குடிநாசுவர்கள் எனப்படும் நாவிதர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ள நீர்வழிப்படூம் என்னும் நாவலில் காரு என்பவரின் இறப்பினூடாக அவருடைய சோக வாழ்க்கையின் சித்திரம் சொல்லப்படுகிறது. செட்டி என்பவருடன் அவர் மனைவி சென்றுவிடுகிறார். அவள் அவனால் கைவிடப்பட்டு திரும்பி வந்தபோது அவர் மீண்டும் ஏற்றுக்கொண்டாலும் உளச்சிதைவுக்கு ஆளாகிறார். அவருடைய இறப்பு வழியாக அந்த ஊர் அவருடைய வாழ்க்கைக்கு ஆற்றும் எதிர்வினைகள் விவரிக்கப்படுகின்றன. காருவை கொத்திப்பிடுங்கிய அதே சமூகம் அவர் மனைவியின் துயரைக் கண்டு அணைத்துக்கொள்கிறது. ஊரும் உறவும் அம்மனைவியுடன் ஒரு தாயம் விளையாட்டில் அமர்கையில் நாவல் நிறைவடைகிறது.
கிராமியச் சூழலில் எழுதப்பட்ட யதார்த்தவாத நாவல் இது எனினும் வட்டாரவழக்கை நம்பாமல் நவீனத்துவ நாவல்களுக்குரிய செறிவான சுருக்கமான மொழியில் எழுதப்பட்டுள்ளது.
குடி நாவீதர்களின் எளிய வாழ்க்கையை சொல்ல போகும் படைப்பு என்ற பாவனையோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் நாவல் செல்ல செல்ல அதன் தீவிரமும் கதை நேர்த்தியும் சொல்லப்பட்டிருக்கும் விதமும் நம்மை திணறடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு இதில் வரும் வட்டார வழக்குகள் படிப்பதற்கு சிரமமாகவே தான் இருந்தது நிறைய சொற்கள் புரியாமல் இருந்தது. நாவிதர்களின் வாழ்க்கையின் வழியாக அவர்களின் கொடுமையான வறுமையை சித்தரிக்கிறது இந்த நாவல். நாவலின் மையப் பகுதியில் தான் கதை சொல்லிக்கொண்டு இருப்பவரின் பெயர் நமக்கு தெரிய வருகிறது அதுவும் நேரடியாக சொல்லப்படவில்லை கதை சொல்லியின் அம்மா பாசமலர் திரைப்படத்தின் மீது தான் கொண்டிருந்த தீவிரமான பற்று காரணமாக அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்த கதாபாத்திரத்தை இந்த கதை சொல்லி வைத்திருக்கிறார் .ஆக அந்த கதை சொல்லி எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் தான் என்று நமக்கு தெரிய வருகிறது . ஆக இந்த நாவல் அவருடைய உண்மையான வாழ்க்கையை சொல்கிறது என்று நமக்கு புரிய வருகிறது. உண்மையில் தேவி பாரதி அவர்களின் வாழ்க்கை கடுமையான வறுமையில் தான் கழிந்திருக்கிறது இந்த விருது அவருக்கு ஒரு ஆறுதல். ஆனால் நாளொன்றுக்கு 15 லட்சத்திற்கு கோட்சூட் அணியும் பிரதமர் வாழும் இந்த நாட்டில் ஒரு எழுத்தாளருக்கு ஒரு லட்ச ரூபாயை பிச்சையாக போடுகிறார்கள் . எழுத்தாளர் என்றால் யார் என்று தெரியாத இந்த தேசத்தில் ஒரு எழுத்தாளருக்கு அவரின் ஆகச்சிறந்த படைப்பாக கருதப்படும் ஒன்றிற்கு வெரும் ஒரு லட்ச ரூபாயை அளிக்கிறார்கள் கலை இலக்கியத்தில் பெருமை அறியாதவர்கள் . மத்திய அரசால் வழங்கப்படும் இவ்விருது குறைந்தது ஒரு கோடியாக இருக்க வேண்டும்.
கம்பறு அருவா ( கம்பு அறுக்க பயன் படும் அருவாள்)இடுப்பில் சொருகிக்கொண்டு பிள்ளை பிரசவம் பார்த்து தொப்புள் கொடி அறுத்து நஞ்சுக்கொடியை அற்றி அந்த குழந்தையை சுத்தம் செய்து தாயிடம் கொடுக்கும் பெரியம்மா ஒரு முக்கியமான பாத்திரமாக வருகிறாள். தான் பிரசவம் பார்த்த குழந்தைகளை காணும் போதெல்லாம் அவர்களை அழைத்து மூக்கு முகத்தை தடவி பார்த்து சந்தோசமடைகிறாள். இன்று அந்த பெரியம்மா போன்றவர்கள் காலத்தால் காணாமல் போய்விட்டார்கள் இன்று மருத்துவமனையில் பிரசவம் பாக்கும் எந்த ஒரு செவிலி தாயும் கூட அப்படி தான் பிரசவம் பார்த்த குழந்தைகள் மீது எந்த அன்பையும் காட்ட மாட்டார்கள் குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் ஆகிவிட்ட காலம் இது.
எந்த அச்சியில் குடும்ப உறவுகள் கட்டப்பட்டு இருந்தனவோ அவை இன்று உடைக்கப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது காரு மாமாவை சுற்றி அத்தனை உறவுகளும் அவருக்காக அவருடன் இருக்கவே நினைக்கிறார்கள். அதே போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒருவரின் கட்டுப்பாட்டிலும் அவரின் அர்ப்பணிப்பிலும் குடும்பம் பின்னப்பட்டிருக்கும் இன்று ஒவ்வொரு மனிதனும் தனியாக இருக்கவே விரும்புகிறான் ,உறவுகளுக்கு இடையே மிக நீண்ட இடைவெளி வந்துவிட்டதாக தோன்றுகிறது. காரு மாமா போன்றவர்களும் குடும்பத்திற்காக தன்னை பலியிட்டு கொள்பவர்களும் மிக அரிதாக ஆகிவிட்டார்கள். அம்பரந்து நதிக்கரையை ஒட்டி இதன் ஊர்களும் இடங்களும் இருந்தாலும் கொடுமையான வறட்சியும் குளிப்பதற்கு கூட ஒரு குடம் தண்ணீருக்கு சிரமப்பட வேண்டிய வறட்சியான இடங்களாக இருக்கிறது வறட்சியும் வறுமையும் இயலாமையும் அந்த மக்களை வதைக்கும் போது அவர்கள் தங்களுக்குள்ளாகவே வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
ஒரு மரணத்தின் போது இன்றும் கூட கிராமங்களில் கசப்பும் பகையுணர்வும் மறந்து இயல்பாக அவர்களை ஏற்றுக் கொண்டு ஒன்றாக கலந்து விடுகிற பழக்கம் இருந்து வருகிறது .அதே போல தான் காரு மாமாவின் மனைவியும் திரும்பி வரும்போது அவர்களை அந்த உறவுகள் ஏற்றுக் கொள்கிறார்கள் . என்னதான் அன்றைய வாழ்க்கை முறை மிக வறுமையானதாகவும் கொடுமையானதாகவும் இருந்திருந்தாலும் உறவுகளால் கைவிடப்படுவது மிக அரிதாகவே நிகழ்கிறது. கலை நேர்த்தியாலும் கதை சொல்லல் முறையாலும் வென்றுயிருக்கிறார் தேவி பாரதி அவர் மேலும் மேலும் வெல்ல வேண்டும் என்பதே இந்த எளிய வாசகனின் ஆசை.
பரபரப்பா ஆரம்பிச்சு அட பாவமேனு முடிஞ்ச நாவல், மனுசனா பொறந்துட்டா சாவுக்காக காத்திருந்து தான் ஆகணும் ஆனா அந்த சாவு வரதுக்குள்ள பல நல்ல மனுஷங்களா சம்பாரிச்சுக்கணும் அப்படி தான் காரு மாமா உடையாம்பாளையம் மக்களையும் சொந்த காரனுங்களையும் சம்பாரிச்சு வெச்சுருக்காரு, மனுஷனுக்கு இழப்பு அதிகமானாலும் வாழ்க்கைய வாழ்ந்தபடியே போய்ட்டு இருக்காரு, காக்கா வலிப்பு மட்டும் வரலனா ஈரோடு பண்ணையார்களுக்கு குடி நாவிதனா வாழ்ந்து காலத்தை வேறுபக்கம் திருப்பிருப்பாரு.
உறவுமுறைகள்,அவர்களின் மனித பண்புகள்,வாழ்க்கை பயணங்கள், வயது நகர நகர தடுக்க முடியாத மாற்றங்கள் என நாவல் பல காரியங்களை நமக்கு கடத்துகிறது.
