நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின்னைப் புதுமையை தாவிப் பற்றும் நாட்டத்தால் உயிர்ப்பான மரபினின்றும் தன் வேர்களை துண்டித்துக் கொண்டு விடாத தன்மையால், காருண்யத்தை நீதியுணர்வை விழுமியங்களை வற்புறுத்தும் வகைமையால் தனித்து நிற்பவை இவரது கதைகள். நாஞ்சிலின் நாற்பது வருடத்துக்கு மேலான எழுத்து வாழ்வின் தடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இத் தொகுப்பில் அவருடைய ஆகச் சிறந்த கதைகள் இடம்பெற்றுள்ளன.
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
தமிழில் அதிக நாவல்கள், சிறுகதைகள் அல்லது கிளாசிக்கல் இலக்கியங்களை இது நாள் வரை படித்தவனில்லை. எதோ ஒன்றிரண்டு தேர்ந்தெடுத்த புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் . ட்விட்டர்/எக்ஸ் தளத்தில் தெரியாத ஒருவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சாலப்பரிந்தும் ஒன்று, என் கவனத்தை ஈர்த்தது. நான் சென்னையில் இருந்தபோது வாங்கினேன், முதல் கதையான விரதம் என்னை கவனச்சிதறல் இல்லாமல் படிக்க வைத்தது , ஆழமாகப் பாதித்தது. வெளியிடப்பட்ட ஆண்டுகளின் காலவரிசைப்படி கதைகள் தொகுக்கப்பட்டன என்று நினைக்கிறேன். கதைகளின் வயதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமாக இருந்தன. நிலம், அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பு பற்றிய ஆழமான சிந்தனை உணர்வை தூண்டும் ஒரு தலை சிறந்த சிறுகதை தொகுப்பு. தமிழ் உள்ளங்கள் அனைவரும் இதில் ஒரு சிறுகதையையேனும் வாழ்நாளில் கட்டாயம் படிக்கவேண்டும் .