“ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”- ஜெயகாந்தன்
*********************************************
1973இல் முதற்பதிப்பு கண்ட, பேச்சுவழக்கில் எழுதப்பட்ட நாவல். என்னதான் ஜெயகாந்தனின் கதைமாந்தர்கள் அடித்தட்டு, வர்க்க வரிசையில் கீழ்ப்படியில் உள்ளவர்கள் என்றாலும், அறிவில் முதிர்ச்சியானவர்களாக அவர்கள் உருவாக்கப்படுவர்….பேச்சுகளிடையே போகிற போக்கில், மானுட வாழ்வியலுக்கான தத்துவங்களை உதிர்த்துசெல்லும் குருமார்கள் அவர்கள்.
அப்படியான தத்துவார்த்தங்கள் பொதிந்த உரையாடல்கள் நிகழ்த்தும் கதைமாந்தர்களாகவும், உக்கிரக் கதையாக இல்லாதவாரும் செல்கிறது.,மேலும், வாசிப்பவரை மேகத்தின் மீதமர்ந்து பயணிக்கும் மென்னோட்டத்தில், வாழ்வின் அழகியலை உணர்த்தி ரசிக்கும் அனுபவத்தை தருகிறது.
கிருஷ்ணராஜபுரம், குமாரபுரம் எனும் கற்பனை ஊர்களில் கதை நடக்கிறது. சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதனான 'ஹென்றி' என்பவன் கிருஷ்ணராஜபுரத்திற்கு பயணப்படுவதில் தொடங்குகிறது கதை. அவன் வருகிற லாரியில் உரிமையாளர் துரைக்கண்ணு, உடன் பயணிக்கும் தேவராஜன் என ஆரம்பித்து, ஹென்றி வந்த நோக்கம், அந்த கிராமத்து மக்கள், அவர்களது வாழ்வியல், ஹென்றிக்கும் அவனது தந்தைக்கும் நடந்த உரையாடல்கள், துரைக்கண்ணு குடும்பத்திடம் ஹென்றி காட்டும் பாசம், 'பேபி' எனும் புத்தி சுவாதீனமற்ற பேதை, ஹென்றி சொல்படி விசித்திரமாய் நடந்துகொள்வது என பல நிகழ்வுகளை கோர்த்து உணர்வுபூர்வமான கதையாக வழங்கியிருக்கிறார் திரு ஜெயகாந்தன். ஹென்றி, ஆங்கிலோ-இந்திய தாயால் வளர்க்கப்பட்டவனானதால், ஆங்கில உரையாடல்களாகவும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது.
உறவுகளுக்குள் பிரச்சனை, சொத்துக்கான(வீடு/நிலம்) வாரிசு பிணக்கு போன்ற பிரச்சனைகள் கதையில் இருந்தாலும், தீக்குணம் கொண்டவர், தீயவர் என எவரையும் சுட்டிக்காட்டாதபடிக்கு, பெருந்தன்மை பண்பும் நல்ல குணநலன்களுமுள்ள வெகு யதார்த்தமான கதைமாந்தர்களை கொண்ட படைப்பு இந்நாவல்.
திரு ஜெயகாந்தன் இந்நாவலின் முன்னுரையில், தன்னுடைய படைப்புகளில் தனக்கு பிடித்தமானதும் சிறப்பானதும் என இந்நாவலை குறிப்பிடுகிறார்.
இக்கதையில் வரும் அனைவரும் நல்லவர்கள் என்பதும், அதே நேரம், அவர்களை வலிந்து நல்லவர்களாக காட்டாமல், கதையோட்டத்தோடு அவர்களின் குணத்தை சொல்லி சென்ற விதமும், நமக்குள் ஒருவித 'பாசிட்டிவ்' உணர்வை கடத்துகிறது.
இன்றிலிந்து ஐம்பது வருடத்துக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்றாலும், தற்போதைய சமூகத்துக்கு தேவையானதாய் இருக்கிறது இக்கதை. இரத்த சம்பந்தம் இல்லாவிடினும், குடும்பமாய் ஒருமித்து சங்கமிக்கும் இக்கதைமாந்தர்களை போன்று, இப்படியான மனிதர்கள் சூழ் சமூகமாய் நாம் எப்போது மாறுவோம்?' எனும்படியான கேள்வியும் எழாமலில்லை. கதையின் ஒரு இடத்தில், பெருந்தன்மையின் சிகரத்தை காட்டி(ஹென்றியின் பேச்சை கேட்ட தர்மகர்த்தாவின் நிலை), வாசிப்பவரை உடையச் செய்யும்படியான நிலைக்கும் தள்ளுகிறது.
