நட்சத்திரவாசிகள்
ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்ரமணியன்
நாவல்
காலச்சுவடு பதிப்பகம்
264 பக்கங்கள்
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு வெவ்வேறு வாழ்க்கைகளை ஒரே தருணத்தில் மாறி மாறி வாழ்கிறான். ஒன்று வெளி உலகத்திற்காக வேஷம் போட்டு வாழும் புற வாழ்க்கை, மற்றொன்று தன் முழு சுயத்தையும் நிலை நாட்ட தன் ஒட்டு மொத்த ஆதிக்கத்தை செலுத்த முயலும் அகவாழ்கை. மனிதன் இவ்விரண்டு வாழ்க்கைகளையும் தெளிவாக பிரித்து வாழ்ந்து தன்னை தானே ஒரு பெரும் அறிவாளியாக நினைத்து கொண்டுள்ளான். ஆனால் நிதர்சனம் வேறு. இப்படி இரண்டு வாழ்க்கையை ஒரு சிலந்தி வலை போல பின்னி, தொடங்கிய இடத்தையும், முடியும் இடத்தையும் மறந்து, தான் பின்னிய வலையில் தானே சிக்கிக்கொண்டு இறுதியில் இரைக்காக பின்னப்பட்ட வலையில் தானே ஒரு இரையாக மாறி, வாழ்க்கை எனும் சிலந்தி வலைக்கு இரையாகிறான். அவன் மட்டும் இரையாவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்க்கை துணைக்கும் அந்த துன்பத்தை சரி பாதி பகிர்ந்து விட்டு செல்கிறான். இப்படி பட்ட ஒரு கதைதான் இந்த நட்சத்திரவாசிகள் நாவல்.
முழுக்க முழுக்க நிகழ் காலத்தில், சென்னை எனும் பெருநகரத்தில் மென்பொருள் நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிகழும் கதைகளின் உலகம் தான் இந்த நட்சத்திரவாசிகள். அந்நிறுவனத்தின் செக்யூரிட்டி -யுடைய வாழ்க்கையுடன் கதை தொடங்குகிறது. இரண்டு அணிகள், அந்த அணிகளின் தலைவர்கள் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கைகுள்ளும் கதை நகர்கிறது.
ஒரே இடத்தில் தங்கள் பணியை தொடங்கிய வேணுகோபால், சத்தியமூர்த்தி - நிறுவனத்தின் சூட்சமத்தால் ஒருவர் மேலே ஒருவர் கீழே செல்ல, இருவருக்கும் இடையே நீடிக்கும் பணிபோர்.
அணிக்கு தலைவராக இருந்தாலும் இல்லத்தில் தன் மகளுடன் தனியே வாழும் / வாடும் அர்ச்சனா
குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையை சுமந்து அமெரிக்கா வரை சென்று திரும்பும் விவேக் இழந்ததோ ஈடுசெய்ய முடியாதவை.
நிகழ்கால மென்பொருள் துறையின் புதுமண தம்பதியரின் வாழ்க்கையை எதார்த்தமாக நம் கண்முன் விரியும் நித்திலன் - மீரா வாழ்க்கை.
நவீன யுகம் காட்டும் கானல் நீரில் மூழ்கி கரையேற முடியாமல் இருந்த வேலையும் கைவிட்டு போகும் தருணத்தில் தத்தளிக்கும் சாஜு - பல நடுத்தர வயது குடும்பஸ்த்தர்களின் பிரதிநிதி.
இக்கதையில் என் உள்ளம் வரை சென்று பல நாட்களாக உழன்று கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம் - பார்கவி. பார்கவி இந்த நவீன அதிவேகமாக சுழலும் உலகில் சிக்கி சிதைந்த ஒரு அப்பாவி. அவள் இறக்கவில்லை. ஆனால் அவள் உயிர் மட்டும்தான் உள்ளது. சிலரின் சுயநலமும், போட்டியும், பொறாமையும், முதலாளித்தனமும் அவளின் மென்மையான மனதை பிணந்திண்ணி கழுகுகள் போல் கொத்தி தின்று செறித்து விட்டு ஒரு குப்பையை போல் அவளை வீசியெறிந்த காட்சி என் உள்ளத்தில் இருந்து அகல மறுக்கின்றது.
இப்படி இவர்கள் எல்லோருக்கும் தனி தனியே சிக்கல்கள் இருந்தாலும், இவர்களை இணைப்பது இவர்களின் வேலையும், வேலைகளுக்கு நடுவே சிறு சிறு உரையாடல்கள், சந்திப்புகள், வீட்டு விசேஷங்கள், போன்றவை மட்டுமே.
இந்த கதையை இரண்டு பார்வை கொண்டு பார்க்கலாம். தொழில் வழி இவர்கள் எப்படி பெரும் முதலாளிகளால் ஈவு இறக்கிமின்றி சுரண்டப்படுகிறார்கள். இன்னொரு பார்வை இவர்களின் மனம் வரை சென்று பார்ப்பது. நான் அப்படித்தான் இந்த கதையை பார்க்க முயல்கிறேன்.
5 எண்களில் ஊதியம், மிடுக்கான உடை, நவீன உபகரணங்கள், அடுக்குமாடி குடியிருப்பு, நாவில் புரளும் ஆங்கிலம், வார இறுதி கொண்டாட்டங்கள், வெளி நாட்டு வேலை வாய்ப்பு, சொந்த வீடு, நவீன வாகனகங்கள் என வெளி உலகம் காட்டும் பிம்பம் இதுவாக இருக்க, அவர்களின் மனம் காட்டும் உண்மையோ வேறு, சோர்வு, சுரண்டல், சுமை, வெறுமை, பகைமை, தனிமை, அடிமைத்தனம், துரோகம், தோல்வி, என இந்த வெளி உலகம் காணாத ஒரு மனச்சிறைக்குள் தினம் தினம் தள்ளப்பட்டு வதைக்கப்படுகின்றனர்.ஆசிரியர் கூறுவது போல " இங்கு நாங்கள் கூட்டமாக தெரிந்தாலும், இங்கு நாங்கள் அனைவரும் தனி தனியே தான் உணர்வோம் "
மனிதன் இந்த உலகில் இத்தனை காலம் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் என்றால் அதற்கு காரணம் நம்பிக்கை தான். ஒரு மனிதனின் துயரத்திற்கு தோள்கொடுக்க இன்னொரு மனிதன் தான் வருவான் என்பதை இக்கதை நெடுக உணர்த்தப்படுகிறது. நம் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைப்பதற்கும், தாங்கி பிடிக்கவும் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் இரு கரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.உங்கள் வலிகளை கண்ணீராய் சிந்தி விடுங்கள், துடைக்கும் கரங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
--இர. மௌலிதரன்.
31-3-23