கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
கட்டபொம்மன் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் இருந்து பல காரணங்களால் குடி கிளம்பி வந்து, தமிழ்நாட்டில், குருமலை சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டு மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல். 1976ல் முதற்பதிப்பு கண்டது.
கதை தொடக்கத்தில், இளங் கர்ப்பணியானவள், அவளின் பாம்படத்திற்காக கள்வன் ஒருவனால் நீரில் அழுத்தப்பட்டு இறக்கிறாள். அப்போது அக்கள்வனின் கால் கட்டை விரலை, அவள் கடித்தபடி இருந்ததனால் துண்டாகிறது*. அதனை அங்கு வந்த குடியானவன் கண்டுபிடித்து கோட்டையார் கோவிந்தப்ப நாயக்கர் முன் நிறுத்தி, அவனுக்கு தண்டனையளிக்கும் விதமாக கழுவேற்றுகின்றனர். இச்சம்பவங்களுக்கு நடுவேதான் மங்கத்தாயார் எனும் பூட்டி, அவர்கள் புலம் பெயர்ந்த கதையை கூறுகிறாள்.
அதாவது,
ஆந்திர தேசத்து தெலுகு கம்மவார்கள், அவர்கள் வீட்டு பெண்ணை(சென்னா தேவி) மணம் முடிக்க சுல்தான் அழைக்கிறான் என்பதற்காக, அவனுக்கு பயந்து தெலுங்கு தேசத்திலிருந்து தெற்குநோக்கி புறப்படுக்கின்றனர். அத்தகைய பயணங்களில் பசி, பஞ்சம், நோய், காடு, கள்வர்கள் தொல்லை என பல இன்னல்களுக்கு இடையே பயணிக்கின்றனர்.
வழியில் அவர்களுக்கு பெருந்தெய்வம் ஒன்று, அக்கூட்டத்து பெண்ணின் மேல் அருள் பிரசன்னமாகி, கோவில் எழுப்பச் சொல்லியும், அதன் சுற்றுப்புறத்தில் உள்ள காட்டை திருத்தி விளைநிலங்களாக்கி பயன்படுத்தும்படியும் உத்தரவிடுகிறது. காலப்போக்கில் கோட்டையார் தலைமை பெருங்குடும்பம் அவர்களை வழி நடத்துகிறது.
மேற்சொன்ன சம்பவங்களின் போது 9 வயது பெண் குழந்தையாக இருந்த மங்கம்மா, 137 வயது பூட்டியான பின், மங்கத்தாயாராக தனது சந்ததியினருக்கு தங்களது வரலாறை கூறுகிறாள்.
இம்மாபெரும் தேசத்தில் தாம் வசிக்கும் இந்த கிராமம், கும்பினியாரின்(East India Company) ஆட்சியில் உள்ளதா அல்லது முஸ்லீம் ராஜாக்களின் ஆட்சியில் உள்ளதா எனத் தெரியாத அளவில் அக்கிராமத்தினர் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது
மேலும் அக்கிராமத்தில் நடந்த சிறு சிறு சம்பவங்களை கூறும்போது, அதுவே ஒரு சிறுகதையாகவும் அமைந்திருக்கிறது.
உதாரணத்திற்கு, திருடர்களை அக்கிராமத்தினர் எதிர்கொள்வது, காடுகளை திருத்துவதற்கு எரியூட்டப்பட்ட யுக்தி, அப்போது காட்டிலிருந்து வெளிப்படும் உயினங்களைப் பிடித்து எப்படி பயன்படுத்திக்கொள்வது, தாய் பசுவை இழந்த கன்றுக்குட்டியை இன்னொரு (பிற கன்றை சேர்க்காத) தாய்ப்பசுவிடம் பால் அருந்த சேர்த்து வைக்கும் யுக்தி, ஊர்மக்களுள் உள்ள பல குடும்பஸ்தர்களின் பெயர் காரணங்கள், அவரது குணங்களை பற்றிய விவரணைகள், கோவிந்தப்ப நாயக்கரின் அத்தை வெங்கடம்மாவின் வீட்டிற்கு அக்கையா விதைக்கம்மல் புள் கொடுத்துவிட்ட சம்பவம் என துணுக்கு செய்திகளும் குறுங்கதைகளும் நிறைந்திருக்கிறது.
கடைசியில், கும்பினியார் எனும் ஆங்கிலேயர் நட்பு, கோட்டையாரைய் கிராம மணியமாக நியமிப்பது, பின்பு கும்பினியாரிடமிருந்து விக்டோரியா ராணியின் ஆளுமைக்கு கீழ் இந்த தேசம் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக 'நாட்டுக்கு பீடை பிடித்துவிட்டதாக'வும், 'புயலுக்கு முன்னுள்ள அமைதி' எனவும் சொல்லி நிறைவடைகிறது நாவல் .