மொத்தத்தில், இந்நாவல் மூலம் வித்தியாசமான ஜெயகாந்தனை வாசித்த உணர்வை பெறமுடிகிறது. மேலும், இது ஒரு 'Feel-Good' நாவல் எனவும் கூறி பரிந்துரைக்கிறோம்.
திரு கோபுலு அவர்களின் ஓவியங்கள் நம்மடைய வாசித்தலுக்கு ஒத்துழைத்திருக்கிறது.
கதைமாந்தர்கள்:
* ஹென்றி-பப்பா எ சபாபதி பிள்ளை-மம்மா எ தெரசா-மைக்கேல்
* தேவராஜன்-அக்கம்மாள் (எ) அபிராமி
* துரைக்கண்ணு-நவநீதம் -பஞ்சவர்ணம்மாள்-வீரசோழன்-சபாபதி
* பாண்ட��
* மண்ணாங்கட்டி
* தர்மகர்த்தா கனகசபை முதலியார்
* மணியக்காரர் ராமசாமி கவுண்டர்
* கிளியாம்பா
* நாகம்மாள்
* வேலுக் கிராமணி
* போஸ்ட் ஆபிஸ் நடராசன் ஐயர்
* பேபி
1973இல் ஜெயகாந்தன் எழுதிய இப்புத்தக முன்னுரைலியிருந்து...
\
காந்திஜியை பற்றி ஐன்ஸ்டீன் சொல்லவில்லையா? 'வருகிற தலைமுறையில் இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொல்லுவதை நம்புவதுகூடச் சிரமமானதாயிருக்கும்' என்று.
/
\
பிறவிக்குருடனான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களான தருமனையும், துரியோதனனையும் அனுப்பி உலகமும் மனிதரும் எவ்விதம் இருக்கிறார்கள் என்று அறிந்து வந்து கூறப் பணித்தனன்.
தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து மகிழ்ந்து கூறினான்: 'புருஷர்கள் உத்தம சீலராய், பெண்கள் பதிவிரதைகளாய், மக்கள் சத்திய சந்தராய் வாழ்கிறார்கள்' என்று.
துரியோதனன் சொன்னான்: 'புருஷர்கள் சோரர்களாகவும், ஸ்த்ரீகள் விபசாரிகளாகவும், மக்கள் காமூகர்களாகவும் இருக்கிறார்கள்' என்று.
குருட்டு திருதராஷ்டிரன் உலகையும் மக்களையும் தருமனைப் போலவோ, துரியோதனனைப் போலவோ அல்லாமல், அவர்கள் கூற்றினால் - முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொண்டானாம்! இந்தக் கதையை ஒரு கிராமத்துக் கிழவனே எனக்குச் சொன்னான்; வியாசன் அல்ல.
/
\
வாசகர்களில், விமர்சனங்களில் தருமர்களும் உண்டு; துரியோதனர்களும் உண்டு. நான் திருதராஷ்டிரன் நிலையிலிருந்தே இதனை(இந்நாவல்) எழுதினேன்.
/
\
நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
/
\
இந்த கதையை நான் மிகவும் ரசித்து எழுதினேன். இது எனக்கு ஒரு விசேஷமான அனுபவம்.
...
'வாழ்க்கையின் இருண்ட பகுதிகளையே காட்டுகிறவன்' என்று என்னைப் பற்றி பாமரத்தனமான ஓர் இலக்கிய அபிப்ராயம் இருக்கிறது. ஆனால் இந்த கதை வாழ்க்கையின் ஒளி மிகுந்த பகுதிகளை மட்டும் காட்டுகிறது. மனிதர்களின் பலவீனத்தையே, அழுத்தம் தந்து, ஆணி அறைந்து காட்டுவதை நான் எனது நோக்கமாகவோ செயலாகவோ கொண்டிருந்ததில்லை. எளிமையும் அதே சமயம் உயர்வும் மிகுந்த மனிதப் பண்புகள் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன.
/
கதையிலிருந்து...
\
... (துரைக்கண்ணு) சமமான தரையில் லாரியை ஓட்டிக்கொண்டு வெகு நிதானமாக இவனைப் பார்த்து, ரொம்ப நேரமாக கேட்கலாமா, கூடாதா என்றிருந்த கேள்வியை கேட்டான்: "இந்த ஹிப்பி-ஹிப்பின்ராங்களே... அதுவா நீங்க?"
"நோ" என்று அதை மறுத்துவிட்டு 'I don't know' என்று தன்னுள் முனங்கிக் கொண்டான் ஹென்றி .
