இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
வைரமுத்து ✨
காகிதத்தில் தீட்டப்பட்டவை தான் என்றாலும், இந்த கவிதை பூக்களுக்குத்தான்
எத்தனை வாசனை?
எவ்வளவு அழகு?
எப்படி இவ்வளவு ஆழம்?
நானறியேன் !!
"கதிரவனுக்குக் கீழ் உள்ள அனைத்துமே கவிதைக்கான பாடு பொருள்கள்தாம்" என்று முகவுரையில் பொன்மணி வைரமுத்து அவர்கள் அழகாக முன் மொழிய, 183 பக்கங்களில் தன் கவிதைளால் அதற்கு வழிமொழிந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியுமே கவிபாடும் எனும் பொழுது வைரமுத்துவின் பொன்மணி இத்தனை கவிதையாய் முன்னுரை எழுதியதில் ஆச்சரியம் இல்லை தான். என்றாலும் அதில் உள்ள காதலையும் புரிதலையும் நிச்சயம் நான் கூறியே ஆகவேண்டும்.
கவிஞர்கள் மட்டும் அல்ல கனவுகாணும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் அந்த உலகில் சஞ்சரித்து சிரித்து அழுது புலம்பி புதியவர்களாக மீண்டும் இந்த மானுட உலகிற்கு திரும்பும் போது அவர்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கும் இணை கிடைப்பது வரமே. காத்திருப்பதோடு அல்லாமல் அவர்களின் உலகத்தின் அழகையும் அருமையாக வார்த்தை கொண்டு வர்ணித்துள்ள பொன்மணி அவர்களின் முகவுரை கவிஞர் மீதுள்ள அதீத காதலின் வெளிப்பாடாகவே எனக்குத் தோன்றுகிறது.
"வார்த்தைகளை வானவில்லாக்கி வண்ணஜாலங்களை வாரியிறைக்க நான் ஒன்றும் வைரமுத்து இல்லை ;வெறும் எண்ணங்களை மட்டுமே விளக்கத்தெரிந்த வாசகி" - பொன்மணி வைரமுத்து ✨