விசாரணையிலும், உடற்கூறு பரிசோதனையிலும் ‘அம்மணியின் மரணம் இயற்கையானது’ என்ற காரணத்தால் பூயான் விடுதலையானான். போலீஸ் அவனை விட்டுவிட்டாலும்கூட அம்மணி பூயானை விட்டு விடவில்லை. தூக்கத்தில் வந்தாள், விழிப்பில் வந்தாள், கனவில் வந்தாள், கக்கூசிலும் வந்தாள். பூயான் மிரண்டு போனான்.
ஆனாலும் அம்மணி மீதிருந்த மையலும், அம்மணி அவனுக்கு அளித்த அபாரமான சுகமும் அவள் மீதான காதலை அதிகப்படுத்தி, அவளது பிரிவின் மீதான துயரத்தை விஸ்தாரப்படுத்திய வண்ணம் இருந்தன. ‘குடிகுடி’ என குடித்துத் தொலைத்தான்.
நள்ளிரவுகளில் அம்மணியின் வரவு ஆரம்பத்தில் பயமுறுத்தினாலும், அவள் மீதிருந்த காதலும் காதல் சார்ந்த எண்ணங்களும் அவளது வரவையே விரும்பியது.