ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு- - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது நாவலின் கதை. இடப்பெயர்வு ஏற்படுத்தும் சலனங்களினூடே மாறிவரும் மனித உறவுகளையும் உணர்வுகளையும் நுண்ணுணர்வுடன் சித்திரிக்கிறது. நேரடியான காட்சிகளையும் குறியீடுகளையும் கொண்ட கதையாடல் பல்வேறு நுட்பங்களையும் அடுக்குகளையும் கொண்டு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
‘நட்சத்திரவாசிகள்’ என்னும் தனது முதல் நாவலுக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது நாவல் இது.
கார்த்திக் பாலசுப்ரமணியன் (பி. 1987) இவர் 1987ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி, மகனுடன் வசித்துவருகிறார். ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com
ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்ரமணியன் நாவல் காலச்சுவடு பதிப்பகம் 311 பக்கங்கள்
இந்த உலகில் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை தனக்கான நிலத்தை நிர்ணயிக்கவும் , தனக்கு விருப்பமான நிலத்தை நோக்கிய ஒரு முடிவற்ற புலம்பெயர்வுக்கும் நடுவே தத்தளிக்கும் ஒரு திசைமாறிய கடலோடி போலத்தான் வாழ்ந்துவருகிறான் . நாகரீகம் , கால நிலை மாற்றம் , சமூக முன்னேற்றம் என்று நாம் எண்ணற்ற பெயர்கள் கொண்டு ஒரு நிலத்தின் பூர்வீக குடியை அந்த நிலத்திற்கு தகுதியற்றவர்கள் என்று முத்திரையிட்டு அவர்களின் சுதந்திரத்திற்கும் , நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிப்பது காலம் காலமாக மேல்குடி மக்களுக்கு கைதேர்ந்த ஒரு கலை . தன் எல்லையை தொடும் வேறு ஒரு கூட்டத்தை எதிர்க்கும் குணம் ஐந்தறிவு கொண்ட மிருகத்திடம் உண்டு என்றால் அவ்வுணர்வு மனிதனிடமும் காண்பது தவறல்ல . ஆனால் , அந்த எதிர்ப்பின் வீரியமும் , முடிவும் , இலகுவாகும் சூழ்நிலையும் அந்த தொடுதலின் உணர்வை பொறுத்ததே . அன்பின் பால் நிகழும் எந்த ஒரு எல்லைமீறலும் இங்கு எதிர்க்கப்படுவதில்லை , அதிகாரத்தின் கொடுங்கரம் கொண்டு பறிக்கப்படும் எல்லைமீறல்கள் மட்டுமே இன்றுவரை எதிர்க்கப்பட்டுள்ளன . அப்படி ஒரு அதிகார வர்கத்தின் அக்கறை முகமூடியை அகற்றி கொடுங்கோல் ஆட்சியின் கோர முகத்தை அம்பலமாக்கும் ஒரு படைப்பு தான் இந்த தரூக் .
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று வெவ்வேறு தலைமுறைகளில் மூன்று வெவ்வேறு நிலங்களில் கதை தொடங்கி இரண்டு கதைகளாக தொடர்ந்து இரண்டு காலங்களில் முடிவடைந்தாலும் , அணைத்தும் ஒரே புள்ளியில்தான் இணைகின்றன .காசிம் - பர்ஸானா - ஜெட்டா அவர்களுடைய சமகால ஆஸ்திரேலியா வாழ்க்கை ஒரு பக்கம் , 1700 களில் வில்லியம் - காபா - ரெபேக்கா - பிலிப் என்ற பிரிட்டிஷ் பேரரசின் ஆணைப்படி ஆஸ்திரேலியா கண்டத்தில் முதல் குடியேற்றம் ஒரு பக்கம் என நாவல் விரியத் தொடங்குகிறது .மென்பொருள் நிறுவன வேலை பொருட்டு காசிம் தன் மனைவியுடன் ஆஸ்திரேலியா வந்தடைந்து , பணி சூழல் எள்ளளவும் அவனுக்கு ஒட்டாத பொழுதும் குடும்ப சுமை மற்றும் மனைவியின் ஆசைக்காக அவன் தன் பணியை தொடர்கிறான் . இந்த கடினமான பயணத்தில் ஒரு இறகின் வருடல் போல ஜெட்டா என்ற பூர்வ குடி ஆஸ்திரேலிய பெண்ணுடன் நட்பு மலர்ந்து ஒரு பெயரிடப்படாத உறவுக்குள் மிதந்து செல்கிறது . ஜெட்டா தன் பூர்வ குடியை ஆராய்ச்சி செய்து சரித்திர பதிவிற்காக போராடும் ஒரு எழுத்தாளர் . இதன் நடுவே காசிமிற்கு ஆஸ்திரேலியாவை எப்பொழுதும் அந்நியமாகவே உணர்கிறான் , அவனை உற்று நோக்கும் கண்கள் , எள்ளி நகையாடும் உதடுகள் , விலக்கி வைக்கும் எதிர்ப்புகள் , தனித்து பார்க்கும் தர்கங்கள், தனக்கு மட்டுமே கேட்க்கும் எதிர்க்குரல் , தன்னை துளைக்கும் தனிமையின் அம்புகள் என அவன் இனம்புரியாத இன்னல்களுக்குள் தத்தளிக்கிறான் . பர்ஸானா-வாள் புரிந்துகொள்ள முடிந்தாலும் அவனுக்கு எந்த வகையிலும் உதவமுடியவில்லை உடனிருப்பதை தவிர . ஒருவகையில் பல ஆண்டுகளுக்கு முன் ஜெட்டாவிற்கும் அவள் குடும்பத்திற்கும் நடந்ததிற்கும் காசிமின் இன்றைய நிலைக்கும் எந்த மாற்றமும் இல்லை .
