காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம். ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு.
வெறும் பொட்டல்காடாகவும் சவுக்குத்தோப்பாகவும் இருந்த பழைய மாமல்லபுரம் சாலை ராஜீவ்காந்தி சாலையாக உருவெடுத்ததன் பிண்ணனி என்ன, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் நிகழ்ந்த நகரமயமாக்கலின் விளைவுகள், மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றைப் பேசுகிறது இந்நாவல்.
சுஜாதாவின் கணேஷ் வசந்த் புத்தகங்களை ஆரம்பிக்கும் போது எதிர்பாராத ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளுமே அப்படியொரு மனநிலையில்தான் நானும் ராஜீவ்காந்தி சாலையின் முதல் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் மக்களை சென்னையில் சங்கமிக்கிறது. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும் அதிகரித்த தேவைகளினாலும், பவிசான வாழ்க்கை முறையினாலும் வந்தேறிகளான இவர்கள் எத்தனை எரிச்சலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதையும் தெளிவுறச் சொல்கிறது நாவல். கேளிக்கைகளுக்கு அதிகம் செலவழிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்நாவலின் மையக்கருத்தின் ஓரிழை, ஐடி துறையினருக்கு அதிகம் தேவைப்படுவதும் அவர்களை வாதைக்கு உள்ளாக்குவதுமாக இருப்பது பணமும் காமமும். ஐடியில் வேலை செய்பவர்களுக்கு அளவுக்கு மீறின சம்பளமும், தேவைப்படும்போதெல்லாம் காமமும் இன்ஸ்டண்ட்டாக கிடைக்கிறதெனும் ஒரு போலி பிம்பத்தைத்தான் இந்த நாவல் தோற்றுவிக்க முயல்கிறது. சௌம்யா கதாபாத்திரம் தவிர மற்ற அனைவருமே இவ்வாறாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுதானா என்றால், இல்லை. இல்லாமலும் இருக்கலாம்.
கதையின் முதல் எழுபது பக்கத்திற்கு மிகவும் சோகையாக நகரும் ராஜீவ்காந்தி சாலையை அதன் பின் 'சூடு'பிடித்து நகரச் செய்வது இந்த கள்ளகாதல் வகையறாக்கள்தான். எப்போதுமே அடுத்தவர்கள் அந்தரங்கத்தை அறிந்துகொள்வதில் இருக்கும் தக்குனூண்டு ஆர்வம் யாருக்குமே தவிர்க்க முடியாத ஒன்று. அது நிஜமாய் இருந்தால் என்ன புனைவாய் இருந்தால் என்ன? நான் நினைக்கிறன் நாவலை நகர்த்திச் செல்வதும் அந்த ஒரு காரணி கள்ளக்காதல் + காமம் + ஆபாசம் தான் என்று.
எவ்வளவோ அற்புதமான காட்சிகள் நாவலெங்கும் விரவியிருந்தாலும் அன்னம்,மீன்குழம்பு சமைத்து எடுத்துக்கொண்டு செட்டியாரைப் பார்த்துவரும் ஒரு அத்தியாயம் முதுமைக்காதலையும் வாழ்வின் தேவையையும் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது.
வேலையிழப்பு, அதன் நெருக்கடி காரணமாக பிரணவ் மெல்ல மெல்ல மனச்சிதைவுக்கு ஆளாகும் இடம் அழகாக வந்துள்ளது. இதையும் இறுதியில் கொண்டு வராமல் கொஞ்சம் முன்னே அறிமுகப்படுத்தி சாலையில் கைவிடப்படும் பைத்தியங்களுடன், சமூகத்தில் ஒரு மேல் தளத்தில் பிரணவ் மனநிலை பிறழ்ந்து பயணிக்கையில் வரும் விபரீதங்களை சித்தரித்திருக்க முடியும்.
எனோ ராஜீவ் காந்தி சாலை பற்றி நினைத்தாலே இப்போதெல்லாம் கதி கலங்குகிறது ! ஒரு நல்ல கதை படித்த திருப்தி .
