரையாடல்களை வாசிக்கையில், நாம் ஏதோ தியானம் செய்வதைப் போல உணரவைக்கும்.
நிச்சயம் நமக்கு இது ஒரு புது அனுபவம்! உணர்வுக்குவியலும் உயிரோட்டமும் நிறைந்த கதை!
தி.ஜா அவர்களின் 'மோகமுள்', 'நாலு வேலி நிலம்'., திரை படைப்புகளாக வெளிவந்ததில் ஆச்சரியமில்லை !!!