இந்த நூலின் அட்டைப்படமே பல்வேறு உணர்வுகளை நம்முள் கடத்துகிறது. இந்த அட்டைப்படம் உள்ள நூல் தான் வேண்டும் என்று புத்தகக் கண்காட்சியில் ஏறிஇறங்கிய நிகழ்ம் அரங்கேறியது. இந்நூல் குடிநாவிதர் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம். காருமாமா என்ற ஒற்றை நபரை கருவாகக் கொண்டு அவரைச் சுற்றியுள்ள மனிதர்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்நூல். தோழர் முத்துநாகு #சுளுந்தீ என்ற தனது நூலில் நாவிதர் வாழ்வியலைப் பற்றி நாட்டார் வழக்கியலில் பேசியுள்ளார். அதைப்போல இந்நூலை வாசிக்கும்பொழுது ஈரோடு பகுதியை மையமாக கொங்கு பகுதி மக்களின் வழக்கியலை வழக்காறு மொழியில் எழுதியுள்ளார். குடிநாவிதர்கள் எளிமையாக முடிதிருத்துபவர்கள் என்று மட்டுமே நாம் கடந்துபோக இயலுமா? இல்லை. அவர்கள் முன்னொருகாலத்தில் அரும்பெரும்பணியை ஆற்றியிருக்கின்றனர் என்பதனை நமக்கு கூறியுள்ளார் .குடிநாவிதர்கள் முடிதிருத்தம் செய்வது மட்டுமின்றி பிறப்பிலிருந்து இறப்புவரை அனைத்து மக்களின் வாழ்விலும் ஓர் அங்கமாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரசவம் பார்ப்பது ன, தொப்புல்கொடி நறுக்குவது, நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என மருத்துவர்களாக அனைத்து மருத்துவமுறைகளையும் அறிந்துள்ளனர் என்பது வியப்பின் உச்சம். இந்நூல் சாதி படிநிலைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும், மருத்துவர்களாக பிறர் சமுதாய மக்களின் தேவையின் போது குடிநாவிதர்கள் எவ்வாறு போற்றப்படட்னர், வீட்டுவேலை செய்வது முதல் அடிமைத்தனமாக எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டனர் என்னும் முரண்பாடுகளை சிறப்பாக விளக்கியுள்ளார்.
இந்த நூலின் தொடக்கமே போரிடியை கொடுக்கும் வண்ணமாக ஓர் மனிதனின் இறப்பிலிருந்து தொடங்குகிறது.பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பல்வேறு மனிதர்கள் நாம் சந்திக்க நேரும். ஆனால் ஒருவர் இறப்பின்போது கூடும் கூட்டத்தை வைத்தே அம்மனிதனின் வாழ்வை கணித்துவிடலாம். அ���்படித்தான் இந்நூல் உறவின் முக்கியத்துவத்தையும், உறவின் பல்த்தையும், உறவு முறைகளின் சிக்கல்களையும், உறவுமுறைகளுக்கு செய்யவேண்டிய செய்முறைளையும், உறவுகளால் மனிதர்கள் சந்திக்கும் பல்வேறு இன்ப துன்பங்களையும், பல்வேறு மனிதர்களின் பண்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒப்பாரிப் பாடல்கள் பற்றியும் ஒப்பாரிப் பாடல்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதனை பாடுபவர்களின் வாழ்வியல் இன்றியமையாச் சிறப்புகள் பற்றியும் மிகவும் அருமையாக எழுதியுள்ளார். இப்புதினத்தில் சில இடங்களில் முகச்சிறப்பாக விசிப்பவர்கள் வியக்கும்படி மிகவும் நேர்த்தியாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக காட்சிகளை உரையாடல்களை கதைசொல்லியான தேவிபாரதி சிறப்பாக கையாண்டுள்ளார். இந்நூலில் வரும் கதாப்பாத்திரங்களை நாம் மனதில் கொள்வதற்கே 100 பக்கங்களை கடக்கவேண்டி வரும் போல. பாசமலர் திரைப்படம் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படித்தியுள்ளது என்பதும் வியப்பாகத் தான் உள்ளது. சில காட்சிகள் நம் சிறுவயது நிகழ்வுகளை நினைவுப்படுத்தும், பல காட்சிகள் நம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை நினைவூட்டும், அனைத்துக் காட்சிகளும் சாதி ஏற்றத்தாழ்வுக் கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது என்பது எள்ளளவும் ஐயமில்லை. தமிழ் இலக்கியத்தில் குடிநாவிதர்களலப் பற்றி அறிந்துகொள்ள ஓர் முக்கியமான நூலாக விளங்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
நாவல் ஆசிரியர் : தேவிபாரதி நற்றிணை பதிப்பகம் 200 பக்கங்கள்
நீர் வழிப்படூஉம் என்ற சொல்லை பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது கணியன் பூங்குன்றனார் தான் ." யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற உலகப் பொதுமுறையை ஒரே ஒரு புறநானூற்று பாடலின் வழி கூறிவிட்டு சென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் அவருடைய கூற்றின் உண்மையை புரிந்து கொள்ள நாம் தவறிவிட்டோம் என்றுதான் கூற வேண்டும் . உலகின் தலைச்சிறந்த அறிஞர்களும் , ஞானிகளும் புரிந்துகொள்ள தவறிய , நடைமுறை படுத்த விரும்பாத ஒரு வாழ்கை நெறியை எப்படி ஒரு தமிழ் கவிஞன் தான் இருந்த இடத்தில் எழுதிவிட முடியும் என்ற வினாவுக்கு விடை தான் இந்த நாவல் . மனிதனின் வாழ்க்கையை பார்த்து படைக்கப்பட்டதுதான் இலக்கியம் . அந்த வகையில் கணியன் பூங்குன்றனார் நம் தமிழ் மக்களின் வாழ்க்கையை முறையைத்தான் தன் பாடலில் கூறியுள்ளார் . அப்படி ஒரு வாழ்க்கையைத் தான் தேவிபாரதியும் தன் நிலத்தின் வழி , தன் மக்களின் வழி , தன் சொந்த அனுபவத்தின் வழி ஒரு நாவலாக படைத்துள்ளார் .
உடையாம்பாளையம் கிராமத்தில் யாருமற்ற சிதிலமடைந்த குடிசையில் வாயில் நுரைதள்ள ரத்தக்கசிவுடன் குப்புற விழுந்து கிடைக்கும் குடிநாசுவனான காருமாமாவின் இறப்புடன் தான் கதை தொடங்குகிறது . காருமாமாவின் தங்கை மகன் கூறுவது போல கதை தொடர்கிறது . காருமாமா இறப்பதற்கு அவருக்கு இருந்த வலிப்பு நோய் ஒரு காரணம் என்றாலும் , ராசம்மா அத்தை செட்டியோடு தன் இரண்டு பிள்ளைகளையும் { சண்முகம் , ஈஸ்வரி } அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடியதுதான் மிக முக்கியமான காரணம் . கதை அங்கிருந்து முன்னும் பின்னும் நகர்கிறது . ஒரு கட்டத்தில் காருமாமாவிற்கு கொள்ளிபோட ஆளில்லாமல் தவிக்கும் தருணம் எங்கிருந்தோ சண்முகம் வந்து நிற்கிறான் . அதன் பின் கதை காருமாமா மற்றும் அந்த குடும்பத்தின் பெரியம்மாவை சுற்றியும் அந்த குடும்பத்தை அவர்கள் இருவரும் எப்படி உடையாம்பாளையத்தின் குடிநாசுவனாகவும் , குடிநாசுவத்தியாகவும் ஊர் பண்ணையக்காரர்களுக்கு சவரம் செய்தும் , ஊழியம் செய்தும், அவசர மருத்துவ உதவி செய்தும் , ஆடு மாடுகள் மேய்த்தும் , வறண்ட நிலத்தின் உஷ்ணத்தை சிறிதும் தங்கள் எண்ணத்திலோ , செயலிலோ பிரதிபலிக்காமல் அன்போடும் , அரவணைப்போடும் தன் மூன்று தங்கைககளையும் , அவர்களுடைய பிள்ளைகளையும் எப்படி சுமந்தார்கள் என்று தொடர்கிறது . ராசம்மா அத்தையின் பிரிவுக்கு பின் காருமாமாவின் நோயும் தனிமையும் அவரை வாட்டி வதைக்க அவர் மனப்பிறழ்வுக்குள்ளாகி திக்கு திசை மாறி அலைகிறார் . இத்தனை சொந்தம் இருந்தும் காருமாமா ஏன் யாருமற்று இறந்து கிடந்தார் ? ராசம்மா அத்தை திரும்பி வந்தாரா ? இறப்பிற்காக ஒன்று சேர்ந்த குடும்பம் என்ன ஆனது ? அண்ணனை இழந்த தங்கைகளும் , தாய் மாமனை இழந்த பிள்ளைகளும் அந்த துயர்த்தில் இருந்து எவ்வாறு மீண்டார்கள் என்பதே கதையின் முடிவு ?
என்னை பொறுத்தவரை இலக்கியம் என்பது சொற்றொடர்களையும் , வாக்கியங்களையும் அமைக்கும் முறையில் புதுமை காட்டுவதோ , புரிந்துகொள்ள கடினமாக்குவதோ அல்ல.இலக்கியம் என்பது என் மண்ணின் மக்களை , அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக , உண்மையாக , உயிரோட்டத்துடன் எந்த ஒரு செயற்கை வெளிப்பூச்சுமல்லாமல் உணர்வுபூர்வமாக படைக்கப்படுவதுதான் சிறந்த இலக்கியம் . அந்த வகையில் நீர் வழிப்படூஉம் ஒரு தலைசிறந்த இலக்கியம் தான் . இந்த நிலத்தின் மக்கள் பேரன்பு கொண்டவர்கள் , வறுமை அவர்களை வாட்டினாலும் அவர்களுக்கு கிடைத்ததை வைத்து ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளனர் . தன் சொந்தத்திற்குள் கோபம், போட்டி , பொறாமை , விருப்பு , வெறுப்பு , என கலவையான உணர்வுகள் இருந்தாலும் காருமாமா போன்ற ஒற்றை உயிர் தான் அந்த மொத்த குடும்பத்தையும் ஒன்று சேர்த்து உறவாட செய்கிறது . எந்த வித எதிர்பார்ப்புமின்றி , வரையரையில்லா பேரன்பு மட்டுமே அவர்களுடைய நிரந்தரமான நிறைச்செல்வம் . தன் தமையனின் இறப்பிற்கு காரணமான ராசம்மாவை வசவு பாடிய அதே உறவுகள் தான் ராசம்மாவின் கண்ணீரை கண்டவுடன் வாஞ்சையோடு அனைத்துக்கொண்டு கானல்நீர் போல் கனன்று கொண்டிருந்த நிலையை பேரன்பு என்ற பெருவெள்ளத்தால் அடித்து சென்று "நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் " என்ற தமிழர் மரபினை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நாவல் .