இனி இந்த சாலையில் பயணிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரின் சலனமற்ற முகத்திற்கும் பின்னிருக்கும் கதையை ஆழ்மனம் அறிய தூண்டும். ஒரு காலத்தில் விவசாய நிலங்களாகவும் காடுகளாகவும் இருந்த பழைய மாமல்லபுரம் சாலை , இன்றைய ராஜீவ் காந்தி சாலை. படையெடுத்த சோழனையும் பல்லவனையும் பார்த்த சாலை, இன்று வானுயர்ந்த IT தொழிற்நுட்ப நிறுவனங்களால் மத்திய கைலாஷ் துவங்கி சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம், காரப்பாக்கம் என காஞ்சிபுரத்தில் முடிவடைகிறது. காலை எழுந்து குளித்தும் குளிக்காமலும் பேருந்தில் ஏறி உணர்ச்சிகள் அற்று தூங்கிக்கொண்டே செல்லும் உயிரினங்களை காலை 6 மணி முதல் இந்த IT Corridor இல் பார்க்கலாம். கிட்டத்தட்ட 3 லட்சம் IT ஊழியர்களும், 5 லட்சம் பீகாரிகளும் மீதி இவர்களை சார்ந்திருக்கும் வியாபாரிகளும் என 10 லட்சம் பேரை சுற்றி சுழற்றும் சாலையுடைய கதை.
// ராயபேட்டை எக்ஸ்பிரஸ் அவின்யுவின் மூன்றாம் மாடியில் இருந்து ஒருவன் குதித்து தற்கொலை செய்து கொண்டதை உலகமே முக புத்தகத்தில் கண்டது. ராஜீவ் காந்தி சாலையோடு சம்பந்தப்பட்டவர்கள் சற்று அதிகமாகவே பார்த்தனர். // // முன்பெல்லாம் இந்திய ரூபாயில் சம்பளம் வாங்கி இந்திய ரூபாயில் செலவு செய்தனர். தவறுகள் குறைந்திருந்தது. என்று இந்த IT துறை உள்ளே நுழைந்ததோ, அமெரிக்க ரூபாயில் சம்பளம் வாங்கி இந்திய ரூபாயில் செலவு செய்து, தவறுகளோடு வாழ்கின்றனர். சாமானியனின் வாழ்வை அழித்து. //- இந்த வரிகள் தான் இந்த புத்தகத்தை நான் படிக்க தூண்டியது.
எத்தனையோ மக்களின் நிலத்தை புடுங்கி பைத்தியமாகி அலையவிட்டு பின்னர் நாட்டின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த புறநகரின் கதையை படித்தாலே ஈரக்குலை நடுங்குகிறது. அடிமாட்டு விலைக்கு அடிச்சு புடுங்கி வாங்குன சாபமெல்லாம் சும்மா விடுமா ? IT துறையில் வேலை குடுத்தவனுகும் நிம்மதியில்லை, வேலை பாக்குரவனும் என்ன செய்யரோம்ன்னு தெரியாமையே வேலை பாக்குறான். சுஜா, அசோக், கௌசிக், ப்ரனிதா. மாய வலைகளின் பிம்பங்கள். வாங்கும் சம்பளம் மிஞ்சி போனால் தோன்றும் எண்ணங்கள் எங்கெங்கோ கூட்டி சென்று கடைசியில் காமத்தில் முடிவடைகிறது. காமத்திற்காக வாழ துவங்கி அதனாலேயே அழிகிறார்கள். இப்படி பட்ட மனிதர்கள் இருப்பார்களா ? வாழ்வியல் சூழல் மாறலில் இவர்கள் இருந்தாலும் ஆச்சர்யத்திற்கு இல்லை. கார்த்திக் , பிரணவ், சௌம்யா, லூர்து - தப்பி பொய் கடல் சுழலில் சிக்கினாலும் தன சுய குணத்தை விடாமல் வாழ்கிறார்கள். பிரணவ் - Bipolar disorder இனால் தற்கொலை செய்து இறக்கும்போது வெகுதுரத்தில் நமது முடிவு இல்லை என்று தோன்றுகிறது. மேனன் போன்ற managerial ஓநாய்கள் இருக்கும் வரை ஆடுகளின் அழிவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். பிராமணர்களையும் - மலையாளிகளையும் பற்றி விநாயக முருகன் எழுதியவைகளை படித்து-படித்து ரசித்தேன். சௌம்யா - லூர்து. ஜாதி மதம் இனம் பழைய வாழ்வு, இதை கடந்து வாழ துவங்குகிறார்கள். IT துறையின் தற்கொலை நோக்கங்களை அறியமுடிந்தது. வாழ்வை விட பணம், பெண் இவற்றின் மேல் மோகம் அதிகமாகும் போது தற்கொலை மட்டுமே வடிகாலாக மாறிவிடும் போல. கடைசிகாலத்தில் செட்டியாருக்கும் - அன்னமாவுகுமான காதல் மட்டுமே உண்மை காதலென தோன்றியது. :) எத்தனையோ பேரை பைத்தியமாகி அலையவிட்ட IT CORRIDOR பற்றி படித்தும் முடித்த பின்னரும் கூட மௌனித்தே அமர்ந்திருந்தேன்.