பல கதைமாந்தர்கள் இருந்தாலும், கோவிந்தப்ப நாயக்கர், ஊர்குடும்பன் அக்கையா, மங்கத்தாயார் என முதன்மை கதைமாந்தர்களே கதை நெடுகிலும் பரவலாக பயணிக்கின்றனர்.
இந்நூலை முற்போக்கு, பிற்போக்கு என்று வறட்டுத் தனமாக மதிப்பிட முடியாது. நாட்டு பண்பாட்டு மரபில் தோன்றிய ஒரு வரலாற்று நாவல் இது. இதில் மெய்யியல் பார்வை விஞ்சியும், இயல்பியல் (Naturalism ) குறைந்தும் காணப்படுகிறது.
நாட்டுப் பண்பாட்டை (ஒரு சாதியாரின்) பரிபூரணமாக வெளிப்படுத்தும் சிறந்த படைப்பிலக்கியம்
இந்நூல்.
திரு கி.ராஜநாராயனின் இந்நாவல், 200லிருந்து 300 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று, புலம் பெயர்தல், நாட்டார் வழக்கு வாழ்வியல் போன்ற அறிய தகவல்களை சுவாரசியமாக சொல்லியபடி செல்கிறது.
திரு. கி.ரா தனது "கோபல்லபுரத்து மக்கள்" எனும் நாவலை இரண்டாம் பாகமாக வாசிக்கலாம் என அதன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
* - முதல் மரியாதை எனும் திரைப்படத்தில் கால் கட்டை விரல் சம்பவம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.
புத்தகத்திலிருந்து....
\\
தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், முஸ்லிம் ராஜாக்களுக்கு பயந்து கொண்டு வந்தவர்கள் இப்படி இப்படி .
கம்மவார் என்று பெயர் வந்ததற்கு மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் காரணம் ...காதுவளர்த்து வளையம் போன்ற "கம்ம" என்ற காது ஆபரணத்தை இந்த பெண்கள் அணிந்து கொள்வதால் இப்பெயர் வந்தது என்று சொல்லுவாள்.
கம்மவாரின் முதல் தோன்றலை பற்றியும் ஒரு பூர்வ கதை சொல்லுவாள். நாகார்ஜுன மலையில் வீரம் நிறைந்த ஒரு ராட்சத பெண் இருந்தாளாம். அவளை அடக்க யாராலும் முடியவில்லையாம். அழகும் வீரமும் கொண்ட ஒரு பிராமணன் அவளை அடக்கி அவளுடைய மூக்கில் துறட்டியை போட்டு இழுத்துக்கொண்டு வந்தானாம்.
மூக்கில் தொறட்டியை போட்டு அவளை இழுத்துக்கொண்டு வந்ததால் அந்த தொரட்டியையே அவள் ஆபரணமாக விரும்பி போட்டுக் கொண்டாளாம். ஆகவே தான் அவர்களுடைய சந்ததி ஆகிய நமது பெண்டுகள் இன்றும் மூக்கில் தொறட்டி என்ற ஆபரணத்தை அணிந்து கொண்டிருக்கிறோம் என்பாள் .
//
\\
உதடுகள் புன்னகைக்கும் போது வாயின் அழகு பல அதிகமாகிவிடும், சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும் போது அவைகள் இளஞ்சிகப்பின் எல்லையைத் தாண்டி குருவி ரத்தம் போல் செஞ்சிக்கப்பாகிவிடும்.
அவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின்கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான்! புல்லாக்கில் அப்படி ஒரு முத்தைக் கோர்த்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஒரு ஆசாரிக்குத் தோணியிருக்கே, அது எப்பேர்ப்பட்ட ரசனை!
//
\\
"ஆத்மா பிரிந்து பயணப்படும் போது நாம் அழுதால் நம்முடைய கண்ணீர் போல் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே வெள்ளம்போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம் தடைப்பட்டு போகும். ஆத்மா பிரிந்த பிறகும் அழலாம். பிரிந்து கொண்டிருக்கும்போது அழவே கூடாது."
//
\\
ஸ்ரீரங்கத்தை பார்த்து ஜனங்கள் சாரை சாரையாய் போய்க் கொண்டிருந்தார்கள். அது திருவிழா காலம்.
நாங்களும் மெல்ல எழுந்து நடந்தோம்.
காவிரியில் எங்கள் உடலை நினைத்தோம்.
ஸ்ரீ ரங்கநாதனை போய் பார்த்தோம். உலகத்துக்கெல்லாம் படி அளந்து விட்டு மரக்காலைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு நிம்மதியாக படுத்திருக்கிறான்.
வெள்ளை நிறமுள்ள ஒரு பெரிய கிளி ஆலம்பழத்தின் நிறத்திலுள்ள தன் சிகப்பு அலகை திறந்து "ரங்கா...ரங்கா" என்று சொல்லிக் கொண்டே இருந்தது அந்த பெரிய கோயிலில்.