இந்த கதையில் ஒரு காட்சி என் நெஞ்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . தனிமையின் தீயில் வெந்து மனப்பிறழ்வுற்று தன் தங்கையின் வீட்டில் வாழ்ந்த சில நாட்களில் தன் தங்கை மகனுடன் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்று அந்த மர நாற்காலியில் அமர்ந்து , ரசம்போன அந்த கண்ணாடியில் தெரியும் தன் உருக்குலைந்த உருவத்தின் வழி தன் மொத்த வாழ்க்கையையும் ஒரு நொடியில் ஒளியோட்டமாக காருமாமா பார்க்கின்ற அந்த காட்சி நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு சிறந்த இலக்கிய பதிவாக நான் பார்க்கிறேன் . அதே போல காருமாமாவின் இறப்பிற்கு பின் துவண்டு கிடக்கும் குடும்பம் , ராசம்மா , ஈஸ்வரியின் வரவுக்கு பின் தான் பார்க்க முடியாத தன் மகளுக்காக காருமாமா சேகரித்த அந்த சொற்ப தங்க அணிகலன்களை பாதுகாத்து அவர்களிடம் சேர்க்கும் பெரியம்மா.வெந்து தணிந்த காட்டில் பொழியும் பெருமழை போல மொத்த குடும்பத்தின் இறுக்கத்தையும் ஒரு நீர்படுகையின் நீராடல் தனித்துவிடுகிறது . பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ஊசலாடும் இந்த மனிதப்பிறவியின் ஒரே பற்றுதல் பேரன்பைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும் ?
First of all, thanks to Goodreads, I requested them to add this book to the database and they did it within two days. Thanks for that.
This book came to my attention through the Sahitya Academic award. Didn't know anything about this book or the author before that. I started reading immediately after I bought it. I always had one of the nightmares as a fatherless or divorced parent son. This book reminds me of that dream. Still now I have that fear.
This book starts with a one tragic incident. The story flows through that incident. Not a smooth and easy reading initially. It needs your attention and effort. But after that it goes interestingly.
The story talks about the life of kudi navithar ( they do saloon works and death rituals in villages) caste people, who live around coimbatore in a beautiful manner.
ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருக்கும் ஒன்று கதை! கதைகளின் வாயிலாக தான் நாம் எல்லா காவியத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். கதை ஒன்று இல்லை என்றால் என்னவாகும் இவ்வுலகம்?
கடந்தகால வாழ்க்கை, இன்றைய வாழ்க்கை, நாளைய ஒன்று எல்லாமே கதையாக தான் இங்கே கடத்தப்படுகிறது.
நான் வசிக்கும் நிலத்தில், என்னுடன் இருக்கும் இந்த மனிதர்களை கண்டு கண்ணீர் சிந்தினேன், சிரித்தேன், மன்னித்தேன், மண்டியிட்டு மன்னிப்பு கேட்டேன், அன்றாடங்களை வேறு எந்த அவலமின்றி ஏற்க முயற்சி செய்கிறேன், செய்வேன்.
காரு மாமா , பெரியம்மா, சுந்தராடி வலசு பெரியம்மா பெரியப்பா, ஈஸ்வரி அத்தை, நாச்சிபாளையத்தார் , இத்தியாதி என்று மனிதர்கள் யாரும் நம்முடையவர்கள். குடிநாவிதர்கள் பற்றிய வைற்றுப்பாட்டு, அவர்கள் கற்றுக்கொண்ட சடங்குகள், அவைகளை பற்றிய புரிதல் நான் பார்த்த ஒன்று, ஆனால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முயற்சிக்காத ஒன்று. ஓப்பாரியினால் வலியை தான் கண்டிருக்கிறேன், இன்று அதன் ஆழம் அறிய முயல்கிறேன். ஏதோ ஒன்று தேவைப்படுகிறது எல்லாவற்றையும் கடந்து போக. மனிதர்களின் அன்பு கிடைக்காமல் போகலாம், ஒரு ஆட்டுக்குட்டி கொள்ள நேரலாம், பழைய கந்தல் துணி உடுத்தி காடு கரையில் புறன்டிருக்கலாம், ஒரு நடை போட ரஸ்தாயில்லாமல் போயிருக்கலாம்.
ஒருவரின் மரணம் பல உறவுகளை மன்னிக்க, மன்னிப்பு கேட்க தயங்கும் போது எல்லாவற்றையும் நொறுக்கி ஒரு கை கொடுத்ததில் எளிதாக அதை கோருகிறது, மன்னிக்கிறது.
ஒரு தலை குனிந்த மௌனம் என்ன செய்யும்? வாசித்த பாருங்கள்.
தேவிபாரதியின் எழுத்துக்கள், நிச்சயமாக என்னை பின் தொடரும்....
அன்பு நண்பர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
நாவலை வாசிக்க வாசிக்க என் அம்மாவின் உறவுகள், அவர்களின் உலகம் என்னில் ஓடிக் கொண்டிருந்தது. ஆம்பராந்து கரை எனக்கு அமராவதி கரை.
தமிழக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் காலச்சுவடின் பொறுப்பாசிரியராகவும் இருந்த திரு தேவிபாரதியின்(என்கிற ராஜசேகரன்) மூன்றாவது நாவல் இது. 2023ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற இந்நாவல் 2020ல் முதற்பதிப்பு கண்டுள்ளது.
நாவலாசிரியர் தனது சொந்த ஊரான கொங்கு பகுதியை சேர்ந்த உடையம்பாளையத்தில், நாவிதக்குடியை சேர்ந்த ‘காருமாமா’வின் மரணத்தையும் அவரை காடு கொண்டு சேர்க்கும் படலமும்தான் பிரதான கதைப் போக்காக எழுதியிருக்கிறார்.
காருமாமாவுடன் கூடப் பிறந்த சகோதரிகள்(ஆசிரியரின் தாய் உட்பட), அவர்களது கணவர்கள், மகன்கள், மகள்கள், காருமாமாவின் மனைவி, வாரிசுகள் என பலக் கதைமாந்தர்களின் கிளைக்கதைகளும் நாவலில் இடம்பெற்றுள்ளது.
1970-80 களில் கதை நடைபெறுவதாக அனுமானிக்கலாம். ஈரோடு, வெள்ளக்கோவில், தாராபுரம், அரவக்குறிச்சி, பழனி போன்ற நகர்புறங்களையும் உடையாம்பாளையம், சுந்தராடிவலசு, பெரியாதிருமங்கலம், கோடந்தூர், நாச்சிவளசு போன்ற கிராமங்களையும் உள்ளடக்கி கதை நகர்கிறது.
நாவல் முதல் நபர் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. அதாவது திரு தேவிபாரதி அவர்களே, நம்மிடம் அவரது மாமாவின் மரணத்தை பற்றியும் அதை ஒட்டி நடைபெற்ற நிகழ்வுகளையும் விவரிக்கும் விதமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் உரையாடல்களாக இல்லாது விவரணைகளாலான எழுத்துநடையை கொண்டுள்ளது.
கொங்கு பகுதி நாவிதக்குடி வட்டாரவழக்கில் எழுத்துநடை செல்வதால், கதைக்குள் நுழைந்து பயணிக்க சற்றே கடினமாக உள்ளதென்றாலும், பிறகு போகப்போக ஒன்றிவிடமுடிகிறது. இந்நடை, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இலகுவாக பிடிபடலாம்.
ஒவ்வொரு அத்தியாயமும் காருமாமவை சுற்றியுள்ள உறவுகளைப் பற்றியும் அவர்களது வாழ்க்கைப் பாடுகளையும் கதைச் சம்பவங்களாக சொல்லிச் செல்கிறது.
மேலும் வறுமை, நாவிதக்குடிகளின் வேலைகள், கால்நடை வளர்ப்பு, உறவுகளின் தேவை, மரணச் செய்தி அறிவிப்புகள், சடங்கு முறைகள், சாயப்பட்டறைகள், தாயக்கர விளையாட்டு எனப் பற்பல வட்டார வழக்கமுறைகளை கதையின் ஊடாக சொல்லியிருக்கிறார்.
பொறுமையான நடையில் சென்றாலும் கடைசி அத்தியாயங்களில் தாயக்கர விளையாட்டையும் அதன் மூலமாக கதையை விவரிப்பவரின்(கதையாசிரியர்) வாழ்க்கையை தொடர்புபடுத்தி முடித்திருக்கும் விதமும், அபாரம்.!