/
\
"கிளியாம்பா...கிளியாம்பா, நீ பார்க்கலையே அந்த சட்டைக்காரனை? இந்த அக்கம்மாளோட தம்பிக்காரன் இட்டுக்கிட்டு வந்திருக்கிறான். அவங்க வூட்டுக்கு விருந்தாடியாம்... ஏண்டி பொண்ணே, சட்டைக்காரருன்னா பறையரு, பள்ளரு போலத்தானே!... வூட்டுக்குள்ளே வுடலாமா?"
"அது இன்னாவோ போ. எனக்குத் தெரியாது" என்று கிளியாம்பாள்...
/
\
"அங்கே எல்லாம் இதுக்குக் கடலைன்னு பேரு... வேர்க்கடலைன்னும்... சொல்றாங்க; மல்லாக் கொட்டைன்னு பப்பாதான் சொல்லுவார்... மல்லாக்கொட்டை - ஏன் அப்படி ஒரு பேரு?" என்று விசாரித்தான் ஹென்றி.
"மணிலாக் கொட்டைங்கிறதுதான் மல்லாக்கொட்டைன்னு 'கலோக்கியலா' ஆயிடுச்சு. இது தென் ஆப்பிரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலிருந்து வந்ததுனால மணிலாக்கொட்டைன்னு பேரு" என்று விளக்கினான் தேவராஜன்.
/
\
"மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன்கூட்டியே தீர்மானம் ஒன்னுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளை பார்க்கலாம்" என்று ஆங்கிலத்தில் சொன்னான் ஹென்றி! "அண்ட் எனிதிங் கூட் பி லைக் எனி அதர் திங் !"
/
\
பார்க்காத உறவும், கேக்காத கடனும் பாழாப் பூடும்னு சொல்லுவாங்க.
/
\
"....ஒரு செடியை பாதுகாக்கிறதும் தண்ணி ஊத்துறதும்தான் நம்ம வேலை. அதில் என்ன காய்க்கணும்னுகிறதும் எப்படி காய்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே."
/
\
" எதுவும் அப்படியே இருக்காது மகனே ! வளரும், மாறும். ஆனால் மகனே, இதெல்லாம் அவ்வளவு முக்கியமில்லை, இல்லையா? நாம மூணு பேரும் ஒண்ணாவே இருக்கோம். - இதைத்தான் மகனே நான் கடவுள் கிட்ட வேண்டினேன். வேண்டுறதுன்னா கேக்குறதில்ல மகனே; விரும்பறது - நீ சொல்றயே 'ஐ விஷ்'னு - அதான்."
/
\
" நாம்ப தூரமா எங்கேயாவது நம்ம தேசத்தை விட்டு போயிட்டா, நாம்ப ஊர்ல இருக்குறபோது நமக்குள்ளே இருந்த தூரம் எல்லாம் கொறைஞ்சு போயிடும் மகனே."
/
\
'சாவி'தான் பொட்டி யாரோடதுங்கிறதுக்கு அடையாளம்"
/
\
" காலையில பெட்டியெடுத்துக்கிட்டு எல்லாரும் வூட்டுக்கும் வந்து திண்ணையில குந்தி சவரம் செய்துட்டு போவான்(பரியாரி பழனி). அவன் போனப்பறம் திண்ணையெல்லாம் தண்ணி ஊத்தி கழுவி விடுவாங்க - அவன் தீட்டாம்...
...
அந்த காலத்தில் எவ்வளவு மோசமா அவங்களை நடத்தி இருக்காங்கன்னு இப்பதான் புரியுது... சவரம்னா தலை, முகம்னு மட்டும் இல்ல... 'சர்வாங்க சவரம்' பண்ணிக்குவாங்க"
/
\
அந்த ஆத்துப்பக்கம் போனால் சீனரி நல்லா இருக்கும். ஜனங்களும் இருக்கமாட்டாங்க... ஜனங்க இல்லாத இடமே ஒரு அழகாத்தான் இருக்குது.
/
\
போஸ்ட் ஆபீஸ் ஐயர் தன்னை 'நடராஜன்' என்று அறிமுகம் செய்துகொண்டார். இப்போது கொஞ்ச காலமாக அவர் தன் பெயரோடு 'அய்ய'ரை சேர்த்துக்கொள்வதில்லை.
/
\
'அபீட்' ன்னா என்னா அர்த்தம் தெரியுமா? அது ஒரு இங்கிலீஷ் வேர்ட்... 'அப் -ஹிட்' தான் 'அபீட்...' என்று விளக்கினான் ஹென்றி.
/
\
'அம்பேல்' - அதற்கு என்ன அர்த்தமென்று உங்களுக்குத் தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டான் ஹென்றி.
