கவிதைகள் குறித்த யுவன் அவர்களின் கட்டுரைகளின் தொகுதி. தானே ஒரு கவிஞனாக இருப்பினும், ஒரு வாசகனாகவே கவிதைகளை அவர் இக்கட்டுரைகளின் வழி அணுகியிருப்பது முதன்மையான சிறப்பு. கவிதைகள் குறித்த திறனாய்வு எனும் பெயரில் விளக்கவுரைகள் செய்கிற வேலையை இதில் எங்கும் அவர் செய்யவில்லை என்பது இரண்டாவது நல்ல அம்சம்.
கவிதைகளின் நுட்பம், சாரம், அணுகுமுறை, பாணி, நோக்கம் போன்ற அம்சங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொரு பொருண்மையை எடுத்துக் கொண்டு அதற்குப் பொருத்தமான கவிதைகளையும், அவை சார்ந்த சுவையான தகவல்களையும் தனக்கேயான தெளி நடையில் முன்வைக்கிறார். பெரும்பான்மை நவீன கவிதைகளைக் குறித்த பார்வை என்கிற போதிலும், பரவலாக மரபுக் கவிதைகளையும், ஆங்காங்கே தமிழ் கவிதைகளின் மரபுத்தொடர்ச்சியை அடிகோடிட்டுக் காட்டும் விதத்தில் சங்கப் பாடல்களை எடுத்துக் காட்டவும் செய்திருக்கிறார்.
எடுத்துக்காட்டும் கவிதைகளை விளக்க முற்படாமல் அது ஒரு வாசகனாக தன்னுள் கிளர்த்துகிற எண்ணங்களையும், அது மனதில் தூண்டுகிற கேள்விகளையும் அடுக்குவதன் மூலம், கவிதை வாசித்தலென்பது ஒரு கலை செயல்பாட்டு அனுபவம் என்பதை மிக அழகாக சொல்லாமல் சொல்லி இருப்பது தான் என்னைக் கவர்ந்த பிரதான அம்சம். அவர் கவிதைகளை அணுகுகிற விதமே , என் போன்ற ஒரு வாசகனுக்கு 'நீ எவ்வளவு கேட்கிறாயோ அவ்வளவு கொடுக்கும் கவிதை' என எடுத்து காட்டுவது போலிருந்தது.
மேலும் பல இடங்களில் கவிதைகளை அணுகுதல் என்பது எத்தனை subjective ஆனது என்பதை என் அளவில், என் பார்வையில் என்ற சொற்பிரயோகங்களோடே எந்தவொரு கவிதையையும் குறித்த தனது பார்வையை, புரிதலை முன்வைக்கிற விதம் அணுக்கமாக இருக்கின்றது.
ஒரு சொல்லுக்குள் எவ்வளவு பொருளைப் பொதிந்து வைக்கலாம், கவிதையில் சொல்லிய சொற்களை விடவும் சொல்லாமல் விடுபட்ட இடைவெளிச் சொற்களை இட்டு நிரப்பும் நெளிவுசுளிவுகளை வளர்த்துக் கொள்வதன் வழியாக எவ்விதம் ஒரு கவிதை இன்னும் தன்னைத் திறந்து காட்டுமென பல இடங்களில் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிச் சொல்கிறார்.
வெறும் நேரப் போக்கிறகாக அல்லாமல் உண்மையிலேயே கவிதை எனும் இலக்கிய வடிவத்தை, குறிப்பாக நவீன கவிதைகளை அணுகுவது குறித்த ஒரு பார்வையை பெற விரும்புகிற எந்த ஒரு வாசகருக்கும் இந்நூலின் வாசிப்பனுபவம் நிறையவே நல்கும்.