கடினமான வட்டார நடை, கதைமாந்தர்களின் உறவுமுறைகளை அறிமுகப்படுத்தாமை, கோர்வையற்ற கதை சொல்லல் என, இந்நாவலில் வாசிப்பவர்களுக்குச் சிற்சில சவால்கள் இருந்தாலும், உயிரோட்டமும் வலி நிறைந்ததுமான உணர்வுகளையும் தாக்கத்தையும் நம்முள் கடத்தியிருக்கிறார், நாவலாசிரியர்.
'நீர்வழி படுஉம் புணை போல்....'
சாதிய அடுக்கில் கீழ்பகுதியிலும், வர்க்க வேறுபாட்டில் விளிம்பு நிலையிலும் உள்ளவர்களின் பட்ட கதையையும் வாழ்வையும் மெல்லிய நீரோட்டம் போல காட்டியிருக்கிறது இந்நாவல்.
*ரங்கப்பாளையம் - காருமாமாவின் சொந்த ஊர் *உடையாம்பாளையம்- பெரியம்மாவின் ஊர். *சேலம் வேம்படிதாளம் - கருமாமா தங்கியிருந்த உறவினரின் ஊர் *ஈரோடு கஸ்பாபேட்டை - ஆசிரியரின் சிறுபிராயத்து ஊர் *லோகநாதபுரம் - ஆசிரியரின் ஊர் *கருங்கல்பாளையம் - காளியம்மாவின் ஊர்
புத்தகத்திலிருந்து...
\ காலில் சலங்கையுடன் நின்ற பெரியப்பாவை அழைத்து மாமாவைக் காடு கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைப் பற்றிக்கேட்டார் பண்ணாடி. எவ்விதச் சீரும் இல்லாமல் வெறுமனே மஞ்சளைக் கொட்டி மாமாவின் சடலத்தைக் காடு கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் தங்களது திட்டம் என பெரியப்பா சொன்னதைக் கேட்ட பண்ணாடி கடுங்கோபம் கொண்டார், “கூறு கெட்டவனே, பொழையா நாசுவனே” எனத் திட்டித் தீர்த்தவர் காருமாமாவின் பங்காளிமார்களையும் மாமன் மச்சினன்மார்களையும் சகோதரிகளையும் மகன், மகள் உறவு கொண்டவர்களையும் அழைத்து மாமாவுக்குப் பெரிய தேர் ஒன்றைக் ��ட்டவும் எக்குறையுமில்லாமல் எல்லாச்சீர்களோடும் தங்கள் நாவிதனைக் காடு கொண்டுபோய்ச் சேர்க்கும்படியும் உத்தரவிட்டார், “செலவப் பத்தியெல்லா ஒருத்தனுங் கவலப்பட்டுக்கிட்டு இருக்காதீங்கடா, அதையெல்லா நாங்க பாத்துக்கறொ, அது எங்க மொறதானப் பின்ன?” என்றார். /
\ நண்டும்சிண்டுமான இரண்டு தங்கைகளை ஒப்புவித்துவிட்டு எங்கள் அம்மாயி செத்துப்போனபோதும் பெரியம்மாவின் அழைப்பை ஏற்று தகப்பனையும் கல்யாணவாசனை தீராதிருந்த அத்தையையும் தங்கைகளையும் அழைத்துக்கொண்டு ரங்கபாளையத்திலிருந்து உடையாம்பாளையத்துக்கு வந்து பெரியப்பா விட்டுச்சென்றிருந்த பதினாறு குடிகளை ஏற்றுக் குற்றங்குறைகளுக்கு இடந்தராமல் முறைமைசெய்து பண்ணையக்காரர்களின் மதிப்பைப் பெற்று அங்கேயே வேர் கொண்டபோதும் காளியம்மா அக்காவுக்கும் அம்மாவுக்கும் மெட்ராஸ் சின்னம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைத்து ஒருவர் பின் ஒருவராக உடையாம்பாளையத்தைவிட்டு அனுப்பிவைத்துவிட்டு ஆணும்பெண்ணுமாய் இரண்டு குழந்தை களைப் பெற்றுக்கொண்டபோதும் அதற்குப் பிறகு வெகுகாலம் வரையும் திடமானவராகவே இருந்தார் காருமாமா. /
தேவி பாரதி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் எழுத்தளர் ராஜசேகர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்… கொங்கு பகுதிக்கான கலாச்சாரத்தை வாழ்வியலை தன்னுடைய கதைகளின் மூலமாகவும், புதினங்களின் மூலமாகவும் இலக்கிய உலகத்திற்கு பங்களித்திருக்கிறார்!
இந்த புதினத்தின் நாயகரான காரு மாமா, அவரின் இறப்பின் வழியே ஆரம்பிக்கும் கதையானது முன்னும் பின்னும் நகர்ந்து அவர் வாழ்வையும் அந்த மண்ணின் வாழ்வியலையும், கொஞ்சும் கொங்குத் தமிழில் கொடுத்திருக்கிறார் தேவிபாரதி!
உடையார்பாளையத்தின் குடிநாவிதரான காரு மாமா அந்த ஊருக்கு எப்படியான சூழலில் வந்தார் அவரின் வரவிற்குப் பிறகு அவர் வாழ்வில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்வுகள், இடையே 70களின் காலச்சூழலில் இருந்த வாழ்வியல் என மனதிற்கு மிகவும் நெறுக்கமான படைப்பாக இருக்கிறது இந்த புத்தகம்…
இன்றைக்கும் ஒருசில கொங்கு கிராமங்களில் நாவிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்… இன்றைக்கு நவீனமயமாக சலூன்களில் முடி திருத்திக் கொண்டிருக்கும் தலைமுறை நாம்… ஆனால், 70 களிலும், 80 களிலும் முடி திருத்தபவரின் வாழ்க்கை தொண்டு ஊழியம் செய்து வயிற்றைக் கழுவும் வாழ்கையாகத் தான் இருந்திருக்கிறது!
ஊரில் இருக்கும் பண்ணையார் வீடுகளுக்கு முடி திருத்த மட்டுமல்லாது, ஊர் திருவிழாவில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து அதை சுத்தம் செய்து பங்கு பிரித்து வைப்பதிலிருந்து, கல்யாணம், கிடாவெட்டு, காது குத்து, பூப்பெய்துதல், இறப்புக்கு செய்தியை கொண்டு சேர்ப்பது என எல்லா காரியங்களையும் குடிநாவிதர்கள் செய்து வந்திருக்கிறார்கள்!
ஒவ்வொரு விடுமுறையின் போதும் காரு மாமாவின் வீட்டுக்கு வந்துவிடும் அவரின் அக்கா, தங்கைகளின் குழந்தைகள் அந்த விடுமுறைப் பொழுதுகளை தங்களுக்கேயான விளையாட்டுகளில் ஆம்பராந்து கரையில் மூழ்கித் திளைக்கின்றனர்! அவர்கள் விளையாடிய விளையாட்களின் விவரிப்பு நம்மையும் அந்த குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது!
ராசம்மா அத்தையின் பிரிவுக்குப் பிறகான காரு மாமாவின் தனிமையும், வலிப்பு நோயும் அவரை உருக்குலைய செய்கிறது! அவரின் தனிமையை, யாருமற்ற வீட்டில் அவர் தனித்துவிடப் பட்டவராக அநாதையாக நினைத்துக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது!
ஒரு மனிதனின் வாழ்வின் ஊடாக தான் சார்ந்த சமூகத்தின் வலியையும், வேதனையையும், சின்னச் சின்ன சந்தோசங்களையும், தன் காலகட்டத்தின் வாழ்வியலையும் பிரதிபலித்திருக்கிறது இந்த படைப்பு! கொங்கு வட்டார வழக்கை கைகொள்ளும் சொற்பமான எழுத்தாளர்களில் முக்கியமானவராக தேவிபாரதி மனதில் ஆசணமிட்டு அமர்ந்து கொள்கிறார்!
"பழைய விஷயங்களை மனசில் வைத்து யாரையும் வெறுக்காத, எல்லாரிடமும் அன்பா இரு." இந்த நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய முக்கியமான எண்ணம் இதுதான்.
நீர்வழிப் படூஉம் மனித வாழ்க்கை, உறவுகளின் சிக்கல்கள், சுகங்கள், துக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. நம்ம வாழ்க்கையில் சிலருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும், ஒரு சின்ன பிரச்சனைக்காகவே அவர்களுடன் இருந்த உறவை முறித்து விடுகிறோம். அந்த சின்ன சண்டையாலோ அல்லது பெரிய பிரச்சனையாலோ அந்த அன்பும், முந்தைய மகிழ்ச்சியுமான எல்லாமே தகர்ந்துவிடுகிறது. இது தான் மனித இயல்பு, இந்தச் சமூகத்தில் இருக்கும் எதார்த்தம்.
கதை சொல்லும் முறை கதை நேரடியாக செல்லாது; non-linear முறையில் எழுதப்பட்டிருக்கும். ரொம்ப கவனத்துடன் வாசிக்கும்போதுதான் கதையின் அணைத்து விபரங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் யார், எந்த தொடர்பு, என்ன நடக்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு 60-70 பக்கங்கள் ஆகும். சில சமயங்களில் அது குழப்பமாகவும் தோன்றலாம். ஆனால் இந்த குழப்பமே நாவலின் தனித்துவம். கதையோடு தொடர்பு பெறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்; அப்போதுதான் கதை உங்களைப் பலமாகக் கவர்ந்து விடும்.