என்றேனும் ஒரு நாள் இந்த 10 லட்சம் பேரின் மனநிலை மாறலாம். இன்று மேல்தட்டு என்று நாம் நினைத்திருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் இத்தனை சோகங்களா என்று வெறுத்து போக வைத்தது IT வாழ்கை.
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என நினைக்கிறேன். விநாயக முருகன் மிக அழகா ராஜீவ்காந்தி சாலையின் வரலாற்றையும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலையும், ஐடி தொழிலார்களின் வாழ்வையும் பதிவு செய்துள்ளார். தினம் சென்று வரும் ஒரு சாலையை பற்றி அதில் வாழும் மாந்தர்களை அறிந்து கொண்டதும் மிக சுவாரசியமாக இருந்தது. அவசியம் படியுங்கள்.
ராஜிவ் காந்தி சாலை. மாற்றங்களை ஏற்றக்கொண்ட நிலத்தில் வாழும் மனிதர்களின் ஏமாற்றங்களை பற்றிய நாவலிது . பகுட்டும், பளபளப்பும் மட்டுமிருக்கும் I.T corridor களின் மறுபக்கத்தை மிக அழகாகவும் உண்மைக்கு மிக அருகாமையிலும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் (ஜ.டியில் வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் ). சமகால இளைஞர்களின் உரையாடலுக்கு இணையாக இருக்கும் நடை நாவலை எந்த இடத்திலும் தோய்வில்லாமல் படிக்க உதவுகிறது . கதாபாத்திரங்களின் வலியை விட நாவலின் முடிவில் மற்ற கதாபாத்திரங்களின் நிலை என்ன ஆனது என்கிற எதிர்ப்பார்ப்பை எடுத்து சென்றதே ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றி என்று சொல்வேன் (மேலோட்டமாக பார்க்கும்போது துயரங்களையும் , வலியையும் பகிரும் நாவல் போல இருந்தாலும் நாவலின் முடிவு நம்பிக்கையையும் , வாழ்வின் சலனமற்றதன்மையும் வாழ்வின் ஒரு பகுதி தான் என்பதையும் உணர்த்துகிறது ). இதுவரை நான் படித்த நாவல்களிலேயே மனப்பிறழ்வை நோக்கி செல்லும் மனிதனைப் பற்றிய நேர்த்தியான வர்ணனை இந்த நாவலில் தான் இருந்தது . அப்பா-மகன் , கணவன்-மனைவி உறவுகளை cliche ஆக கொண்டு போய் முடிக்காமல் எதார்த்தமாக முடிந்திருந்தது ஆசிரியரின் முதிர்ச்சியை காட்டுகிறது . கண்டிப்பாக தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டிய புத்தகமிது. புதிதாக படிக்க வருபவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டிய புத்தகங்களில் டாப் பத்து புத்தகங்களில் இதுவும் ஒன்று . ராஜிவ் காந்தி சாலை - நவீன (ஒரு புளியமரத்தின் கதை ) .