//
\\
காலையிலிருந்து சாயங்காலம் வரை முப்பது பெண்கள் அவரது பொறையில் வந்து உழைத்தார்கள். உழைப்பு நேரத்தின் மத்தியில் அவர்களுக்கு இரண்டு விடுப்பு நேரம்(இடைவேளை) உண்டு. நாள் ஒன்றுக்கு கூலியாக அவர்களுக்கு கைநாழிக்கு இரண்டுபடி கம்மம்புல் தானியம் கொடுத்தார். இந்தப் பொறைதான் சமுதாயத்தில் தோன்றிய முதல் தொழிற்சாலை!
//
\\
கல்யாணம் ஆகாதவர்கள் அந்தக்காலத்தில் திருமணத்தன்று தான் முகச்சவரம் செய்து கொள்வது வழக்கம். அதுவரையும் முகத்தில் தாடிதான்! எங்கட்ராயுலுவுக்கு கல்யாணமே ஆகவில்லை. கல்யாணவயசைத் தாண்டி அவருக்கு ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது. அதனால் தாடியும் நிலைத்து விட்டது. இந்த 'கட்டு'வை முதலில் மீறியவர் அந்த தலைமுறையில் அக்கையா ஒருத்தர் தான். அந்த தைரியம் வேறு யாருக்கும் அப்போது வரவில்லை.
//
\\
இந்த இந்தச் செடிகள் இந்த வருஷம் அதிகம் முளை த்திருக்கிறது. ஆகவே மனிதர்களுக்கு இந்த வருஷம் இந்த இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படும் என்று சொல்லுவார்!
//
\\
தீண்டாத ஜாதியை சேர்ந்தவர்கள் வைத்தியத்துக்கு வந்தால், அவர்களுடைய கையின் மேல் போட்டுப் பார்ப்பதற்கு ஒரு மெல்லிய பட்டுத்துணி வைத்திருக்கிறார். அதை போட்டுத்தான் நாடி பார்ப்பார்.
//
\\
தன்சாவு இல்லாத கர்ப்பிணிகளை அடக்கம் செய்வதற்கு முன்னால், வயிற்றில் குழந்தையோடு புதைக்க மாட்டார்கள். வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்து பக்கத்தில் வைத்துத்தான் புதைப்பார்கள்.
இந்த சமயத்தில் என்ன செய்வது என்று ஒரு கேள்வி வந்தது. "அவளை ஒரு 'கோலமு'ம் செய்ய வேண்டாம்; அப்படியே புதைச்சிடுங்கய்யா" என்று கேட்டுக் கொண்டார் ஆசாரியார்.
'அப்படியே புதைத்தால் சுமைதாங்கி கல் வைக்கணுமே' என்று கூடியிருந்தவர்களில் ஒரு குரல் கேட்டது.
//
\\
மண்வெட்டியால் மண்ணை இழுத்து குழிக்குள் தள்ளினார்கள். சடலத்தின் மேல் மண் விழும்போது திட்திட் என்று ஒரு சத்தம் கேட்டது.பாதிக் குழி நிறைந்தவுடன் ஒருவன் குழிக்குள் இறங்கி நன்றாக மண்ணைக் காலால் மிதித்து இறுக்கினான். மண் விழ விழ எல்லாப் பக்கங்களிலும் நடந்து அவன் மிதித்தான். முக்கால்வாசி நிறைந்தவுடன் இலந்தை முள்ளைப் போட்டு அமுக்கி அதன்மேல் மண் போட்டார்கள். இது நரி, ஓநாய் போன்ற காட்டு மிருகங்கள் வந்து தோண்டி உடலை தின்று விடாமல் இருக்க. குழி நன்றாக மூடப்பட்டுவிட்டது. இப்பொழுது அந்த இடத்தில் ஈர மண்ணால் ஆன ஒரு சிறிய மேடு மட்டுமே மிஞ்சியது.
//
\\
அப்போது அந்த கருப்பு அதிகாரி சொல்லுவார். 'மிருகங்களில் மட்டும், பின்வாங்கி ஓடுவதை ஜெயித்த மிருகம் துரத்தாமல் விட்டுவிடுகிறது; ஆனால் மனிதனில் மட்டும் ஏன் அப்படி இல்லை?'
இந்த கேள்வியிலுள்ள தாத்பரியத்தை அந்த வெள்ளை அதிகாரி வெகுவாக ரசித்தார். பிறகு சொன்னார்; 'மனிதர்களிலும் எப்படி சில உயர்ந்த பண்புகள் உண்டோ, அதைப் போலவே மிருகங்களிடத்திலும் அவைகளுக்கு என்று சில உயர்ந்த பண்புகளும் இருக்கின்றன' என்றார்.
//