எழுத்தாளரின் திறமை எழுத்தாளர் இந்தக் கதையை மிகவும் திறமையாகவும் நுட்பமாகவும் அமைத்திருக்கிறார். குறிப்பாக, கொங்கு தமிழின் பயன்முறைகள் கதையின் தனித்துவத்தை மேலும் அதிகரிக்கின்றன. நான் கொங்கு தமிழில் வளர்ந்தவன் என்பதால், அந்த உரையாடல்களின் உணர்வுகளை மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது.
இந்த நாவலின் தரம் மனித உறவுகளின் நுணுக்கங்களை, அவற்றின் மகிழ்ச்சியையும் துயரத்தையும், அதேசமயம் வெறுப்பின் வெறுமையையும் வெளிப்படுத்திய இந்த நூல் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய படைப்பாக அமைந்துள்ளது. இதைப் படிக்கும் போது, நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் அந்த உறவுகளில் நம் அனுபவங்களையும் மறுபரிச���லனை செய்ய வைக்கிறது.
நான் படித்த சில சிறந்த உலக இலக்கியங்களுக்கு இணையான படைப்பாக இந்த நாவல் தோன்றியது. ஒவ்வொருவரும் ஒருமுறை இந்த நாவலை வாசிக்க வேண்டும். ஏனெனில் இது நம் வாழ்க்கையின் மறைந்த உண்மைகளை நினைவூட்டும் ஒரு அபூர்வமான அனுபவமாக இருக்கும். நேரம் எடுத்துக் கொண்டு படிக்கவும்; இது கண்டிப்பாக உங்களுக்கொரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
“ஒரு ஊர்ல..” என்று ஆரம்பித்த கதைகளாலேயே நம்முடைய பால்யங்கள் நிரம்பி வழிந்தன. ஆரம்பித்ததற்குப் பிறகு அந்த ஊர் எங்குச் செல்லும் என்று தெரியாது. மனிதர்கள் வருவார்கள். விலங்குகள் வரும்.. பறவைகள் வரும் ..தேவதைகள் வருவார்கள், பேய் பிசாசோடு சேர்த்து நீதி கூட வரும்..ஆனால் ஒரு போதும் அந்த ஊர் திரும்பி வந்ததாக நினைவில் இல்லை. சொல்லப்பட்ட அந்தக் கதைகளுக்கும் சொல்லவே படாத அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அந்தக் கதைகளில் அந்த ஊரின் தேவையென்ன ? அந்த ஊருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என்ன ? தெரியாது. கவிதைகளில் வரும் பெயர் தெரியாத பறவை..பெயர் தெரியாத மரம்..பெயர் தெரியாத மற்றும் பல போல எந்தப் பெயரும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட அந்த ஒரு ஊர் அப்படி என்ன பாவம் செய்தது. இப்படி எவ்வளவோ கேள்விகளைக் கேட்கும் சிறுபிள்ளைத்தனங்கள் உண்மையிலேயே அந்தச் சிறுவயதில் வாய்க்கவில்லை. சரி.... பால்யங்கள் கடந்துவிட்டன.வயதாகிவிட்டது..இவ்வளவு அதிமேதாவித்தனங்கள் இருந்தும் நம் பிள்ளைகளுக்கும் அதே “ஒரு ஊர்ல” என்று ஆரம்பித்தே கதைசொல்லும் நேர்த்திக்கடனைச் செய்கிறோம். நமது பிள்ளைகளும் வருங்காலங்களில் இந்தச் செஞ்சோற்றுக் கடனைச் செவ்வனே ஆற்றுவார்கள்.
தலைமுறைகளைக் கடந்து அந்த ஊர் நம்மோடு வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும். ஊர் என்று சொன்னவுடன், அந்தச் சொல் நம்மை அறியாது பல காட்சிகளை விரிக்கின்றது. இடப்பக்கமும் வலப்பக்கமும் வீடுகளைக் கொண்ட ஒரு வாழ்க்கை, அதன் நடுவே சாலையாய்ச் செல்கின்றது. எத்தனை மனிதர்கள். எத்தனை உறவுகள் . எத்தனை உணர்வுகள். ஒரு மனிதனுக்குள்ளே இருக்கும் கதைகள் எண்களைத் தாண்டும்போது , ஒரு ஊர் சுமந்து வரும் கதைகளை எதற்குள் அடக்குவது. அதன் கொண்டாட்டங்களை ஓலங்களை யார் இசைப்பது.?
நீர்வழிப்படூஉம் ஒரு ஊரின் கதை.
உறவுகள் வழியாக ஒரு ஊரின் பிறப்பை, வாழ்வை , இறப்பைச் சொல்லும் கதை. காரு மாமா, ராசம்மா அத்தை, முத்து அம்மா, பெரியம்மா, முத்தையன் வலசு பெரியப்பா, சாவித்திரி, ஈசு, நாச்சிபாளையத்தார் அப்பறம் கதை சொல்லும் அந்த “நான்” என அத்தனை பேரும் அசலான மனிதர்கள். கதையும் போலித்தனமற்ற அசலான கதை. கிராமத்தில் இருப்பவர்கள் சூது வாது தெரியாத வெள்ளந்திகள் என்ற மரபை எல்லாம் உடைக்கிறார். கதையின் நாயகனாகச் சொல்லப்படும் காரு மாமாவே, குடும்பத்தை இழந்த தன்னைப் பாதுகாக்கும் அக்காவிடம் தனக்கு வரும் கருணைத் தொகையை மறைக்கிறார். நல்லவனாக இருக்கும் நாயகனை விட்டு என்ன காரணத்திற்காகவோ வேறொருவனுடன் ஓடுகிறாள் ராசம்மா அத்தை. உடன்பிறந்தவனை விட்டுவிட்ட ராசம்மாவை வாய்க்குள் வராததை எல்லாம் பேசி ஏசுகிறார்கள் முத்தம்மாவும், பெரியம்மாவும். குடி மரியாதைக்காகப் பேசிக்கொள்ளாமல் வாழ்கின்றனர் முத்தையன் வலசு பெரியப்பா. இப்படி மனிதர்களை எந்த உணர்வுப் பிசகின்றி மனிதர்களாகவே காட்டியிருப்பது சிறப்பு. தாயக்கட்டையக் கொண்டு இந்தக் கதையின் முடிவை, இன்னொரு வாழ்வின் தொடக்கத்தை உருட்டியிருப்பது நூலாசிரியரின் நுட்பம். அந்த உலோகத் தாயக்கட்டைகளை உள்ளங்கைகளுக்குள் வைத்து மூடும் போது ராசம்மா அத்தை உணரும் குளிர்மை, இடிந்து விழுந்து கிடக்கும் எத்தனையோ சுவர்களின் நடுவே சிறு செடியாய் துளிர்க்கும். ஒரே ஓர் இடறல். கதை தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கதை காரு மாமாவின் மருமகன், அந்த “நான்” கதை சொல்லுகிறார். அத்தை, மாமா , ஈசு என எல்லா உறவுகளுக்கிடையேயும் படிப்பவர்களை வாழ விடாமல் பக்கத்தில் அமர்ந்து இது கதை இது கதை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருந்தும் உடையாம்பாளையமும் அதன் உணர்வுக்குழைவும் நம்மைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. புதர் மண்டி , பாழடைந்து, வறட்டுப் பொட்டலாக, மனிதர்கள் வாசமின்றி, நம்மை விட்டுக் கடந்து கொண்டிருக்கும் பாளையங்கள், குளங்கள்,பட்டிகள், குடிகள், மங்கலங்கள் என எத்தனையோ ஊர்களின் சன்னமான ஒப்பாரி நீர்வழிப்படூஉம்.
திருப்பூரில் உள்ள ஒரு கிராமமான உடையாம்பாளையத்தில் வாழ்ந்த குடிநாவித குடும்பமான காருமாமாவும் பெரியம்மாவும் வாழ்ந்த வீட்டின் திண்ணையில் நானும் ஒரு கையாக தாயம் விளையாடிய உணர்வை சென்னையில் வசிக்கும் என்னுடைய மனம் உணர்ந்தது என்றால் இதுவே நான் அம்மக்களோடு வாழ்ந்த வாழ்வாக பார்க்கிறேன். இப்படி ஓர் வாழ்வை என்னுடைய வாழ்விற்கு அறிமுகப்படுத்திய தேவிபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள். அவருடைய வாழ்வில் இருந்து இக்கதாபாத்திரத்தை எடுத்து தன்னுடைய புனைவின் வாயிலாக இவர் இயக்கிய இந்நாவல் தமிழில் குடும்பவியலைச் சார்ந்த நாவைகளில் ஒரு முக்கியமான நாவலாக இருக்கக்கூடும்.
குடிநாவித சமூக மக்கள் என்று இருந்தார்கள் என்று இந்நாவலின் ஊடாகத்தான் அறிய நேர்ந்தது. அவர்கள் வாழ்வியல் வலிகளை வாசிக்கும் போதும் பல தருணங்களில் மனம் உருகி கசிந்தது. இப்படி எல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா? வாழவைக்கப்பட்டிருக்கிறார்களா? என்று நினைக்கும் போது கோபமும் குமுறலும் எழச் செய்வது இயல்புதான். ஒரு குடும்பம், அந்த குடும்ப வாழ்வியல் சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் முரண்கள், அண்ணன் தங்கையின் உறவு, உறவு பிரிவுகளின் ஏக்கம், உறவின் தேவையால் குடும்பத்தில் நடக்கும் பல வகையான சிக்கல்களை மிகவும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதி உள்ளார். பல தருணங்களில் என்னுடைய மனதை கலங்கடித்தது.