1700 களில் பிரிட்டிஷ் பேரரசின் தண்டனை கைதிகளில் சுமந்து 11 கப்பல்கள் ஒரு புதிய நிலத்தை தேடி தொடங்கிய பயணம் ஆஸ்திரேலியா எனும் கண்டத்தை கண்டடைந்ததில் முடிந்தது . அந்த பயணத்தில் தளபதி பிலிப் இன் உற்ற துணையாக சென்றவன் வில்லியம் . வில்லியம் தன் காதலி ரெபேக்காவை காத்திருக்க சொல்லி இங்கு வந்ததன் காரணம் புது நிலம் , புது மக்கள் , புது பயணம் என்ற புத்துணர்வு தான் . ஆனால் , அங்கு சென்ற பிறகுதான் தன்னுடைய அரசின் குரூர எண்ணம் அவனுக்கு அம்பலம் ஆனது . அந்த நிலத்தின் பூர்வ குடிகளை யோசிப்பதற்கே கடினமான ஒரு முறை கொண்டு கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை பார்த்த வில்லியம் அதற்கு எதிரே போராட முயன்று , தோற்று , தன் உற்ற நண்பன் காபா வை பறிகொடுத்து . தடுமாறி உடைந்து போன மனநிலையில் தன் ஒரே பற்றுதலான தன் காதலை பற்றிக்கொண்டு இங்கிலாந்து திரும்புகிறான் . போர்ட்ஸமௌத் துறைமுகத்தில் வந்திறங்கிய நொடி முதல் பல ஆண்டுகளாக காணாத தன் ரெபேக்காவை காணும் அந்த நொடியை நோக்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான் .
இறுதியில் காசிம் என்ன ஆனான் ? ஜெட்டாவின் ஆய்வு முடிவடைந்ததா ? வில்லியம் ரெபேக்காவை சந்தித்தானா ? தளபதி பிலிப் தன் குடியேற்றத்தில் வெற்றிபெற்றாரா ? பர்ஸானாவின் பரிதவிப்பு அவர்களை எங்கு கொண்டுசென்றது ? கைமாறிக்கொண்டே இருந்த பிரியத்தின் கல் இறுதியில் யார் கையில் சென்று சேர்ந்தது ? தரூக் என்ற தலைப்பு இக்கதைக்கு எப்படி ஒரு பொருத்தமான தலைப்பாக மாறியது ? இந்த கேள்விகளின் விடைகள் கதையின் முடிவில் காத்திருக்கின்றன . கார்த்திக்கின் மொழியும் , எழுத்தின் பாதையும் கடந்த நாவலை விட பல மடங்கு உயர்ந்திருக்கிறது .,ஆண் -பெண் உறவுகளை கத்திமேல் நடப்பது போல அவர் கையாண்ட விதம் வெகு லாவகம் , எந்த இடத்திலும் துளியும் குரலை உயர்த்தாமல் ஒரு சாமானியனின் பார்வையில் இக்கதையை கூறியதே இதற்கு பெரும்பலம் , பல வருடங்களின் ஆராய்ச்சியும் உழைப்பும் கதை முழுக்க தெரிந்தாலும் கதையின் ஆணிவேராக உணர்வுகளை வைத்தது சிறப்பு . அவர் எவ்வளவு தவிர்க்க நினைத்தாலும் கார்த்திக்கின் உளச் சாயல் கதையில் ஆங்காங்கே அவருடைய வாசகனின் கண்களில் தென்பட்டுவிடுகின்றன .
