நெசவினைக் குலத்தொழிலாகவும், செளடேஸ்வரி அம்மனைக் குலதெய்வமாகவும் கொண்டவர்கள் கன்னடம் பேசும் தேவாங்கச் செட்டியார்கள் சமூகத்தினர். ற்போதைய மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் உஜ்ஜயினி அவர்களின் பூர்வீகமாகக் கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முகலாய மன்னர்களின் படையெடுப்பின் காரணமாக அங்கிருந்து தப்பி, ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகரப் பேரரசை வந்தடைகிறார்கள். அதன் பின்னர் நடைபெற்ற பாமினி சுல்தான்களின் படையெடுப்பால் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தமிழகப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படி வந்த அவர்கள், இன்றைய கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக குடியேறியுள்ளனர். (பதினைந்தாம் நூற்றாண்டில் திருப்பூர் உள்ளிட கொங்கு மண்டலமும் விஜய நகரப் பேரரசின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது). அவ்வாறாக அவிநாசி அருகேயுள்ள உமயஞ்செட்டிப்பாளையத்தில் குடியேறிய 64 குடும்பங்களைப் பற்றிய கதையே இந்நாவல்.
எம்.கோபாலகிருஷ்ணன் (டிசம்பர் 2, 1966) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் மொழியாக்கங்களும் செய்கிறார். திருப்பூர் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் படைப்புக்களால் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.