தேவிபாரதியின் எழுத்தும் அதனின் இறுக்கமும் ஆரம்பத்தில் வாசிக்க சற்று கடினமாகவேதான் இருக்கும். ஆனால் இந்த மாதிரியான படைப்புகளுக்கு இப்படிப்பட்ட இருக்கங்கள் தேவை தான் படுகிறது. ஆரம்பகால வாசகர்களுக்கு கடினமாகவும் இருக்கக்கூடும் நான்கைந்து அத்தியாயத்தை கடந்தால் எளிதில் பிடிபடக்கூடும். அந்த ஊரின் வட்டார மொழியும் அருமையாக கையாண்டு இருந்தார். அவரின் 'நிழலின் தனிமை' வாசித்த போது அதனை முடிவு தந்து அதிர்ச்சி பல மாதங்கள் கழித்து இன்றும் நினைவில் இருக்கிறது. அதுபோலவே தான் இந்நாவல் முடிவும் ஒரு அதிர்ச்சியில் நம்மை ஆழ்த்துகிறது அதனால் தான் இந்நாவல் மனதில் ஆழமாக பதிந்து நிற்கிறது போலும்.
சமகால எழுத்தாளர்களின் தேவிபாரதி ஒரு முக்கியமான படைப்பாளி. இன்று இந்நாவலிற்கான சாகித்ய அகாடமி பரிசை தேவிபாரதிக்கு அளித்ததில் மட்டற்றமகிழ்ச்சி.
ஒரு மனிதனுடைய இறப்பு என்ன செய்யும் - தன்னோடு அந்த மனிதனுக்கு இருந்த உறவை, அதன் உன்னதத்தை, ஆழத்தை, அழுக்கை, அது இல்லாமல் போறதுணால அப்போ மட்டுமே தோணுற வெற்றிடத்தை எல்லாம் ஞாபகப்படுத்தும், இதே மாதிரி ஏற்கனவே இறந்த, இழந்துவிட்ட மறக்க முடியாத பல மனிதர்களின் நினைவுகளுக்கு இட்டுச் செல்லும், பழைய முறிந்து போன உறவுகளையும், அவர்களைப் பற்றியான கதைகளையும், அந்த முறிவுக்கான காரணங்களையும் மீண்டும் ஒரு முறை அசை போட வைக்கும், முறிவுக்கு தானும் ஒரு காரணமென்று நினைத்து சில மணி நேரங்கள் குற்ற உணர்ச்சியில தவிக்க வைக்கும், வாழ்க்கை முழுக்க தவிர்க்க நினைத்து இருந்தாலும் ஒரு முறையும் தவிர்க்க முடியாம ஒன்று தொட்டு ஒண்ணுன்னு தொடர்ந்த விரோதங்களின் கசப்பான நினைவுகளை மூழ்கித் தத்தளிக்க வைக்கும், எந்த வார்த்தைகளுமே தேவைப்படமா, கலங்கி நிக்குறே கண்ணுல இருந்து வழிகிற ஒரு துளி கண்ணீருக்காக அது வரைக்கும் வழங்கப்படாத மன்னிப்பை அளிக்கும் அது வரைக்கும் வெறும் வெற்று பெயர்களா மட்டுமே எஞ்சி நின்ற உறவுகளோடு புது நெருக்கத்தை உண்டு பண்ணும், செய்து கொடுத்த இருந்தும் பல வருடங்களா மறந்து போன வாக்குகளை மீண்டும் புதுப்பித்து தளர்விட வைக்கும் - அப்படியான ஒரு வாழ்வின், அப்படியான ஒரு இறப்பின், அப்படியான ஒரு மன்னிப்பின், அப்படியான ஒரு நினைவின் கதை தான் –நீர்வழிப் படுஉம்.
அப்படி ஒரு இறப்பின் வழியா நினைவின் சேகாதரத்திற்கு கூட்டிப் போய், அதன் வழி ஒரு குடி நாவிதனுடைய வாழ்க்கையையும், அவன் பட்ட பாடுகளையும், கொண்டாட்டத்தையும், கை கொடுத்த உறவுகளையும், விட்டுப் போன உறவுகளையும், குற்றங்களையும், மன்னிப்பையும் எந்த மிகையும் இல்லமா ஒரு வாழ்வியல் பிரதியா அடையாளம் காட்டுகிறது – நீர்வழிப் படுஉம்.
வாழ்க்கை முழுக்க எல்லா உறவுகளையே இறுக்கமா பிடிச்சு வச்சிட்டு இருந்த காரு மாமா, ராசம்மா அத்தை செட்டியோட ஓடிப் போன பிறகு யாருமே இல்லாம தனித்து விடப்பட்டு யாருமே இல்லாம சிதிலமடைந்த வீட்டுக்குள்ள இறந்து கிடந்ததுல இருந்து தொடங்குது எங்க காரு மாமாவோடா கதை.
எந்த உறவுகளுமே இல்லாம அனாதையா பாலடஞ்ச வீட்டுல இறந்து, கொள்ளி போடப் பசங்களும் இல்லாம, சடங்கு செய்ய மனைவியும் இல்லாம, சீர் செய்யச் சொந்த, பந்தமும் இல்லாமல், குளிப்பாட்ட ஆளுங்களும் இல்லாமல், உதவி செய்ய பண்ணையமார்களும் இல்லாமல் கிடந்த எங்க காரு மாமாவை - தன்னால முடிஞ்ச சத்துக்கு இறுதி மரியாதையது விரைவா பண்ணி முடிச்சுடனும்னு காலுல சக்கரத்தை கட்டிட்டு நடந்துட்டு இருந்தாரு எங்கள் பெரியப்பா.
ஆனா உண்மையில அப்படியா நடந்துச்சு எங்க காரு மாமாவோட இறுதி மரியாதை?
கொஞ்சக் கொஞ்சமா விட்டுப் போன உறவுகளும், மனிதர்களும், உதவிகளும் எங்கிருந்தோ, எப்படியோ வந்து சேர்ந்த மாதிரி, காரு மாமாவோட எங்களுக்கு இருந்த உறவும், அவரோட எங்களுக்கு இருந்த நினைவும் கொஞ்சக் கொஞ்சமா காரு மாமா இல்லாத எங்க மாமாவோட வீட்டை மனிதர்களும், மனங்களும், நினைவுகளும் நிரப்பிட்டு இருந்துச்சு.
எங்க காரு மாமா யார் தெரியுமா?
உடையாம்பாளையத்துக் குடி நாவிதன், பண்ணையமார்கள் சொல்ற குற்றவேல்களையெலாம் திறம்பட செய்யுறது, கோவில் திருவிழா, வீட்டு விசேஷம், கிடாய் வெட்டுனா இரண்டு நாள் ஆனாலும் கிடாயை உரிச்சு சுத்தம் பண்ணி தனக்குக் கிடைக்கிற பங்கு கறியைக் கூட எங்க பெரியம்மாக்கும், பெரியப்பாவுக்கும் சரிபாதியாக பிரிச்சு கொடுக்கிறது, எங்க எல்லா உறவுகளுக்கும் ஏதோ ஒரு வகையில ஒரு தொடர்ப்பு கன்னியா இருக்கிறது, ஏன் எங்க ரெண்டு பெரியம்மாவும் அவ்ளோ நட்பா இருந்த அப்பவும் ஏதோ ஒரு மனக்கசப்புனால இனி ஒரு போதும் பேசிக்கவோ முகம் பாத்துக்கவோ போறது இல்லேன்னு முடிவு எடுத்த அப்போ கூட ரெண்டு பேரையும் விடாம உறவுகளை இறுக்கமா பிடிச்சு நின்னது, இப்படியான நினைவுகள் தான் எங்க காரு மாமா பத்தி யோசிச்சதும் தோணுறது, பள்ளி விடுமுறை ஞாபகம் வந்தாளே காரு மாமா வீட்டுக்குப் போனதும், மாமா மகள், பெரியப்பா, பெரியம்மா மகள், மகன் இப்படின்னு எல்லாரும் சேர்ந்து விளையாடின விளையாட்டுகள் எல்லாம் அவ்ளோ பசுமையா மனசுல நிறைஞ்சு கிடக்கு.
ஆனா காரு மாமாவோட என்னோட நினைவுகள் இப்படியான பசுமையான நினைவுகளா மட்டுமே இருந்து இருந்தால் எவ்ளோ நல்லா இருந்து இருக்கும் ஆனா அது தான் இல்ல.
காலமும், ராசம்மா அத்தையும், மாமாவின் உடலும், உறவுகளும், நாங்களும், சூழ்நிலைகளும் காரு மாமாவை மொத்தமா கைவிட்ட பிறகு காரு மாமா அப்படிங்கிற மனிதனும், ஆளுமையும் ஒண்ணுமே இல்லாம உருக்குலைந்து போன கசப்பான நினைவுகளும் இன்னும் ஆறாத வடுவா இன்னமும் மனசுக்குள்ள இருக்கதான் செய்யுது.