இந்த நாவல் முழுக்க காதல் , அன்பு , நட்பு , பிரிவு , வஞ்சம் , என எண்ணற்ற உணர்வுகள் பரவிக்கிடந்தாலும் , அன்பு மட்டுமே பிரதான உணர்வாக இக்கதை வெளிக்காட்டுகிறது . நாம் அனைவரும் இந்த மண்ணில் எங்கோ ஓர் மூளையில் ஒரு பூர்வகுடிகளாகவே நம் வாழ்க்கையை தொடங்கியிருப்போம் அப்பொழுது நம் கையிலும் தரூக் இனத்தவரிடம் இருந்தது போல ஒரு பிரியத்தின் கல் இருந்திருக்கும் . கடந்து வந்த பாதையில் மனிதன் அந்த பிரியத்தின் கல்லை எங்கோ தொலைத்துவிட்டான் . மொழிகள் தோன்றும் முன்னர் சகமனிதர்களுக்குள் இருந்த புரிதல் ஏனோ மொழியும் , வளர்ச்சியும் வந்த பின்னர் தடமின்றி மறைந்துபோனது , மனிதனின் மனமும் மரத்துபோனது . இல்லையேல் , இவ்வுலகில் இன்றளவும் தொடர்ந்து நிலத்திற்காகவும் , அதிகாரத்திற்காகவும் தன் இனத்தை தானே அழிக்க துணிவார்களா ? இந்த கதையில் எல்லா காலத்திலும் அந்த சீகல் பறவை பறந்துகொண்டே இருக்கிறது . அங்கே மனிதனால் நிகழ்த்தப்பட்ட அனைத்திற்கும் இருக்கும் ஒரே சாட்சி அந்த பறவை மட்டுமே . காலம் மாறினாலும் , தன்னை காணும் மனிதனும் அவன் கண்கள் மாறினாலும் எந்த மாற்றமுமின்றி அந்த சீகல் வானில் வட்டமிட்டு , தரையில் தன் இரைக்காக மட்டுமே இறங்கி தன் வாழ்க்கையை எந்த மாற்றமுமின்றி வாழ்ந்து வருகிறது . பார்க்கப்போனால் நம்மை விட பல மடங்கு உயரிய உயிரினமாகத்தான் எனக்கு தோன்றுகிறது . ஒரு வேலை மனிதனுக்கு தொடுதல் வழி ஒரு மொழியிருந்திருந்தால் அந்த சீகல் -லை தொடுவதோடு அதன் நினைவுகளையும் , உணர்வுகளையும் நாம் அறிந்திருக்கக்கூடும் . தொடுதலை மறந்து மொழியறிந்து உரையாடத் தொடங்கிய மனிதன் அருகிலிருந்தும் விலகித்தான் நிற்கிறான் .
The author weaves a compelling narrative that intertwines historical migration and modern job migration to Australia. The novel explores British colonialism in Australia, shedding light on its impact on the land’s original inhabitants and drawing parallels with the experiences of present-day immigrants.
Rich in historical details, the book delves into the colonial hierarchy and the mechanisms of British rule, presenting well-researched insights into the era. The writing style is simple yet distinct, effectively maintaining two parallel storylines that unfold side by side.
While the dual narratives are engaging, the endings could have been more impactful, avoiding conventional closures.
Overall, Tharook stands out with its refreshing plot and thoughtful exploration of migration and history.
இடப்பெயர்வு, குடியேற்றம், காலனியம் போன்றவை குறித்தோ, நவீனகாலத்தின் வேலைவாய்ப்புகளுக்கான புலம்பெயர்தல் குறித்தோ எவ்வித அடிப்படையோ, ஆழமோயின்றி தோன்றியதையெல்லாம் எழுதி அதை ஒட்டு சேர்க்க சில பெண் கதாபாத்திரங்கள் என சந்தைக்காக எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவல், சமீபத்தில் எழுதப்படும் நாவல்கள் அனைத்திலும் வாழ்வெனும் அனுபவம் முழுக்க பெண்ணுக்காக, ஏங்குவதாகவும் அந்த பெண்ணே வாழ்வின் விடுதலையாக So called தரிசனமாக (அதுவே ஒரு நாவலுக்கான முக்கிய அம்சமாக) வலிந்து முன்னிறுத்தப்படுவதும் இலக்கியம் மலிவாகி வருவதையே காட்டுகிறது.