"அம்பேல்னா, பசங்க விளையாடும் போது சொல்லிக்கிற வார்த்தை. ஒருத்தன் அதைச் சொல்லிட்டான்னா அவனை மாட்டி வைக்க கூடாது."
" எக்ஸாக்ட்லி ... அதுக்கு ஏன் 'அம்பேல்'னு சொல்லணும்? இதைப்பற்றி யோசிச்சிருக்கீங்களா?" என்று கேட்டுவிட்டு ஹென்றி ஏதோ கவிதைக்கு பொழிப்புரை செய்கிற மாதிரி விளக்கினான்: "அம்பேல் என்பது - (I am on bail)ஐ யாம் ஆன் பெய்ல் - வேகமாக சொல்லிப் பாருங்க. ஐய்ம் ஆம்பேய்ல். அய்ம்பேல் - அம்பேல் என்று குதூகலமாக அவன் விளக்கியது மிகப் பொருத்தமாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருந்ததால் தேவராஜன் வியப்புடன், "நீங்க சொன்னது சரியா இருக்கலாம்" என்று ஒப்புக் கொண்டான்.
எனக்கு இது எப்படி தெரிஞ்சதுன்னா 'ஐ ஸ்பை' விளையாட்டும் இப்படித்தான்.(I Spy) - தான் ...மத்தியானம் அந்த பையன் சொல்லுச்சு - ஐ ஸ்பை ஆட்டத்திலேதான் 'அம்பேல்' உண்டுன்னு."
/
\
"எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான்... நம்ப மாதிரி லாரி ஓட்டுறவன்தான் - தெற்கத்தியான்... நாடாரு - அவன் இந்து. அவன் பொண்டாட்டி கிறிஸ்தவ மதம்... அதுக்கு என்னா சொல்றே?"
" புள்ளைங்கே எல்லாம்? என்று குறுக்கிட்டாள் நவநீதம்.
"புள்ளைங்கல்லாம் புள்ளைங்கதான்... ஏதாவது மதமாத்தான் இருக்கணுமா என்ன? அவர்களுக்கு வயசு வந்தப்புறம் அப்பா ஜாதியா, அம்மா ஜாதியான்னு முடிவு பண்ணிக்கிதுங்க... இல்லாட்டி ஒரு ஜாதியுமில்லாம நம்ம ஹென்றி மாதிரி இருந்துட்டு போகட்டுமே.. " என்று சொல்லிக் கொண்டு வந்த துரைக்கண்ணு....
/
\
" ஸ்டில் ஐ ஹேவ் நோ எனி ரிலிஜியன்! எனக்கு மதம் இல்லை" என்றான் ஹென்றி .
" ஆனால் சாமி கும்பிடுறியே ..." என்று குறிக்கிட்டு கேட்டான் துரைக்கண்ணு.
"எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்?" என்று அவன் கேட்டது துரைக்கண்ணுவை சிறிது யோசிக்க வைத்தது. அவன் சொன்னது ரொம்பவும் சரி என்று யோசிக்க யோசிக்கப் பிரகாசமாய் புரிந்தது துரைக்கண்ணுவுக்கு. திடிரென்று தலையை உலுப்பிக் கொண்டு சிரித்து அவனை பாராட்டினான் துரைக்கண்ணு: "சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்!...சபாஷ் தொரை..."
/
\
(ஹென்றியின் தந்தை எழுதிய உயிலை ,எடுத்துரைத்தபோது ).." நான் ஒரு ஹிந்து. என் மூதாதையர்கள் எல்லாம் சைவ மதத்தை நம்பி என்னென்ன மாதிரி வாழ்ந்து எப்படி சிவலோகம் பதவி அடைந்தார்களோ, அப்படியே போக விரும்புறவன் நான். நான் இறந்து போனால் இந்து வைதீக முறைப்படி என்னை தகனம் செய்ய வேண்டியது. என் பெயராலே ஒரு பிடி சாம்பல் கூட இருக்கக் கூடாது. 'நான்' என்கிறது இந்த சபாபதி பிள்ளையோ இந்த உடம்போ இல்லை. அதனால இந்த சபாபதி பிள்ளைக்கு அல்லது எனக்கு சொந்தம்னு இருக்கிற - அப்படி யாராவது இருந்தால் அவங்க அந்த சொந்தத்தை அவங்க கையாலே அழிக்கிறதுக்கு அடையாளமாக அவங்க கையாலேயே கொல்லி வைக்க வேண்டியது. இது ஒரு கட்டாயமோ என் இஷ்டமோகூட இல்லை. இது ஒரு வழக்கம் இதை செய்ய வேண்டியவன் என் ஸ்வீகாரப் புத்திரனான ஹென்றிதான்..."
/