ஊருக்கெல்லாம் குடி நாவிதனா இருந்த, எல்லாரையும் சீவி, சிங்காரித்து அழகு பாத்த எங்க காரு மாமா, உடல் எல்லாம் மெலிஞ்சு, முகத்துலயும், தலையையும் முடியெல்லாம் வளர்ந்து, சிக்கு பிடிச்சு நடுரோடுல எங்களோடு பழைய வீட்டோட நினைவுகளை மட்டுமே மனசுல வச்சுட்டு அலைந்து திரிஞ்சுட்டு இருந்த எங்க மாமாவோட கோலம் இப்போ நினைச்சாலும் கண்ணுல தண்ணி தான் வருது, அவ்ளோ நினைவு தப்பின சமயத்துலையும் எங்க அம்மாவா ஆசையா இல்ல முத்து ஆமா முத்துன்னு கூப்பிட்ட ஒவ்வொரு சத்தமும் இன்னமும் காதுல கேட்டுட்டே இருக்கு, ராசம்மா அத்தை ஓடிப் போனது கூட பெருசா பாதிக்காத எங்க மாமா, பிள்ளைகளும் சேர்ந்து போயிருச்சுங்கன்னு தெரிஞ்சதும் தெருவெல்லாம் பைத்தியம் மாதிரி ஓடி தேடினதும், தன்னோடு மகளோட அறுந்து விழுந்த கொலுச வாழ்க்கை முழுக்க இறுக்கமா பிடிச்சு கிட்டதும், எப்பவுமே உறவுகளை மட்டுமே இறுக்கமா பிடிச்சுக்கிட்டு அணுக்கமா போன மாமா முதல் முறையா எல்லாரையும் கோச்சுக்கிட்டு ஏதோ ஒரு மலை அடிவாரத்துல தனியா போய் இருந்ததும், அவர எப்படியோ விடாம தேடி எங்க அம்மாவோட அவர போய் பாத்த போது அவர ராசம்மா அத்தையின் பிரிவுக்குப் பின்னாடி விடாம வாட்டி வதைச்ச வலிப்பு நோயை முதல் முறையா பார்த்ததும் இன்னமும் கண்ணுக்குள்ள ஈரமா அப்படியே நிக்கிது.
இப்படி காலமும், உறவுகளும் கைவிட்ட மாமா வீட்ல கால நேரம் தெரியாம, அவர கைவிட்ட எல்லா உறவுகளும் அவர் இல்லாத அவர் வீட்டுல இப்போ நிறைஞ்சு கிடக்கிறோம், அவர் இருந்த அப்போ அவர விட்டுவிட்டுப் போன ராசம்மா அத்தையும், மாமாவோட பொண்ணும் இப்போ தாளி அறுப்பு சடங்குக்காக இப்போ உடஞ்ச சருகா மாமா வீட்டு வாசல்ல நிக்குறாங்க இவ்ளோ நேரமும் மாமா இறப்புக்குக் காரணம் ராசம்மா தான்னு தன்னோட அண்ணா மேல இருந்த பாசத்துல கரிச்சு கொட்டின எங்க அம்மாவும், மத்த பெரியம்மாவும் வாசல்ல நிக்குறாங்க, இதுக்கு மேல என்ன தான் ஆச்சு, காலம் முழுக்க உறவுகளை பிடிச்சு வச்ச காரு மாமா வீட்டுல இப்போ எல்லா உறவுகளும் இருக்கு அந்த உறவுகளுக்கு என்ன தான் ஆச்சு, எல்லா இறப்பும் ஏதோ ஒண்ணு பண்ணிட்டு போற மாதிரி காரு மாமாவோட இறப்பு அப்பிடி என்ன தான் பண்ணுச்சு இதெல்லாம் தான் - நீர்வழிப் படுஉம்.
நீர்வழிப் படுஉம் – உறவுகளின் தேவையையும், அதுக்குள்ள நடக்குற உணர்வு ரீதியான பாதிப்புகளையும், பூசல்களையும், போட்டிகளையும், குற்றங்களையும், மன்னிப்பையும், மீண்டும் ஏற்றுக் கொள்ளலையும் எனப் பல வாழ்வின் சுவடுகளை அப்படியே அப்பட்டமா பிரதி எடுத்துக் காட்டுது, இதில் போலிகள் இல்லை முழுக்க முழுக்க மனிதர்களும் அவர்தம் மேன்மைகளும், கீழ்மைகளும் , குற்றங்களும் அத்தோட அவர்களை ஏற்றுக் கொள்கிற உணர்வின் வெளி��்பாடும் என ஏதேதோ கடந்த கால நினைவுகளை மீண்டும் ஒரு முறை ஆழச் சென்று பார்க்க வைக்குது.
நீர்வழிப் படுஉம் – யாருமற்ற சிதிலமடைந்த வீட்டின் இடுக்குகளிலிருந்து வெளிப்படும் கொண்டாட்டத்தின் மனநிலை.
உறவுகள் என்னும் தாயக்கரத்தில், குற்றத்தையும், மன்னிப்பையும், மறத்தலையும், ஏற்றுக்கொள்ளலையும், அன்பையும் மட்டுமே பணயமாய் வைத்து வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடிப் பார்க்கிறது - நீர்வழிப் படுஉம்
உண்மையில் இது வெறும் காரு மாமாவின் கதை மட்டும் தானா அப்படின்னா அதான் இல்ல – எல்லா வாழ்க்கையிலும் இப்படி கடைசி வரை உறவுகளுக்காகவே வாழ்ந்து கடைசியில் எந்த உறவுகளும் இல்லாம விடப்பட்ட எல்லா மாமாக்களையும் அவர்களின் நினைவின் சேகாரத்தில் இருந்து மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய வைக்கிற ஒரு படைப்பு - இது எங்கள் காரு மாமாவின் கதை.
காருமாமா என்னும் குடிநாவிதனை காடேத்தும் சடங்கில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்வின் ஊடாக தான் சார்ந்த சமூகத்தின் வலியையும், வேதனையையும், சின்னச் சின்ன சந்தோசங்களையும், தன் காலகட்டத்தின் வாழ்வியலையும் பிரதிபலித்திருக்கிறது இந்த படைப்பு!
இந்நாவலின் தனித்துவமே அனைத்து கதாபாத்திரங்களையும் நடு நிலையாக நின்று எடுத்துக்கூறியதுதான். எந்த ஒரு இடத்திலும் வேறுபாடின்றி கதாபாத்திரத்தை ஏற்றி இறக்கி கூறியிருக்கிறார் ஆசிரியர் தேவிபாரதி.
கொங்கு பகுதி நாவிதக்குடி வட்டாரவழக்கில் எழுத்துநடை செல்வதால், கதைக்குள் நுழைந்து பயணிக்க சற்றே கடினமாக உள்ளதென்றாலும், பிறகு போகப்போக ஒன்றிவிடமுடிகிறது.
"நீர்வழிப் படூஉம்"
சாதிய அடுக்கில் கீழ்பகுதியிலும், வர்க்க வேறுபாட்டில் விளிம்பு நிலையிலும் உள்ளவர்களின் பட்ட கதையையும் வாழ்வையும் மெல்லிய நீரோட்டம் போல காட்டியிருக்கிறது இந்நாவல்.
எல்லோரையும் போல நானும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் அப்டிங்கரதுக்காக புத்தக கண்காட்சியில் வாங்கியது தான் இந்த புத்தகம்.
என்ன கதைனு தெரியாது, தேவிபாரதி யாருனு தெரியாது, அட்டைப்படத்தைத் தாண்டி எதுவுமே தெரியாது. எந்த reviews, write up நு எதுவுமே பாக்கல இத பத்தி. பெயர் மட்டும் அடிக்கடி கேள்விப்பட்டேன்.
இத்தனை நாள் என் அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த இந்த தேவிபாரதி, கடந்த நான்கு நாட்களாக என்னை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார், இந்த பக்கங்களினூடே. உறவுகள் பற்றி ஒரே கோணத்தில் பொதுமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த என் பார்வையை, புரிதல்களை, மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்று காட்டி இப்போது என்ன சொல்கிறாய் என கேட்டுவிட்டு கடந்து செல்கிறார். உறவுகளின் பிணக்குகள், கோபதாபங்கள், பிரிவுகள், முறிவுகள், சண்டைகள் அவற்றோடு அவர்கள் விடாப் பிடியாய் பிடித்திருக்கும் அன்பு ஆகியவற்றை யதார்த்தமாக நம் அம்மாவோ, அம்மாச்சியோ அருகே அமர்ந்து கதை கூறுவது போல அவ்வளவு அழகாக சொல்லிக் கொண்டே போகிறார் தேவிபாரதி.
Non linear ஆக கதையின் காலத்தில் முன்னும் பின்னுமாக நம்மை இழுத்து விளையாடுகிறார்.
நான் Kafka வை படிக்கும்போது அவரது எழுத்திற்கும் எனக்கும் ஒரு போட்டி நடக்கும், எத்தனை வரிகள் நீ இடைவிடாமல் படிக்கிராய் பார்க்கலாம் வா என. stream of consciousness என்ற narrative technique, அதாவது கதைசொல்லி எந்த ஒரு முற்றுப்புள்ளியும் வைக்காமல், தொடர்ந்து கதையை, எண்ண ஓட்டங்களை, நினைவுகளை விவரித்துக் கொண்டே இருப்பார். அவ்வகை எழுத்து நடை பத்து இருபது வரிகள் வரை தொடர்ந்து flow ஆக போய் கொண்டே இருக்கும் இடைவிடாமல், முற்றுபெறாமல். அது போன்றதொரு நடையை தேவிபாரதி எழுத்தில் உணர்ந்தேன். கதையில் அம்மா, தன் கடந்த காலத்தை பற்றி கூறும் போது, லிங்கனாசுவன் கதையின் போது, காருமாமா பல நாள் கழித்து தன் தங்கையையும் தங்கையின் பிள்ளைகளையும் சந்திக்கும் போது என பல இடங்களில் அந்த கிராமிய வட்டார வழக்கில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போவார்கள். முதல் சில அதிகாரங்கள் தாண்டிய பின், நானும் அவர்கள் ஊரில் ஒருவனாக ஆகி விட்டேன் போலும். சுலபமாக அதே வட்டார மொழியில், அவர்கள் பேசுவதைப் போலவே வாசித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு சில புதிய தமிழ் வார்த்தைகளையும் அதன் பொருளையும் அறிந்து கொண்டேன்.
நான் தொடர்ந்து இரு முறை, அடுத்தடுத்து வாசித்த முதல் புத்தகம் இது தான். அதிகமான வரிகளை கோடிட்டு, குறிப்பெழுதி வாசித்ததும் இதுவே முதல் முறை.
முதல் வாசிப்பில் காருமாமா யார், அவர் எப்படி பட்டவர், அவரின் துயரங்கள், வறுமை, அவமானங்கள், நெகிழ்ந்த தருணங்கள், அவர் தன் உறவுகள் மீது கொண்ட அன்பு என காருமாமா மாமனிதனாக என்னை வியக்க வைத்தார்.
கடைசி இரண்டு அதிகாரங்கள் முடித்த பின், ஒரு வித கலக்கம் என்னுள், காருமாமா கூறிய அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன,
எப்படி இந்த மனுசனால இப்படி இருக்க முடிஞ்சது. எப்படி அவர் வாழ்க்கைய, மனிதர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார் நு நெகிழ்ந்து போய் வாயடைத்து நின்றேன். இரண்டாவது வாசிப்பில் காருமாமா மட்டுமல்லாமல் அவரைச் சுற்றியிருந்த உறவுகள் பத்தி ஆழமாக புரிந்தது. அம்மாவும், பெரியம்மாவும், முத்தையன்வலசு பெரியப்பாவும், மாமாவின் மீது வைத்திருந்த அன்பு தெரிந்தது.
ஆரம்பிக்கும் பொது கொஞ்சம் குழப்பம் இருந்தது யார் எந்த பெரியப்பா, இது எந்த பெரியம்மா, அது யார், இது யார் என, திருமண வீட்டிற்க்கு சென்று யார் என்ன உறவு என தெரியாமல் குழம்பியது போல, இருந்தேன். இரண்டாவது வாசிப்பில் தெள்ளத் தெளிவாக விளங்கியது.
குடிநாசுவ சமுதாய மக்களின் வாழ்க்கை, பிழைப்பு, கிராமிய கலாச்சாரம், ஒப்பாரி, பேச்சு வழக்கு, இசையும் சினிமாவும் ஏற்படுத்திய தாக்கம், பால்யகால நினைவுகள் என்று இக்கதையில் பல அடுக்குகள் அறிந்து கொண்டே போகலாம்.
வறுமையில் யாருமற்ற சடலமாக கிடந்தவரை, இடுகாடு கொண்டு செல்லும் போது விழாக்கோலம்பூண்டிருந்தது. அவ்வளவு மக்களை சம்பாதித்து வைத்திருந்தார் எங்கள் காருமாமா. அனைவராலும் வெறுக்கப்பட்ட, சபிக்கப்பட்ட, ஒரு பாத்திரம் மீண்டும் மன்னிக்கப்படுவதும், ஏற்றுக்கொள்ளப்படுவதும், நம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்துகிறது. எங்கள் காருமாமா, எங்கள் பெரியம்மா, எங்கள் ராசம்மா அத்தை. எங்கள் தேவிபாரதி ♥️
பொதுவா புத்தகத்தை பத்தி Post அவ்வளவா போட வேணாம், எதுவும் spoil ஆகிட போகுது புதுசா படிக்கிறவங்களுக்கு, ஒவ்வொருத்தரும் படிச்சு அவுங்களே என்ன தோணுதோ feel பண்ணட்டும், அதுவும் இல்லாம எதுனா தவறான புரிதல்ல எதுவும் சொல்லிறக்கூடாதுனு இருந்தேன், ஆனா நீர்வழி படூஉம், அதையெல்லாம் ஓரமா போட்டு தோன்றத சொல்லனும்னு ஒரு தாக்கம் உண்டாக்கிருச்சு.
ரொம்ப நாளுக்கு அப்புறம் என்னோட மாமாவுக்கும் போன் பண்ணி பேசினேன், படிச்சி முடிச்சுட்டு.
நீர் வழிப்படூஉம் இந்நாவலின் தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ நீரின் முக்கியத்துவம் வாய்ந்த நாவல் என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது வாழ்வின் மையம் குறித்து முக்கியத்தன்மை கொண்டு அமைந்ததாகும். நாவல் ஆகும். இந்நாவலின் உள்ள தனித்துவமே அனைவரையுமே நடு நிலையாக நின்று எடுத்துக்கூறிய கதாப்பாத்திரங்கள் ஆகும். எந்த ஒரு இடத்திலும் வேறுப்பாடின்றி கதாபாத்திரத்தை ஏற்றி இறக்கி கூறியின்மையாகும். அடுத்து நாவலின் மொழி நடை மிகவும் எளிமையான கொங்கு நாட்டு பேச்சு வழக்கில் வித்தியாசமான முறையில் எடுத்துரைத்துள்ளார். தேவிபாரதி அவர்கள் இப்புத்தகத்தின் கதை எழுத்தாளராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகனாகவும், கதை சொல்லியும் ஆவார்.
A short book and very well written. The book started slowly and with somewhat difficult to read prose, because of the வட்டார வழக்கு. Stopped twice in the first or second chapter months back. This time started with more determination. The author used the first half of the book to build up the characters and their relationships. Once we cross 30-40%, it was difficult to stop! The story picked up speed towards the end and last chapter was wow! The end may give us mixed feelings but one you will never forget!
கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவன் என்பதால், எழுத்து நடை மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது... குடி நாவிதர் என்றொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியையும், அவர்களது வாழ்வியலையும் பற்றி மிகவும் எதார்த்தமாக, எள்ளளவும் மிகைப்படுத்தாமல் எழுதியுள்ளார். பொதுவாக ஒரு புத்தகத்தின் வெற்றி என்பது, அதிலுள்ள ஒரு உயிர்தன்மை. வாசகன் அதனினுள் வாழ வேண்டும். அதை இந்த நூல் செவ்வனே செய்து உள்ளது.
காருமாமா என்கிற ஆறுமுகத்தை காடேத்தும் சடங்கில் இருந்து ஆரம்பிக்கும் இந்த கதை.
குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கிறது.
அவருடைய பிரிந்துபோன குடும்பம் அவருடைய இறப்பின்மூலமே ஒன்று சேர்கிறது. தவறுகள் மன்னிக்க படுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு பகிரப்படுகிறது.
நீர் வழிப்படூஉம் narrative seamlessly traverses through various characters, all of whom are incredibly relatable. Each of us has encountered people like these, and the book delves deeply into their lives. The biggest takeaway is that human beings experience ups and downs, love and hate, likable and unlikable traits, but ultimately, it all comes down to humanity. Despite fights, differing opinions, thoughts, and frustrations, the most important thing in life is to love and accept people as they are.
I came to know about the author and this book only after the Sahitya academy award. Story happens around Erode and Tiruppur region, it starts with Karu Mama's funeral and narrates the author's memories about Karu mama and his family. It has a total of 33 chapters and most of them are tragic.
This entire review has been hidden because of spoilers.
சாகித்திய அக்காடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் புதினத்தின் மீது ஆவல் கொண்டு படிக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில், கதைமாந்தர்கள் பேசிக்கொள்ளும் வசன உச்சரிப்பை உள்வாங்கிக்கொள்ள கடினமாகவே இருந்தது. ஆயினும், கதை செல்லச் செல்ல, அந்த வசன நடையே என்னை கதைமாந்தன் ஒருவனாக மாற்றி அக்கதையினுள் வாழச் செய்தது.
குடிநாவிதனான காருமாமாவைப் பற்றிய கதை. காருமாமாவின் மருமகன் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் கதை. ஈரோட்டை ஒட்டி உள்ள பகுதிகளின் சமூகக் கட்டமைப்பை எடுத்துறைக்கிறது. குடிநாவிதர்களின் உழைப்பைச் சார்ந்து வாழும் பண்ணயர்கள்; சாயப் பட்டறை தொழிலாளர்கள் படும் வேதனைகள் - கதையில் ஆழமாக பேசப்படுகின்றன.
புதினத்தின் அநேக அத்தியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன; சில சிதறடித்து விடுகின்றன. மொத்தத்தில் ஒரு சிறந்த கதை. அனைவரும் படிக்க வேண்டிய கதை.
பல இடங்களில் நீண்ட சொற்தொடர்கள் அதுவும் வட்டார வழக்கிலிருப்பது படிப்பதற்கு ஆயாசம் தந்தாலும் அப்பட்டமான முகத்திலறையும் வறுமையும் வறட்சியையும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலையும் ஆசிரியர் அழகாக கண் முன் கொண்டு வருகிறார். நாவல் முடிவு ஏமாற்றம்!
Can't even explain why u like it . Really was good and heart somehow feels full even though the story starts tragic . Something that happens at a. Funeral ritual and maybe it reminds us of death somehow